ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்

என்ன மாயம்!

ஒரு பெரிய வீடு. அதற்குள் ஓர் அறை; சிறிய அறை தான். வீட்டுக்குச் சொந்தக்காரனுடைய சேமிப்பை வைக்கும் அறை அது. அந்த அறையில்தான் அவன் பெரும்பாலும் இருப்பான்.

அதே அறையில் வேறு ஒருவனும் இருக்கிறான். வெளியில் பெருங்கூட்டத்தில் ஒருவன் நிற்கிறான் என்றால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இதுவோ சிறிய அறை. இங்கே மூன்றாவது பேர்வழி யாரும் இல்லை. வீட்டுக்கு உடையவனும் அந்த ‘ஒருவனு’ம் இருக்கிறார்கள். ஆனால் அவனை வீட்டுக்கு உடையவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்ன மாயம்!

உள்ளத்து ஒருவனைஉரு அறியாதே.

அது கிடக்கட்டும். ஒரே இருளாக இருந்தால் அறையில் இருக்கிற பொருள் தெரியாது. அவனோ ஒரு பெரிய சோதிப்பிழம்பாக நிற்கிறான். அறைக்குள் விளக்கை ஏற்றினால் உள்ளே இருக்கும் பொருள் யாவும் தெரியுமே! அந்த விளக்குத் தெரியாமல் இருக்குமா? இங்கே, அந்த அறையில் சோதியாக நிற்கும் அவனைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்ன மாயம்!

உள்ளுறு சோதியைஉரு அறியாதே.

அந்த ஒருவன் அடிக்கடி வெளியிலே போய் விடுவானானால் அவனை அந்தச் சமயங்களில் காண இயலாது. “நான் பார்க்கும்போதெல்லாம் அவன் வெளியிலே போய்விடுகிறான்” என்று சொல்லலாம். ஆனால் அவன் எப்போதும் அங்கே இருக்கிறான். அந்த இடத்தை விட்டு ஓரடியும் நகர்வதே இல்லை. வீட்டுக்காரன் அயர்ந்து மறந்து நழுவினாலும் அவன் அவ்விடத்தை விட்டுச் செல்வதே இல்லை. அப்படியிருந்தும் அவனைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்ன மாயம்!

உள்ளம் விட்டு நீங்கா ஒருவனை
உரு அறியாதே.

இறைவன் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருக்கிறான். ஒருவன் தன் உள்ளத்தில் நினைப்பதை அயலார் அறிய இயலாது. இறைவனோ அவன் உள்ளத்தில் இருப்பதனால் அங்கே தோன்றும் எண்ணங்களையெல்லாம் அறிந்துகொள்கிறான். புறஉலகத்திலே காணும் பொருள்களையும் நிகழும் நிகழ்ச்சிகளையும் கண்ணால் கண்டும் பிற பொறிகால் நுகர்ந்தும் அவற்றின் நினைவுகளை உள்ளம் சேமித்துக் கொள்கிறது. அவற்றை மீட்டும் காணுகிறது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பொருள்களை இருந்த இடத்திலிருந்தே உள்ளம் நினைக்கிறது; அகக் கண்ணால் காணுகிறது. இல்லாத பொருள்களையும் நடவாத செயல்களையும் கற்பனையினால் அமைத்துக் கொண்டு காணுகிறது. பகற் கனவுகளும், மனோராஜ்யங்களும், கற்பனைக் கதைகளும், காவியங்களும் இந்தப் பொய்யான காட்சிகளின் விளைவுகள் என்றுதானே சொல்லவேண்டும்?

இவ்வளவு விரிந்தும் உயர்ந்தும் ஆழ்ந்தும் ஆராய்ந்தும் காட்சி காணும் உள்ளம், தன்னிடம் உள்ள ஒருவனைக் காண்பதில்லை. மற்றவை யாவும் வெறும் நினைவுகள். அவனோ உண்மையில் உள்ளவன். அவனையன்றி வேறுயாரும் அங்கே இல்லை; இருக்கவும் இயலாது. ஆயினும் அவனை உள்ளம் உணர்வதில்லை.

இறைவன் இருளாக இல்லை; ஒளிமயமாக இருக்கிறான். அந்த ஒளி இந்த உள்ளத்துக்குப் பயன்படுவதில்லை.

உள்ளத்துக்குள்ளே உறையும் உறையும்
பெருமான் அவன்.

உள்ளமும் தானுமாக ஒட்டியிருக்கும் பெருமான். அப்படி இருப்பினும் உள்ளம் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

இதற்கு என்ன காரணம்? குருடனுக்குக் கண் முகத்தில் இருந்தும் அதில் படலம் படர்ந்திருக்கிறது. அதனால் எவ்வளவு பெரிய விளக்கை வைத்தாலும் காண முடியாது. எவ்வளவு அருகில் இருந்தாலும் தெரியாது. எவ்வளவு காலம் இருந்தாலும் உருவை அறிய இயலாது. அப்படியே உள்ளத்தில் ஒரு படலம் இருக்கிறது. அதனை அங்கே வைத்து மறைக்கிறவன் இறைவன். அப்படிச் செய்வதைத் திரோபவம் அல்லது மறைத்தல் என்று சொல்வார்கள். சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என்னும் பஞ்ச கிருத்தியங்களில் திரோபவம் ஒன்று.

இந்த மறைப்பை ஞானமென்னும் கத்தியால் கிழித்து இறைவனைக் காண்பவர் சிவஞானிகள்.

உள்ளத்து ஒருவனை, உள்ளுறு சோதியை,
உள்ளம்விட்டு ஓரடி நீங்கா ஒருவனை,
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருஅறி யாதே.

(உள்ளத்துள் இருக்கும் ஒருவனை, அதன் உள்ளே இருக்கும் சோதிப்பிழம்பை, அவ்வுள்ளத்தினின்றும் ஓரடியேனும் நீங்காமல் நிற்கும் ஒருவனை, உள்ளமும் அவனும் எப்போதும் இணைபிரியாமல் உடன் இருந்தாலும், உள்ளம் அப்பெருமானை இத் தகையன் என்று அடையாளம் கண்டு கொள்ளாது. இது திரோபவம்.

ஓரடி என்றது சிறிதளவு இடங்கூட என்றபடி. தானும்-அவனும். உரு அறிதல்-அடையாளம் தெரிந்துகொள்ளுதல்:)

தன் தோளின் மேல் ஆட்டுக் குட்டியைப் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் தேடிய ஆயனைப் போல உள்ளத்திலே அவனை வைத்துக்கொண்டு அலைகின்றனர் மக்கள்.

இறைவனுடைய மாயா லீலை இருந்தவாறு என்னே!

இரண்டாந் தந்திரத்தில் திரோபவம் என்னும் பகுதியில் உள்ள முதற்பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *