
ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்
உப்பும் அப்பும்
அலைகள் மோதி வீசும்போது எவ்வளவு தெளிவாக அந்த நீர் இருக்கிறது! பொய்கை நீருக்கும் அதற்கும் வேறுபாடே இல்லையென்று தோன்றுகிறது. ஆனால் ஒரு கை எடுத்து வாயிலே விட்டுக்கொண்டால், “சீசீ! உப்பு” என்று உடனே துப்பி விடுகிறோம். கடல் நீர் உப்பாக இருக்கிறது என்பதைச் சுவையால் உணர்கிறோம்; கண்ணால் காண இயலாது.
கடல் நீரில் உள்ள உப்பைக் கண்ணால் காண வழி இருக்கிறது. நம்முடைய வீட்டில் உப்பு இல்லையா? கடையில் விற்கவில்லையா? அதைக் கண்ணில் நன்றாகக் காணுகிறோமே. அந்த உப்பு உப்பளத்தில் விளைந்த உப்பு.
உப்பளத்தில் விதை போட்டு உப்பை விளைக்கிறதில்லை; பாத்தி பாத்தியாகக் கட்டிக் கடல் நீரைப் பாய்ச்சித் தேக்கி வைக்கிறார்கள். சூரியனுடைய வெயிலில் நீர் மெல்ல மெல்ல ஆவியாக மாறுகிறது. நீரிலுள்ள உப்பு மாத்திரம் கீழே படிந்து உருப்பெற்று வெள்ளையாக நிற்கிறது. அதை வாரிக் கொண்டு போய் விற்கிறார்கள்.
கடல் நீரில் உப்பு என்னும் சுவை கண்ணாற் காண இயலாமல் இருந்தது. சூரியன் தன் வெம்மையால் அதைக் காணும்படி செய்தான். அதுவே உப்பு என்ற பேர் பெற்றது.
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்தது.
(கடல் நீரில் மிகுதியாக உள்ள உவர்த்தன்மை குரியனது வெப்பத்தால் (நீர் ஆவியாக மாற) எஞ்சி நின்று, உப்பு என்று தனியே பெயர் பெற்று உருவத்தையும் எடுத்தது.
அப்பு-நீர்; இங்கே கடல் நீர். கூர்மை-மிக்குள்ள தன்மை; என்றது உவர்ப்பை. உருச் செய்தது-உருவை மேற்கொண்டது.
ஒரு படி உப்பை எடுத்து ஒரு படி நீரிலே போடுகிறோம். அப்போது உப்பின் உருவம் மறைந்துவிடும். அந்த நீர் ஒரு படியாகத்தான் இருக்கும் உப்பும் தண்ணீரும் ஒன்றுபட்டு நிற்கும். தண்ணீரிலே உப்புக் கரைந்து போய், உப்பென்னும் தோற்றம் மாறித் தண்ணீர் என்ற தோற்றமே நிற்கும்.
அவ்வுரு
அப்பினிற் கூடியது ஒன்று ஆகும்.
(உப்பென்னும் அந்தவுருவம் தண்ணீரில் சேர்ந்ததனால் அதனோடு ஒன்றாகிவிடும்.
அவ்வுரு-கண்ணுக்குத் தோற்றும் உருவாக நின்ற அந்த உப்பு. அவ்வுரு அப்பினிற் கூடியதாகி ஒன்றாகும்; கூடி அது என்றும் பிரிக்கலாம்.)
உடம்பெடுத்துக் கொண்டு வாழ்வது உயிர். உலகமாகிய பாத்தியில் வினையாகி வெம்மையிலே உடம்பாகிய உருவம் எடுக்கிறது. அங்கும் இங்கும் திரிந்து பிரபஞ்ச வியாபாரத்தில் ஈடுபடுகிறது. எப்போதும் உடம்போடே காணப்படுகிறது; தூல உடம்பில் இராதபோதும் சூக்கும உடம்பாகிய சட்டையை அது கழற்றுவதே இல்லை.
இப்படி உள்ள சீவன் இறைவன் திருவருளினால் சிவஞானம் பெற்றுப் பாசக்கட்டை அறுத்துவிடுகிறது. பாத்தியிலும் மூட்டையிலும் பாத்திரங்களிலும் உருவத்தோடு சென்று வந்து கிடந்த உப்பு ஒருநாள் தண்ணீரில் கரைந்து விடுவது போல, பலபல உருவங்களை யெடுத்து வாழும் உயிர் பாசக்கட்டை அறுத்தபோது இறைவனோடு ஒன்றிவிடுகிறது; அவனிலே அது கரைந்து விடுகிறது. உப்பை நீர் தனக்குள் அடக்கிக் கொண்டது போலச் சிவன் சீவனைத் தனக்குள் அடக்கிக் கொள்கிறான். சீவனுக்குத் தனியே உருவம் இல்லாமல் மறைந்து போகிறது. வெள்ளை நிறமும் வடிவும் பெற்றிருந்த உப்பு நீரினையே தனக்குரிய வடிவமாகப் பெற்று விடுகிறது போலச் சீவன் சிவ சொரூபமாகி நிற்கிறது. அதுவே அத்துவித முத்தி.
செப்பின்இச் சீவன் சிவத்துள் அடங்குமே.
(சொல்லப் புகுந்தால், வெவ்வேறு உடம்போடு வாழும் இந்தச் சீவன் சிவத்துக்குள் அடங்கித் தன் தோற்றம் இழந்து ஒன்றிவிடும்.
செப்பின்-சொன்னால். யாவரும் காண உடம்பெடுத்து உலாவுவதால் இச் சீவன் என்று அண்மைச் சுட்டாற் சொன்னார்.)
இறைவனோடு ஒன்றுபடுவதே முத்தியாகும். அந்த நிலையில் சீவன் தன் இயல்பை இழந்து, சார்ந்த பொருளாகிய இறைவனுடைய மயமாக நிற்கும்;
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்தது; அவ்வுரு
அப்பினிற் கூடியது ஒன்றுஆகு மாறுபோல்
செப்பின்இச் சீவன் சிவத்துள் அடங்குமே.
முதல் தந்திரத்தில் உபதேசம் என்னும் பகுதியில் வரும் 24-ஆம் பாட்டு இது.
ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்
ஊரெல்லாம் கூடி
அவன் மனிதன் என்ற அளவில் வாழ்ந்தான். நாலுபேர் கவனித்து வந்துகூடும்படி அவனிடம் ஓர் ஆற்றலும் இல்லை. ஊரில் வாசம் செய்யும் மக்களில் அவனும் ஒருவனாக இருந்தான். வீட்டில் இருப்பவர்களுக்கு அவனைப் பற்றிய சிரத்தை இருந்தது. அவனுடைய மனைவி அவனைக் கணவனென்று கொண்டாடி இன்பம் பெற்றாள். அவன் மக்கள் அவனைத் தந்தையென்று அழைத்தார்கள்.
ஒரு நாள் திடீரென்று ஊரார் யாவரும் சேர்ந்து அவனைக் கவனிக்கும்படி நேர்ந்தது. அதற்கு முன்பு அவனுடைய சொந்த வீட்டில் உள்ளவர்கள் அவனை அறிவார்களே ஒழிய மற்றவர்களுக்கு அவனைப்பற்றி மிகுதியாகத் தெரியாது. அவன் கிழப்பருவம் எய்தி நோய் வாய்ப்பட்டுக் கிடந்தான். அப்போது வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட முன்பு அவனிடம் வைத்திருந்த கவனம் குறைந்தது.
அவன் இன்று இறந்துவிட்டான். ஊரில் இருப்பவர்கள் யாவரும் துக்கம் கேட்க வந்து விட்டார்கள். அவன் உயிரோடு இருந்தபோது, “ஒரு பயலாவது நம்மிடம் வந்து, இருக்கிறாயா, போய்விட்டாயா என்று விசாரிக்கிறானா?” என்று ஏங்கியிருக்கலாம். இப்போது ஊர் முழுவதும் கூடியிருக்கிறது. அதைப் பார்த்து மகிழ்ச்சியடைய அவன் எங்கே?
ஊரெல்லாம் கூடி ஓவென்று கதறுகிறார்கள். அழுகிற அத்தனை பேரும் அவன் போனமையால் தாம் பெற வேண்டியதை இழந்துவிட்டார்களா? அப்படி ஒன்றும் இல்லை. அவனுடைய மனைவி ஒருத்திதான் தன் மங்கல வாழ்வு போயிற்றே என்று வருந்துவாள். மற்றவர்களில் யாருக்கும் அவன் போனதனால் நஷ்டம் ஒன்றும் வந்துவிடவில்லை. ஆனாலும் எல்லோரும் சேர்ந்து அடுத்த ஊருக்கும் கேட்கும்படி அழுகிறார்கள். அவன் இறந்து போனதற்கு வேறு விளம்பரம் வேண்டியதே இல்லை.
மற்றச் சமயங்களில் ஊரினர் ஒன்று கூடுவது சந்தேகம்; ஆயிரம் கட்சி பேசுவார்கள். கல்யாணத்துக்குப் போகா விட்டாலும் இழவுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்று சொல்வார்கள்; அதனால் ஊரே இப்போது கூடியிருக்கிறது.
ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு.
(ஊரில் உள்ள யாவரும் கூடி ஒலி எழும்படியாக அழுது.)
“அதோ வருகிறாரே, அவர் யார்?”
“அவரை உங்களுக்குத் தெரியாதோ! அவர்தாம் வைரவநாத பிள்ளை.”
“ஓ அப்படியா! நான் அவரைப் பார்த்ததில்லை”
இப்போது கண்ணால் பார்க்கிற வைரவநாதபிள்ளை நெட்டையாய்க் கறுப்பாய் இருக்கிறார். அவர் வடிவம் அப்படி இருக்கிறது. அதற்குப் பேர்தான் வைரவநாத பிள்ளை.
“முத்துக்கிருஷ்ணப்பருக்கு அசௌக்கியமாமே!”
“ஆமாம்; அவர் எங்கேயோ விழுந்துவிட்டார்; காலில் காயம் பட்டுவிட்டது.”
விழுந்தது அவர் உடம்புதான். முத்துக்கிருஷ்ணப்பர் என்ற விலாசம் அந்த உடம்புக்குத்தான்.
“கிருஷ்ணனுக்கும் அவன் தம்பி ராமனுக்கும் வித்தியாசம் தெரியவே இல்லை; ஒரே மாதிரி இருக்கிறார்கள்.”
“கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் வித்தியாசம் தெரியும். கிருஷ்ணன் சற்றே கனமானவன்; உயரங்கூட ஓரங்குலம் அதிகம்.”
கிருஷ்ணனென்றும் ராமனென்றும் பேசும் பேச்செல்லாம் அந்த உடம்புகளைப் பற்றியவையே.
இப்படி உயிருடன் வாழும் ஒவ்வோர் உடம்புக்கும் ஒரு பேர் உண்டு; ஒரு வீடு உண்டு; அந்த வீடு உள்ள ஒரு வீதி உண்டு; அந்த வீதியைக் கொண்ட ஊர் ஒன்று உண்டு. இன்ன ஊரில் இன்ன வீதியில் இன்ன வீட்டில் இன்ன பேருடையவர் என்று பூரண விலாசத்தை ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறார்கள். அந்த விலாசம் உடையவர்கள் இறந்து போனால் அவர்கள் அத்தனை பேருக்கும் தனித் தனியே வழங்கின பேர்கள் மாறிவிடுகின்றன. அத்தனை உடம்புகளுக்கும் பேர் வேறு, ஊர் வேறு என்று இருந்தது போய், ஒரே பேர் வந்துவிடுகிறது. அந்த அருமையான பெயர் என்ன தெரியுமா? பிணம் என்பதே. முன்பு பல பேர்களைச் சொல்லி அழைத்தவர்களே இப்போது இந்தப் பேரை இட்டு அழைக்கிறார்கள்.
பவளசாமி. பாணராயர் வாழ்ந்த காலத்தில், நாலுபேர் தூக்கும் பல்லக்கினால் போனார்; “அதோ மணியகாரர் பவளசாமி பாணராயர் போகிறார்” என்றார்கள். அவர் இறந்து போய் அதே நாலு பேர் தூக்கும் பச்சைப் பல்லக்கில் போகிறார். அப்போது, “யார் போகிறார்கள்?” என்றால், “பிணம் போகிறது” என்றுதான் சொல்வர்கள். அதுவரையில் அந்த உடம்புக்கு வழங்கின பேர் இப்போது செல்லாமற் போய்விடுகிறது.
பேரினை நீக்கிப் பிணம்என்று பேர்இட்டு.
இறந்த பிறகு அந்தப் பிணத்தைக் கொண்டு போய்க் கொளுத்தி விடுகிறார்கள். சூரை முதலிய முள்ளுச்செடிகள் வளரும் சுடுகாட்டில் கொளுத்தி விடுகிறார்கள். அதற்கு முன் அந்த உடம்பால் பலவகையில் இன்பமும். ஊதியமும் பெற்றவர்கள் கூட அதைத் தொட அஞ்சுகிறார்கள்; அருவருக்கிறார்கள். தம்மோடு பழகிய அந்த வடிவத்தை ஒரு மாதம் இரண்டு மாதம் வைத்திருக்கிறார்களா? எவ்வளவு விரைவில் அதை வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போகலாம் என்றே நினைக்கிறார்கள்.
அந்த மனிதரே கட்டிய வீடு அது. ஆராய்ந்து ஆராய்ந்து கருவிகளை வாங்கிச் சிந்தித்துச் சிந்தித்துக் கட்டினார். தாம் சாய்ந்து கொள்ளச் சாய்மானத் திண்ணை, தாம் படுத்துக் கொள்ள வசதியான அறை, குழந்தைகளுடன் விளையாடக் கூடம், தாம் நீராட எல்லா வசதிகளும் உள்ள ஸ்நான அறை-இப்படியெல்லாம் வைத்துக் காட்டினார். அந்த உடம்பு இவ்வளவையும் பயன்படுத்திக் கொண்டது. இப்போது அது வீட்டில் வைக்கத் தகாதது என்று வெளியே கொண்டு போகத் திட்டம் போடுகிறார்கள்! வேறு வீட்டுக்கு அன்று; காட்டுக்கு, மரம் அடர்ந்த காடும் அன்று; சூரை படரும் சுடுகாட்டுக்கு. அட மனித வாழ்வே! அங்காவது அதைப் போற்றிப் பாதுகாக்க ஏற்பாடு செய்கிறார்கள்? அந்த வடிவமே அழிந்து ஒழியும்படி சுட்டு விடுகிறார்கள். மறுபடியும் எழுந்து வீட்டுக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமா?
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு.
(சூரைபடர்ந்த சுடுகாட்டிற்குக் கொண்டுபோய்ச் சுட்டு விட்டு. சூரை-பாலை நிலத்திலும் சுடுகாட்டிலும் படரும் ஒரு வகை முட்செடி. காடு என்றது சுடுகாடு. அம்-சாரியை, அழகிய என்று பொருள் செய்து, இழிப்புக் குறிப்பாகவும் கொள்ளலாம். அழகான சூரைக்காட்டுக்குக் கொண்டு போகிறார்கள்.)
அவரைச் சுட்டுவிட்டார்கள். பாவம்! மார்ச்சு மாதம் தொடங்கி விட்டாலே அவருக்குச் சூரிய வெப்பம் தாங்காது; கோடைக்கானல் பங்களாவுக்குப் போய்விடுவார். வீட்டிலே உள்ள மின்சார விசிறிக்குக் கணக்கே இல்லை; எப்போதும் சுழன்றபடியே இருக்கும். கொஞ்சம் வெப்பமான காற்று வீசினால், “என்ன அனல் காற்று!” என்று தவிப்பார். அவரை
ஆம், அந்த வெப்பத்தைத் தாங்காத உடம்பைத்தான் இப்போது சூரையங் காட்டிலே தீ மூட்டிச் சுட்டுவிட்டார்கள். பிறகு சுட்டவர்கள் என்ன செய்கிறார்கள்? குளிர்ந்த தண்ணீரில் மூழ்குகிறார்கள்! அந்த உடம்பு வெய்ய தீயில் வேகிறது; இந்த உடம்புகள் குளிர்ந்த நீரில் மூழ்குகின்றன!
அதற்குப் பின்பு இரண்டு மூன்று நாள் வீட்டிலுள்ளவர்கள் இறந்தவரைப் பற்றி அடிக்கடி பேசினார்கள். பிறகு அவரைப் பற்றிய பேச்சுக் குறைந்தது. ஆண்டுக்கு ஒருமுறை நினைத்தார்கள். கடைசியில் அடியோடு மறந்து போனார்கள்.
இவர்கள் கிடக்கட்டும். ஊரிலுள்ள அத்தனை பேரும் கூட்டமாக வந்து ஒலிக்க அழுதார்களே, அவர்கள் செய்தி என்ன? உயிரோடு இருக்கும் போதே அவரைக் கவனிக்காதவர்கள் இறந்த பிறகா கவனிப்பார்கள்? நீரில் மூழ்கி அவர் நினைப்பை அழித்தவர்கள்போல, தங்கள் வீடு சென்றவுடன் அந்தப் பிணத்தைப் பற்றி நினைப்பதையே விட்டுவிட்டார்கள்.
செத்துப்போனவர்கள் சொப்பனத்தில் வருவது கூடா தென்று, நினைக்கவே பயப்பட்டார்கள். நினைப்பது கூடா தென்றே திட்டமிட்டு நினைப்பொழிந்தார்கள்.
நீரினில் மூழ்கி நினைப்புஒழிந் தார்களே!
(நினைப்பு -நினைப்பை.)
மனிதனுடைய உடம்பு உயிர் இருக்குமளவும் போற்று வதற்குரியது. உயிர் ஒழிந்தால் அது அருவருப்பதற்கு உரியதாகிறது. அதை வைத்துக்கொண்டு அதன் நிலையாமையை உணர்ந்து கொள்ளாமல் அதைப் போற்றிப் பாதுகாப்பதே முடிவான பயனென்று எண்ணி வாழும் மக்களைப் பார்க்கும் போது திருமூலருக்கு இரக்கம் உண்டாகிறது.
ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேர்இட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்புஒழிந் தார்களே!
முதல் தந்திரத்தில் யாக்கை நிலையாமை என்னும் பகுதியில் உள்ள 3-ஆம் பாட்டு இது.



