
நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்
குரங்கு உபவாசம்
ஒரு காட்டில் ஒரு குரங்கு வாழ்ந்து கொண் டிருந்தது. ஒரு நாள் அந்த வழியே போன சில பக்தர்கள் அந்தக் குரங்கு தங்கியிருந்த மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண் டிருந்தார்கள். “நாளைக்கு அடுத்த நாள் ஏகாதசி. அன்று நான் உபவாசம் இருப்பேன். மறுநாள் துவாதசி; அன்று காலையில்தான் பாரணை செய்வேன்; சாப்பிடுவேன்” என்று ஒருவர் சொன்னார். உபவாசம் இருந்து மறு நாள் சாப்பிடுவதைப் பாரணை என்று சொல்வது வழக்கம். உபவாசம் இருப்பதாகச் சொன்ன பக்தரைப் பார்த்து, “நானும் : ஏகாதசி விரதம் இருப்பவன்தான்; அதனால் எவ்வளவோ பலன் உண்டு என்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார்” என்று மற்றொரு பக்தர் சொன்னார். மேலும் அவர்கள் ஏகாதசி விரதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு போய்விட்டார்கள்.
அவர்கள் பேசிய பேச்சையெல்லாம் குரங்கு கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு, ‘நாமும் ஏன் உபவாசம் இருக்கக் கூடாது ?’ என்று தோன்றியது. ‘உண்ண வேண்டும் என்றால்தானே பழத்தையும் காயையும் தேடவேண்டும் ? பட்டினியிருந்து விரதம் காப்பதற்கு என்ன வேண்டும்? விரதம் இருப்பதனால் எத்தனையோ பலன் உண்டு என்று அவர்கள் சொன்னார்கள். நாமும் விரதம் இருந்து அந்தப் பலனைப் பெறலாம்’ என்று தீர்மானம் செய்தது.
நல்ல வேளையாக அடுத்த நாளுக்கு அடுத்த நாளே ஏகாதசி வந்தது. பக்தர்கள் பேசிக்கொண்டதிலிருந்து குரங்குக்கு அது தெரிய வந்தது. ‘எப்படியும் உபவாசம் இருந்து பார்த்து விடுவது’ என்று அது உறுதி செய்துகொண்டது.
ஏகாதசி வந்தது. குரங்கு உபவாசம் இருந்தது. மரங்களில் தங்கியிருந்தால் எதையாவது பறித்துத் தின்ன வேண்டும் என்ற ஆசை தோன்றலாம். ஆகையால் மரம் இல்லாமல் இருந்த ஓர் இடத்துக்குப் போய் உட்கார்ந்து கொண்டது காலையில் சூரியன் தோன்றி இரண்டு மணி நேரம் ஆயிற்று. குரங்குக்குப் பசி எடுத்தது. ‘சே! இந்தப் பசியை நாம் லட்சியம் பண்ணக்கூடாது. ஒவ்வொரு நாளும் நாம் காயையும் கனியையும் தின்று தின்று எதைக் கண்டோம்? இன்று எப்படியாவது இந்தப் பசியைப் பொறுத்துக் கொண்டு, விரதம் இருந்து வெற்றி பெறவேண்டும்’ என்று அது தீர்மானமாக இருந்தது.
‘இன்று முழுவதும் பட்டினி கிடந்தால் நாளைக்குத் தின்னப்போகும் கனியோ காயோ மிகவும் ருசியாக இருக்கும்’ என்ற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. ‘சே! அதைப் பற்றி இப்போது எண்ணுவானேன்? இன்றைக்கு விரதம் இருப்பதைப் பற்றியே எண்ணுவோம். விடாப்பிடியாக விரதம் இருந்தே தீருவோம்’ என்று மறு எண்ணம் எழுந்தது.
மறுபடியும் அது எண்ணமிட்டது. உபவாசம் என்பது உண்ணாமல் இருப்பதுதானே ? உணவைப் பற்றி எண்ணாமல் இருப்பது அல்லவே? எப்படியும் நாளைக்கு எதையாவது தின்னப் போகிறோம். அதைப்பற்றி இப்போது நினைத்தால் என்ன ? அதனால் விரதம் கெட்டுப் போகுமா ? அந்த மனிதர்கள் விரதத்தைப் பற்றிச் சொன்னபோது பாரணை பற்றியும் சொன்னார்களே!’ என்று நினைத்தது.
பிறகு அடுத்த நாள் நல்ல பழங்களாகத் தின்ன வேண்டும் என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
அடுத்தபடி அதற்கு ஒரு யோசனை தோன்றியது. ‘நாளைக்கு எப்படியும் காலையில் பாரணை பண்ணவேண்டும். இப்படியே இங்கே தங்கினால் நாளைக்கு ஏதாவது மரத்தில் ஏறித்தானே பழத்தைப் பறித்து உண்ணவேண்டும்? இப்போதே அந்த மரத்தின் அடியில் போய்த் தங்கினால் என்ன ? நாளைக்கு விடிந்தவுடனே மரத்தின்மேல் ஏறிப் பழத்தைத் தின்னலாமே! இங்கிருந்து மரம் வரைக்கும் போகிற காலம் வீணாகாமல் இருக்குமே !”
உடனே அது நிறைய மாம்பழங்கள் இருந்த ஒரு மாமரத்தைத் தெரிந்து கொண்டு அதனடியில் போய்ப் படுத்துக்கொண்டது. இப்போது அதற்குப் பசி அதிகமாயிற்று.
மறுபடியும் அதற்குப் புதிய எண்ணம் ஒன்று எழுந்தது. ‘இந்த மரத்தடியில் படுத்துக் கிடப்பதில் என்ன லாபம் ? மரத்தின் மேலே ஏறி ஏதாவது பழம் இல்லாத கிளையில் படுத்திருந்தால் விடிந்தவுடன் பழமுள்ள கிளைக்குப் போகலாமே!
இந்த எண்ணம் தோன்றியவுடன் குரங்கு மெல்ல மரத்தில் ஏறிக் கிளைகள் பிரியும் இடத்தில் உட்கார்ந்து சாய்ந்து கொண்டது. அதன் வயிறு கப கப என்று பசித்தது.
“அட! இந்த வயிறு என்ன இப்படிப் பசிக்கிறது? ஏ வயிறே! நீ சும்மா இரு ! நாளைக்கு உனக்கு இரண்டு பங்கு உணவு தருகிறேன்” என்று சொல்லிக் கொண்டது குரங்கு.
அது மறுநாள் பழம் தின்னுவதையே எண்ணிக் கொண்டிருந்தது. ‘ஆமாம்; நாளைக்கு எப்படியும் பழம் உள்ள கிளைக்குத்தானே போய்ப் பழத்தைப் பறிக்க வேண்டும்? இப்போதே அந்தக் கிளையில் போய் உட்கார்ந்து கொண்டால் என்ன? பழம் கண்ணில் படக்கூடாது என்று நாம் விரதம் இருக்க வில்லையே!’ இப்படி எண்ணி அது பழங்கள் நிறைய இருந்த கிளைக்குச் சென்று அமர்ந்தது. சிறிது தூங்கிப் பசியை மறக்கலாம் என்று கண்ணை மூடினால் தூக்கமே வரவில்லை. பசி அதிகமாகியது.
‘பழத்துக்குப் பக்கத்தில் போய் உட்காரலாம். அதனால் விரதம் கெட்டுவிடாது’ என்று அந்தக் கிளையில் தொங்கிய பெரிய பழத்துக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. அடுத்தபடி, இதைத் தொட்டுக் கொண்டிருக்கலாமே! தொடக் கூடாது. என்பது நம் விரதம் அல்லவே!’ என்ற எண்ணத்தால் அந்தப் பழத்தைக் கையால் தொட்டுக் கொண்டே இருந்தது. இப்போதே இதைப் பறித்துத் தின்ன வேண்டும்’ என்ற ஆவல் எழுந்தாலும் குரங்கு அதை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருந்தது. வயிற்றில் பசியோ நெருப்புப்போல எழுந்து வளர்ந்தது.
‘இந்தப் பழத்தை நாளைக்கு எப்படியும் பறித்துத் தானே தின்ன போகிறோம்? இப்போதே பறித்து மடியில் வைத்துக் கொள்ளலாமே! அதனால் விரதம் கெட்டுப் போகாதே!’
இப்படி எண்ணியவுடன் பழத்தைப் பறித்து மடியில் வைத்துக்கொண்டது.
அதற்குப் பிறகும் அதன் யோசனை வளர்ந்தது. இந்தப் பழத்தைக் காம்பு, முனை எல்லாம் நீக்கி விட்டுத் தின்பதுதான் நல்லது. நாளைக்கு அந்தக் காரியத்தைச் செய்வதைவிட இன்றைக்கே செய்தால் என்ன? மனிதர்கள் துவாதசிப் பாரணைக்காக முதல் நாளே கறிகாய்களை நறுக்கி வைத்துக் கொள்வார்களாமே!
அந்த எண்ணம் தீவிரமாக எழவே, குரங்கு மாம்பழத்தின் காம்பைக் கடித்தது. கொஞ்சம் அழுத்தமாகவே கடித்து விட்டது. காம்போடு சிறிது பழத்தின் பகுதியையே கடித்துவிட்டது. அதன் சாறு வாயில் பட்டது. அது எத்தனை இனிமையாக இருந்தது!
அடடா! என்ன காரியம் செய்தோம்! இந்தப் பழத்தின் ஒரு பகுதியையே கடித்து ருசி பார்த்து விட்டோமே! நம்முடைய விரதம் கெட்டுவிட்டதே! இனிமேல் விரதம் இருந்து என்ன பிரயோசனம்? ருசி பார்த்ததும் பார்த்தோம்; இனிமேல் இதைத் தின்று விட வேண்டியதுதான்’ என்று அந்தப் பழத்தைத் தின்றுவிட்டது. வேறு பழங்களையும் வயிறாரத் தின்றது.
‘சீ! இந்த மனிதர்கள் அநாவசியமாகப் பட்டினியிருந்து தங்களைக் கொன்று கொள்கிறார்கள்!’ என்ற ஞானோதயம் அதற்கு அப்போது ஏற்பட்டது.



