
நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்
கூடும் ஓடும்
ஒரு நத்தை தன் முதுகின்மேல் தன் கூட்டைத் தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. தலையில் இரண்டு கம்பிபோல இருந்த கொம்பை நீட்டிக் கொண்டு நிதானமாகப் போயிற்று. அப்போது ஓர் ஆமை அங்கே மெல்ல நகர்ந்து வந்தது. அதன்மேல் சிறிய பாறை போன்ற ஓடு இருந்தது. தன் முதுகிலிருந்து எடுக்க முடியாமல் ஒட்டிக் கொண்டிருந்த அந்த ஓட்டை விட்டுவிட்டுக் குசாலாக நடக்க முடியவில்லையே என்று ஆமை வருத்தப் பட்டது. அப்போது நத்தை கண்ணில் பட்டது ‘அடேயப்பா! இது தன் வீட்டையே தூக்கிக் கொண்டு நடக்கிறதே!” என்று ஆச்சரியப் பட்டது.
அந்த நத்தையைப் பார்த்து, “தம்பி, நீ ஏன் இந்த வீட்டைச் சுமந்துகொண்டு திரிகிறாய்?” என்று ஆமை கேட்டது. நத்தைக்கும் தனியே இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் மனசுக்குள் இருந்தது. “அண்ணா, இந்தக் கூட்டை என்னால் விட முடியாதே!” என்று தன் துயரத்தை நத்தை சொல்லியது.
“அது சரி அண்ணா, நீ ஏன் இந்தக் கனமான ஓட்டைச் சுமக்கிறாய்?” என்று அது ஆமையைக் கேட்டது.
அது என் தலைவிதி. நீ கூட்டைச் சுமக்கிறாய்; நான் ஓட்டைச் சுமக்கிறேன். இதைச் சுமந்து கொண்டு வேகமாக நடக்கவே முடியவில்லை. எனக்கு நாலு கால் இருந்தாலும் மனம் போல வேகமாக எட்டி வைத்து நடப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றது ஆமை.
“நானும் அப்படித்தான் அண்ணா என்னாலும் வேகமாகப் போக முடியவில்லை. உனக்காவது நாலு கால்கள் இருக்கின்றன. எனக்குக் காலே இல்லை. வயிற்றிலே ஊர்ந்து போகிறேன் இந்தச் சுமையையும் சுமந்துகொண்டு போகவேண்டியிருக்கிறது” என்று நத்தையும் தன் துயரத்தைக் கூறியது.
அப்போது ஒரு மரவட்டை அங்கு வந்தது. அதை ஆமையும் நத்தையும் பார்த்தன அந்த மரவட்டையின் தலை மத்தாப்புக் குச்சியின் நுனி போலச்சிவப்பாக இருந்தது. எத்தனை கால்கள்! அது நகரும்போது மிகவும் குட்டையான ரெயில் மெல்லப் போவது போல இருந்தது.
நத்தை, “ஆமையண்ணா, அந்தப் பிராணியைப் பார். எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்றது. “அதன் மேலே ஒரு பாரமும் இல்லையே” என்று ஆமை சொல்லி ஆச்சரியம் அடைந்தது.
“அதற்குக் கால்கள் எத்தனை பார் அண்ணா! அடேயப்பா! இத்தனை கால்களைக் கொண்டு அது வேகமாக ஓட முடியும் என்று நினைக்கிறேன்” என்று நத்தை வியப்புடன் சொல்லியது.
அந்த இரண்டும் அந்த மரவட்டைக்கு அருகில் போயின. “ஐயா, உங்கள் பேர் என்ன? பார்க்க மிகவும் அழகாக இருக்கிறீர்களே!” என்று ஆமை கேட்டது.
“என் பேர் மரவட்டை இதென்ன, உங்கள் இரண்டு பேர் முதுகிலும் இவ்வளவு பெரிய சுமை?” என்று கேட்டது.
“அதை ஏன் சொல்கிறீர்கள்? பிறக்கிறபோதே இந்தச் சுமையோடுதான் பிறந்தோம். நீங்கள் பாக்கியசாலி ! உங்களுக்கு ஒரு சுமையும் இல்லை. ளுக்குக் கால்கள் நிறைய இருக்கின்றனவே!
“நீங்கள் வேகமாக ஓடுவீர்கள் அல்லவா?” என்று ஆமை கேட்டது,
அவை இரண்டும் தன்னைக் கண்டு ஆச்சரியம் அடைந்து, மரியாதையுடன் பேசுவதைப் பார்த்து அந்த மரவட்டைக்குக் கர்வம் உண்டாயிற்று,
”உங்கள் பேர் என்ன?” என்று அவற்றைப் பார்த்துக் கேட்டது.
“என் பேர் ஆமை”, “என் பேர் நத்தை’ என்று இரண்டும் சொல்லின.
“நீங்கள் வேகமாக நடக்க முடியும்; எங்களால் முடியாது. உங்கள் வேகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள். எங்களால் வேகமாக ஓட முடியா விட்டாலும் உங்கள் வேகத்தைக் கண்டாவது மகிழ்ச்சி அடைகிறோம்” என்று இரண்டும் கூறின. மரவட்டையின் அழகைக் கண்டு பிரமிப்படைந்த அவற்றிற்கு அது வேகமாகப் போவதையும் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.
ஆனால் மரவட்டைக்கு வேகமாகப் போக முடியாது. அதுவும் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும் என்ற உண்மை ஆமைக்கும், நத்தைக்கும் தெரியாது. கால் நிறைய இருப்பதனால் அது வேகமாக ஓடும் என்று நினைத்துக் கொண்டிருந்தன.
“எனக்கு வேகமாக நடக்க முடியாது” என்று உண்மையைச் சொல்லித் தன் பெருமையைக் குறைத்துக் கொள்ள மரவட்டை விரும்பவில்லை. “இப்போதுதான் வயிறு நிரம்பச் சாப்பிட்டேன்; ஆகையால் இப்போது வேகமாக நடக்க முடியாது” என்று சொல்லி வைத்தது. ஆமையும் நத்தையும் அதையும் உண்மையென்று நம்பின.
அப்போது ஒரு காக்கை அங்கே தத்தித் தத்தி வந்தது. அது மிகவும் கூர்மையான மூக்கை உடையதாக இருந்தது. கீழே இருந்த புழு பூச்சி களைக் கொத்தியது. அது இந்தப் பிராணிகளுக்குப் பக்கத்தில் வந்த போது, ஆமை அவசரமாகத் தன் தலையையும் காலையும் சுருக்கி ஓட்டுக்குள் மறைத்துக் கொண்டு, சிறிய கல்லைப் போல் கிடந்தது, நத்தையும் ஓட்டுக்குள் புகுந்து கொண்டு உருண்டைக் கல்லைப்போலக் கிடந்தது. மரவட்டையோ சுருண்டு படுத்துக் கொண்டது.
காக்கை அங்கே வந்து ஆமையைச் சிறிய கல் என்று எண்ணி அதை ஒன்றும் செய்யவில்லை. அப்படியே நத்தையையும் ஒரு விதமான கல்லென்று நினைத்து அதன் பக்கத்திலும் போகவில்லை, ஆனால் மரவட்டையைக் கண்டதும் லபக்கென்று அதைக் கொத்திக்கொண்டு போய்விட்டது.
சிறிது நேரம் கழித்து ஒரு சந்தடியும் இல்லாமல் இருக்கவே, மெல்ல ஆமை தலையையும் கால்களையும் வெளியில் நீட்டி நகரத் தொடங்கியது. நத்தையும் கூட்டிலிருந்து வெளிப்பட்டது. ‘ஆமை அண்ணா ! அந்தக் காக்கையைக் கண்டு மிகவும் பயமாகப் போய்விட்டது. என் கூட்டுக்குள் ஒளிந்து கொண்டேன்” என்றது நத்தை.
“ஆமாம் தம்பி, நான் கூடத்தான் பயந்து போனேன். என் ஓட்டுக்குள் மறைந்து கொண்டேன். அது சரி; அந்த மரவட்டை எங்கே? காணவில்லையே !” என்றது.
“அந்த மரவட்டையைக் காக்கை கொத்திக் கொண்டு போய் விட்டதென்று தோன்றுகிறது: அது முனகுவது என் காதில் கேட்டது” என்றது. நத்தை.
‘நல்ல வேளை! நாம் தப்பினோம் ! இந்த ஓடும் கூடும் பெரிய சுமை என்று வருந்தினோமே; இவை இல்லாவிட்டால் நம்மை அந்தக் காக்கை என்ன பாடு படுத்தியிருக்குமோ? மரவட்டையின் கதிதான் நமக்கும் நேர்ந்திருக்கும்” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது ஆமை, “ஆம் அண்ணா! நீ சரியாகச் சொன்னாய். இந்த நம் பாதுகாப்பை நாம் சுமை என்று நொந்து கொண்டது தவறு” என்று நத்தையும் சொல்லி, ஆமையோடு சேர்ந்து மெல்ல நகர்ந்தது.



