ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்

நாணலும் கோணலும்

பசியினால் துடிக்கும் குழந்தை பால் பால் என்று கதறும். அப்போது அதற்கு விளையாட்டுப் பண்டங்களைக் கொண்டு வந்து குவியலாகத் தந்தாலும் அவற்றைக் கண்ணெடுத்தும் பாராது. இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்காக ஏங்கி நிற்கும் அன்பருடைய நிலையும் அத்தகையதே. பசி, தூக்கம், இன்பம், துன்பம் என்பவற்றை மறந்து, “அவனை என்று காண்பேன்!” என்று ஏங்கித் துடிக்கும் அன்பர்களுக்கு அவனுடைய தரிசனம் கிட்டும் வரையில் அமைதி பிறவாது; இருப்புக் கொள்ளாது; உலக வாழ்வு சுவைக்காது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இத்தகைய நிலையில் இருந்து அம்பிகையின் தரிசனத்தைப் பெற்றவர். கடவுள் தரிசனத்துக்காக ஏங்கும் நிலையை உணர்த்த ஒரு நல்ல உதாரணம் அவர் சொல்கிறார். ஒருவனைத் தண்ணீரில் ஒரு நிமிஷம் அமிழ்த்தி விட்டுப் பிறகு அவனை விடுதலை செய்து, “உனக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டால் அவன், “எப்போது மூச்சுவிடப் போகிறோம்! எப்போது காற்றைச் சுவாசிப்போம்! என்ற துடிப்பையல்லாமல் வேறு நினைவே இல்லை” என்று சொல்வான். அவ்வாறே இறைவனுடைய காட்சிக்காக வேசாறி நிற்கும் அன்பர்களும் கடவுள், கடவுள் என்ற நினைவையன்றி வேறு எதையும் நினைக்க இயலாத நிலையில் இருப்பார்கள்.

“என் அப்பனே! உன்னை என் கண்ணாரக் காணும்பேறு எப்போது கிடைக்கும்? இந்தப் பாவியின் முன் எப்போது எழுந்தருள்வாய்?” என்று அவர்கள் கதறுவார்கள்; அவன் அருளைப் பெற்ற பழைய அன்பர்களை எண்ணி எண்ணி, “அவர்கள் பெற்றது யாம் பெற்றிலமே!” என்று வருந்துவார்கள்.

இறைவன் இல்லாத இடம் ஒன்று இல்லை. ஆனால் அவன் இருப்பதை உணரும் ஆற்றல் யாவருக்கும் இருப்பதில்லை. மழை எங்கும் பெய்தாலும் அது மேடான பாறையில் தங்கி நிற்பதில்லை. பெய்த சிறிது நேரத்தில் பாறையைப் பார்த்தால் மழை பெய்த சுவடே இராது. ஆனால் பள்ளத்தில் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கும். சில நாள் கழித்துச் சென்று பார்த்தாலும் மழை பெய்ததற்குரிய அடையாளமாக அங்கே நீர் இருப்பதைக் காணலாம். இறைவன் எவ்விடத்திலும் நீக்கமற நிறைந்து நின்று அருள் மழை பொழிந்து கொண்டே இருக்கிறான். அவ்வருள் மழையினால் ஈரம் கொள்ளாத பாறைகளாகப் பல உள்ளங்கள் இருக்கின்றன. அதைத் தேக்கிக் கொள்ளும் பள்ளங்களாகச் சில உள்ளங்கள் இருக்கின்றன. அடியார் உள்ளமாகிய பள்ளத்திலே அருள் தேங்குகிறது. இறைவனே அங்கு நிலைத்து நிற்கிறான்.

உலகத்து மக்களிற் பெரும்பாலோர் இறைவனைத் தரிசிக்க இயலாமல், அவன் அருள் மழை பெய்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டு கிடக்க, அன்பர்களோ அவனைத் தம் நெஞ்சக் கோயிலில் பூட்டித் தாழிட்டு விடுகிறார்கள். அவனைக் காணும் வரையில் அந்த அன்பர்களும் மற்றவர்களைப் போலவே வாழ்ந்தாலும், அவனது காட்சி பெற்ற பிறகு அவர்கள் வாழ்க்கைப் போக்கே மாறிவிடுகிறது. அதுவரையில் அவர்கள் காணும் காட்சி ஒரு வகை; அருள் பெற்ற பின் அவர்கள் காணும் முறையே வேறு ஆகிவிடுகிறது. அதற்கு முன்பெல்லாம் அவர்கள் தங்களுடைய அறிவின் தூண்டுதலால் பொருள்களைப் பார்த்து அறிந்தார்கள்; நுகர்ந்தார்கள். ஆனால் இறைவன் அவர்கள் உள்ளத்தில் நின்ற பிறகு அவர்கள் தாமாக இயங்குவதில்லை; தமக்கென்று ஒரு செயல் உடையவராகவே எண்ணுவதில்லை. எல்லாம் அவன் செயலாகத் தற்போதம் இழந்து நிற்பார்கள். அவர்கள் உள்ளத்தில் நிற்கும் இறைவன் எந்தச் செயலுக்கும் மூலகர்த்தாவாகத் திகழ்வான்.

இத்தகைய அடியார்களின் உள்ளம் நேரான உள்ளம்; நேர்மையான உள்ளம்; காமம், கோபம் முதலிய கோணல்கள் இல்லாத உள்ளம். குடியில்லாத வீட்டிலே பாம்பும் தேளும் வாழும்; மனிதர்கள் குடிவந்துவிட்டால் அவை போய்விடும்.

மற்ற மக்கள் உள்ளம் காமம் முதலிய பாம்பும் தேளும் குடியிருக்கும் இடம். இறைவன் வந்து நிற்கும் அடியார் உள்ளமோ கோணல்கள் நில்லாத இடம். கோணல் நின்றால் இறைவன் நில்லான்; இறைவன் நின்றால் கோணல் நில்லாது.

கோணல்நில் லாத குணத்துஅடி யார்மனம்.

அந்த மனமே சிங்காதனமாக இருந்து இறைவன் அருளாட்சி புரிகின்றான். அவனே மாற்றறியும் உரையாணியாக இருந்து, உலகத்தைக் காட்டுகிறான். அவன் காட்டாத போது கோணல் நின்ற மனத்தின் போக்குக்கு ஏற்பக் கண்ட காட்சிக்கும், அவன் காட்ட அவன் அருளே கண்ணாகக் காணும் காட்சிக்கும் எத்தனையோ வேறுபாடு உண்டு. இப்போது இறைவன் கோணல் நில்லாத மனத்தில் தானே உரையாணியாக அமர்ந்து நிலையாக நிற்கிறான்.

கோணல்நில் லாத குணத்துஅடி யார்மனத்து
ஆணிய னாகி அமர்ந்துநின் றானே.

(கோணல்-அருள் நெறியினின்றும் திரும்புவதற்குக் காரணமான குற்றங்கள். கோணல் நில்லாத மனம், குணத்தையுடைய அடியார் மனம் என்று கூட்டிப் பொருள் செய்க, ஆணியன்-உரையாணியைப் போன்றவன். நின்றானே-நின்ற எம்பெருமானே; விளி.)

இப்படிக் கோணல் நில்லாத அடியார் மனத்திலே அவாகளுக்கு மாலுமிபோல இருந்து நடத்துவிக்கும் பெருமான் நம்மளவில் மறைந்து நிற்கிறானே! அவனைக் காணும் வாய்ப்பு இல்லையே!’ என்று ஏங்குவது முன்னே சொன்ன அடியார்களின் இயல்பு. அப்படி ஏங்கும் நிலையில் உள்ள ஒருவர் இறைவனையே பார்த்துப் பேசுகிறார்.

”இறைவனே! நீ இங்கு வந்து நிற்கமாட்டாயா?” என்றார் அவர்.

”நான் இல்லாத இடம் ஒன்றும் இல்லையே! வந்து புதிதாக நிற்கவேண்டுமோ?” என்றான் இறைவன்.

“நீ நிற்கிறாய் என்பது உண்மை. ஆனால் அடியேன் காணும்படி நிற்கவில்லையே!” என்றார் அன்பர்.

“என்னைக் கண்டு உனக்கு என்ன பயன்?” என்ற கேள்வி பிறந்தது.

“எனக்கு எல்லாப் பயனும் உன்னாலேதான் கிடைக்க வேண்டும்.”

”அதை வேறு யாரிடமேனும் முயன்று பெற்றுக் கொள்ளலாமே!”

“வேறு யாராலும் எனக்கு நன்மை செய்ய இயலாது. எனக்கு நின்னையன்றி உறவு வேறு யாரும் இல்லை.”

”நீ என்னைக் கண்டால் என்ன செய்வாய்?”

“உடனே ஓடிவந்து உன்னை இறுகத் தழுவிக் கொள்வேன்.”

“முன்னே காணாத கணவனைக் கண்டவுடன் நாணம் கொள்ளும் பெண்ணைப் போல நாணம் உண்டாகாதா? எப்படித் தழுவிக் கொள்ள முடியும்?”

“அடியேன் நாணி நிற்கமாட்டேன். என் ஆசையின் வேகம் அத்தகையது. அயலில் ஒரு பொருள் இருப்பதாக நினைவு இருந்தால்தானே, நாணம் உண்டாகும்? தாயை ஓடிச் சென்று கட்டிக் கொள்ளும் குழந்தை நாணம் அடைகிறதா? அப்படி நான் உன்னைத் தழுவிக் கொள்வேன்.”

“நான் பிறர் தழுவ நிற்பவன் என்று எவ்வாறு அறிந்தாய்?”

“கோணல் இல்லாத மனத்தையுடைய பக்தர்களின் உள்ளத்தில் நீ இணைந்து அமர்ந்து அவர்களுக்கு வழி காட்டி பாகவும் உரையாணியாகவும் நிற்பதை அறிவேன்.”

திருமூலர் பாட்டு ஒன்று இந்தக் கற்பனைக்கு இடம் தருகிறது.

காணநில் லாய்;அடி யேற்குஉறவு ஆர்உளர்?
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணல்நில் லாத குணத்துஅடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே!

(குற்றங்களாகிய கோணல்கள் நில்லாத குணசீலர்களாகிய அடியாருடைய மனத்தில் உரையாணியைப் போல எழுந்தருளி நிலையாக நிற்பவனே! நீ அடியேன் காணும்படி என்பால் வந்து நிற்பாயாக. எனக்கு நீ அருள் செய்யாவிடில் அடியேனுக்கு உறவாவார் வேறு யார் இருக்கின்றனர்? நீ அடியேன் காணும்படி வந்து நின்றால் உன்னைத் தழுவிக் கொள்வதற்கு நாணி நிற்க மாட்டேன்.

தழுவிக்கொள்ள நாணி நிலேன். நாண என்றது நாணி என்பதன் திரிபு; எதுகை நோக்கி. நாணம் நில்லேன் என்று பிரித்து நாணத்தில் நில்லேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆணியன்-அச்சாணி போன்றவன் என்றும் சொல்லலாம். தேர் உருளுவதற்குப் பலமாக ஆணி இருப்பதுபோல அடியார்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இறைவன் இருக்கிறான். நின்றான் என்றது நிற்றலாகிய செயலைக் குறிக்காமல் நீடித்து இருந்தான் என்றதைக் குறித்தது.)

இறைவனிடம் முறுகிய பக்தி உடையவர்களுக்கு நாணம் நழுவிவிடும். தலைவனைத் தனித்துக் கண்டு அளவளாவி இன்புறும் தலைவிக்கு நாணம் இருந்தால் இன்புற இயலாது. இறைவனுடைய அருளுக்காக ஏங்கி நிற்கும் பக்தர்களுக்கு நாணம் குறுக்கே நில்லாது.

நாடவர் பழித்துறை பூணது வாக

என்பது திருவாசகம். “உலகம் பழிக்குமே!” என்ற எண்ணம் இன்றி இறைவனைப் பற்றுபவருக்கே இன்பம் உண்டாகும்.

ஊரூர் திரிந்தும் இவண்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே

[நாயேறி வீழ்ந்தென் நடாத்திலென் ஞானிக்குப், பேயாம் உலகம் பழித்தென் புகழ்ந்தென்”ஒழிவிலொடுக்கம். ]

என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். உலகத்தவர் பக்தர்களைக் கண்டு தம் மனம் போனபடி இழித்துபேச, அதற்கு நாணாமல் இறைவன் அருளிலே ஒன்றுபடுவது அன்பர் இயல்பு. சீவபோதம் ஒழிந்து நிற்பவருக்கு உலகம் என்ன சொன்னாலும் அதைப் பற்றிய கவலை தோன்றாது.

கோணல் உள்ளத்தில் இருந்தால் நாணல் இருக்கும். கோணல் ஒழிந்தால் நாணலும் ஒழியும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *