
நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்
மந்திரப் பெட்டி
கந்தன் நான்காவது வரைக்கும் படித்தான். அதற்கு மேல் அவனுக்குப் படிப்பு ஓடவில்லை. சாமி, சாமியார் என்றால் அவனுக்கு அதிகப் பக்தி. எந்தச் சாமியார் வந்தாலும் அவர் காலில் விழுந்து வணங்குவான். சாமியார் அவனுக்கு ஆசீர்வாதம் செய்வார். “படிக்காமல் சோம்பேறியாய் இருக் கிறாயே! நீ எப்படிப் பிழைக்கப் போகிறாய் ?” என்று அவனுடைய அப்பா அடிக்கடி கோபித்துக் கொள்வார்.
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். வழக்கம்போல் கந்தன் அவரை வணங்கினான். அவருக்கு விசிறினான். தாகத்துக்குத் தண்ணீர் வேண்டுமானால் கொண்டு வந்து கொடுத்தான். அவனுடைய பணிவைக் கண்டு அவனிடம் சாமியாருக்குப் பிரியம் ஏற்பட்டது, “அப்பா, உன் பேர் என்ன?” என்று கேட்டார். கந்தன் என்றான். “என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார், பதில் சொல்ல அவனுக்கு வெட்கமாக இருந்தது. ஆனாலும் சாமியாரிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டுமென்று எண்ணி, “எனக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை. நாலாவதுக்கு மேல் போகவில்லை” என்று சொன்னான்.
நீ என்னோடு வருகிறாயா ? உன் அம்மா அப்பா உன்னை விடுவார்களா ?” என்று கேட்டார் சாமியார்.
“நான் வர இஷ்டந்தான், அப்பா அம்மாவைக் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லி, அவர்களைக் கேட்டான், இங்கே இருந்து வீண் பொழுது போக்குவதைவிட எங்கேயாது போய் வேலையோ வெட்டியோ செய்து பிழைத்துக் கொள்ளட்டும் என்று எண்ணி அவர்கள் அனுமதி கொடுத்து விட்டார்கள்.
சாமியார் அவனைக் கூட்டிக் கொண்டு போனார். அவர் ஒரு காட்டில் ஆசிரமம் கட்டிக் கொண்டு வாழ்கிறவர். அங்கே அழைத்துக் கொண்டு போனார். கந்தன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை யெல்லாம் செய்தான்.
அந்தச் சாமியார் மந்திரம் தெரிந்தவர். எது வேண்டுமானாலும் இருந்த இடத்திலிருந்தே வர வழைக்கிறவர். இந்த விஷயம் முதலில் கந்தனுக்குத் தெரியாது. அந்த ஆசிரமத்தில் அதிகச் சாமான்கள் இல்லை. சாமியார் உட்கார்ந்து தவம் பண்ணுகிற புலித்தோல் இருந்தது. இரண்டு மூன்று காவியாடைகள் இருந்தன. அவர் கழுத்தில் ருத்திராட்ச மாலை இருந்தது. ஒரு குடுவையில் திருநீறு இருந்தது. அதில் ஏதாவது இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.
‘இவர் எப்படிச் சாப்பிடுவார்? யாராவது சாப்பாடு கொண்டு வந்து தருவார்களா ?’ என்று யோசித்தான்.
வந்த முதல் நாள் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாமியார் கந்தனை அழைத்து, “இந்தா, இந்தச் செம்பில் தண்ணீர் கொண்டு வா” என்று வெளியே அனுப்பினார். அவன் சிறிது தூரத்தில் ஓடிய ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தான். வந்து பார்த்த போது இரண்டு இலைகளில் பருப்பு பாயசத்தோடு சாப்பாடு இருந்தது. ‘இதை யார் கொண்டு வந்து வைத்தார்கள் ?” என்று யோசித்தான். சாமியாரைக் கேட்கலாம் என்று நினைத்தான். பிறகு, “அப்படியெல்லாம் கேட்டால் சாமியார் ஏதாவது நம்மைப்பற்றித் தவறாக நினைத்துக் கொள்வார்.
நமக்கு என்ன, சாப்பாடு தானே வேண்டும்? அது யார் கொண்டு வந்தால் நமக்கு என்ன?’ என்று சும்மா இருந்து விட்டான்.
“தம்பி, சாப்பிடலாம், வா” என்று சாமியார் அழைத்தார்.
“சாமி, நீங்கள் சாப்பிடுங்கள், பிறகு நான் சாப்பிடுகிறேன்” என்று அவன் சொல்லியும்,”இல்லை, இல்லை. இரண்டு பேருமே சாப்பிடலாம்” என்று சாமியார் சொல்லி உட்கார வைத்தார், அவன் அப்படியே சாப்பிட்டான். ஆ ! எத்தனை சுவையான சாப்பாடு! அவன் தன் வீட்டில் இப்படியுள்ள சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்லை.
சாப்பிட்டபிறகு அந்தச் சாமியார் அவனிடம் சொன்னார்; “கந்தா. இங்கே நடக்கிறதை நீ யாரிடமும் சொல்லாதே, கடவுள் எனக்கு வேண்டி யதை எல்லாம் தருகிறார். அதோ இருக்கிறதே, அந்தத் தகரப் பெட்டியில் கடவுள் இருக்கிறார். இது உனக்கு மட்டும் தெரிந்தால் போதும் யாருக்கும் சொல்லாதே!” என்றார்.
தகரப் பெட்டிக்குள் கடவுள் இருக்கிறதாவது t அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இரண்டு மூன்று நாள் ஆனவுடன் கந்தனுக்குச் சாமியார் செய்யும் அற்புதமான செயல்கள் தெரிய வந்தன. அவர் ஒரு மந்திரக் கோலை வைத்திருந்தார். அந்தக் கோலினால் தகரப் பெட்டியைத் தட்டி, “சூ சுவாகா! இரண்டு மாம்பழம் வேண்டும். என்றால் உடனே அந்தப் பெட்டி திறந்து கொள்ளும். அதில் இரண்டு மாம்பழங்கள் இருக்கும். சாமியார் எடுத்துக் கொள்வார். தினந்தோறும் சாப்பாடு கூட இப்படித்தான் கிடைக்கிறது என்று கந்தன் தெரிந்து கொண்டான்,
சாமியார் அவனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்தார். பல நீதிகளை உபதேசம் செய்தார். “கடவுளை நம்பு. அதிக ஆசைப் படாதே! யாரிடமும் அன்பாக இரு” என்று நீதியுரைகளைச் சொன்னார்.
சில காலம் கழித்துக் கந்தனுக்குத் தன் அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. சாமியாரிடம் சொன்னான். “போய் விட்டு வா அப்பா! என் ஆசீர்வாதங்களை அவர்களிடம் சொல். வெறுங்கையோடு போகாதே. அவர்களுக்கு வேட்டி, புடைவை தருகிறேன். அவற்றைக் கொண்டுபோய்க் கொடு” என்று வேட்டி, புடைவை, பழம் எல்லாம் கொடுத்து அனுப்பினார்.
கந்தன் ஊருக்குப் போய் அப்பா அம்மாவைப் பார்த்தான். அவர்கள் அவனைப் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அவன் மொழு மொழு என்று வளர்ந்திருந்தான். அவன் கொண்டு வந்திருந்த வேட்டி புடைவைகளைக் கண்டு அவர்கள் பிரமித்துப் போனார்கள், “என்னடா கந்தா,நீ சாமி யாரிடம் போனாயே! அங்கே இப்போது இல்லையா? ஏதாவது வியாபாரம் செய்கிறாயா? இதெல்லாம் ஏது?” என்று கேட்டார்கள். அந்த நிலையில் கந்தனைக் கண்ட அவர்கள் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள்.
“நான் சாமியாரிடந்தான் இருக்கிறேன். உங்களைப் பார்த்து வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டேன். வெறுங்கையாகப் போகாமல் இவற்றைக் கொண்டு போய்க் கொடு என்று அவரே கொடுத்தார்” என்றான்.
“சாமியாரா கொடுத்தார்? அவருக்கு இதெல்லாம் எப்படிக் கிடைக்கிறது? யாராவது கொண்டு வந்து கொடுக்கிறார்களா?” என்று அம்மா கேட்டாள்.தன் பிள்ளை சாமர்த்தியசாலி ஆகிவிட்டான் என்பதில் அவளுக்கு மட்டில்லாத மகிழ்ச்சி. அந்தச் சாமியார் நிரம்பப் பெரியவர். அவருக்கு எது வேண்டுமானாலும் கிடைக்கும். அது பெரிய ரகசியம். அதெல்லாம் சொல்லக் கூடாது?” என்றன் கந்தன்.
“யாராவது திருடர்கள் கொண்டு வந்து தருகிறார்களா?” என்று அப்பா கேட்டார்.
“சே! அப்படி எல்லாம் பேசாதீர்கள். அவர் பெரிய மகான். எது வேண்டுமானாலும் வருவித்துத் தருவார்.”
“ஓகோ! குட்டிச் சாத்தான் வேலை போலிருக் கிறது !” என்று அப்பா சொன்னார்.
“சாத்தானும் இல்லை; தீத்தானும் இல்லை. அவர் தெய்வம் போன்றவர் !” என்று சொல்லிக் கன்னத்தில் போட்டுக் கொண்டு சாமியாரை நினைத்துக் கும்பிட்டான். அப்பாவின் பைத்தியக்காரத்தனமான பேச்சைக் கேட்டு அவன் மனம் வருந்தியது. அதற்குப் பரிகாரமாகத்தான் தன் கன்னத்தில் போட்டுக்கொண்டான்.
அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படியானால் நான் ஒரு முறை சாமியார் ஆசிரமத்துக்கு வந்து பார்க்கலாமா?” என்று கேட்டார் அப்பா.
“எதற்கும் சாமியாரைக் கேட்டுக் கொண்டு வந்து உங்களை அழைத்துக் கொண்டு போகிறேன்.’
“சரி, சரி; அடுத்த முறை வரும்போது எனக்கு ஒரு தங்கச் சங்கிலி வாங்கி வா. என் கழுத்து மூளியாக இருக்கிறது. உங்கள் அப்பாவால் ஒன்றும் செய்ய முடியாது. நீ வாங்கித் தந்தால், என் பிள்ளை சம்பாதித்துக் கொடுத்தது பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்” என்று சொன்னாள் அம்மா.
“சரி” என்று சொல்லி விடை பெற்றுச் சென்றான் கந்தன்.
மூன்று மாதம் கழித்து மறுபடியும் அப்பாவைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டான். புறப்படும் போது சாமியாரிடம், “எங்கள் அம்மா தங்கச் சங்கிலி வேண்டுமென்று கேட்டாள்” என்று சொன்னான்.
”அப்படியா? கொடுத்துவிட்டு வா” என்று மந்திரப் பெட்டியிலிருந்து ஒரு சங்கிலியை வருவித்துக் கொடுத்தார். பிறகு கந்தன், ‘சாமி, அவர்கள் ஒரு முறை இங்கே வந்து உங்களைத் தரிசிக்க வேண்டு மென்று ஆசைப்படுகிறார்கள்” என்பதையும் சொன்னான்.
சாமியாருக்கு அதைக் கேட்டவுடன் சிரிப்பு வந்தது.”சரி, அழைத்துக்கொண்டு வா; இரண்டு நாள் இருந்து விட்டுப் போகட்டும்” என்று சொல்லித் தங்கச் சங்கிலியோடு அவனை அனுப்பி வைத்தார்.
இரண்டு நாள் கழித்துக் கந்தன் தன் தாயார் தகப்பனாரோடு அங்கே வந்து சேர்ந்தான். மிகவும் சிறிய ஆசிரமத்தில் சாமியார் இருப்பதை அவர்கள் கண்டார்கள். ‘இவருக்குத்தான் எது வேண்டு மானாலும் கிடைக்கிறதே ! ஒரு பெரிய மாளிகையில் இருக்கப்படாதோ? இந்தக் குடிசையில் ஏன் இருக்கிறார்கள்?’ என்று அவர்கள் நினைத்தார்கள்.
முதல் நாள் அவர்களை நீராடி விட்டு வரும்படி அனுப்பினார் சாமியார். திரும்பி வந்த போது எல்லோருக்கும் இலைபோட்டு உணவு பரிமாறியிருந்தது.வந்தவர்கள் கண்களை அகல விழித்துப் பார்த்தார்கள். ஒரே ஆச்சரியமாக இருந்தது. சாப்பிட்டார்கள். நல்ல விருந்து. பிறகு அவர்களுக்குப் புதிய ஆடைகளைச் சாமியார் தந்தார். அங்கே இருந்த தகரப்பெட்டி அவர்கள் கண்ணில் பட்டது. “அது என்ன ?” என்று கந்தனைக் கேட்டார்கள். “அதில் தான் கடவுள் இருக்கிறார். சாமியாருக்கு எல்லா வற்றையும் தருகிறார்” என்று தன்னையே அறியாமல் சொல்லி விட்டான் அவன்.
கந்தனுடைய அப்பா அந்தப் பெட்டியை உற்று நோக்கினார். அருகில் அந்த மந்திரக் கோலும் இருந்தது.சாமியார், “நான் சிறிது வெளியில்போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். இதுதான் சமயம் என்று கந்தனுடைய அப்பா அந்தப் பெட்டியை ஆராயத் தொடங்கினார், கந்தனுக்கு இரகசியத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு உண்டாயிற்று. ”சூ சுவாகா!” என் தட்டினால் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டான்.
உடனே ஆவல் நிரம்பிய அவனுடைய அப்பா அந்தக் கோலை எடுத்து, “சூ சுவாகா! எனக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் வேண்டும்” என்று சொல்லித் தட்டினார். ஏன்ன ஆச்சரியம் ! டப் என்று பெட்டி திறந்தது. அதிலிருந்து ஒரு வெள்ளிக் கிண்ணம் வெளியில் வந்தது. பிறகு பெட்டி மூடிக் கொண்டது. அதைக் கண்டு அம்மாவும் அப்பாவும் ஆச்சரியத் தால் வாயைப் பிளந்தார்கள். அடுத்தபடி. “எனக்கு ஒரு பட்டுச் சட்டை வேண்டும்” என்று அப்பா தட்டினார். அப்படியே வந்தது. “இங்கே பாருங்கள்; எனக்கு ஒரு காசு மாலை வேண்டும். சாமியார் வருவதற்குள் வருவித்துத் தாருங்கள்” என்று அம்மா அவசரப்பட்டாள். அவளுடைய நச்சரிப்பைக் கண்டு அப்பாவுக்குக் கோபம் வந்தது. “இருடி. பேராசைக்காரி! உனக்குப் புடவை, தங்கச் சங்கிலி எல்லாம் கிடைத்தது போதாதா ? நீ சனியன் மாதிரி குறுக்கே வராதே !” என்று கோபத்தோடு சொன்ன அப்பா, எதையோ கேட்க எண்ணினவர், “சூ சுவாகா! சனியன்” என்று தட்டிவிட்டார். அவர் கோபம் குறையாமல் அப்படி உளறி விட்டார்.
அவ்வளவு தான்; பெட்டிதிறந்தது, அதிலிருந்து கன்னங் கறேல் என்று ஒரு வடிவம் வெளிப்பட்டது. லபக் கென்று அப்பாவை விழுங்கி மறைந்தது. பெட்டி மறுபடியும் மூடிக் கொண்டது. அப்பா போய் விட்டதைக் கண்டு அம்மா அலறிப் புடைத்துக் கொண்டு கதறினாள். கந்தனுக்கு, “அதிகம் ஆசைப்படாதே” என்று சாமியார் உபதேசித்தது நினைவுக்கு வந்தது
அந்தச் சமயத்தில் சாமியார் வெளியே போனவர் சிரித்தபடியே வந்தார்.”சாமி, என் புருஷர் போய் விட்டாரே, என்று அம்மா அழுதாள். “என் தெய்வமே! எங்களை மன்னித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கந்தன் அவர் காலில் விழுந்து புலம்பினான்.
எல்லாம் சாமியார் நிதானமாக நடந்ததை கேள்வியுற்றார், பிறகு அந்த மந்திரக் கோலைக் கந்தனிடம் தந்து, “அப்பா வேண்டும் என்று கேள்” என்றார். கந்தன் கண்ணைத் துடைத்துக்கொண்டு சாமியார் காலில் விழுந்து வணங்கி எழுந்து, மிகவும் பயபக்தியுடன் அந்தக் கோலால், “என் அப்பா வேண்டும்” என்று பெட்டி மேல் தட்டினான். அவர்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கும்படி, பெட்டி திறந்தவுடன் அதிலிருந்து அவர் வெளியில் வந்து நின்றார். நின்றவர் சாமியார் காலில் விழுந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதார். அம்மா தன் கணவர் வந்ததைக் கண்டு, செத்தவர் பிழைத்தது போல எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
எல்லோரும் சேர்ந்து சாமியார் காலில் விழுந்தார்கள்.
“சாமி, இனிமேல் நாங்கள் பேராசைப்பட மட்டோம், நீங்கள் கொடுக்கிறதை வாங்கிக் கொள்வோம். ஒன்றும் கொடுக்கா விட்டாலும் சரியே! எங்கள் பிள்ளையைக் காப்பாற்றுகிறீர்களே, அதுவே போதும்” என்று மனமார அவரைத் துதித்து நின்றார்கள்.
“இனிமேல் கந்தனை அழைத்துப் போங்கள். அவன் படித்திருக்கிறான். நல்ல வேலை கிடைக்கும். என்னை மறந்து விடுங்கள்” என்று சொல்லி யாவருக்கும் விடைகொடுத்து அனுப்பினார் சாமியார்.
★ ★ ★



