
நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்
நாயும் காளையும்
அந்த வீட்டில் பன்னிரண்டு பேர் இருந்தார்கள். சிறிய கிராமத்தில் பெரிய குடும்பம் அது. அவர்கள் வீட்டுப் பின்புறத்தில் தோட்டம். அதில் வாழை, தென்னை, எலுமிச்சை மரங்கள் உண்டு. அவர்கள் யாவருமே வாழையிலையில்தான் சாப்பிடுவார்கள். உண்டபிறகு இலைகளை எடுத்து வாசலில் போடுவார்கள். எச்சிலை உண்பதற்கு ஒரு நாய் காத்திருக்கும். அவர்கள் இன்ன சமயத்தில்தான் வெளியே இலையைப் போடுவார்கள் என்று அதற்குத் தெரியும். அந்த நேரத்துக்கு முன்பே வந்து காத்திருக்கும். இலைவிழுந்தவுடன் வயிறாரச் சாப்பிடும்.
ஒரு நாள் அதற்குப் போட்டியாக ஒரு பிராணி வந்து சேர்ந்தது. ஒரு காளைக் கன்றுக்குட்டி வந்து அந்த இலைகளை எச்சில் உணவோடு தின்னத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் குரைத்துக் கடிக்கப் போயிற்று நாய். அந்த மாடு தன் கொம்பினால் அந்த நாயை ஒரு கொந்து கொந்தித் தூக்கி எறிந்து விட்டது. நாய், ‘இதனோடு சண்டை போடுவதில் லாபம் இல்லை; சமாதானமாகப் போவது தான் நல்லது’ என்று எண்ணியது.
அடுத்த நாள் நாய் வந்தது, காளைக் கன்றும் வந்துவிட்டது. “காளை அண்ணே, உனக்கு வணக்கம். நான் நெடுநாளாக இந்த எச்சில் இலையைத் தின்று வாழ்ந்து வருகிறேன். இதை விட்டால் எனக்கு வேறு வழியில்லை. உனக்கோ மேய்வதற்கு எங்கும் புல்தரை இருக்கிறது. நீ ஏன் எனக்குப் போட்டியாக வருகிறாய்? உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரிகிறாய். நான் தெரியாமல் நேற்று உன்னைக் கடிக்க வந்தேன். என்னை மன்னித்து விடு, பெரிய மனசு பண்ணி எனக்கு உணவு கொடு.இல்லாவிட்டால் நான் பட்டினி கிடந்து செத்துப் போவேன்” என்று மிகவும் பணிவோடு நாய் கூறியது.
”புல் இருக்கிறது உண்மைதான் ஆனாலும் வாழையிலை என்றால் எனக்கு மிகவும் பிரியம்” என்றது காளை.
“அப்படியா! மிகவும் நல்லதாகப் போயிற்று. எனக்கு வேண்டியது இலையில் மிச்சம் இருக்கும். உணவு. உனக்கு வேண்டியது இலை. நான் இலையைத் தின்பது இல்லை. நான் உணவைத் தின்று விட்டு இலையை உனக்கு விட்டு விடுகிறேன். இதனால் இரண்டு பேருடைய விருப்பமும் நிறை வேறும்’ என்று நாய் சொல்லியது. காளைக்கன்று அந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தது.
அடுத்த நாள் முதல், நாய் எச்சில் இலையில் மிஞ்சியிருக்கும் உணவுப் பண்டங்களையெல்லாம் தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டது. காளைக்கன்று இலைகளை உண்டு திருப்தி அடைந்தது. ஒவ்வொரு நாளும் அந்த இரண்டும் இந்த ஒப்பந்தத்தின் படியே நடந்து வந்தன.
ஒரு நாள் அங்கே ஒரு புது நாய் வந்தது. எச்சில் இலைகளைக் கண்டவுடன் அவற்றின்மேல் பாய்ந்தது. பழைய நாய் ‘வள் வள்’ என்று குரைத்துக் கொண்டு அதனோடு போரிடத் தொடங்கியது. இது குரைக்க, அது குரைக்க, இது கடிக்க, அது கடிக்க, இப்படி அந்த இடம் ரணகளமாகி விட்டது.
காளைக்கன்று அங்கே வந்தபோது அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நாள்தோறும் அதுவும் பழைய நாயும் அங்கே வந்து தங்களுக்கு வேண்டியதைத் தின்றாலும் இரண்டுக்கும் நெருங்கிய நட்பு உண்டாகவில்லை. காளைக்கன்றுக்கு நாயின் பல்லைக் கண்டு பயம். நாய்க்குக் காளையின் கொம்பைக் கண்டு பயம்.
அந்தக் காளைக்கன்று நினைத்திருந்தால் புதிய நாயை விரட்டியிருக்கலாம். அதற்கு என்னவோ அப்படிச் செய்யத் தோன்றவில்லை அது இரண்டு நாய்களும் போரிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தது, அந்தச் சுவாரசியத்தில் இலைகளைத் தின்னக்கூட மறந்து விட்டது. இன்னும் நாய்கள் இரண்டும் போராடிக்கொண்டிருந்தன.
அந்தச் சமயத்தில் ஒரு பெரிய எருமை வந்தது அங்கே கிடந்த எச்சில் இலைகளைக் கண்டவுடன் அதற்கு ஒரே மகிழ்ச்சி! அவற்றை எச்சிலுணவோடு உற்சாகத்துடன் தின்னத் தொடங்கியது. காளைக் கன்று பக்கத்தில் வந்தது. எருமை அதை முட்டப் போயிற்று. அது பயந்து விலகிவிட்டது. நாய்கள் அருகில் போரிடுவதைக் கண் டு அவற்றையும் முட்டப் போயிற்று. அவை ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஓடிப் போயின. எருமை மாடு குசாலாக உணவுப்பண்டங்களையும் இலையையும் சுவைத்துக் கொண்டிருந்தது.
காளைக்கன்று அதைப் பார்த்தது.
அதன் நாவில் நீர் ஊறியது. ‘நாம் புதிதாக வந்த நாயை விரட்டி ஓட்டியிருந்தால் …… என்று அது எண்ணியது. இப்போது எண்ணி என்ன பயன்? பாவம்! கடைசியில் அதற்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டது.



