ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்

உடம்பாலயம்

தமிழ் நாட்டில் உள்ள கோயில்களின் அமைப்பு வியக்கத்தக்கது. மனித சரீரம் போல அமைந்தது ஆலயம். ஆலயத்தின் உறுப்புக்களை மக்கள் உடம்பின் உறுப்புக்களோடு ஒப்புமை காட்டி அதன் தத்துவத்தை விளக்குவார்கள் அறிஞர்கள்.

உடம்பைப் போன்றது ஆலயம் என்பதன் விரிவை இப்போது காணுவதை விட்டுவிட்டு, உடம்பு ஆலயத்தைப் போன்றிருக்கிறது என்று திருமூலர் சொல்வதைக் கேட்கலாம்.

ஆலயத்தில் நம் கண்ணுக்கு முதலில் தோன்றுவது கோபுரம். அது கோயில் வாசலின்மேல் இருப்பது. பலநிலைகளால் ஆகியது அது. கோயிலில் பல பிராகாரங்கள் இருக்கும். சிவலிங்கப் பெருமான் இருக்கும் மூலஸ்தானத்துக்குப் போவதற்கு முன் பிராகாரங்களையும் பலவகை மண்டபங்களையும் கடக்க வேண்டும். இறைவன் உறையும் இடத்துக்குக் கர்ப்பக்கிருகம் என்று பெயர். அதை நடுவாக வைத்து மற்ற அமைப்புக்களை யெல்லாம் கட்டியிருக்கிறார்கள்.

சிவபெருமானை ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு வந்தால் போதாது. ஆலய தரிசனத்தின் பயன் நம்முடைய உள்ளம் தூய்மையடைவதே. இறைவனைக் கண்களால் கண்டு உருகி அவனுடைய கோலத்தை உள்ளத்திலே படம் பிடித்துக் கொள்ளவேண்டும். தியானம் செய்கையில் நம் உள்ளத்தில் அப்பெருமானை எழுந்தருளச் செய்து இன்புற வேண்டும். பல வேறு கோயில்களுக்குச் சென்று வழிபடுவதற்குப் பயன் இது.

ஊரில் உள்ள கோயிலில் சிவபெருமானைத் தரிசித்தது போல உடம்பாகிய கோயிலில் உள்ள சிவபெருமானையும் தரிசிக்கலாம். ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், உள்ளத்தில் இறைவனைக் காணவேண்டும் என்பதை நினைப்பூட்டும் சின்னமேயாகும்.

இந்த உடம்பே பெரிய ஆலயம். மனிதன்’ கட்டும் கோயிலில் இதில் உள்ள நுட்பமான அமைப்பைக் காண முடியாது. இறைவனே இந்த ஆலயத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறான். இதற்குள்ளே உள்ளம் அல்லது இருதயம் இருக்கிறது; அதுதான் இறைவன் உறையும் கர்ப்பக்கிருகம். கோயில் எவ்வளவு பெரிதாகவும் அழகாகவும் இருந்தாலும் கர்ப்பக்கிருகம் தூயதாக இல்லாவிட்டால் பக்தர்கள் இறைவனைத் தரிசிக்க இயலாது. உடம்பு பெரிதாக இருந்தால் போதாது; உள்ளம் தூயதாக இருக்கவேண்டும்.

கோயில்களில் பல பிராகாரங்களையுடையவைகளும் உண்டு; ஒரே பிராகாரத்தையுடைய கோயில்களும் உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் கர்ப்பக்கிருகம் இருக்கும். அதுபோல் உடம்பினால் அழகியவர்களும், பெரியவர்களும், அழகற்ற வர்களும், உறுப்புக் குறைவுடையவர்களும் இருக்கலாம்; ஆனால் எல்லோருக்கும் உள்ளம் என்பது சிறிது பெரிதின்றி இருக்கிறது.

உள்ளமாகிய கர்ப்பக் கிருகத்தில் சிவன் இருக்கிறான். ஆலயத்தில், இறைவன் சிவலிங்கத்துக்குள் இருக்கிறான். சிவலிங்கம் அவனுடைய உருவம். அதுபோல் உடம்பாகிய ஆலயத்தில் உள்ளமாகிய கர்ப்பக்கிருகத்தில் சீவனாகிய உருவத்துக்குள்ளே சிவபெருமான் இருக்கிறான். உடலுக்குள் உயிர் இருப்பது போல உயிருக்குள் உயிருக்குயிராகிய இறைவன் இருக்கிறான். உயிர் இருப்பதனால் உடம்பு இயங்குகிறது. உயிருக்குயிர் இருப்பதனால் உயிர் இயங்குகிறது. சீவனை இடமாகக் கொண்டு சிவன் விளங்குகிறான். சீவன் சிவ சொரூபம். இது தூய்மை பெற்ற நிலையிலுள்ள ஞானியர் திறத்தில் அமைவது.

சிவஞானத்தால் தெளிவு பெற்ற ஞானிகளுக்குச் சீவன் சிவசொரூபமாக நிற்கும்; இன்ப வாழ்வு உண்டாகும். அவர்கள் தெள்ளத் தெளிந்தோர்.

உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்;


தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்.

(சிவஞானம் பெற்று நன்றாகத் தெளிந்தவர்களுக்கு அவர்களுடைய உள்ளமே பெருமையையுடைய கர்ப்பக்கிருகம்; ஊனாகிய உடம்பே ஆலயம்; சீவனே சிவலிங்கம்.

பெருங்கோயில் பெருமை, தலைமையைக் கருதியது. ஊனால் ஆகிய உடம்பாக இருந்தாலும் அது கோயிலாகத் திகழும். சிவலிங்கம்- சிவன் ஆவிர்ப்பவித்திருக்கும் லிங்கவடிவம்.)

இந்த உடம்பிலே சிறப்பாகத் தோன்றுவது தலை; தலை என்பதே அதன் தலைமையைக் காட்டுகிறதல்லவா? எவரையும் முகத்தைக் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்கிறோம். ஆலயத்தில் கோபுரம் சிறப்பாகக் காட்சி தருவது போல, உடம்பாகிய ஆலயத்தில் தலை காட்சி தருகிறது. கோபுரத்தின் கீழே பெரிய வாயில் இருக்கிறது. இங்கும் தலையின் கீழ்ப் பெரிய வாசலைப் போல வாய் இருக்கிறது. வாய் என்பதே வாயில் என்ற பொருளை நினைப்பிக்கிறதல்லவா?

வேண்டியார் வேண்டியனவற்றைத் தரும் வள்ளலாகிய இறைவன் எழுந்தருளிய இந்த உடம்பென்னும் ஆலயத்தைப் பற்றித் திருமூலர் சொல்லுகிறார். எல்லாருடைய உடம்பும் ஆலயமாவதில்லை. தெள்ளத் தெளிந்த சிவஞானிகளுடைய உடம்பே ஆலயமாகின்றது.

உள்ளம் பெருங்கோயில்; ஊன்உடம்பு ஆலயம்; வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்; தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்.

(தெள்ளத் தெளிந்தாருக்கு அவர்களுடைய உள்ளமே வள்ளற் பிரானுக்குரிய பெருங்கோயில். அவர்களுடைய உடம்பே வள்ளற் பிரானுக்குரிய ஆலயம் என்று ஒவ்வொன்றனுடனும் கூட்டிக் கொள்ளவேண்டும்.)

ஊனால் அமைந்து மற்றவர்களிடம் அருவருக்கத் தக்கதாக உள்ள உடல் தெள்ளத் தெளிந்தவர்களிடம் ஆலயமாக மாறிவிடுகிறது. அப்படியே மற்றொரு மாற்றமும் உண்டாகிறது.

நம் உடம்பில் நுகர்ச்சிக் கருவிகளாக இருக்கும் புலன்கள் ஐந்தும் நம்மைப் பல இடங்களில் ஈர்த்துச் செல்கின்றன. அவற்றால் நாம் அடையும் தீங்குகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை. ஆனால் அந்தப் புலன்களே சிவஞானம் பெற்ற வர்களிடம் வாலாட்டுவதில்லை. மற்றவர்களை மதமுடைய யானைகளாக அச்சுறுத்தும் அவை அவர்களிடம் கட்டுப்பட்ட யானைகளாகி விடுகின்றன; அவர்களுக்கு ஏவல் செய்கின்றன.

புலன்களால் அறியாமையாகிய இருள் நமக்கு மிகுதியாகிறது. தெள்ளத் தெளிந்த சிவஞானிகளுக்கு உடம்பு ஆலயமாகவும் உள்ளம் கர்ப்பக்கிருகமாகவும் சீவன் சிவலிங்கமாகவும் மாறும்போது ஐம்புலன்களும் கோயிலில் வைக்கும் தீபங்களாகி விடுகின்றன. கோயிலில் பெரிய விளக்குகளை ஏற்றுவார்கள். அவற்றைக் காளா விளக்கு என்று சொல்வார்கள்; இப்போது காடா விளக்கு என்று வழங்குகிறது. புலன்கள் சிவஞானிகளின் ஒழுக்கத்துக்குத் துணையாக ஞான வாசனை வீசுகின்றன. அவர்களுடைய கரணங்கள் யாவுமே சிவ கரணங்களாகி மாறிவிடுகின்றன.

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

(திருட்டுத்தனத்தையுடைய ஐம்புலன்களும் பெரிய அழகிய விளக்குகளாகும்.

மற்றவர்களுக்குக் கள்ளப் புலன்களாக இருந்தவை அவை; இவர்களுக்கே தெள்ளத் தெளிவதற்கு முன்பு அப்படி இருந்தவை. கள்ளம்- தம்மை உடையாருக்குத் தீங்கு செய்யும் கரவு. காளாவிளக்கு என்று கூட்டுக. மணி – அழகு; மணி விளக்கு – மணியாகிய தூண்டா விளக்கு என்பதும் பொருந்தும்.)

அருவருப்பதற்குரிய உடம்பும், ஆறு தீய குணங்களுக்கு இடமாகிய உள்ளமும், தீயவை பேசும் வாயும், தீய வழியிற் செலுத்தும் புலன்களும் இறைவன் திருவருள் பெற்ற பிறகே ரஸவாதத்தால் செம்பு பொன்னாக மாறியது போல மாறிவிடும்.

உள்ளம் பெருங்கோயில்; ஊன்உடம்பு ஆலயம்; வள்ளல் பிரனார்க்கு வாய்கோ புரவாசல்; தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்; கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

”ஊனுடம்பு சுற்றாலை”, “தெள்ளித் தெளிவார்க்கு”, ”காள மணிவிளக்கு” என்று வேறு பாடங்களும் உண்டு. சுற்றாலை என்ற பாடத்திற்குத் திருச்சுற்று மதிலாகிய பிராகார மென்று பொருள் கொள்ள வேண்டும்.

கயிலாய சித்தர் உரையில் உள்ள சில பகுதிகள் இங்கே அறிவதற்குரியன. ‘பாலின்கண் நெய் இருந்தாற் போலவே பூரண சிவலிங்கம் உள்ளமாகிய சீவாத்மாவை இடங்கொண்டிருக்கை யினாலே, ‘உள்ளம் பெருங்கோயில்”…… உள்ளப்பெருங் கோயிலாகிய சீவாத்மாவுக்கு ஐம்பூத வடிவு வளையமாகை யினாலே, ‘ஊனுடம்பு சுற்றாலை”….. வைகரி வாக்குச் சுற்றாலாகிய வடிவுக்கு முன்னிலையாகையினாலே, ‘வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்”….. காரணகுரு கைகாட்டும் படியே உள்ளமாகிய சீவாத்மா கர்ப்பூரமும் சோதியும் கலந்தாற் போலவே பூரணமாகிய சிவலிங்கத்தில் ஐக்கிய பதம் பெற்ற படியினாலே, “தெள்ளித் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்”. தெளிந்தபின் புலன் ஐந்தும் சிவாம்சமாகத் தோற்றுகையினாலே, “கள்ளப் புலனைந்தும் கால மணிவிளக்கே.”…’

ஈது ஏழாந் தந்திரத்தில் சிவபூசை என்னும் பகுதியில் வரும் முதல் பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *