நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்

வெள்ளைப் பூனை

ஒரே ஓர் ஊரில் ஒரு ராஜா. அவனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. கடைசிப் பிள்ளை வீரசிம்மனுக்கு ஆகவில்லை. “எனக்குப் பிடிக்கிற மனைவியை நானே தேடிக்கொள்கிறேன்” என்று அவன் சொல்லிவிட்டான். அவனுடைய தகப்பனார் அவன் விருப்பப்படியே நடக்கட்டும் என்று இருந்து விட்டார்.

ஒரு நாள் வீரசிம்மன் தன் ஊருக்குப் பக்கத்தில் இருந்த காட்டுக்குப் போனான், அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடியில் ஆள் நுழையும் அளவுக்குப் பெரிய பொந்து இருந்தது. அங்கே ஒரு வெள்ளைப் பூனை, “மியாவ்!மியாவ்!” என்று கத்திக் கொண்டிருந்தது. தும்பைப் பூப் போலச் சுத்த வெள்ளையாக இருந்த அதை வீரசிம்மன் பார்த்தான். அதன் அருகில் சென்று எடுத்தான், அது ஒன்றும் செய்யவில்லை. அவனோடு ஒட்டிக் கொண்டது.

அந்தப் பூனையை அவன் எடுத்துக் கொண்டு தன் அரண்மனைக்கு வந்தான். அதன் அழகில் அவன் சொக்கிப் போனான், அதைத் தடவிக் கொடுத்தான். பாலும் பழமும் கொடுத்து உண்ணச் செய்தான். அதை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சினான். அதற்கு முத்தம் கொடுத்தான்.

அந்தப் பூனை சாதுவாக இருந்தது. எலியைக் கண்டால் துரத்துவதில்லை. அதற்கு எலியை உண்ணப் பிடிக்காது என்று தோன்றியது. வீரசிம்மன் கொடுத்த பாலை உண்டது. அவன் அதற்கு நெய்யும் சோறும் கலந்து ஊட்டினான். அது சந்தோஷமாகச் சாப்பிட்டது.

ஒரு நாள் அது அங்கிருந்து ஓடியது. வீரசிம்மன் அதன் பின்னே போனான். பழைய ஆலமரப் பொந்துக்குள் அது நுழைந்தது, அவனும் அதன் பின்னாலே சென்றான். உள்ளே போனபோது ஒரு படிக்கட்டு இருந்தது.பூனை அதன் வழியே கீழே இறங்கியது. கீழே தரை இருந்தது. என்ன ஆச்சரியம்! பூனை அங்கே போனவுடன் ஓர் அழகிய பெண்ணாக மாறிவிட்டது. “அரசகுமாரரே, என் னுடன் வாருங்கள்” என்று அந்தப் பெண் அழைத்தாள்.

வீரசிம்மன் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து சென்றான். அங்கே ஒரு பெரிய ஊர் இருந்தது. அந்த ஊரின் நடுவில் ஓர் அரண்மனை இருந்தது அந்தப் பெண் அவனை அங்கே அழைத்துக் கொண்டு போனாள். அவளைக் கண்டு எல்லாரும் முகமலர்ச்சியுடன் வரவேற்றார்கள். அரண்மனையில் ஓர் அரசனும் அரசியும் இருந்தார்கள். வீரசிம்மனை அழைத்துச் சென்ற அந்தப் பெண் அவர்களிடம் போனாள். வீரசிம்மனைக் காட்டி, “இவர் என்மேல் மிகவும் பிரியமாக இருக்கிறார். உங்களுக்குக் காட்ட வேண்டுமென்று அழைத்து வந்தேன்” என்றாள்.

வீரசிம்மனுக்கு அரண்மனையையும் அரசனையும் அரசியையும் பார்த்து ஆச்சரியம் உண்டற்று. ‘இந்த அதிசயப் பெண் ஏன் பூனையாக இருந்தாள்?” என்று எண்ணினான்.

அந்தப் பெண்ணினுடைய தாய் தந்தையர் வீரசிம்மனை அன்புடன் வரவேற்று அமரச் சொன்னார்கள். வெல்வெட்டு மெத்தை தைத்த ஆசனத்தைக் காட்ட, அதில் உட்கார்ந்து கொண்டான்.

”உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம். எங்கள் பெண்ணை நீங்கள் எப்படிச் சந்தித்தீர்கள்?” என்று அரசன் கேட்டான்.

அழகான பூனையாக இருந்தாள். எடுத்துக் கொண்டு போனேன். இவள் ஏன் பூனையாக மாறுகிறாள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றான் வீரசிம்மன்.

”ஒரு முனிவர் இங்கே ஓரிடத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். கண்ணை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். இந்தப் பெண் விளையாட்டாக ஒரு பூனையைக் கொண்டு போய் அவர் மடியில் போட்டாள். அவர் கண்ணைத் திறந்து பார்த்தார். இவள் செய்த குறும்பைக் கண்டு கோபம் கொண்டு, ‘நீ பூனையாக மாறக் கடவாய்!’ என்று சபித்தார். இவள் பூனையாக மாறி எங்களிடம் ஓடி வந்து, “மியாவ்! மியாவ்!’ என்று கத்தினாள். விசாரித்ததன் மேல் எங்கள் பெண்ணே பூனையாக மாறிவிட்டா ளென்றும், அதற்குக் காரணம் அந்த முனிவர் இட்ட சாபம் என்றும் தெரிந்தது. உடனே நாங்கள் அவரிடம் சென்று அவர் காலில் விழுந்து அந்தச் சாபத்தைப் போக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டு மன்றாடினோம்.”

“அவர் கோபம் மாறிற்றா ?” என்று கேட்டான் வீரசிம்மன்.

“அவர் சிறிது கோபம் ஆறினார்; இவளை மறுபடியும் பெண்ணாக் மாற்றுகிறேன். ஆனால் இவள் மேலே போனால் பூனையாக மாறிவிடுவாள். இங்கே உங்களுடன் இருக்கும்போது பெண்ணாகவே இருப்பாள் என்றார்.”

“அப்புறம் என்ன செய்தீர்கள்?”

நாங்கள் மறுபடியும் அவரை வணங்கி, ‘முனிவர் பெருமானே,இப்படி இருந்தால் இவளை யார் கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள்? இவள் வாழ்வு வீணாகி விடுமே!’ என்று புலம்பி அழுதோம்.’

“பிறகு?”

“அவர் மனம் இரங்கி, ‘இவளைப் பிரியமாக எடுத்துச் சென்று ஓர் அரச குமாரன் வளர்ப்பான். நான் ஒரு மந்திரக் கோலைத் தருகிறேன். அவனிடம் அந்தக் கோலைக் கொடுங்கள். அவன் தன் அரண்மனைக்குப் பூனையாக உள்ள இவளை அழைத்துப் போய் இந்தக் கோலால் அடித்தால் இவள் பெண்ணாக மாறிவிடுவாள்’ என்று சொன்னார்” என்று அந்த அரசன் சொன்னான்.

அவன் சொல்வதைத் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தான் வீரசிம்மன்.

பிறகு, “நீங்கள் இங்கே இருந்துவிடுங்கள். இவனை உங்களுக்குக் கல்யாணம் பண்ணித் தருகிறேன். நீங்கள் உங்கள் ஊருக்குப் போக வேண்டாம். நீங்கள் இருவரும் இங்கே இருந்தால் இவள் பூனையாக வேண்டிய அவசியம் இல்லை’ என்று அரசன் சொன்னான்.

“எங்கள் தாய் தந்தையரை விட்டு நான் எப்படி இங்கே தங்கமுடியும்?” என்று வீரசிம்மன் கேட்டான்.

அப்படியானால் அந்த முனிவர் சொன்னபடி தான் நடக்க வேண்டும் போல் இருக்கிறது. என்ன செய்வது ? நீங்கள் இவளை அழைத்துக்கொண்டு போய் உங்கள் ஊரில் அந்த முனிவர் சொன்னபடி செய்யுங்கள், இந்தாருங்கள், அவர் கொடுத்த மந்திரக் கோல்” என்று சொல்லி அரசன் அந்தக் கோலை வீரசிம்மனிடம் கொடுத்தான்.

“கல்யாணத்தை இங்கேயே நடத்தலாமா?” என்று அரசன் கேட்டான்.

“வேண்டாம்.எங்கள் ஊருக்குப் போய் என் னுடைய அப்பா அம்மாவுக்கு முன்னால்தான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்” என்றான் வீரசிம்மன்.

“அந்த அரசனும் அரசியும் தங்கள் பெண்ணைப் பிரிய மனம் இல்லாமல் இருந்தார்கள். என்றாலும்” அவள் எங்கேயாவது கல்யாணம் செய்துகொண்டு சௌக்கியமாக இருந்தால் போதும் என்று எண்ணி வீரசிம்மனுடன் அந்த ராஜகுமாரியை அனுப்பினார்கள்.

கீழேயிருந்து வந்த வழியே சென்று படிகளின் மேல் ஏறி அவர்கள் ஆலமரத்தின் பொந்தை அடைந்தவுடன், அந்தப் பெண் வெள்ளைப் பூனையாக மாறிவிட்டாள். அந்தப் பூனையை எடுத்துக் கொண்டு வீரசிம்மன் தன் அரண்மனையை அடைந் தான்.

அந்தப் பூனை மறுபடியும் பெண்ணாக மாற, அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தாலும், பூனையை அடிப்பதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. அந்தப் பூனையை மார்பில் வைத்துக் கொஞ்சினான். முனிவர் சொன்னபடி அதை அடிக்க அவன் பயப் பட்டான். ‘ஒருகால் பூனைக்கு உயிர் போய்ப் பெண்ணாகா விட்டால் என்ன செய்வது?” என்னும் எண்ணமும் உண்டாயிற்று.

எவ்வளவு நாளைக்கு அந்தப் பூனையை வைத்துக் கொண்டு கொஞ்சுவது? ஆகவே, ‘முனிவர் சொன்னபடியே செய்ய வேண்டும்’ என்று தீர்மானித்தான். ஓர் அறைக்குச் சென்று தன் மடியில் பூனையை வைத்துக் கொண்டான். கையில் மந்திரக்கோலை எடுத்துக் கொண்டான். “கடவுளே! முனிவர் வாக்குப் பலிக்க வேண்டும். இந்த பூனை பெண்ணாக மாறவேண்டும். இந்தப் பூனை நான் அடித்துப் பெண்ணாக மாறாமல் செத்துப் போனால் நானும் உயிரை விட்டுவிடுவேன். நீ எனக்குத் துணையாக இருந்து இந்தப் பூனையைப் பெண்ணாக மாறச் செய்யவேண்டும் என்று மனமாரப் பிரார்த்தித்துக் கொண்டான்.

கண்ணை மூடிக்கொண்டு ஓங்கி அந்தக் கோலால் அடித்தான். படார் என்ற சத்தம் கேட்டது. கண்ணை விழித்துப் பார்த்தான். அவன் முன்னே அந்த ராஜகுமாரி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்!

“அப்பாடி!” என்று பெருமூச்சுவிட்டான். அவள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தன் தாயார் தகப்பனார் முன் போய் நிறுத்தினான். “இதோ இவளைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன். இவளையே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என்றான்.

அந்தப் பெண் மிகவும் அழகியாக இருப்பதை அவர்கள் கண்டார்கள். ‘இவளை எங்கே தேடிப் பிடித்தாய்?” என்று கேட்டார்கள்.

“அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் கல்யாணம் ஆகட்டும்” என்று வீரசிம்மன் சொன் னான்.

கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. பிறகு அந்தப் பெண்ணைப் பற்றிய கதையையெல்லாம் தன் அப்பா அம்மாவிடம் வீரசிம்மன் சொன்னான்.

தங்களுக்கு மிகவும் அழகான மருமகன் கிடைத்ததைப் பற்றி அவர்கள் மிகவும் ஆனந்தம் அடைந்தார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *