
ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்
திருக்கூத்து
மனிதனுக்கு எல்லாப் புலன்களையும்விடச் சுவைப் புலன் மிகவும் வலிமையுடையது. குழந்தைப் பருவ முதல் இறக்கும் பருவம் வரையில் அந்தப் புலன் மாத்திரம் வலியிழக்காமல் இருக்கிறது. வேறு புலனுக்கு இனிமைதரும் பொருளுக்கு உவமை சொல்ல வேண்டுமானாலும் நாவுக்கு இனிமை தருவதையே எடுத்துச் சொல்கிறான். “இசைத்தேன் பருகினேன்” என்று சொல்கிறார். “அவன் முகத்தில் பால் வடிகிறது என்று பேசுகிறான். குழந்தையை, “தேனே, கரும்பே” என்று கொஞ்சுகிறான்.
உணவுப் பண்டத்தின் பெயர்களை ஒருவர் சொல்லிக் கொண்டே வந்தால், காதில் கேட்டால் போதும், நாவில் நீர் ஊறுகிறது. உணவை உண்ணும் போது நாவில் நீர் ஊறுவதனால் அவ்வுணவு ஜீரணமாகிறது; இது உடற்கூற்றின் உண்மை. சுவைப் புலனுக்கு நாம் அடிமையாக இருக்கிறோம் என்பது மற்றோர் உண்மை. அதனால்தான் காதில் பெயர் கேட்ட மாத்திரத்தில் நாவில் நீர் ஊறுகிறது. அப்பண்டத்தைக் கண்ணால் கண்டுவிட்டால் சொல்லவே வேண்டாம்.
இறைவன் திருப் பெயரைச் சொன்னாலும், அவன் புகழைக் கேட்டாலும், அவன் திருவுருவத்தைக் கண்டாலும் அன்பர்களுக்குக் கண்ணில் நீர் ஊறுகிறது.
‘அது ஏன் ஊறுகிறது? காரணம் தெரியவில்லையே!’ என்று மற்றவர்கள் கேட்கிறார்கள்.
நல்ல புளியோதரையை ஓரன்பர் வைத்துக் கொண்டு சாப்பிடுகிறார். அருகில் இருப்பவனுக்கு நாக்கில் நீர் ஊறுகிறது. புளியோதரையின் காட்சி நாவில் நீர் ஊறச் செய்கிறதற்குக் காரணம் என்ன? மனிதனுக்குச் சுவைப் பண்டங்களில் உள்ள மீதூர்ந்த விருப்பந்தான். அது போலவே இறைவனிடம் உள்ள முறுகிய பக்தியினால் அவன் திருவுருவத்தைக் கண்டால் அன்பர்களுக்குக் கண்ணில் நீர் ஊறுகிறது.
நாவில் ஊறும் நீர் சுவைக்கு அடிமையானதைக் காட்டுகிறது. கண்ணில் ஊறும் நீரோ, இறைவனுடைய அன்பு மிகுதியினால் அவனுடைய திருவருளுக்கு ஆளாகி நிற்பதைக் காட்டுகிறது.
கண்ட அன்பர்களையெல்லாம் ஆனந்தக் கடலில் ஆழ்த்தும் பேரழகு நடராசப் பெருமானுடைய கோலத்துக்கு உண்டு. இந்த மானிடப் பிறவியில் எவ்வளவு நாள் உழலுவேன் என்று ஏங்கும் உள்ளம் உடைய பெரியோர்களும், “இறைவா, நின்னுடைய திருக்கூத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றால் இம்மனிதப் பிறவியும் வேண்டுவதே” என்று கூறுகிறார்கள்.
அவ்வளவு இன்பத்தைத் தரும் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்ட அன்பர்களுக்கெல்லாம் இறைவன் வழங்கிய அருளின் அடையாளமாகக் கண்ணீர் உண்டாகும்; நெஞ்சம் நெக்கு நெக்கு உருகும்.
புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
அளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்.
(புளிச்சுவையையுடைய உணவுப் பண்டங்களைக் கண்டவர்க்கு நாவில் நீர் சுரப்பதுபோல, ஆனந்தத் தாண்டவமானது தன்னைக் கண்ட அன்பர்களுக்கெல்லாம் இறைவன் வழங்கும் அருளநுபவத்தால் கண்ணீர் சோரச் செய்யும்; அதற்குக் காரணமான நெஞ்சை உருக்கும்.
புளி – புளிச் சுவையுள்ள உணவுப் பொருள்; ஆகுபெயர். புளியைக் கண்டவர்க்குப் புனல் ஊறுவது நாவில். ஊறுமாறு போல் என்பது ஊறுமாபோல் என வந்தது. களிக்கும் திருக்கூத்து ஆனந்தத் தாண்டவம்; எழுவாய். அன்பர்கள் கண்டுகளிக்கும் நடனம் என்றும் சொல்லலாம். கண்டவர்க்கு எல்லாம் என்றது, காணும் முறைப்படி கண்டவர்கள் யாவருக்கும் என்று பொருள் கொள்வதற்குரியது. இறைவன் திருவுருவத்தை வெறும் விக்கிரகமாகவாவது, கலைப் பொருளாகவாவது காணுதல் அந்த உருவத்தைக் காணுவதாக ஆகுமேயன்றி, இறைவனைக் காணுவதாகாது. இறைவன் திருக்கூத்தையே கண்டாற் போன்ற ஆதராதிசயம் உடையவர்களையே இங்கே கருதினார்.
இறைவன் அளிக்கும் அருள்; அந்த அருள் காரணமாக வரும் கண்ணீர். இறைவன் திருவருளநுபவம் உடையாருக்கு மெய்ம்மயிர் பொடிக்கும்; கண்ணீர் சோரும்.
“பேரானந்தம் உற்றவர்க்கே கண்ணீர்கம் பலை உண்டாகும்” என்று தாயுமானவர் உணர்த்துகிறார்.
கண்ணீர் சோர்வதற்குக் காரணம் உள்ளத்தில் தோன்றிய உருக்கம். கண்ணீர் சோர்வதற்குக் காரணமான நெஞ்சைத் திருக்கூத்து உருகச் செய்யும். கண்ணீர் சோர்தலும் நெஞ்சு உருகுதலுமாகிய இரண்டையும் இங்கே கொள்ளவேண்டும்.
கூத்து உருக்கும் என்று கூட்டுக.)
திருக்கூத்தைக் கண்டவுடன் கண் நீர் சோர நெஞ்சு உருகும். பின்பு மாறிலா மகிழ்ச்சி உள்ளத்தே உண்டாகும். ஒரே ஒளி மயமான சூழலாக நெஞ்சம் இருக்க, அங்கே ஆனந்த அமுது ஊறும்.
ஒளிக்குள் ஆனந்தத்து அமுதூறும் உள்ளத்தே .
(தேஜோமயானந்த அமுதம் உள்ளத்தில் ஊறும்.
இருள் மாய்ந்து துன்பம் நீங்கி ஒளியும் ஆனந்தமும் உள்ளத்தில் இடங்கொள்ளும். ஆனந்தத்து அமுது – ஆனந்தமாகிய அமுது; அத்து : வேண்டா வழிச் சாரியை.)
சுந்தரமூர்த்தி நாயனார் நடராசப் பெருமானுடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்து இத்தகையதோர் ஆனந்த நிலையை அடைந்தாரென்று சேக்கிழார் சொல்கிறார்.
“ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.”
“தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணில்ஆ னந்த அருவிநீர் சொரியக்
கைம்மலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.”
இப்பாடல்களில் சொல்லப்பெற்ற அநுபவம் திருமூலர் திருவாக்கில் உள்ள அநுபவமேயாகும். திருமந்திரப் பாட்டுக்கு ஒரு வகையில் இவற்றைச் சிற்றுரையாகவே கொள்ளலாம்.
புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
அளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ்சு உருக்கும்;
ஒளிக்குள்ஆ னந்தத்து, அமுதுஊறும் உள்ளத்தே.
இது ஒன்பதாம் தந்திரத்தில் அற்புதக் கூத்து என்ற பகுதியில் உள்ள 17-ஆம் பாட்டு.
நிறைந்தது.
★ ★ ★



