ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்

அன்பில்லாத் தவம்

பசிபோக வயிற்றுக்கு உண்டு வாழ்வது இயல்பான வாழ்வு. எந்த அளவுக்கு வேண்டுமோ அவ்வளவுக்கு உண்டு வாழவேண்டும். அந்த அளவுக்கு மிஞ்சி உண்பது அறத்திற்கு விரோதம். குறைய உண்டால் உடம்பு மெலியும். தவம் செய்பவர்கள் உடம்புக்கு உரிய காலத்தில் உரிய அளவு உணவு ஊட்டாமல் சில நியமங்களை மேற்கொண்டு விரதம் இருப்பார்கள்.உடம்பிலே சோம்பல் உண்டாவதும், கொழுப்பு மிகுதியால் காமம் முதலியன மிகுவதும் உணவினால் ஆவனவென்றறிந்து, அவ்வுணவைக் குறைப்பதனால் அவ்விரண்டினாலும் உண்டாகும் தீங்குகள் குறையும்.

பல நாள் பட்டினி கிடப்பதும், உணவு வகைகளில் மிகக் குறைவானவற்றையே உண்பதும் போல விரதம் பல வகைப்படும். உடல் பருத்துக் கொழுப்பு மிகுதியாவதைக் தடுப்பது மாத்திரம் அன்று; உடல் இளைக்கும்படியாகவே விரதம் இருப்பார்கள்.

உண்ணாது நோற்பார் பெரியர்”

என்று குறளாசிரியரும் கூறுகின்றார் அல்லவா?

மகாத்மா காந்தியடிகள் தம் உணவில் இத்தனை பொருள்களைச் சேர்த்துக் கொள்வது என்ற வரையறையுடன் இருந்தார். வாரந்தோறும் விரதம் இருப்பதும் மாதந்தோறும் இருப்பதும் முதலிய முறைகள் நம் நாட்டில் உள்ளன. இவை யாவும் உடம்பை ஒறுக்கும் தவத்துக்கு ஆரம்பப் பாடங்கள்.

தவம் என்பது இந்திரிய நிக்கிரகத்துக்குச் சாதனமாக இருப்பது. தாமே நுகர்ச்சிகளைக் குறைத்துக் கொண்டு அதனால் வரும் துன்பங்களை மேற்கொள்வது தவத்துக்கு ஓர் உறுப்பாகும். மனம், வாக்கு, காயம் என்ற மூன்றையும் அடக்கிச் சாதனம் செய்வது தவத்திற்கு இன்றியமையாதது. மனத்தை அடக்கி அன்பைப் பெருக்க வேண்டும். உரையைக் குறைத்துப் பேசுவது அனைத்தும் இனிமையும் பயனும் உள்ள சொல்லாகப் பேச வேண்டும். உடலால் விளையும் இன்பத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்த மூன்றிலும் தலைமையானது மனத்தைத் தவநெறியில் பயிற்றல்; அடுத்தது உரைப் பயிற்சி; அடுத்தது புலனடக்கம். மனம் போனபடி கற்பனையும் சிந்தனையும் செய்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தால் அது தவமாகாது.

மனிதன் ஆற்றவேண்டிய அறங்களில் பொதுவென்றும் சிறப்பென்றும் இருவகை உண்டு. பிறரிடம் அன்புடன் பழகுதல், உபகாரம் செய்தல், ஜீவஹிம்சை செய்யாமை முதலியவை மனிதர்களின் பொதுவான அறம். வருணம், ஆசிரமம் என்ற பேதமின்றி யாவரும் மேற்கொள்ள வேண்டியவை அவை. பட்டினி கிடத்தல், உடம்பை ஒறுத்தல் முதலியவை சிறப்பான அறம். அவை தவம் புரிபவருக்கே உரியவை.தவம் புரிபவர்கள் முதலில் மனித இலக்கணத்தை உடையவராகிப் பிறகு துறவிலக்கணத்தைப் பெறவேண்டும். எந்தப் பாட்டுக்கும் சுருதி இன்றியமையாதது. எந்த மனிதனுக்கும் பொதுவான அறங்கள் மேற்கொள்ளுதல் அவசியம்.

பொதுவான அறம் அல்லது சாமான்ய தர்மங்களைப் புறக்கணித்துவிட்டுச் சிறப்பான அறம் அல்லது விசேஷ தர்மங்களை மேற்கொள்வதனால் நல்ல பயன் பயன் உண்டாகாது. அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் நில்லாதது போல மக்களுக்கு இன்றியமையாத பொது அறத்தைப் புறக்கணித்துவிட்டு விசேஷ தர்மங்களைச் செய்பவர் முயற்சி பயன் தராது.

பொது அறங்களில் மிக மிக முக்கியமானது அன்பு. உடம்பும் உயிரும் ஒன்று பட்டு வாழ்வதே அன்பு செய்யத்தான். அன்பு இல்லாவிடில் உயிரும் உடம்பும் ஒன்றியிருப்பதற்குப் பயன் இல்லை.

அன்பைப் புறக்கணித்து உடம்பை ஒறுத்துத் தவம் செய்வதனால் யாருக்கும் நன்மை இல்லை. அந்தத் தவத்தால் முதலில் பேராற்றல் உண்டாகலாம். ஆனால் முடிவில் அந்த ஆற்றலால் பிறருக்கும் தமக்கும் தீங்கையே உண்டாக்கிக் கொள்வார்கள்.

இராவணன், சூரபன்மன் முதலிய அரக்கர்களும் அசுரர்களும் ஏனைய மக்கள் பெறாத ஆற்றலையும் செல்வத்தையும் பெற்றார்கள். தவம் புரிந்தே அத்தகைய ஆற்றலை அவர்கள் பெற்றார்கள். ஆனால் பிற உயிர்களிடத்தில் அன்பு செய்யவில்லை. தாம் பெற்ற ஆற்றல் அவ்வளவையும் கொண்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பத்தை இழைத்தனர். விளக்கிலே எண்ணெய் விட்டால் இருளைப் போக்கி ஒளிபரப்பும். எரியும் வீட்டிலே எண்ணெயை ஊற்றினால் பின்னும் படர்ந்து எரிந்து அண்டை அயல் வீடுகளையும் எரித்துவிடும்.

முனிவர்கள் செய்த தவத்தைக் காட்டிலும் கடுமையாகக் தவம் செய்தனர் அசுரர்கள். ஆனால் முனிவர்கள் சர்வஜீவதயை யுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெற்ற தவ ஆற்றல் அவர்களுக்கு நலம் தந்ததோடு உலகத்துக்கெல்லாம் நற்பயனை உண்டாக்கியது. அசுரர்களோ சுயநலமே கண்ணாக வாழ்ந்தமையால் மற்றவர்களை யெல்லாம் வாழவிடாமல் தாம் மட்டும் வாழ எண்ணினார்கள்; வாழ்வது போலச் சில காலம் வாழ்ந்தார்கள். இறுதியில் அவர்கள் தாம் செய்த தீங்குகளுக்கு ஏற்ற தண்டனையை அடைந்தார்கள்.

சூரபன்மன் செய்த யாகத்தைக் கந்த புராணம் பின்வருமாறு கூறுகிறது

வான கத்திடை நிற்புறு சூரபன் மாவாம்
தான வர்க்கிறை வாள்கொடே ஈர்ந்துதன் மெய்யின்
ஊன்அ னைத்தையும் அங்கிமேல் அவியென ஓங்கிச்
சோனை ஒத்ததன் குருதியை இழுதெனச் சொரிந்தான்.”

(அசுரர் யாகப் படலம், 86)

தன்னுடைய மெய்யில் உள்ள ஊன் அனைத்தையும் வாளால் அரிந்து தீயினில் அவியாக இட்டானாம். இத்தகைய யாகம் செய்தமையால் அவன் பல அண்டங்களை ஆளும் வலிமையைப் பெற்றான். எல்லாம் இருந்தும் அவனுக்குப் பிற உயிர்களிடம் அன்பு இல்லை. அதனால் அவன் வலிமை பிறருக்குத் தீங்கை விளைக்கும் வகையில் சென்றது. இத்தகைய தவம் மெய்த்தவம் ஆகுமா? இறைவனுடைய திருவருளைப் பெற வழி ஆகுமா?

திருமூலர் அன்பு இன்றியமையாதது என்பதைச் சொல்ல வருகிறார். இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு இன்றியமையாத உணர்ச்சி அன்பு. அது இன்றித் தம் உடம்பைத் தாமே ஒறுத்து யாகம் புரிந்தும் பயன் இல்லை.

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
மணியினை எய்தஒண் ணாதே.

பின் எப்படி எய்தலாம்? அன்பினால் எய்தலாம். அன்பு ஒருவர்பால் உண்டானால் அதனுடைய விளைவாகச் சில நிகழ்ச்சிகள் அமையும். அன்புடையார் தம் சிறுமையையும் இறைவன் கருணையையும் நினைந்து உருகுவார்கள். அவர்களுடைய நெஞ்சம் கடினமாக இரா; பிறர் துன்பம் கண்டு குழையும். உருக்கமும் குழைவும் அன்பின் விளைவுகள்.

அன்பினால் உருகியும் அகம் குழைந்தும் இறைவனை எண்ணிப் போற்றினால் தூண்டா மணிவிளக்காக இருக்கும் எம்பெருமானுடைய அருளைப் பெறலாம்; அவனை அடைந்து இன்புறலாம். இயற்கையாகவே ஒளியையுடைய மணியைப் போல இறைவனும் சுயம்பிரகாசமுடையவன், அந்த மணியை அடைய அன்போடு உருகி அகங்குழைய வேண்டும்; இன்றேல் அடைய முடியாது.

இப்படித் திருமூலர் சொல்கிறார். “இப்படி நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் யாது?” என்று அவரைக் கேட்கிறோம். அவர், ‘நான் அன்போடுருகி அகங் குழைந்தேன்; அதனால்தான் இறைவனை அடைந்தேன். நீங்களும் என்னைப் போல அடைய வேண்டுமானால் அப்படி அன்பு செய்யுங்கள்” என்று விடை பகர்கிறார்.

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகம்குழை வார்க்குஅன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே.

(எலும்பையே விறகாக அறுத்து இட்டு இறைச்சியை அறுத்துப் பொன் போன்ற தீயில் பொரியும்படி அவியாக இட்டு வறுத்தாலும், அன்பினால் உருகி உள்ளம் நெகிழ்பவர்களுக்கல்லாமல், மணியைப் போன்ற இறைவனை நான் அடைந்ததுபோல் அடைய இயலாது.

என்பு – எலும்பு. அறுத்து இட்டு. பொன்போற் பொரிய என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். குழைவார்- நெகிழ்ந்து இரங்குபவர். மணி- மாணிக்கம்; இங்கே இறைவன். மணியினை என்போல் எய்த ஒண்ணாது.)

திருமூலர் திருவாவடுதுறையில் அரசின் கீழிருந்து தவம் புரிந்தவர். அத்தலத்தில் இறைவன் மாசிலாமணி என்ற திருநாமத்தோடு எழுதருளியிருக்கிறான். மணி என்றது அந்தப் பெருமானை நினைத்துக் கூறியதாகவும் கொள்ளலாம்.

முதல் தந்திரத்தில் அன்புடைமை என்னும் பகுதியில் 3-ஆம் பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *