ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி

முரசு முழங்கியது

”தில்லையிலே, தீக்ஷிதர் கோட்டையிலே, தீனதயாபரன் கான முழக்கத்துடன் காலைத்தூக்கி காளியிடம் நர்த்தனம் செய்த கைலைப் பதியிலே” என்று பக்தர்கள் வர்ணிப்பர் அந்த க்ஷேத்திரத்தைப் பற்றி, அங்கே நமது மாநாடு!

“தீக்ஷிதர் மூவாயிரம் பேர் உண்டு அவர்களிலே ஒருவர் எங்கள் ஆடிய பாதர்” என நெஞ்சு நெக்குருகச் சொல்வர் சனாதனச் செல்வர். அங்கே நமது வீரர்கள்!

“நாளைப் போவார் என்று நாமம் பெற்ற நந்தனுக்கு நந்தி வழிவிட்டதும், செந்தீ பூத உடலைப் பொசுக்கி, புகழுடலை நிறுத்தி, ஜாதியிலே பறையனையும் ஜோதியிலே கலக்கச்செய்ததும் அத்திருத்தலத்திலே” என்பர் பழமை நண்பர். அங்கே நமது சமத்துவப் பேரொலி!

ஆரியாலயம் தில்லையிலே! அங்கே பக்திப் பிரவாகம்! அறிவாலயம் – அதன் எல்லையிலே! அங்கிருந்து பகுத்தறிவு வெள்ளம்! அண்ணாமலை நகரிலே உதயமான புதிய சகாப்தம் பொன்னான சந்ததி கண்ணான நமது நாட்டைக் காத்திடும் பண்பாடும் படையினர்.

பெருந்தடை கடக்கும் நெடுஞ்செழியன் – பேராசிரியர் அன்பழகன் – பெருமைமிகு மதியழகன் – வண்ணத் தமிழ்ச் செல்வர் அரங்கண்ணல் வழக்கறிஞர் இளம்வழுதி – வாலிபத் தென்றல் வலிமைமிகு சொல்லாளர் வில்லாளன் – அனைவரையும் நாட்டுக்களித்த அண்ணாமலை நகர். அத்தகையோர் தோன்றுவதால் ஆரியம் சாகும் எனப் பயந்து எழுந்த பொன்னார் மேனியனின் திருக்கோயில்.

இரண்டுக்குமுள்ள வேறுபாடு பாரீர்..! என வேங்கையெனத் திரண்ட வீரர் கூட்டம்.

பழமையின் துர்நாற்றம், பக்தியின் பெயரால் பரிமள சுத்தமாக்கப்பட்டு – பாழ்பட்டுப் போனதடா தமிழன் வாழ்வு என்பதை வாய்விட்டுக் கதறும் அறிவு இயக்கமாம் – திராவிட முன்னேற்றக் கழகம், அந்தத் தில்லையிலே மாநாடு கூட்டிற்று.

நடனத்திலே சிறந்தவரா நடராஜரும் சிவகாமியும்! அப்படியானால் கோபிநாத்துக்கும் தங்கமணிக்கும் ஒரு கோயில் வேண்டுமே!

கேலி கலந்த கேள்வி யெழுந்தது.

பூசுரருடன் தன்னையும் சேர்த்துக்கொண்டு பூணூல் அணிந்த பெம்மான், சாதியின் தூதரல்லவோ? என்ற சந்தேகம் வலுப்பெற்றது.

பறையன், நெருப்பிலே மூழ்கினால் தான் இறைவனடி சேரலாம் என்னும் நியதி வகுத்தவன் மனுவினும் கொடியோன் – அக்கால மலான்! அவன் மகேசனல்ல!

இப்படி எரிமலை வெடித்தது!

ஆண்டவன் பெயரால் ஆலயப் பெருமைகளால் – ஆஷாடபூதிகளை வளரவிட்டு ஆரியத்தை உச்சாணிக் கொப்பில் ஊஞ்சலாட்டத் திட்டம் போட்டவர்களின் கொட்டமடக்க எட்டுத் திக்கும் பரவியது தி. மு. கழகம். அதன் பட்டுக்கொடி கட்டிப் பறக்கும் கிளைகளில் தில்லையும் ஒன்று.

அங்கே தான் சரித்திரத்தின் செப்பேட்டிலே திராவிடர் கொட்டிய பேரிகை செதுக்கப்பட்டது. பால் வடியும் முகமும் – பண்பு நிறை அகமும் கால் ஒடிய செயல் புரியும் ஆர்வமும் கொண்ட நண்பர் பாலகுருசாமியை வர வேற்புத் தலைவராய்க்கொண்ட, தென்னாற்காடு மாவட்ட மாநாடு ஜூலை 4, 5, நாட்களிலே தில்லையிலே கூடிற்று. மூன்று பெரும் போர்களுக்கு முரசறையப்பட்டது அங்கே!

முன்னணி வீரர்கள் அனைவரும் முழங்கினர்.

புதுக் கல்வித்திட்ட எதிர்ப்புப் போராட்டத் தலைவர் – பெரியாருக்குப் பெரியாரின் திருச் செல்வர் – பேச்சால் கருத்தால் – மூச்சால் – நாட்டுக் குழைக்கும் தோழர்- E. V. K. சம்பத், தன் தலைமையிலே நடைபெறப்போகும் ஆச்சாரியார் வீட்டுமுன் மறியல் முறை பற்றியும் – கல்வித் திட்டத்தால் நமது சிறார்களின் கண்கள் எப்படிக் குத்தப்படுகின்றன என்பது பற்றியும் – அவருக்கே உரிய கணீர்க் குரலெடுத்து முரசறைந்தார்!

டால்மியாபுரப் போராட்டத் தலைவனாகிய நானும் முரசொலிக்கும் பணியேற்றேன்!

இறுதியில், எல்லாப் போருக்கும் தலைவராகிய – இந்த நாட்டின் செல்வமாகிய சிந்தை அணு – ஒவ்வொன்றும் சிலிர்த்திடப் பேசும் செந்தமிழ்க் காவலன் – செயல் மன்னன் – சிங்க நடையும், சிங்காரத் தென்றல் நடையும், பொங்கு கடல் நடையும், புரட்சிக் கவி நடையும், புதிய உரை நடையில் கண்ட பூமான் – புன்சிரிப்பால் பகை யோட்டி – பூரிப்பால் தம்பிமார் படைமீது விழியோட்டும் கோமான்! திராவிடத்தின் ஒளி விளக்கு தன்மானத் தீபச் சுடர் – தங்கத்துட் தங்கம் எங்கள் தனித் தங்கம்- அண்ணா பேச எழுந்தார்!

முரசுகள் ஆயிரம் பதினாயிரம் முப்பதினாயிரம் என்ற தொகையினதாய் ஒலித்தன.

“ஒரு தம்பியை ஆச்சாரியார் வீட்டுக்கு முன்னே அனுப்புகிறேன். ஒரு தம்பியை கல்லக்குடி களத்திற்கு அனுப்புகிறேன். களம் இரண்டோடு முடிவதில்லை தோழர்களே!

ஜூலை 15ம் நாள் – கல்லக்குடி களத்திலே கருணாநிதி நிற்கும்போது – அந்தப் போராட்டத்தின் அறிகுறியாகவும் தென்னாட்டவரை ‘நான்சென்ஸ்’ என்று இகழ்ந்து பேசிய நேருவை கண்டிப்பதற்கு அறிகுறியாகவும் தமிழகமெங்கும் உள்ள தமிழர்கள் புகைவண்டிகளை நிறுத்தப் போகிறார்கள் “

என்று அண்ணா சொன்னதுதான் தாமதம் மாநாட்டுப் பந்தலாகவா இருந்தது அது ! வேலொடுவேல் உராசியதோ வாளொடு வாள் மோதியதோ – எனும் – விதத்திலே கையொலியும், அதை மிஞ்சும் நாவொலியும் எழுந்தன !

பேனாவை ஒரு போர்வாளாக்கிய அந்த தமிழ்த் தளபதியின் கரம் உயர்ந்தது – நாவோ வீரமுரசம் கொட்டியது – கனல் கிளம்பியது அவர் கண்களில், கனகவிசயன் பாதையில் நேரு போகிறார் எனச் சொல்லும்போது! புனலும் எழும்பியது; தமிழரை இழித்திடும் தருக்கரும் உளரோ தரணியில் என்று, அவர் கேட்டபோது!

‘தம்பி! கருணாநிதி உன் சவ ஊர்வலமா செல்ல வேண்டும் – வேண்டாமடா வேண்டாம் – வெற்றி ஊர்வலமே செல்லட்டும்! சென்றுவா செருமுனைக்கு!’ என்று அவர் வாழ்த்தியபோது கண்களிலே களிப்பு பொங்கியது எனக்கு – அதோடு கண்ணீரும் பொங்கியது – ஏன்? – என் அண்ணாவின் அன்புக்கரங்கள் அவ்வளவு பாசத்தோடு என் இருதயத்தைத் தழுவிவிட்டன; அதனால்!

வடநாட்டு மொழி ஆதிக்கத்தை எதிர்க்க இந்தியை எதிர்த்தோம். ‘நான்சென்ஸ்’ என்றார் நேரு!

பெரிய மனிதர் என எண்ணி ஒரு முறை எச்சரித்தோம்.

திருத்தணிப் போரிலே திராவிட முன்னேற்றக் கழகம் கலந்துகொண்டது. மீண்டும் நேரு சொன்னார் ‘நான் சென்ஸ்’ என்று!

கண்டனத்தைக் காட்ட ‘ரயில் நிறுத்த’ மென்றது தமிழகம் !

வடநாட்டு வாணிப ஆதிக்கம் தமிழகத்தில் கூடாது. திராவிடத்திற்காகாது தமிழர் நாட்டில் தமிழர் பெயர் வைக்கவும் உரிமையில்லையா? டால்மியாபுரத்தை மாற்றி கல்லக்குடியாக்கு என்றோம். கேட்கவில்லை போர் என்றோம்.

வளரும் சமுதாயத்தை முளையில் கிள்ள இங்குள்ள வட ஏகாதிபத்தியத்தின் மொத்த வியாபாரி ஆச்சாரியார் முயன்றார்.

அதற்கும் ஒரு போர் என அறிவித்தோம். போர் முனைக்குச் செல்க என்றார் பொதுச்செயலாளர்! எடுத்து செல்லவேண்டிய கருவிகளையும் குறிப்பிட்டார்.


கடமையெனும் வாள் கட்டுப்பாடெனும் கவசம் கண்ணியமெனும் கேடயம்.- மூன்றும் எடுத்துச் செல் என்றார்; அந்த மூன்றெழுத்துச் செல்வர் அண்ணா!

முரசு அதிர்ந்தது! வடவர் ஆதிக்க அரசு கவிழ்ந்திடுக என முரசு அதிர்ந்தது! திராவிடர் தனி – பயமில்லை – இனி – என்ற முரசு அதிர்ந்தது! – முத்தமிழ் படை கெட முன்னேற்றம் தடைபட – இனி விடோம்! விடோம்! என முரசதிர்ந்தது ! எதிரிகள் கோடி இட்டழைப்பினும் தொடோம்! தொடோம்! என முரசதிர்ந்தது! ரத்தக் கடல்கள் – கொத்தும் இடர்கள் – எதையும் தாங்கும் இதயங் கொண்டோர் எழுந்தார் எனவே அதிர்ந்தது முரசு! விழுந்தது பகையென

அதிர்ந்தது முரசு!
அதிர்ந்தது முரசு!!
அதிர்ந்தது முரசு!!!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *