ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி

சிறை திறந்தது

இன்னும் இரண்டுமாத காலம் கழித்த பிறகே திரா விடத்தின் தெருக்களில் நடமாட முடியும் என்றெண்ணியிருந்த எங்களிடம் புதிய செய்தியொன்று கூறப்பட்டது. ஒரு மாத தண்டனை குறைந்துவிட்டது என்பதுதான் அச் செய்தி. முப்பத்தைந்து ரூபாய் அபராதப் பணம் கட்ட மறுத்து மேலும் ஒரு மாத தண்டனையை ஏற்றுக் கொண்ட எங்களின் அபராதத் தொகையை கட்டாயமாக வசூலித்து விட்டனர். முப்பத்தைந்து ரூபாய்க்காக என்னுடைய மோட்டார் காரின் மீது அவர்களின் கண் விழுந்த தென்றால் – அதை ஜப்தி செய்து ஏலம்போட முயன்றார்களென்றால் – வஞ்சம் தீர்த்துக் கொள்ள எந்தெந்த வழிகளில் எல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகும். ஏறத்தாழ ஐந்து மாதம் சிறையிலே வாழ்ந்துவிட்டோம். ஐந்து மாத காலத்திலே தான் மூலவர் நேரு கடு மொழிகள் பல கூறினார். திராவிடத்தை நோக்கி, முப் புரிக் காவலர் ஆச்சாரியார் சுடுமொழி வீசினார் நமது கழகத்தை நோக்கி. இவைகட்கெல்லாம் சிகரம் வைத் தாற்போல கவர்னர் பிரகாசா திருவாரூரில் கருப்புக் கொடி காட்டிய தோழர்களையும் பொதுமக்களையும் காரிலிருந்து குதித்து கம்பெடுத்து விரட்டியடித்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் கவர்னர், தானே முன்னின்று தடியடி தர்பார் நடத்தும் விசித்திரத்தை சரித்திரம் முதன் முதலாக சந்தித்திருக்கிறது இந்த ஐந்து மாத காலத்திலே! ஜூலை 15ந் தேதிக்கு முன்னிருந்த கழகம் வேறு அதற்குப் பிறகு உன்னதமாக வளர்ந்திருக்கும் கழகம் வேறு! ஆயிரம் – லட்சமாக மாறிடும் விதத்திலே அவ்வளவு சிறப்பான எழுச்சி பெற்றிருக்கிறது. தி.மு.க. அவதூறு பேசினாலும் – ஆணவம் காட்டினாலும் அடித்து விரட்டினாலுங்கூட – அழிக்கமுடியாதது இவ் வளர்ச்சி எனக் கண்டபிறகுதான் கவர்னர் பிரகாசா தஞ்சையிலே பேசும்போது “கருங்கொடி நிகழ்ச்சிகள் ரஷ்யப் புரட்சி போலக் காட்சியளிக்கின்றன ” எனக் கூறிவிட்டு – நாகையிலே பேசும்போது – “இவர்கள் வளர்ச்சியை அலட்சியம் படுத்தக்கூடாது” எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அலட் சியத்தாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று கருதி யிருந்திருக்கிறார்கள், இவர்கள் என்பதும் இப்போது போர் முறையை மாற்றுகிறார்கள் என்பதும் நாட்டுக்கு நன்கு புலனாகாமற் போகாது ! இவைகளை யெல்லாம் எண்ணி மகிழ்கிறபோது சிறைச்சாலையின் துன்பங்கள் ஓடிவிட்டன. அது ஒரு ‘சுகவாசஸ்தலம்’ போலவே எங்களுக்கு இருந்தது. “நாம் சிறையிலிருக்கிறோம். வெளியிலே நமது கழகம் வளர்கிறது. நாம் பூட்டப்பட் டிருக்கிறோம் – வெளியே பல கிளைக் கழகங்கள் திறக்கப் படுகின்றன ” என்ற மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. அந்த சந்தோஷத்திலே நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. நவம்பர் மாதம் 31ம் நாள் காலையிலே சிறைச்சாலையின் சிறிய கதவு திறக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு முன்னால் பார்த்துவிட்டுப்போன எங்கள் அழகுத் திரு நாட்டை, விசாலமாக விழித்துப்பார்த்தோம். ஆயிர மாயிரம் திராவிடத் தோழர்கள் – அவர்களின் ஒளி பொருந்திய கண்கள், எங்களை ஆரத்தழுவி வரவேற்றன. பொறுப்பாளர் கோவிந்தசாமி மத்திய கழகத்தின் சார்பாக வரவேற்றார். திருச்சி மாவட்ட செயலாளர் அம்பில் தர்ம லிங்கம், தஞ்சை மாவட்ட செயலாளர் K. K. நீலமேகம், சென்னை மாவட்ட செயலாளர் கண்ணபிரான், மதுரை மாவட்ட செயலாளர் தொந்தி, மற்றும் மாவட்டத்து செயல் வீரர்கள் அனைவரும் வந்திருந்து வரவேற்றனர். கலையுலக ஜோதி கலைவாணர் கிருஷ்ணன் எதிர் கொண் டழைத்தார். என் அன்புக்குரியோர் அருமை திராவிடத்தின் பெருமை காக்கும் படைவீரர். அனைவரும் ‘வருக வருக’ என வாழ்த்தினர். “சிறிய சிறையிலிருந்து பெரிய சிறைக்கு வந்தேன்” என்று கூறியபடி அவர்களைத் தழுவிக்கொண்டேன்.

நவம்பர் 21ந் தேதி காலை பத்துமணியுடன் எனக்கு விதிக்கப்பட்ட ஆறுமாதக் கடுங்காவல் முடிவுற்றது. ஆனால் என் அன்னை திராவிடத்தைப் பூட்டிவைத்திருக்கும் அடிமைச் சங்கிலி அறுபடுவது எந்நாள்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *