
நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்
இரண்டு யானைகள்
கேரள நாட்டு அரசன் அவன். அடிக்கடி யானையின்மேல் ஏறி உலா வருவான். அவனிடத்தில் இருந்த யானை ஆண் யானை, களிறு. அந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோயிலிலும் ஒரு யானை இருந்தது. அது பெண் யானை; பிடி.
ஒரு நாள் அரசன் யானையின்மேல் ஏறி வரும் போது கோயிலின் பக்கமாகப் போனான். அப்போது கோயிலில் உள்ள பெண் யானையை வெளியில் நிறுத்தியிருந்தார்கள். அந்தப் பக்கமாக வந்த அரசனுடைய யானை அங்கே நின்றது. பெண் யானையைக் கண்டதனால்தான் அவ்வாறு நின்றது.
அந்த யானை கன்றாக இருந்தது முதல் அரசனிடம் இருந்தது. அது நாட்டிலே வளர்ந்ததே அன்றிக் காட்டை அறியாதது, ஊர் தெரியும்; கோவில் தெரியும்;காடு தெரியாது.
பிடியைக் கண்டவுடன் அதற்கு ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று, அரசன், நடந்து கொண்டிருந்த களிறு கோயிலுக்கருகில் நின்றதைக் கண்டான். அதை உசுப்பி ஓட்டினான். அது நகராமல் அங்கே நின்றது.
கோயில் யானை மெல்ல அதன் அருகே வந்தது. அது மிகவும் சாதுவான யானை. மக்கள் அதனிடம் அச்சமின்றிப் பழகினார்கள், யாரேனும் குழந்தை வந்தால் மாவுத்தன் அந்தக் குழந்தைக்கு அருகே யானையைக் கொண்டு வந்து நிறுத்துவான். அது தன் துதிக்கையைத் தூக்கிக் குழந்தையின் தலையின் மேல் தடவும். அதனால் குழந்தைக்கு நன்மை உண்டாகும் என்று மக்கள் நம்பினார்கள். யானை தடவியபிறகு அதன் துதிக்கையில் கால் ரூபாய், அரை ரூபாய் கொடுப்பார்கள். அது வாங்கி மாவுத் தனிடம் கொடுக்கும். இது அவனுக்குக் கிடைக்கும் சிறிய வருவாய்
அரசனுடைய களிறு நின்றபோது கோயில் பிடி அதை அணுகியது. அரசனுடைய களிற்றைத் தடவியது. இரண்டு யானைகளும் துதிக்கைகளைச் சேர்த்து இன்புற்றன. அயலில் இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள். சிலர் இரண்டு யானைகளுக்கும் தேங்காய் வாழைப்பழம் தந்தார்கள்.
அரசனுடைய யானை அவற்றைத் தின்றது; பிடியும் தின்றது.
அரசனுக்கு நெடுநாளாகக் குழந்தை இல்லை. கிருஷ்ணனை அன்புடன் வேண்டிக்கொண்டால் எல்லாம் கிடைக்கும் என்று ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். அப்படி வேண்டிக்கொண்டு சிலருக்கு விருப்பங்கள் பூர்த்தியாகியிருக்கின்றனவாம். அரசன் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று வேண்டிக்கொண்டான், அவனுடைய மனைவியாகிய அரசி தனக்குக் குழந்தை பிறந்தால் கிருஷ்ணபகவானுக்கு ஒரு யானை வாங்கி விடுவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டாள். யானைக்குப் பத்தாயிரம் விலை, இருந்தால் என்ன? அவர் களுடைய குலத்தை விளக்க ஒரு குழந்தை பிறந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாமே!
அரசன் தன்னுடைய யானையும் கோயில் யானையும் நெருங்கி அளவளாவுவதைக் கண்டான். அந்தக் காட்சி அவனுக்கு மகிழ்ச்சியையே உண்டாக்கியது.
சிறிது நேரம் அங்கே நின்றவன் பிறகு தன் யானையை ஓட்டிக்கொண்டு போனான். அது முதல் ஒவ்வொரு நாளும் அவன் தன் யானையின்மேல் ஏறி வரும்போது கோயிலுக்கு அருகில் நிறுத்துவான். கோயில் யானை வரும், இரண்டு யானைகளும் கொஞ்சிக் குலாவும், அரசனுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.
அன்று கோயிலில் ஏதோ விசேஷம், கோயில் யானைக்கு நன்றாக அலங்காரம் பண்ணினார்கள். அதை வெளியிலே கொண்டு வந்து நிறுத்தினார்கள். உற்சவ மூர்த்தியை அதன் மேல் எழுந்தருளப் பண்ணி ஊர்வலம் விட்டார்கள். அப்போது அரசன் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டான், களிற்றின்மேல் ஊர்ந்து வந்தான். பிடியின் மேல் கிருஷ்ணனும் களிற்றின்மேல் அரசனும் இருந்தார்கள். இரண்டு யானைகளும் ஊர்வலமாக வரும் போது மக்களுக்கு அந்தக் காட்சியைக் கண்டு ஒரே கோலாகலமாக இருந்தது.
ஊர்வலம் முடிந்து கிருஷ்ணன் மீண்டும் கோயிலை அடைந்தான்.அரசனும் தன் களிற்றின் மேல் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். ஊர்வலம் முடிந்தது; இனி யானையை அரசன் அரண்மனைக்கு ஓட்டிச் செல்ல வேண்டியதுதான்.
ஆனால் அவன் யானை அங்கிருந்து நகர மறுத்தது. யானைப் பாகன் அதை என்ன பண்ணினாலும் அது அரண்மனையை நோக்கிச் செல்லவில்லை.
அரசன் இதைப் பார்த்தான். அவனுக்கு என்ன தோன்றிற்றே தெரியவில்லை. யானையனின்றும் கீழே இறங்கினான், “இந்த யானையும் கோயிலிலே இருக்கட்டும்” என்று சொல்லி அதைக் கோயிலிலே விட்டுவிட்டான். இப்போது கோயிலில் இரண்டு யானைகள் இருக்கலாயின.
அந்த இரண்டும் மிகவும் மகிழ்ச்சியோடு கூடிக் குலாவின. சில காலம் கழித்து அந்தப் பெண் யானை கருவுற்றது. அதற்கு ஒரு கன்று பிறந்தது. அதே சமயத்தில் அரசியும் கருவுற்றாள், அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தால் கிருஷ்ணனுக்கு யானை வாங்கி விடுவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டவள் அல்லவா? குழந்தை பிறந்ததும், தான் நேர்ந்து கொண்டதை அரசனிடம் சொன்னாள். “நீ குழந்தை பிறந்தால் யானையை வாங்கி அர்ப்பணம் பண்ணுவதாக வேண்டிக் கொண்டிருக்கிறாய் நான் முன்பே என் யானையைக் கோயிலுக்குக் கொடுத்துவிட்டேன். கிருஷ்ணன் இந்த யானையைப் பெற்றுக் கொண்ட பிறகே உனக்குக் குழந்தையை அருளியிருக்கிறான்,
நீ வேண்டிக் கொண்டது தெரியாமலே யானையை அவனுக்குக் கொடுத்துவிட்டேன். ஒரு வகையில் உன் பிரார்த்தனையைச் செலுத்தியாயிற்று, கிருஷ்ணன் கண்கண்ட தெய்வமாகையால் என்னிடமிருந்து யானையை வாங்கிக் கொண்டு நமக்கு ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கிறான்” என்று மிக்க மகிழ்ச்சியோடு சொன்னான். அதைக் கேட்டஅரசிக்கும் ஆனந்தம் உண்டாயிற்று.
அந்தக் குழந்தைக்குக் கஜேந்திரன் என்று பெயர் வைத்தார்கள்.
அது முதல் கிருஷ்ணன் திருவீதியில் எழுந்தருளும் போது இரண்டு யானைகளும் அந்த ஊர்வலத்தில் வந்தன. ஆண் யானை கம்பீரமாக முன்னே செல்ல, பின்னே பெண்யானையின் மேல் கிருஷ்ணன் பவனி வருவது வழக்கமாகிவிட்டது, கோயிலில் இப்போது இரண்டு யானைகளும் ஒரு யானைக் கன்றும் இருந்தன. அரண்மனையிலும் அரசனையும் அரசியையும் மகிழவைத்துக் கொண்டு. கஜேந்திரன் வளர்ந்தான், கிருஷ்ணன் கண் கண்ட தெய்வம் என்பது உறுதியாயிற்று.



