ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்

குன்றும் நாயும்

சிறிய ஊராக இருந்தால் அதற்குப் போகிறவர்கள் மிகச் சிலரே இருப்பார்கள். அதற்குச் செல்லும் வழியும் சிறிதாக இருக்கும். பெரிய நகரமாக இருந்தால் நாலு திசையிலிருந்தும் மக்கள் வருவார்கள். வியாபார நிமித்தமாகவும், நகரத்தில் வாழ்பவர்களைக் காணும் பொருட்டும், வேறு வேலையாகவும் அளவற்ற மக்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் வந்து செல்லப் பெரிய சாலைகள் பல இருக்கும்.

முத்தி என்பது பெரிய ஊர். எத்தனை பேர் அங்கே வாழ்கிறார்கள் என்று கணக்கிட முடியாது. எப்போதிலிருந்து அதில் உயிர்கள் வாழத் தொடங்கின என்பதையும் சொல்ல முடியாது. அந்த ஊர் எப்போது உண்டாயிற்று? அதையும் சொல்ல ஆள் இல்லை. ஒன்றுமட்டும் தெரியும்; அந்த ஊருக்கு எப்போதும் ஒருவனே தலைவன். அவனுக்குத்தான் கடவுள் என்று பெயர். அந்தத் தலைவனை வெவ்வேறு பேர் கொண்டு அழைக்கிறார்கள். அந்த அந்த ஊரில் சென்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு தலைவனுடைய பேர் என்று தோன்றும். ஆனால் அந்தப் பேரூருக்குச் சென்று பார்த்தால் எல்லாப் பேர்களும் ஒருவனையே குறிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

அவர்கள் வருகிற வழிகள் எப்படி இருக்கின்றன? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். வடக்கேயிருந்து வருபவர் களுக்கு ஒரு வழி இருக்கிறது; அந்த வழியில் வியாழக்கிழமையன்று யாரும் வரமாட்டார்கள். அன்று தெற்கே சூலமல்லவா? மற்ற வழிகளில் வியாழக்கிழமையன்று மக்கள் பேரூரை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள்.

இப்படி வெவ்வேறு வகையாக அந்த வழிகள் இருப்பதற்குக் காரணம், அவரவர் புறப்படும் இடம் வேறு வேறு வகையாக இருப்பதுதான். சென்று சேர்கிற பேரூரோ, அதில் இருக்கிற தலைவனோ வேறு வேறு நிலையில் இருப்பதாகக் கொள்ளக்கூடாது. எந்தத் திசையிலிருந்து எப்படி வந்தாலும் அந்த ஊருக்குள் புகுந்துவிட்டால் இன்ப வாழ்வைப் பெறலாம்.

“நான் ஆயிர மைல் நடந்து வந்தேன்; வரும் வழியில் எவ்வளவோ நாள் பட்டினி கிடந்தேன்” என்றால் அவனுக்குக் கொஞ்சம் அதிகமாக விருந்து கிடைக்கும் என்பதற்கில்லை.

“நான் அருகிலுள்ள ஊரிலிருந்து புறப்பட்டேன்; இரண்டு நாளில் வந்தேன்” என்றால் அவனிடம், “இன்னும் கொஞ்ச நாள் இரு. அப்புறம் உண்ணலாம்” என்று சொல்ல மாட்டார்கள். வேறு எந்த எந்த ஊரையோ நோக்கிப் போகாமல் இந்த ஊரை நோக்கி வந்ததே எல்லோருக்கும் பொதுவான கௌரவம். இந்தப் பேரூரை அடையும் வரைக்குந்தான் அவர்களுடைய வருத்தமும் தளர்ச்சியும் இருக்கும். இங்கே வந்துவிட்டால் அப்புறம் தளர்வு ஏது? துன்பம் ஏது?

இறைவனுடைய இடமாகிய முத்தி என்னும் பேரூரை அடையவே எல்லாச் சமயங்களும் வழி கூறுகின்றன. சமயங்களை மார்க்கம் என்று வடமொழியிலும் நெறியென்று தமிழிலும் சொல்வார்கள். இறைவனாகிய தலைவன் உள்ள ஊரை அடையும் வழியே சமயம். சமயம் என்னும் வழியில் புகுந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். வேறு வகையான இடங்களுக்குச் செல்லும் பிற வழிகள் உயிர்களைப் பிறவியென்னும் பெருங் கடலிலே கொண்டுபோய் ஆழ்த்திவிடும்.

சமயங்கள் பலவானாலும் அக்காலத்தில் வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சமயங்கள் ஆறு என்று வரையறுத் திருக்கிறார்கள். சைவத்தில் அகச் சமயம் ஆறு என்ற வரையறை உண்டு.

முத்தியென்ற ஊருக்குச் செல்லும் வழிகளைப் போல அவை இருக்கின்றன. எப்படியாவது அந்த வழிகளில் ஒன்றை அடைந்து நடந்தால் முத்தியென்னும் பேரூரை அடைவது நிச்சயம்.

ஒன்றது பேரூர், வழிஆறு அதற்குஉள,
என்றது போல இருமுச் சமயமும்.

சமய நெறியில் புகுந்து நடக்கத் தொடங்கினவர்களுக்கு, அந்த வழி நல்லது. இந்த வழி நல்லது என்று ஆராய்ச்சி செய்ய நேரம் இல்லை. எந்த வழியிலும் செல்லாமல் நெடுந்தூரத்தில் நின்று, “அது நல்லது, இது தீயது” என்று திண்ணைப் பேச்சுப் பேசுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் உண்டாகாது. நேர்மை யுடன் உழைக்கும் ஒருவனுக்கு வேறு ஓர் உழைப்பாளியைக் கண்டால் மதிப்பு உண்டாகும். சோம்பேறிதான் இரண்டு பேரையும் எடைபோட்டுப் பார்ப்பான்; மேல் கீழ் என்று வேற்றுமையைக் காட்டுவான்; சில சமயங்களில் சண்டைகூட மூட்டிவிடுவான்.

தாம் எந்த வழியிலும் சாராமல் வாழ்நாளை வெறும் பேச்சிலே கழிக்கிறவர்களின் பேச்சை வழிச் செல்லும் அன்பர்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

மலையைப் பார்த்து நாய் குரைத்தால் அந்த மலை அதைக் கேட்கிறதா? அதற்காகப் பயந்து விலகுகிறதா? நாய் குரைத்துக் குரைத்துப் பலம் இழந்து அடங்கிவிடும். மலை எப்போதும்போல் சலனமின்றி உயர்ந்தோங்கி நின்று கொண்டிருக்கும்.

வீண்வாதம் செய்து, “நீங்கள் பைத்தியக்காரர்கள்; குருட்டு நம்பிக்கை உடையவர்கள். உண்மை எப்போதும் ஒன்றுதானே? நீங்கள் செல்லுகிற வழி உண்மையாக இருந்தால் அது ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்?” என்றெல்லாம் அறிவுடை யோரைப் போலப் பேசித் தம் வாக்கு வன்மையை யெல்லாம் காட்டுகிறவர்களைக் கண்டு சமய நெறியில் செல்பவர்கள் சிறிதும் சோர்வடைய மாட்டார்கள். அவர்கள் ஒருகாலைக்கு ஒருகால் இறைவன் திருவருளில் ஈடுபட்டுத் தாம் பெறும் இன்பத்தை என்ணி, “யார் என்ன சொன்னால் என்ன?” என்று தம் வழியே போய்க் கொண்டிருப்பார்கள்.

ஒரு மங்கைக்குத் திருமணம் ஆயிற்று. சில ஆடவர்களுக்கு முகத்தில் ரோமம் முளைப்பதில்லை. அத்தகைய ஆடவன் ஒருவன் அவளுக்குக் கணவனாக வாய்த்தான். அவனுடன் அவள் இல்வாழ்க்கை நடத்தினாள். மணம் செய்த நாலைந்து ஆண்டுகள் ஆயின. அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. என்ன என்னவோ விரதம் இருந்தார்கள்.

பெண்களின் வம்பர் மகாசபை ஒன்று இந்த மங்கை யிருந்த தெருவில் ஒரு வீட்டில் கூடுவது வழக்கம். அங்கே எப்போதாவது இந்தப் பெண்மணியும் போய் விட்டு வருவாள்.

ஒரு நாள் இவள் போயிருந்தபோது, “அவள் சஷ்டி விரதம் இருக்கின்றாளாமே!” என்று ஒருத்தி சொன்னாள்.

“அவருங் கூட இருக்கிறாராம்!” என்று ஏளனக் குரலோடு மற்றொருத்தி பேசினாள்.

“என்ன இருந்து என்ன? குழந்தை பிறக்க வழி இல்லை” என்றாள் ஒரு வம்பி.

“ஏன்?” என்று ஒருத்தி கேள்வி போட்டாள்.

“இவள் ஆணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந் தாலல்லவா குழந்தை பிறக்கும்? அலியைக் கல்யாணம் செய்து கொண்டால்?”

இதைக் கேட்டவுடன் இந்தப் பெண்மணிக்குத் தூக்கி வாரிப்போட்டது. கோபம் மூண்டது.

கோபம் மூண்டது. ஆனால் இவள் வாயில்லாப் பூச்சி; எதிர்த்துப் பேச அறியாதவள்.

அந்த வம்பி தன் கட்சியைக் காரண காரியங்களுடன் மெய்ப்பிக்க முன்வந்தாள். “மீசை முளைத்த ஆண் பிள்ளை யென்று பழமொழி சொல்வார்கள். அந்த லட்சணம் இவளுடைய கணவருக்கு இல்லை. இவ்வளவு நாள் சேர்ந்து வாழ்ந்தும் குழந்தை பிறக்கவில்லை. இன்னும் என்ன வேண்டும், அவரை அலியென்று சொல்ல?”

இப்படி அவள் கூறவே எல்லோரும், “ஆம், ஆம்” என்று தலையாட்டினார்கள்.

இதைக் கேட்ட இந்தப் பெண்மணிக்கு முதலில் கோபம் வந்தாலும் பிறகு அவர்களுடைய அறியாமையைக் கண்டு சிரிப்பே உண்டாயிற்று. தன் கணவன் ஆண் என்பதை இவள் அல்லவா அறிவாள்? அவனால் தனக்கு உண்டாகும் இன்பத்தை இவள் பிறருக்கு விளம்பரம் செய்யவேண்டுமா, என்ன? இந்த உலகமெல்லாம் சேர்ந்து மேற்கோள் காட்டி, ‘உன் கணவன் ஆண் அல்ல’ என்று முழங்கினால் என்ன? அவர்களுக்கு அவன் ஆண்தான் என்று மெய்ப்பிக்க வேண்டிய அவசியந்தான் என்ன? “அந்தோ, பாவம்! இவர்களுடைய பேதைமைதான் என்னே!” என்று இவள் உள்ளே நகைப்பாள்.

சமய நெறியில் புகுந்து மேன்மேலும் அன்பு செய்து வருபவர்களுக்கு இறைவனுடைய திருவருளால் சில வகை அநுபவங்கள் உண்டாகி வரும். அந்த அநுபவத்தை உணர்ந்த பிறகு, மற்றவர்கள் என்ன வாதம் செய்தாலும் அவை பொருளாகப் படா.

சமயத் துறையில் வாழப் புகாமல், சமய நூலறிவை மாத்திரம் ஓரளவு பெற்று, அது நன்று, இது தீது என்ற வாசாஞானம் பேசும் மக்கள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்களேயன்றி, சமயத் துறையில் உண்மையில் புகுந்து அநுபவம் பெற்றவர்கள் அவர்களுடைய வாதங்களால் சிறிதும் தம் நெறியினின்றும் பிறழ மாட்டார்கள்.

இந்த நாட்டில் சமய வாழ்வு என்பது நூலறிவு பெறுவது அல்ல; வாதத் திறமை பெறுவது அல்ல; பிறரை அறிவினால் வெல்வதும் அல்ல. இறைவனுடைய அருளநுபவத்தைப் பெறுவது அது; ஒரு காலைக்கு ஒரு கால் தம்முடைய மலச்சுமை அணு அணுவாகக் குறைந்து வருவதை உணரும் நிலையில் நிற்பது.

அநுபவம் இல்லாதவர்கள் சமய நெறியில் வாழ்பவர்கள் அல்ல. அவர்களே, “நன்றிது, தீதிது” என்று உரைப்பவர்கள்; குன்றைக் கண்டு குரைக்கும் நாய்க்குச் சமானமானவர்கள்.

ஒன்றது பேரூர்; வழிஆறு அதற்குஉள
என்றதுபோல இருமுச் சமயமும்;
நன்றிது, தீதிது” என்றுஉரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.

(“பெரிய ஊர் ஒன்று; அதற்குப் போக ஆறு வழிகள் இருக்கின்றன” என்று சொல்வதுபோல ஆறு சமயங்களும் உள்ளன. அவற்றில், ‘“இது நன்று, இது தீது” என்று வேற்றுமையைப் பெரிதாக்கி உரைப்பவர்கள் குன்றைக் கண்டு குரைத்துத் துள்ளுகின்ற நாயை ஒத்தார்கள்.

ஒன்றது-ஒன்று; அது: பகுதிப் பொருள் விகுதி. பேரூர் ஒன்றுதான். என்றது போல் என்பது அவாய் நிலையாய் என்றதுபோல உள்ளன என்று ஒருசொல்லை வருவித்து முடிக்க, முடியும். உரையாளர்கள்-செயலைச் செய்யாமல் உரையை ஆள்பவர்கள்; வெறும் பேச்சுக்காரர்கள். இத்தகையவர்களையே வள்ளுவர், “பயனில்சொல் பாராட்டுவான்” என்று கூறினார்.)

நாய் அருகிலே நின்ற வேறு நாயையோ மனிதனையோ கண்டு குரைத்தால் நாயும் விலகும்; மனிதனும் அஞ்சி ஒதுங்குவான். குன்றைப் பார்த்துக் குரைத்தால் அது நகருமா? அது எப்போதும் போலவே நிற்கும். இறைவனுடைய திருவருள் அநுபவம் உடையவர்கள் சிறிதும் சலனமடையாத மனத் திண்மை பெற்று மலையைப்போல நிற்பார்கள்.

அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை”

என்று பேசுவதுதானே அவர்கள் நிலை?

வெறும் பேச்சுப் பேசுகிறவர்கள், தன் இனத்தைக் கண்டு வலியக் குரைத்துச் சண்டை செய்யும் நாயின் இயல்பை உடையவர்கள்.

இது ஐந்தாந் தந்திரத்தில் உட்சமயம் என்ற பிரிவில் வரும் இரண்டாவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *