

ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாக அமைந்தது திருமந்திரம். இதனை இயற்றியவர் திருமூலர். அவர் கைலாயத்தில் திருநந்திதேவருடைய திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர்.
அவர் அணிமாதி சித்திகள் எட்டும் கைவரப் பெற்றவர். பொதிகை மலையில் வாழும் அகத்தியருக்கு நண்பர். தென்னாடு சென்று அம் முனிவருடன் சில காலம் இருந்து வரலாம் என்றெண்ணி அந்தச் சித்தர் புறப்பட்டார். வரும் வழியில் திருக்கேதாரம் முதலிய தலங்களை யெல்லாம் வழிபட்டுச் சிதம்பரத்தை அடைந்தார். அங்கே ‘எவ்வுயிரும் உய்ய எழுத்தருளிய சேவடியாரைச், செவ்விய அன்புற வணங்கி’ச் சிலகாலம் அத்தலத்தில் தங்கியிருந்தார்.
பிறகு காவிரிக் கரையில் உள்ள தலங்களை ஒவ்வொன்றாகத் தரிசித்துக் கொண்டு திருவாவடுதுறைக்கு வந்து திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது அவ்விடத்திலே தங்கிவிட வேண்டும் என்ற உணர்ச்சி அவருடைய சங்கற்பம் இல்லாமலே உண்டாயிற்று. அதைப் பெரிதாக எண்ணாமல் அவர் அவ்விடம் விட்டகன்றார்.
காவிரிக் கரையில் பசுக்கூட்டங்கள் இருப்பதை அந்த யோகியார் கண்டார். அருகில் உள்ள சாத்தனூர் என்ற ஊரில் வாழும் அந்தணர்களின் பசுக்களை மேய்க்கின்ற மூலன் என்ற ஆயன் பசுக்களை நாள்தோறும் ஒட்டிவந்து மேய்ப்பது வழக்கம். அன்று அவன் திடீரென்று மேய்க்க வந்த இடத்தில் உயிர் நீத்தான். பசுக்களெல்லாம், உயிர் போய்ப் பிணமாகக் கிடந்த மூலனுடைய உடம்பைச் சுற்றி நின்று கதறின; மோந்து பார்த்துக் கலங்கின.
இதனை உணர்ந்த சித்தர் பசுக்களின் துயரநிலை கண்டு இரங்கி, அவற்றின் துயரத்தைப் போக்க வேண்டும் என்று கருதினார். ஆயன் உயிர்பெற்று எழுந்தாலல்லாமல் அந்த ஆக்களுக்கு உள்ள துயரம் நீங்க வழியில்லை. ஆதலின் சித்தியின் ஆற்றலால் அவர் உடம்பை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு மூலனுடைய உடம்புக்குள் புகுந்து எழுந்தார். அவர் எழுந்தது கண்ட பசுக்கள் உவகை மிகுதியால் துள்ளிக் குதித்தன. அவரை நாவால் வருடித் தம் அன்பைப் புலப் படுத்தின. பகலெல்லாம் அவற்றை அவர் பாதுகாத்தார்.
மாலை வந்தது. திருமூலராகிய சித்தர் மாடுகளை யெல்லாம் ஊருக்குள் ஓட்டிக்கொண்டு போனார். அவை தம் தம் வீடு புகுந்தன.
வழக்கத்துக்கு மாறாக அன்று நேரம் தாழ்த்தமையினால் மூலனுடைய மனைவி அவன் இன்னும் வரவில்லையே என்ற கவலையோடு காத்திருந்தாள். திருமூலரைக் கண்டவுடன் அவரை அணுகி, ‘ஏன் இவ்வளவு நேரம்? உடம்புக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்ததோ?” என்று அவரைத் தொடப் போனாள். உடனே சித்தர், “என்னைத் தொடாதே!” என்று சொல்லி அந்த வீட்டிலே தங்காமல் ஊரில் உள்ள பொது மடத்தில் யோகத்தில் இருக்கலானார்.
மக்கள், சுற்றம் யாரும் இல்லாத மனைவி அன்று இரவெல்லாம் துயிலில்லாமல் வருந்தி மறுநாள் ஊரிலுள்ள வர்களிடம் இந்தச் செய்தியை உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்று பார்த்த போது அவர் பரம யோகியாக இருப்பதை அறிந்து வியந்தனர். “இவர் சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவயோகத்தில் நாட்டமுடையவரானார். இது எல்லோருக்கும் கிடைக்காத நிலை. இனிமேல் இவர் குடும்ப வாழ்வுக்கு வரமாட்டார்” என்று அந்த மாதினிடம் சொல்லி அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
திருமூலர் மடத்திலிருந்து புறப்பட்டுப் பசுமாடுகள் மேயும் இடத்திற்கு வந்து தம் உடம்பை மறைத்து வைத்த இடத்தில் பார்த்தார். அங்கே அதைக் காணவில்லை. இறைவன் திருவருளால் நிகழ்ந்தது இது. திருமூலர் திருவாவடுதுறைத் திருக்கோயிலில் தமக்கு உண்டான உணர்ச்சியையும் நினைவுக்குக் கொணர்ந்தார். ‘நாம் இவ்விடத்திலே தங்குவது தான் இறைவனுடைய திருவுள்ளம் போலும்’ என்று எண்ணி உருகித் திருவாவடுதுறைத் திருக்கோயிலைச் சார்ந்தார்.
அங்கே மீட்டும் இறைவனை வணங்கி அத்தலத்துக்குரிய மரமாகிய அரசின் அடியில் யோக சமாதியில் இருக்கத் தொடங்கினார். ஓராண்டு யோகத்தில் இருந்து விழிப்பார். விழித்தவுடன் ஒரு செய்யுள் திருவாய் மலர்வார். இப்படி மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். அப்பால் மீண்டும் கயிலாயம் சென்று பழைய படியே இறைவனைப் பிரியாமல் வாழும் வாழ்வு பெற்றார்.
இது பெரிய புராணத்தில் கண்ட வரலாறு. ”ஆண்டு ஒன்றுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைச் செய்தால் மிகப் பழங்காலந் தொடங்கியே இவர் பாடியிருக்க வேண்டுமே! திருமந்திரத்தில் உள்ள சொல் அமைப்பு மிகப் பழங்காலம் என்று சொல்வதற்கு ஏற்றபடி இல்லையே!” என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள்.
இந்த நாட்டில் பழங்காலத்தில் வழங்கிய வரலாறுகளை அப்படியப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. திருமூலர் சில காலமே திருவாவடுதுறையில் வாழ்ந்திருக்கலாம். அவர் பாடிய பாடல் ஒவ்வொன்றும், நினைத்தவுடன் எளிதில் பாடிய பாடலாகக் கருதுவதற்கு இல்லை. அநுபவத்தில் ஊறித் திளைத்து அதன் பயனாகப் பாட்டு எழுந்திருக்கிறது. நம்முடைய அளவைக் கொண்டு பார்த்தால் ஓராண்டு நல்ல அருள் அநுபவம் பெற்றால்தான் இப்படி ஒரு பாடலைப் பாடலாம். அத்தனை பொருட் செறியும் நுட்பமும் ஆழமும் உடையவை திருமந்திரப் பாடல்கள். இதனையே அந்த வரலாறு வேறு வகையிலே சொல்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நூலுக்கு, “திருமந்திர மாலை” என்பதே இயல்பான பெயர்.
மறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின் றோதலும் ஆமே
என்று திருமந்திரத்தின் பாயிரத்தில் திருமூலர் கூறுவதனாலும்
“ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந் திரமாலை“
என்று சேக்கிழார் கூறுவதனாலும் இச்செய்தி தெரியவருகிறது.
“ஏனஎயி றணிந்தாரை ‘ஒன்றவன் தான்’ என எடுத்து ‘ என்பது பெரிய புராணம். அதிலிருந்து, திருமந்திரத்தின் முதற்பாட்டு,
ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்குணர்ந் தான்; ஐந்து
வென்றவன்; ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்
சென்றவன் றானிருந் தான்உணர்ந் தெட்டே.
என்பதென்று தெரியக் கிடக்கிறது. இப்போதுள்ள பதிப்புகளில் இப்பாட்டுக் கணபதியின் காப்புக்குப் பிறகு இரண்டாவது பாடலாக இருக்கிறது.
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
என்ற திருமந்திரத்தில் இரண்டிடங்களில் வருகிறது. சேக்கிழாரும் அதனைப் பின்பற்றி,
“முன்னியஅப் பொருள்மாலைத்தமிழ்மூவா யிரஞ்சாத்தி“
என்று கூறுகிறார்.
இப்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கிடைக்கின்றன. சில பழைய உரைகளில் மூலச் சுவடிகளில் இல்லாத வேறு சில பாடல்கள் உள்ளன.
சிவாகமங்களிலுள்ள கருத்துக்களை தமிழால் பாடும் பணியை இறைவன் தமக்கு அருளியதாகக் குறிப்பிடுகிறார் திருமூலர்.
அந்தி மதிபுனை யரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே
என்பவை இக் கருத்தைப் புலப்படுத்துகின்றன.
“தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை மண்ணின் மிசைத் திருமூலர்வாக்கினால் தமிழ்வகுப்பக் கண்ணியஅத் திருவருளால்“
என்று சேக்கிழாரும் பாடுகிறார்.
மந்திரம் என்பது தன்னை நினைப்பாரைத் தீங்கு வராமற் பாதுகாப்பது என்னும் பொருளுடையது.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப“
என்பது தொல்காப்பியம். திருமந்திர நூல் நிறை மொழி மாந்தராகிய திருமூலருடைய திருவாக்கில் எழுந்தது; தன்னை ஓதுவாருக்குத் துன்பம் வராமல் பாதுகாக்கும் ஆற்றலுடையது.
இது ஒன்பது தந்திரங்களை உடையது. ஒவ்வொரு தந்திரமும் பல பகுதிகளாகப் பிரிந்திருக்கின்றது. 235 பகுதிகள் தமக்குரிய பெயர்களுடன் உள்ளன. முதலில் பாயிரம் இருக்கிறது. அது கணபதி காப்புடன் தொடங்கி, பரசிவப் பிரபாவம், திரிமூர்த்திகளின் ஜேஷ்ட கனிஷ்ட முறை, வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, குரு பாரம்பரியம், நாயனார் தம் வரலாறு கூறல், குரு மட வரலாறு, திருமந்திரத் தொகைச் சிறப்பு, அவையடக்கம் என்ற ஒன்பது பகுதிகளையுடையது. திருமந்திரம் முழுவதிலும் உள்ள இந்த உட்பிரிவுகளைப் பிரித்துத் தலைப்பிட்டவர்கள் இன்னாரென்று தெரியவில்லை. பிற்காலத்தவர்கள் என்பதில் ஐயம் இல்லை.
முதல் தந்திரத்தில் ஞானம் அடைவதற்குச் சாதனமான நல்லொழுக்கங்களைச் சொல்லும் பாடல்கள் இருக்கின்றன. இரண்டாம் தந்திரம் சிவபுராணங்களிலும் ஆகமங்களிலும் பிறவற்றிலும் உள்ள வரலாறுகளிற் சிலவற்றின் உண்மையை உணர்த்துவதோடு, இறைவன் இயற்றும் ஐந்து தொழில் களையும், ஆன்மாக்களின் கூறுபாடுகளையும், தீய இயல்புகள் இன்னவென்பதையும் எடுத்துக் கூறும். மூன்றாம் தந்திரம் யோக வகைகளையும் சித்தியின் வகைகள் முதலியவற்றையும் சொல்லும். நான்காம் தந்திரம் மந்திரங்களின் பிரிவுகளையும், அவற்றைப் போற்றும் முறைகள் முதலியவற்றையும் வகுத்துரைக்கும். ஐந்தாம் தந்திரம் சைவ சமயத்தின் பகுதிகளையும் சோபானங்களையும் பல வகை மார்க்கங்களையும் பிறவற்றையும் இயம்பும். ஏழாம் தந்திரம் ஆறு ஆதாரங்களையும், ஆதாரத்தில் நிகழும் திருக்கூத்துக்களையும், யோகப் பயிற்சிக்குரிய ஒழுக்கங்களையும், பிறவற்றையும் சொல்லும். எட்டாம் தந்திரத்தில் பதினெட்டு அவஸ்தைகள், ஆறு அத்துவாக்கள் முதலியவற்றின் இலக்கணங்களையும், அநுபவக் கூறுபாடு களையும் காணலாம். ஒன்பதாவது தந்திரத்தில் பஞ்சாக்கரத்தின் இலக்கணத்தையும், வகையையும், அவற்றைக் கொண்டு அடையும் பேறுகளையும், ஞானம் சித்தித்தவர்கள் பெறும் அநுபவங்களையும் கண்டு இன்புறலாம்.
தந்திரம் என்பதற்கு ஆகமம் என்பது பொருள். திருமந்திரம் ஆகமப் பொருளைச் சொல்வதாதலின் இந்தப் பெயர் அதன் உறுப்புக்களுக்கு அமைந்தது போலும்.
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் காதுளம்
மற்றவி யாமிளம் ஆகும்கா லோத்தரம்
தற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே
என்று ஒன்பது ஆகமங்களின் பெயர்களைப் பாயிரத்தில் திருமூலர் சொல்கிறார். அந்த ஒன்பது ஆகமங்களின் சாரத்தையும் முறையாக ஒன்பது தந்திரங்களிற் சொன்னதாகவும் கொள்ளலாம்.
திருமுறைகள் பன்னிரண்டில் முதல் ஒன்பது திருமுறைகளும் பதினோராந் திருமுறையும் தோத்திரங்களாக இருப்பவை. பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரிய புராணம் காவிய உருவில் இருப்பது. பத்தாந் திருமுறையாகிய திருமந்திரமோ தோத்திரமும் சாத்திரமும் கலந்து இணைந்த நூலாக விளங்குகிறது. தோத்திரமாக இருப்பவை அனைத்தும் இறைவனைப் படர்க்கையில் வைத்துச் சொல்வனவே. ஒரு பாடல் மாத்திரம் முன்னிலையில் வைத்துத் துதிக்கும் முறையில் அமைந்திருக்கிறது.
காணநில் லாய்அடி யேற்குற வார்உளர்
நாணநில் லேனுன்னை நான்தழு விக்கொளக்
கோணல்நில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணிய னாகி யமர்ந்துநின் றானே
என்ற பாட்டே அது. இதற்குப் படர்க்கையாகப் பொருள் செய்யும்படி வேறு பாடம் ஏதேனும் இருப்பினும் இருக்கலாம்.
மற்றத் திருமுறைகளில் காணாத நடையும் பொருளும் இந்நூலில் இருக்கின்றன. பல பாடல்கள் சித்தர் பாடல்களாக இப்போது வழங்கும் பாடல்களைப் போல இருக்கின்றன. சித்தர்தம் பாடல்களில் குருமுகமாக உபதேசம் பெற்றார் மாத்திரம் உணர்ந்து கொள்ளும்படி பொருளை மறைத்துச் சொல்வார்கள். வைத்தியத்திலும், ரசவாதத்தைப் பற்றிய நூல்களிலும் இந்தப் பாணியைப் பார்க்கலாம்.
அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்திக் குதறிக் கூட்டில் அடைத்தது;
அத்திப் பழத்தின் அமுதம் அறிந்தபின்
கத்திக்கொண் டைவரும் காடுறைந் தாரே“
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைக் கிண்டிப் பூசனி பூத்தது முழுதும்
பழுத்தது வாழை இளங்கனி தொழுது
கொண்டெறிந்தோர் தொட்டுடை யாரே
என்பன போன்ற பாடல்கள் இதற்கு உதாரணம்.
[ஆணும் பெண்ணும் சேர்ந்து அளவளாவுகையில் இருவர் உயிர்ச்சத்தும் கலந்து உருவாகி அதில் உயிர் புகுந்தது. உடம்பில் வந்தபின் அதனுள்ளே அடைபட்ட உயிர் மரணமிலாப் பெருவாழ்வு ஒன்று உண்டு என்பதை உணர்ந்து சிவஞானம் பெற்ற பிறகு ஐம்பொறிகளும் தம் சேட்டை ஒடுங்கி அகன்றன.
ஆணினது சத்தே வித்தாக வினைப் போகமாகிய கசப்பையுடைய உடம்பு தோன்றியது. உடலிற் புகுந்த உயிர் தத்துவ ஆராய்ச்சி செய்து உள்ளம் மலர்ந்து சிவஞான மணம் தோன்றும்போது சிவபரம் பொருளை உணர்ந்து இன்புற்றது. ]
திருமந்திரத்திலுள்ள மூவாயிரம் பாடல்களும் ஒரே வகையான செய்யுட்கள். பெரும்பாலும் தரவு கொச்சகக் கலிப்பாவைப் போன்றவை அவை.
திருமந்திரம் முழுமைக்கும் தெளிவாக உரை தெரிந்து கொள்ள வேத ஞானமும் ஆகம ஞானமும் யோக நூற் பயிற்சியும் மந்திர சாத்திர அறிவும் ஞானசாத்திர உணர்வும் வேண்டும். இவற்றை முற்றப் பெற்றாலும் இதிலுள்ள பல செய்திகள் தெளிவாக விளங்கா. அதனால்தான் இந்நூல் முழுவதற்கும் இதுகாறும் யாரும் உரை எழுதவில்லை. பழைய உரைகள் சில பாடல்களுக்கு மாத்திரம் இருக்கின்றன.
திருமூலர் இந்தப் பாடல்களை அருளிய திருவாவடு துறையில், மிகப் புகழ்பெற்ற சைவ ஆதீனம் ஒன்று இருப்பதை யாவரும் உணர்வர். அவ்வாதீனத்தினர் ஒவ்வோராண்டும் திருமந்திர மகாநாடு கூட்டிப் பல சொற்பொழிவை நிகழச் செய்கிறார்கள். திருமந்திரத்திற் சில சில பாடல்களின் பழைய உரைகள் அடங்கிய இரண்டு நூல்களை வெளியிட்டிருக் கிறார்கள். இப்போது திருவாவடுதுறையாதீனத்தில் 21-ஆவது பட்டத்தில் ஞானாசாரியராக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் இத்தகைய பயனுள்ள தொண்டுகளைச் செய்து வருவது தமிழகத்தின் தவப் பேறென்றே கொள்ள வேண்டும். கன்னடியத் திருமேனிக் கம்பளச் சட்டைக் கயிலாய சித்தர் என்னும் சிவயோகியர் சில பாடல்களுக்குச் செய்தருளிய உரையுடன் கூடிய திருமந்திரப் பதிப்பொன்றும் (1954), சிவயோகப் பகுதி முதலியவற்றுக்கு உரிய பழைய உரை அடங்கிய பதிப்பொன்றும் (1955) இவ்வாதீனத்திலிருந்து வெளி வந்திருக்கின்றன.
1912-ஆம் ஆண்டில் மாவை வே. விசுவநாத பிள்ளை யென்னும் அறிஞர் திருமந்திரப் பதிப்பு ஒன்றை வெளியிட்டார்; அதில் மூலமும் குறிப்புரையும் அடங்கி யிருக்கின்றன. வேதாரணியம் டாக்டர் வி.வி.ரமண சாஸ்திரிகள் எழுதிய விரிவான அரிய நூன்முகம் ஒன்று இப்பதிப்பை அணி செய்கிறது. பதிப்பாசிரியர் தாம் எழுதிய பதிப்புரையில் திருமந்திரம் முழுமைக்கும் உரை எழுதி வைத்திருப்பதாகவும், அது அச்சில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்தப் பதிப்பு வெளியில் வரவே இல்லை.
திரிசிரபுரம் திரு. அ. சிவானந்தசாகர யோகீசுவரர் என்னும் பெரியார் திருமந்திரம் முழுமைக்கும் உரை எழுதி யிருக்கிறாராம். அதில் 20 பாடல்களுக்குரிய உரையை மாத்திரம் சமீபத்தில் புகழுடம்பு பெற்ற வரகவி திரு அ.சுப்பிரமணிய பாரதியாரவர்கள் வெளியிட்டிருக்கிறார் (1954). அச்சிறு நூலின் தோற்றுவாயில், அவ்வுரையைப் பற்றிய வரலாற்றைப் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
‘திரு அ.சிவானந்த சாகர யோகீசுவரர் சித்தர்களுடன் இருந்து பழகியவராதலின், இவர் சென்னையில் திருவல்லிக் கேணியில் கல்லூரித் தமிழாசிரியராய் இருந்த சமயம் கடந்த நாற்பத்தைந்தாண்டுகட்கு முன் தம்முடைய அன்பர் பலருடைய வேண்டுகோட்கு இணங்கித் திருமந்திரத்திற்கு உரை இயற்றத் தொடங்கி மூன்று வருஷ காலங்களுக்குள் இரண்டாயிரத்தைந் நூறு மந்திரங்களுக்குமேல் உரை செய்து முடித்தனர்… அவர்கள் இயற்றிய உரையுடன் கூடிய அம்மந்திரங்களை அவர் காலத்திலே அவர் முன்னிலையில் அச்சிடப் பலவாறு முயற்சி செய்த பார்த்தேன். பயன்பெற முடியவில்லை. பின்னர் அவைகளை ஒரு பேழைப் புத்தகமாக்கிப் பாதுகாத்து வரலானேன். இப்போது சமீபத்தில் ஐந்து வருஷங்களுக்கு முன் கவனிக்கையில் தாள்கள் அனைத்தும் மட்கிப் போய்த் தொடுவதற்கு முன் தூள் தூளாக ஒடிந்து உதிரும் நிலைமையில் உள்ளது கண்டு எனக்குக் கிடைத்த ஒழிவு நேரத்தில் அவற்றிற்கு வேறு பிரதி அமைப்பதில் கவனம் செலுத்தினேன். மந்திரத்தின் ஒன்பது தந்திரங்களில் மூன்று, ஐந்து, ஆறு தந்திரங்களும், ஒன்று, நான்கு, ஏழு தந்திரங்களிற் சில பாடல்களுமே உருவாக்கப்பட்டன. மற்றவை உருவாக்கற்கியலாதனவாய் உதிர்ந்து போயின.
‘இதைக் காணும் தமிழ் அன்புச் செல்வர்கள் முயன்று எஞ்சியிருப்பவற்றையாவது புத்தக உருவில் வெளியிட முயன்றால் தமிழ் நாட்டுக்குப் பயன்படும்.’
இந்தப் புத்தகத்தில் மிகவும் நுட்பமான பாடல்களை விளக்கும் செயலை நான் மேற்கொள்ளவில்லை. பதினேழு பாடல்களை எடுத்துக் கட்டுரை யுருவத்தில் விளக்கம் எழுதியிருக்கிறேன். திருமுறை மலர்களைப் பாராட்டி ஆதரித்து ஊக்கம் ஊட்டும் அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கி.வா.ஜகந்நாதன்.



