
ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்
அவர் கற்ற கல்வி
இறைவன் உடம்பையும் கரணங்களையும் புவனபோகங் களையும் உயிர்களுக்குக் கொடுத்திருக்கிறான். அவற்றை வைத்துக் கொண்டு வினை மூட்டைகளையெல்லாம் உதறி விட்டுத் தன்னை வந்து அடைய வேண்டும். என்பதே அவனுடைய திருவுள்ளக் குறிப்பு. உடம்பைப் பெற்று வாழ்வது, மீட்டும் இந்த உடம்பு வராமல் இருக்கும் வழியை நாடத்தான். அப்படியின்றி அவாவின் வசப்பட்டு மேலும் மேலும் உலகில் உழன்று முடிவில்லாப் பிறவிக் கடலில் ஆழும் செய்கை, இறைவன் திருவுள்ளக் குறிப்புக்கு ஏற்றது அன்று.
உலகத்துப் பொருள்களைப் பற்றிப் பல பல நூல்களைக் கற்கிறோம். பூமியின் தத்துவத்தையும் பூதங்களின் இயல்பையும் அறியும் கல்வியைக் கற்கிறோம். பூமிக்குப் புறம்பே நின்று ஒளி தரும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம். நம் உடற் கூறுகளையும் இதற்கு வரும் நோய்களையும் அந்நோய்களுக்குரிய மருந்துகளையும் மிக மிக முயன்று கற்றுக் கொள்கிறோம். வாழ்நாள் முழுவதும் ஒரு துறையிலே புகுந்து விரிவாகவும் ஆழமாகவும் அறிவு பெறுகிற நிபுணர்கள் பலர் உலகில் இருக்கிறார்கள். அவர்கள் கற்ற கல்வி யாவும் இறைவனுடைய திருக்குறிப்பை உணரப் பயன்படுவதில்லை. உடம்பின் கூறுகளையெல்லாம் கற்றுக் கொண்ட அளவில் நின்றால் அது மெய்க்கல்வி யாகாது; அந்த நுட்பமான யந்திரத்தை அமைத்த இறைவனை உணர்ந்து அன்பு செய்யவேண்டும். பெளதிக ரஸாயன ஆராய்ச்சியின் விளைவுகளையெல்லாம் இக்காலக் கல்வியில் உணர முடிகிறது. ஆனால் இந்தப் பூதங்கள் அழிந்தாலும் அழியாமல் நிற்கும் ஒருவனைப் பற்றியும், இந்த ரஸாயன விளைவுகள் உண்டாகும்படி ஓர் இயல்பைப் படைத்தவனைப் பற்றியும் – அறிய முடிவதில்லை.
அந்தக் கல்வியனைத்தும் உயிரில்லாத உடம்பைப் போன்றதுதான். இறைவனுடைய பெருமையை உணர்ந்து, இந்த உடம்பைக் கொடுத்த அவன் திருவுள்ளக் குறிப்பினை உணர்ந்தால் மீண்டும் இப்பிறவியை அடையாத நிலையைப் பெற முயல்வோம். அதற்குத் துணையாக இருக்கும் கல்வியே மெய்க்கல்வி.
“சாவாமற் கற்பதே கல்வி.”
நாம் கற்கும் கல்வியினால் நம்முடைய விருப்பு வெறுப்பு வளர்கின்றன. ஒரு நிலையில் நமக்கே அலுப்பு உண்டாகி விடுகிறது. பலவற்றை அறிய அறியப் பின்னும் அறியாதவை பல என்ற உணர்வே மிகுகிறது.
“அறிதோ றறியாமை கண்டற்றால்“
என்பது குறள்.
விஞ்ஞானிகள் மிக மிக நுட்பமாக ஆராய ஆராய அவர்களுடைய ஆராய்ச்சிக்கு முடிவே காண முடிவதில்லை. அவர்கள் ஒன்று நினைக்க விளைவு ஒன்றாகிறது. பூதங்களை அடக்கி இதைச் செய்யலாம் என்று புகும்போது அவர்களை அறியாமல் மற்றொன்று குறுக்கிடுகிறது. அப்போது எல்லோரையும்விட மேலான சக்தி ஒன்று இருந்து யாவற்றையும் இயக்குகின்றது என்ற உண்மை அவர்களுக்குப் புலனாகிறது. அதனால் மனித சக்தியின் சிறுமையும் தாம் கற்ற கல்வியின் சிறுமையும் தெளிவாகின்றன. “என்ன கற்று விட்டோம்!” என்று தாம் கற்ற கல்வியைக் கூடக் கறித்துப் பேசும் நிலை வருகிறது.
ஆனால் இறைவன் குறிப்பை அறிந்து ஒழுகும் கல்வியோ இந்த அருவருப்புக்கு உட்படுவதில்லை; கறிப்பறியாகக் க்வி அது; எல்லாக் கல்விக்கும் மேலாக மிக்கிருக்கும் கல்வி. அதைத் திருமூலர் கற்றுக் கொண்டாராம்.
கறிப்புஅறி யாமிகும் கல்விகற் றேனே.
(வெறுப்பை அறியாமல் மேலாகச் சிறந்து விளங்கும் கல்வியை நான் கற்றேன்.
கறிப்பு – வெறுப்பு. அறியாக் கல்வி, மிகும் கல்வி என்று கூட்டவேண்டும். அறியா என்பது அறியாது என்ற எச்சத்தின் விகாரமாகவும் கொள்ளலாம்.)
அந்தக் கல்வியைக் கற்றுக் கொண்டதனால் எவற்றை அறிந்து கொண்டார் திருமூலர்? அவர் சொல்வதைக் கேட்கலாம்.
இறைவனுடைய திருவுள்ளக் குறிப்பை அவர் அறிந்து கொண்டாராம். பிற மக்கள் உள்ளத்தில் உள்ள குறிப்பை அறியும் கலை ஒன்று உண்டு. அதுவும் பயனில்லாமல் ஒழிந்து விடும். ஆண்டவனுடைய உள்ளக் குறிப்பை அறிய வல்ல கல்விதான் பயனுள்ள கல்வி.
“அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமாறு அமைமின்“
(யாத்திரைப் பத்து, 3)
என்று மாணிக்கவாசகர் அறிவுறுத்துகிறார்.
திருமூலர் அந்தக் குறிப்பை அறிந்தார்
குறிப்பு அறிந்தேன்.
(இறைவனது திருவுள்ளக் குறிப்பை அறிந்து கொண்டேன்.)
உயிர்கள் எல்லாம் பாசத்தினின்றும் நீங்கித் தன்னை அடையவேண்டும் என்பதே அப்பெருமானுடைய திருவுள்ளக் குறிப்பு. அதன் பொருட்டே அவன் உடம்போடு உயிரைக் கூட்டி உலகில் வாழ விடுத்திருக்கிறான். தன்பால் அன்பு செய்து பிறவித் தளையை அறுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் செறிப்பை உண்டாக்கியிருக்கிறான். இதையும் திருமூலர் உணர்ந்தார்.
உடல் உயிரது கூடிச்
செறிப்பு அறிந்தேன்.
(உடலை உயிரானது சேர்ந்து பொருந்தியிருப்பதை உணர்ந்தேன். இவ்வாறு பொருந்தியிருப்பது இன்னதற்காக என்று அறிந்து கொண்டதையே இவ்வாறு சொன்னார்.
உடல் – உடலை. உயிரது; அது, பகுதிப் பொருள் விகுதி. செறிப்பு- பொருந்தி நிற்றல்.)
“அன்போ டியைந்த வழக்குஎன்ப ஆருயிருக்கு
என்போ டியைந்த தொடர்பு“
என்று வள்ளுவரும் இந்தச் செறிப்புக்குக் காரணத்தைக் கூறினார்.
பின்பு, தேவர்களுக்கெல்லாம் தலைவனையும் திருமூலர் அறிந்தார்.
அறிந்தேன்மிகு தேவர்பிரானை.
(எல்லாப் பொருள்களுக்கும் மேம்பட்ட பரம்பொருளாக மிக்கு நிற்கின்ற தேவர் தலைவனாகிய எம்பெருமானை அறிந்தேன்.
தேவர்பிரான் என்பதால் தேவருக்கு மிக்கு நின்ற தலைவன் என்பது பெறப்படும்; அது மாத்திரம் அன்று; எல்லாப் பொருள்களுக்கும் மேலாக நின்றவன் என்பதையும் உணர்த்த, மிகுதேவர் பிரானை என்றார். ‘செறிப்பறிந்தேன் மிகு தேவ பிரானை’ என்ற இரண்டாவது அடியில் அறிந்தேன் என்றசொல் செறிப்பு அறிந்தேன், தேவர் பிரானை அறிந்தேன் என்று இரண்டோடும் சேர்ந்து பொருள் தரும். அது நடுநிலைத் தீவகம்.)
தேவர்பிரானை அறிந்தேன் என்று சொன்னவுடன் திருமூலர் விழித்துக்கொண்டார். “நான் அவனை அறிவதாவது! அவனே கருணையினால் என் உள்ளத்துக்குள்ளே வந்து புகுந்தான்” என்கிறார். அப்படிப் புகுந்ததனால் அவர் கற்ற கல்வியின் பயன் கிட்டிவிட்டது. அந்தப் பயன் சாவாமை; மறிப்பு அறியாத நிலை. அமுதமயமான இறைவன் வந்து புகுந்த அக்கணத்திலே மரணமில்லாப் பெருவாழ்வு சித்தித்துவிட்டது.
மறிப்புஅறி யாதுவந்து உள்ளம் புகுந்தான்.
(நான் மறித்தலை அறியாமல் இருக்கும்படி தானே கருணையினால் வந்து அடியேனுடைய உள்ளத்தில் அத்தேவர் பிரான் புகுந்தான்.
மறிப்பு – இறத்தல். அறியாது என்பது காரியப் பொருளில் வந்தது. இறைவன் உள்ளம் புகுந்த காரணத்தால், இனி மறிப்பு அறியாத காரியம் சித்தித்தது என்றபடி.)
இறைவனுடைய அருள்பெற்று இனிப் பிறவா வழி பெறுவதற்குச் சாதனமான கல்வியே நாம் வெறுக்காமல் விரும்பிக் கற்க வேண்டிய கல்வி. அக்கல்வி கற்றால் இறைவனுடைய திருவுள்ளக் குறிப்பை உணரலாம். உடம்பும் உயிரும் கூடிப் பிறந்த பிறவிக்கு எது பயன் என்பதை அறிந்து கொள்ளலாம். இறைவன் பெருமையை உணர்ந்து அன்பு செய்யலாம். அவன் நம் உள்ளத்தே அநுபவப் பொருளாக எழுந்தருளவும், அதனால் மரணமிலாப் பெரு வாழ்வு நமக்குக் கிடைக்கவும் வாய்ப்பு உண்டாகும்.
குறிப்புஅறிந் தேன் உடல் உயிரது கூடிச்
செறிப்புஅறிந் தேன்,மிகு தேவர் பிரானை;
மறிப்புஅறி யாதுவந்து உள்ளம் புகுந்தான்;
கறிப்புஅறி யாமிகும் கல்விகற் றேனே.
முதல் தந்திரத்தில் கல்வியென்னும் பகுதியில் வரும் முதற்பாட்டு இது.



