நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்

நல்ல பிள்ளையார்

கமலாவுக்குப் பிள்ளையார் என்றால் மிகவும் பிரியம். எப்போதும் ஒரு மரப்பிள்ளையாரை வைத்து விளையாடிக்கொண்டிருப்பாள், அதற்குப் பூமாலை வாங்கிப் போடுவாள். தனக்கு அம்மா பட்சணம் கொடுத்தால், பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணிவிட்டே தின்பாள். “ஏண்டி, இந்தப் பிள்ளையாரை வைத்துக்கொண்டு விடமாட்டேன் என்கிறாயே! நாளைக்கு உனக்குக் கல்யாணமானால் இந்தப் பிள்ளையாரை என்ன செய்வாய்?” என்று அம்மா கேட்பாள். பிள்ளையாரையும் என் புக்கத்துக்கு எடுத்துக்கொண்டு போவேன்” என்று அவள் சொல்வாள். அம்மா அதைக் கேட்டுச் சிரிப்பாள்.

உண்மையிலே அவள் அப்படித்தான் செய்தாள். அவளுக்குக் கல்யாணம் ஆயிற்று. தன் கணவன் வீட்டுக்குக் கமலா போகும் போது அந்தப் பிள்ளையாரை எடுத்துக்கொண்டு போனாள். அங்கேயும் காலையில் எழுந்து நீராடியவுடன் அந்தப் பிள்ளையாரையும் நீராட்டி அலங்காரம் செய்வாள். அவளுடைய மாமியார் அதைக் கண்டு, “என்னடி இது? சிறு குழந்தை மாதிரி இந்தப் பிள்ளையாரை வைத்துக்கொண்டு விளையாடுகிறாயே !” என்று கடிந்துகொள்வாள். கமலா அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வழக்கம் போல் அவருக்குப் பூச்சூட்டி மகிழ்வாள்.

பல தடவை சொல்லியும் கமலா பிள்ளையாரை விடாமல் வைத்திருப்பதைக் கண்டு மாமியாருக்குக் கோபம் வந்துவிட்டது. “இதைத் தூக்கி வீதியில் எறிந்து விடுகிறேன் பார்!” என்று பயமுறுத்தினாள். “மாமி,மாமி,அப்படிச் செய்யாதீர்கள். இது போய் விட்டால் என் உயிரே போய்விடும்” என்றாள் கமலா.

‘நீ எதற்குக் கல்யாணம் பண்ணிக்கொண் டாய்? இந்தப் பிள்ளையாரையே கல்யாணம் பண்ணிக் கொள்கிறதுதானே ?” என்று சீறினாள் மாமியார். அது கேட்டுக் கமலாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரு நாள் மாமியாருக்கு அதிகக் கோபம் வந்து விட்டது. “இந்தப் பிள்ளையாரைத் தூக்கி எறிந்து விடு. இல்லாவிட்டால் யாருக்காவது கொடுத்துவிடு. இனிமேல் இந்தப் பிள்ளையாரோடு நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது” என்று இரைந்தாள்.

கமலாவுக்கு மிகவும் வருத்தமாகப் போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள். கடைசியில் மாமியார் பிள்ளையாரைப் பிரியும்படி வற்புறுத்தினால், அந்த வீட்டை விட்டே போய்விடுவது என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

“அப்படி ஒரு நாளும் வந்தது. மாமியார் காளியைப் போல் நின்று கொண்டு, இந்தப் பிள்ளையாரைக் கொண்டு போய்க் குளத்தில் எறிந்து விட்டு வா. இல்லாவிட்டால் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. போ வெளியே!” என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளாத குறையாக அவளைத் துரத்தினாள்.

‘இனிமேல் இந்த வீட்டில் இருந்து காலம் தள்ள முடியாது என்று தெரிந்துகொண்ட கமலா பிள்ளையாரை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். அவள் அதைக் குளத்தில் எறிந்துவிட்டு வரப் போகிறாள் என்று மாமியார் எண்ணினாள்.

ஆனால் கமலாவோ, “இந்த வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது” என்ற தீர்மானத்தின்மேல் வெளியேறினாள்.

பாவம்! அவளுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. அவளுடைய அம்மா சில மாதங்களுக்கு முன் இறந்து போனாள். ஆகையால் அங்கே போனால் அப்பா கோபித்துக்கொண்டு, மறுபடியும் மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். பிள்ளையார் விட்ட வழி விடட்டும் என்று அவள் கால்போன வழியே நடந்து சென்றாள்.

ஊருக்கு வெளியே ஒரு காடு இருந்தது. அதற்குள் புகுந்து நடந்தாள். மாலை வந்துவிட்டது. இரவு நேரத்தை எங்காவது கழித்து விட்டுப் பிறகு எங்காவது போகலாம் என்று எண்ணினாள்.

காட்டில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மெதுவாக அதில் ஏறி ஒரு கிளையில் அமர்ந்து சாய்ந்து கொண்டாள். அவள் மடியில் பிள்ளையார் இருந்தார். நெடுநேரம் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

நள்ளிரவு ஆயிற்று. அப்போது சில திருடர்கள் எங்கேயோ திருடிவிட்டு, அந்த ஆலமரத்தடிக்கு வந்தார்கள். தாங்கள் திருடிய பொருள்களைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக அங்கே வந்தார்கள். அந்தப் பொருள்களை அங்கே பரப்பி வைத்துக் கொண்டு பங்கு போட முயன்றார்கள்.

அப்போது கமலாவுக்குச் சிறிதே தூக்க மயக்கம் உண்டாயிற்று. அவள் பிடித்திருந்த பிள்ளையார் கையிலிருந்து நழுவினார். அவர் பொத்தென்று திருடர்களுக்கு நடுவே விழுந்தார். அவர் விழுந்ததைக் கண்டு திருடர்களுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. யாரோ தங்களைக் கவனிக்கிறார்கள் என்று எண்ணி அவசர அவசரமாகக் கையில் அகப்பட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார் கள், அந்த அவசரத்தில் சில நகைகளையும் பணத்தையும் அங்கே விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

விடிந்ததும் கமலா தன் கையில் பிள்ளையார் இல்லாததைப் பார்த்தாள். கீழே இறங்கி வந்து பார்க்கும்போது பிள்ளையார் நகைகளுக்கும் பணத்துக்கும் நடுவில் இருந்ததைப் பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அந்த நகைகளையும் பணத்தையும் சுருட்டி எடுத்துக் கொண்டாள். அவற்றைக் கண்டால் தன் மாமியாருடைய கோபம் மாறிவிடும் என்று எண்ணினாள்.

உடனே அங்கிருந்து தன் மாமியார் வீட்டுக்கு வந்தாள். “எங்கேயடி வந்தாய்? நேற்று எங்கே போயிருந்தாய்?” என்று அவள் கேட்டாள்.

கமலா சிரித்துக் கொண்டாள், “பிள்ளையார் என்னை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே இந்த நகைகளும் பணமும் கிடைத்தன” என்று சொல்லிமடியிலே கட்டியிருந்த அவற்றை அவிழ்த்துக் கொட்டினாள். மாமியார் அவற்றைக் கண்டு ஆச்சரியத்தால் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள். “இவைகளெல்லாம் எங்கே கிடைத்தன?” என்று கேட்டாள்.

நான்தான் சொன்னேனே! பிள்ளையார் என்னை ஓரிடத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே இவைகள் எல்லாம் இருந்தன. நான் எடுத்துக் கொண்டு வந்தேன்” என்றாள் கமலா.

தன் அப்பா வீட்டுக்குப் போகாமல் தங்கள் வீட்டுக்கு வந்தாளே என்று மாமியார் மகிழ்ச்சி அடைந்தாள்.

“உன் பிள்ளையார் நல்ல பிள்ளையார். அவர் அருமை தெரியாமல் நான் கோபித்துக் கொண்டேன். இனிமேல் உன் மனம்போல அந்தப் பிள்ளையாருக்கு என்ன வேண்டுமானாலும் செய்” என்று மாமியார் கூறி அவளுக்குச் சிற்றுண்டி. கொடுத்தாள்.

அதுமுதல் அந்தப் பிள்ளையார் அந்த வீட்டிலும் கமலாவின் அலங்காரங்களைப் பெற்று எழுந்தருளியிருந்தார்.

(ஒரு நாடோடிக் கதையைத் தழுவியது.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *