நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்

சந்திரன் பெற்ற வாழ்த்து

ஒரு தாய்க்கு நாலு பிள்ளைகள். சூரியன், சந்திரன் வருணன், வாயு என்ற அந்த நான்கு பேரும் வளர்ந்து வந்தார்கள். அம்மா அவர்களைச் செல்ல மாக வளர்த்து வந்தாள். வயசாகிவிட்டபடியால் அவள் எங்கும் வெளியிலே போவதில்லை.

ஒரு நாள் ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தது. ஊரில் உள்ளவர்களெல்லாம் அந்தக் கல்யாணத் துக்குப் போனார்கள். அந்த அம்மாவால் போக முடியவில்லை. தன் பிள்ளைகள் நாலு பேரையும் அனுப்பிவைத்தாள். அப்படி அனுப்பும்போது, “நீங்கள் நாலு பேரும் சமத்தாகப் போய்வாருங்கள். அங்கே சாப்பாடு போடுவார்கள். நல்ல இனிப்பான பட்சணங்களைப் போடுவார்கள். அவற்றை நீங்கள் தின்னாமல் எனக்குக் கொண்டு வந்து தாருங்கள். எனக்கு யார் பட்சணம் பண்ணித் தருவார்கள்! நீங்கள் கொண்டு வந்தால் அவற்றைத் தின்று நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னாள்.

“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவர்கள் கல்யாணத்துக்குப் போனார்கள்.

கல்யாணம் ஆன பிறகு எல்லாருக்கும் விருந்து போட்டார்கள். பணக்காரர் வீடு. ஆகையால் விருந்து மிகவும் சிறப்பாக இருந்தது. அப்பளம், குஞ்சாலாடு, மாம்பழம், வாழைப்பழம் எல்லாம் போட்டார்கள்.

சூரியன் முதலிய நான்கு பேரும் சேர்ந்தாற் போல் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பட்சணம் போடும்போது சூரியன் அவற்றைக் கையில் வாங்கிக் கொள்ளவில்லை. மற்ற மூன்று பேரும் அம்மாவுக்குக் கொண்டு போய்த் தந்தால் போதும், நானும் கொண்டு போவானேன்?

“நாலு பேர் பட்சணங்களையும் அவள் தின்னப் போகிறாளா?” என்று எண்ணித் தன் இலையில் போட்ட பட்சணங்களை ருசித்துத் தின்றான்.

அவனுக்கு அடுத்தபடி வாயு உட்கார்ந்திருந்தான், அவன் வடையை மாத்திரம் இலையில் போட்டுக் கொண்டான். மற்றவற்றை அம்மாவுக்குக் கொடுக்கலாம் என்று கையில் வாங்கி வைத்துக் கொண்டான். சிறிது நேரம் கழித்து அவன் சூரியனைப் பார்த்தான். அவன் எல்லாவற்றையும் தானே தின்பதைக் கண்டான். அவனுக்கு நாக்கில் நீர் ஊறியது. வாழைப் பழத்தை இலையில் போட்டுக் கொண்டான். பிறகு மாம் பழத்தையும் இலையில் போட்டுக்கொண்டு உண்டான். கடைசியில் எல்லாவற்றையுமே தின்று விட்டான்.

வருணன் வாயுவுக்கு அடுத்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் பட்சணங்களைக் கையில் வாங்கிக் கொண்டான். “பாவம்! அம்மாவுக்கு இதெல்லாம் எங்கே கிடைக்கப்போகிறது! நாம் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் சந்தோஷப் படுவாள்” என்று அவற்றைத் தனியே வைத்துக் கொண்டான். ஆனால் தன் முன்பு அமர்ந்திருந்த தன் சகோதரர்கள் பட்சணங்களையெல்லாம் தாமே உண்டதைப் பார்த்தான். “அம்மாவை மறந்து விட்டார்களே!” என்று எண்ணினான், ஆனால் அடுத்த நிமிஷமே அவனுடைய புத்தி மாறிவிட்டது. “வயசான அம்மாவுக்கு இதெல்லாம் எதற்கு? நமக்கு அவள் பட்சணம் ஒன்றும் பண்ணிக் கொடுக்கிறது இல்லையே !” என்று எண்ணியவன் அந்தப் பட்சணங்களையெல்லாம் தின்றுவிட்டான்.

சந்திரனோ வடை, அப்பளம், வாழைப்பழம், மாம்பழம், லட்டு ஒன்றையும் தின்னாமல் அம்மாவுக்காக எடுத்து வைத்துக்கொண்டான், “அம்மா பாவம், எங்கே போவாள்? நாமாவது யார் வீட்டில் கல்யாணம் நடந்தாலும் போய்ச் சாப்பிட முடியும்” என்று எண்ணி அவற்றை ஜாக்கிரதையாகத் தனியே வைத்துக் கொண்டான்.

சாப்பாடு முடிந்தது, எல்லோரும் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். சூரியன் முதலிய நான்கு பிள்ளைகளும் தம் வீட்டை அடைந்தார்கள்.

அவர்களைக் கண்டவுடன் அம்மா. “எனக்கும் பட்சணம் கொண்டு வந்தீர்களா?” என்று கேட்டாள்,

“அங்கே பட்சணமே போடவில்லை” என்று சூரியன் பொய் சொன்னான்,

“எல்லாருக்கும் போட்டார்கள், நான் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன். எனக்குப் போட மறந்து விட்டார்கள் கேட்க வெட்கமாக இருந்தது” என்றான் வாயு.

“பட்சணம் மிகவும் கொஞ்சமாகத்தான் போட்டார்கள். அதை நானே தின்றுவிட்டேன்” என்றான் வருணன்

சந்திரன் மட்டும், “அம்மா, உனக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி அவற்றை அம்மாவிடம் தந்தான், அவள்

அவற்றில் பாதியைத் தின்றுவிட்டு மிச்சத்தைச் சந்திரனுக்கே கொடுத்தாள்.”நீ தான் அப்பா, நல்ல பிள்ளை” என்று அவனுக்கு முத்தம் கொடுத்தாள். மற்றவர்களைக் கண்டு அவளுக்குக் கோபம் உண்டாயிற்று.

“நான் ஒருத்தி இருக்கிறேன் என்று நீங்கள் மூன்று பேரும் அடியோடு மறந்து வீட்டீர்களே! உங்களை எப்படியெல்லாம் செல்லமாக வளர்த்தேன்! நீங்கள் இப்படிச் செய்ததற்குக் கடவுள் உங்களைச் சும்மா விடமாட்டார். நீங்கள் மூன்று பேரும் எனக்கு வஞ்சகம் செய்தமையால் உங்கள் மூன்று பேரையும் ஜனங்கள் வையட்டும். சந்திரனை எல்லாரும் மகிழ்ச்சியுடன் ஏற்று வாழ்த்தட்டும்” என்று தாய் சொன்னாள்.

அதனால்தான் சூரியன் அதிகமாகத் தகிக்கும் போது, “பாழும் சூரியன் எப்படிக் கொளுத்துகிறான்!” என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படியே காற்றுப் புயலாக வீசினால், “இதென்ன பேய்க்காற்று. மோசமாக அடிக்கிறதே!” என்கிறார்கள். அதிக மழைபெய்தால், ”என்னடா இது?பேய் மழையாக இருக்கிறதே! இந்தப் பாழும் மழை விடாதா?” என்று கடிந்து கொள்கிறார்கள்.

ஆனால் சந்திரன் நிலா வீசும்போது குழந்தைகளும் முதியவர்களும் ஆண்களும் பெண்களும் மகிழ்கிறார்கள்.

(நாடோடிக் கதையைத் தழுவியது)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *