
ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி
சிறை
தான், படைக்கும் அந்தி வானத்தையும் வெற்றி கொள்ளும் சிவப்பு நிறத்தைப் பூமியிலே கண்ட சூரியன் வெட்கித் தலை குனிந்து மறைந்தான். போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள்ளே – கல்லக்குடியில் நாங்கள் சுருண்டு கிடந்தோம் இந்த சோகச் செய்திகளை காதில் வாங்கியபடி!
இரவு 12 மணிக்குமேலிருக்கும். அரை மசால்வடைத் துண்டும், கால்கோப்பைத் தேநீரும் கொண்டு வந்து தந்தனர் மணியும் முத்துவும் மற்ற நண்பர்களும்! அதுதான் எங்களுக்கு சரியான காலத்தில் கிடைத்த அருமையான இரவு உணவு. ஒருவர் காலை ஒருவருக்குத் தலையணையாக அமைத்துக்கொண்டு மும்பத்தாறு பேரும் தூங்கினோம். கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி சகிதம் ரிசர்வ் போலீஸ் காவல் நின்றுகொண்டிருந்தது. எங்களுடனேயே இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த நடுநிசியில் திடீரென எங்களை எண்ணிட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்; முப்பத்தாறு பேரும் சரியாக இருந்தோம். வழக்கம் போல் இரண்டு மூன்று முறை எண்ணியபிறகு அவருடைய கணக்கு முடிவு பெற்றது.
புயலுக்குப் பின்னுள்ள அமைதியோடு மறுநாள் பொழுது புலர்ந்தது!
கண்ணதாசன் முதலிய நண்பர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி கிடைத்தது.
நாட்டுப்பற்றும் – திராவிட இனப்பற்றும் கொண்டவருமான திருச்சி கலைமகள் பிரஸ் தோழர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் என்ன ஆனார் என்று பார்க்கச்சென்ற திருச்சி முஸ்லீம் இளைஞர் முன்னணி தோழர் ஐ.எம்.ஷரீபும் காவலில் வைக்கப்பட்டார்.
தூத்துக்குடி செயல் மணிகளும் – எதையும் தாங்கும் இதயம் போன்ற சிங்க ஏறுகளும் – கண்ணியம் – கட்டுப்பாடு கடமையுணர்ச்சிகளில் கடுகளவும் வழிவாத கழகத்தின் கண்மணிகளுமான தோழர்கள் தங்கப்பழம் – சிவசாமி கே.வி.கே.சாமி நடராசன் – ரத்தினம் முதலிய எண்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் சதிவழக்கில் சம்மந்தப் படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தோடு கைது செய்யப்பட்டார்கள்.
சென்னையிலே ஆச்சாரியார் வீட்டுக்கு முன்பு மறியல் நடத்துவதற்காகச் சென்ற ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் அந்த அணிவகுப்புக்குத் தலைமையேற்று நடத்திய வீராங்கனை தோழியர் சத்தியவாணிமுத்து அம்மையாரும், காஞ்சி ராசகோபாலும் ஜூலை 14ந் தேதியன்று கைது செய்யப்பட்டார்கள்.
15ம் நாள் மறியல் போராட்டத்திற்குத் தலைமை வகித்த தஞ்சை பூமி தந்த அஞ்சாநெஞ்சர் – தர்க்கத்தால் தருக்கரை விரட்டும் தகைமையாளர் – இனப்போர்த் தளபதி N.S. இளங்கோவும், வேதாசலம் முதலிய ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள் சென்னையிலே!
16ம் நாள் ஆயிரம் இடர் அடுக்கிவரினும் அசையாத மன உறுதி படைத்தவரும் – வடாற்காடு மாவட்டத்தில் கட்சிக்கோர் படை போன்றவருமான போளூர் சுப்பிரமணியம் தலைமையில் ஆச்சாரியார் வீட்டுத் தெருவில் ஐம்பதுக்கு மேற்பட்ட நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறை நிரம்புகிறது நிரம்பி வழிகிறது என்ற செய்திகள் செவி நிரம்ப சிந்தையிலே துடிப்பு நிரம்ப – நாங்கள் காவலுக்கிடையே அமர்ந்திருந்தோம்.
16ந் தேதி காலை 10 மணிக்கு டி. எஸ். பி. வந்தார். எங்களையெல்லாம் உடனே அரியலூருக்கு அனுப்பும்படி சொல்லிவிட்டுப் போனார்.
பிற்பகல் 12 மணிக்கு போலீசார் செலவில் சாப்பாடு போடப்பட்டது. நாங்கள் கடைசியாக இலை போட்டு சாப்பிட்ட சாப்பாடு அதுதான்!
சாப்பாடு முடிந்தது – போலீஸ் வண்டி வந்து நின்றது. எல்லோரும் அதில் ஏறி அமர்ந்தோம். வண்டி அரியலூர் நோக்கிப் புறப்பட்டது.
ஆம் – எங்களுடைய சிறை யாத்திரை துவங்கிவிட்டது.
எங்கள் வண்டிக்குப் பின்னால் ஒரு மோட்டார் கார். அது சிறிது தூரம் எங்களைத் தொடர்ந்து வந்தது. உள்ளிருந்து இரண்டு மூன்று பேர் வணக்கம் தெரிவித்தனர். அந்தக் காரில் என் சகோதரர் அரங்கண்ணலும் இருந்தார். அவர் தன் அன்புக் கரத்தை நீட்டி ‘சென்று வருக’ என்று அறிவித்தார்.
அவர் பற்றிய நினைவு என்னை எங்கேயோ அழைத்துச் சென்றது – நீண்ட சிந்தனை. போலீஸ்வண்டி புழுதியை இறைத்தபடி போகிறது. பின்னால் வந்த மோட்டார் புழுதியில் மறைந்து வேறு பக்கம் திரும்பிவிட்டது. ஆனால் ‘அரங்கு’ என் மனதைவிட்டு மறையவில்லை.
1940ம் ஆண்டு – திருவாரூர்ப் பள்ளியிலே படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது படிப்பிலே கவனம் சென்றதைவிட அதிகமாக இயக்கத்திலேதான் சென்றது. பள்ளியிலேயே கழகப்பிரச்சாரம் கழக ஏடுகளைப் பரப்புதல் – கையெழுத்துப் பிரதிகள் நடத்துதல் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது என்னுடன் துணையாக இருந்தும் இணையாக இருந்தும் இயக்கத் தொண்டு புரிந்தவர் வ.கோ. சண்முகம் என்ற “மாவெண்கோ” இப்போது உடல் நலமின்றி இருக்கிறார் – பள்ளிப் பருவத்தில் எனக்குப் பரம விரோதியாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் வெங்கடாசலம் என்ற பச்சைக் கதர்சட்டைக்காரர். அவர் இப்போது – ஏன் அப்போதே திராவிட இயக்கத்திற்கு வந்துவிட்டார் – இன்னொருவர் ரங்கசாமி. என்னைக் கண்டால் அவருக்கு வேப்பங்காய் போலத்தான்! அழுத்தமான கதர் சட்டையும் – சட்டையிலே காங்கிரஸ் சின்னமும் அணிந்து கொண்டிருந்த அந்த இளம் நண்பர் பள்ளித் தாழ்வாரத்திலே நான் நடந்து செல்வதைப் பார்த்தாலே போதும் – அவரது குழுவினரோடு சேர்ந்து கொண்டு பரிகாச வார்த்தைகளைக் கொட்டிக் கும்மாளம் போடுவார். சில நேரங்களில் சிறு கல்லும் வீசுவார்.
ஏன் தான் இந்த ரங்கசாமிக்கு என்மீது இவ்வளவு காய்ச்சலோ தெரியவில்லை யென்று எனக்கு நானே ஆச்சரியப்படுவேன் – வருத்தப்படுவேன் – ஆனால் ஆத்திரப்படமாட்டேன். அதன் காரணமாகத்தான் ரங்கசாமி, அவ்வளவு விரைவில் அரங்கண்ணலாக மாறிட முடிந்தது. நாங்கள் தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன் முதல் நடித்த ‘பழனியப்பன்’ என்ற நாடகத்தில் தோழர் ரங்கசாமி இல்லை சகோதரர் அரங்கண்ணல் டாக்டர் வேடந்தாங்கி நடித்தார். ரங்கசாமி அரங்கண்ணலானார்! அரங்கண்ணல் நாடக டாக்டரானார் இப்போது நாட்டு நலிவு போக்கும் டாக்டர்களில் ஒருவராகி விட்டார் – எழுத்தால் ! பேச்சால் ! இணையற்ற செயல்களால்! அவருக்கு நான் – எனக்கு அவர் – உடன் பிறப்பு.
அரங்குவைப் பற்றிய என் ஆழ்ந்த சிந்தனையோட்டத்தை “அரியலூர் வந்துவிட்டோம்” என்ற குரல் தடுத்து நிறுத்தியது. அரியலூர் சப்ஜெயில் வாசலில் ஒரே கூட்டம். நாங்கள் வரப்போகிறோம் என்பதைத் தெரிந்து மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கினோம். குழுமியிருந்தோரை வணங்கினோம். வாழ்த்தினர். உள்ளே அழைத்துச் செல்லப்பட்டோம்.
அரியலூர் சப்ஜெயிலில் இருபதுக்குட்பட்ட கைதிகளையே வைக்க முடியுமாம். அங்கு எங்களுக்கு முன்பே வேறு வகைக் கைதிகள் பலர் இருந்தனர். நாங்களும் போனபிறகு மொத்தம் அறுபதுக்கு மேற்பட்டவரானோம். எங்கள் முப்பத்தாறு பேருக்கும் நாலைந்து கூண்டுகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஒரு கூண்டில் இரண்டு பேர்தான் சௌகரியமாக இருக்கமுடியும். ஏழுபேர் – எட்டுபேரை – ஒவ்வொரு கூண்டிலும் போட்டு அடைத்தார்கள்.
எங்கள் கூண்டு :
நான் – சத்தி – கஸ்தூரி – ராமசுப்பையா வேணு கோபால்- மலைக்கோட்டை ரத்தினம் – அரியலூர் எத்திராஜ் – மற்றுமொரு நண்பர் ஆகிய எட்டுபேர் அடைக்கப்பட்டோம். காலடியால் சுமார் பத்து அடி நீளமும் எட்டு அடி அகலமும் உள்ள அந்தக் கொட்டடியில் எட்டுபேர்!
அதிலும் பாதிக்குமேல் பயன்படுத்த முடியாத இடம் பெண்கள் அடைபட்டிருந்த கூண்டு. நாங்கள் சென்றதும் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை எங்களுக்கு அளித்தார்கள். சிறுநீர் கழிக்கப் பட்டு -எங்கள் மூக்குகளை யெல்லாம் கம்பிக்கு வெளியே நீட்டித்தான் மூச்சை சுவாசிக்கவேண்டும் என்ற நிலைமையிலே துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
மாலை 5 மணிக்கு எங்களைத் திறந்துவிட்டார்கள். மலஜலம் கழிப்பவர்கள் போகலாமென்று ‘கக்கூஸ்’ என்று சொல்லப்படும் ஒரு இடத்தை காண்பித்தார்கள். “லாங் ஜம்ப் ” தெரிந்தவர்கள் தான் உள்ளே சென்று அமர முடியும்.
காரணம் கால், வைப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் ஒன்றுக்கொன்று இடையே அவ்வளவு தூரத்திலிருந்தன.
பிறகு சாப்பிடுமிடத்திற்குக் கூப்பிட்டார்கள். குப்பையும் கூளமும் சேர்ந்த ஒரு தரையிலே ஆமாம் புழுதி மண்ணிலே – உட்காருங்கள் என்றார்கள். உட்கார்ந்தோம். உணவு வந்தது. இல்லை – இல்லை… ஆளுக்கொரு சட்டி வந்தது – மண் சட்டி ! பிறகுதான் உணவு வந்தது.
அறுசுவை உணவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்- நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுசுவை உணவு என்றால் ருசி நிறைந்த அருமையான சாப்பாடு என்றும் ஆறுவகை ருசி நிறைந்த சாப்பாடு என்றுதான் அர்த்தம் சொல்லக் கேட்டுமிருக்கிறோம்.
அரியலூரிலே எங்களுக்குத் தந்த அறுசுவை உணவுக்கு ஒரு புது அர்த்தமுண்டு.
அறுசுவை – சுவை அறுந்த.
உணவு – சாப்பாடு எனப்படும் கொடுமை.
சுவை அறுந்துபோன கொடுமையை மண் சட்டிகளில் கொட்டினார்கள். மஞ்சள் வர்ணச் சோறு! பஞ்ச வர்ணக் குழம்பு! உப்பிலும் – புளியிலும் காரத்திலும் சேராமல் சுயேச்சையாக வந்து விழுந்த பரங்கிக்காய்த் துண்டை எடுத்து வாயிலே வைத்தோம் ! எப்படியோ எதிர் நீச்சல் போட்டு அது வயிற்றுக்குள் போய்விட்டது. எல்லா தோழர்களும் சோற்றைத் தொடாமலே என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். “உம் சாப்பிடுங்கள்” என்று கூறிவிட்டு நான் சோற்றைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டேன். “அண்ட சராசரங்களும் சுழலு தண்ணே” என்று குடிகாரன் பாடுவான்! “அடிவயிற்றிலே இருந்து குமட்டுதண்ணே ! ” என்று நாங்கள் பாடவில்லை. அகத்தின் அழகை முகத்தால் காட்டாமலும் இருக்கமுடியவில்லை.
சோற்று உருண்டைகளைக் கீழே கொட்டிவிட்டு – சட்டிகளைக் கழுவி வைத்துவிட்டு – முப்பத்தாறு பேரும் அணி வகுத்தோம்; நாலு நாலுபேராக!
பிறகு பழையபடி கூண்டுகளில் அடைக்கப்பட்டோம். எங்கள் “கல்கத்தா இருட்டறை” யில் எட்டுபேர்! இரவு வந்தது – இரண்டு நாள் சரியான உணவு இல்லாத எங்களுக்கு தூக்கமாவது வந்ததா – அதுவுமில்லை! வந்தால் தான் படுப்பதற்கு இடமேது ! பூச்சிகள் – வந்தன. கொசுக்கள் வந்தன – வராதவைகளில் முக்கியமான ஒன்று காற்று! எட்டு பேர் – வியர்வையோ கொட்டுகிறது. சட்டையைக் கழற்றினால் கொசுவோ துளைக்கிறது! மூலையில் உட்கார்ந்து தூங்கினர் மூவர் – வேணு ரத்தினம் எத்திராஜ்! ஆபாசமாயிருந்த பகுதியில் காலை மட்டும் நீட்டிக் கொண்டு உடலைப் புழுப்போல சுருட்டிக்கொண்டார் சத்தி – அவர் கால்புறத்திலே தலையை வைத்து வளைந்து கிடந்தார் கஸ்தூரி கலங்கிய கண்களுடனே ராமசுப்பையா என்னைப் பார்த்து தன் மடியில் சாய்ந்து கொள்ளுங்கள் என்றார். முயற்சித்தேன் முடியவில்லை பிறகு ஒரு வழி கண்டுபிடித்தேன். காற்றும் லேசாக வரும்; உடம்பையும் சுருட்டாமல் இருக்கலாம்; என்ற எண்ணமுடன் சிறைக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டே சிறிது நேரம் தூங்கினேன். இரவு 2 மணி இருக்கலாம் – சரியாகத்தான் நேரம் தெரியமுடியாதே – டிப்டி சூப்பரெண்ட் வந்தார். “ஏன் நிற்கிறீர்கள் தூங்க வில்லையா?” என்றார்.”பரவாயில்லை” என்றேன். போய்விட்டார்.
எப்படியோ வாழ்க்கையிலே அதுவரையில் தொட்டறியாத கஷ்டத்தை அந்த இரவு வேளையில் அரியலூர் சிறையில் அனுபவித்தோம். படாதபாடுபட்டு இரவை நகர்த்தினோம்.
காலையிலே அரிசிக் கஞ்சி கொடுத்தார்கள். குடலைக் காயவிடாமல் பார்த்துக் கொண்டோம். மறுபடியும் அடைத்துவிட்டார்கள். அன்றைய தினம் ஜூலை 17 தேதி! சென்னையிலே ஆச்சாரியார் வீட்டு மறியலிலே அருப்புக்கோட்டை தந்த வீரர் தோழர் எம். எஸ். ராமசாமி அவர்கள் தலைமையில் முப்பதுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள், கல்லக்குடியிலே தாக்குண்டு வைத்திய சாலையிலிருந்த கண்ணதாசனும் கைது செய்யப்பட்டார்.
வெளியிலே என்ன நடக்கிறதோ; தெரியவில்லையே என்ற ஆவலுடன் அடைந்து கிடந்தோம் கூண்டுக்குள் !
பிற்பகல் உணவுக்காக திறந்துவிட்டார்கள்- எங்களைத் திறப்பதற்காக வார்டர் கொஞ்ச தூரத்தில் வருவது எங்களுக்கு முன்பே தெரிந்துவிடும். அவர் கையிலுள்ள சாவிக் கொத்திலிருந்து எழும்பும் ஒலியைக் கேட்டதும் ராமசுப்பையா சொல்லுவார்; திறக்கப்போகிறார்கள் என்று! – பிற்பகல் அங்குள்ள மற்ற கைதிகளை நாங்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.
நாலைந்து – வயதான தாய்மார்கள் சிறையிலிருந்தார்கள். சாராய வழக்கிலே கைது செய்யப்பட்டவர்கள். சுமார் இருபத்தி ஐந்து வயதுள்ள ஒரு வாலிபனைக் கண்டோம். கள்ளக் காதலின் காரணமாக காதலியின் கணவனைக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவன். கட்டுமஸ்தான தேகம் படைத்த இளைஞன், அவனுடைய காதலியும் அங்கே வேறு கூண்டில் அடைபட்டிருந்தாள். அவள் மீது அவன் கொண்ட பாசமும் – அவன் மீது அவள் கொண்ட நேசமும் – கணவனைக் கொல்வது என்ற மோசத்திலே கொண்டு போய்விட்டதாக வழக்கு!
அந்த இளைஞன் சொன்னான்; தானும் அவளும் ஆசைக் காதலர்கள் என்று! அவனுக்கோ வயது இருபத்தைந்து இருக்கும். அவன் ஆசை ஜோடிக்கோ – அறுபதுக்குள் தான் இருக்கும் ! புனிதமான காதல் ! பொருத்தமான காதல்! “காதலுக்கு கண்ணில்லை என்கிற போது வயது மாத்திரம் எதற்காக? ” என்ற கேள்வியின் சரியான பதிலாக நின்றார்கள் அந்த இளங்காதலர்கள் இல்லை கிழக் காதலர்கள் – அதுவுமில்லை – பழுப்புத் தளிர் காதலர்கள்!
சாராயத் தொழிலை குடிசைத் தொழிலாகக் கொண்ட இன்னும் சில ஆண் மக்களும் அங்கே கைதிகளாயிருந்தார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகல் உணவு வந்துவிட்டது. அருமையான சோளக்களி. சோளத்தின் மாவிலே செய்யப்பட்ட சுவையான உணவு(?) அதன் தளையிலே கொஞ்சம் குழம்பு என்று சொல்லப்பட்ட ஏற்பாட்டையும் ஊற்றித் தொலைத்தார்கள், எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்ட லிங்கப்பெருமாள் போல சோளக்களி நின்று கொண்டிருந்தது சட்டியிலே! “சோறு எதுவும் கிடையாதோ? ” என்றோம். மாலையிலே தான் மஞ்சள் சோறு என்றார்கள். மோர் உண்டு இப்போது என்றார்கள். கொடுங்கள், கொடுங்கள் என்று குவளையை நீட்டினோம். மோர் சாப்பிட்டதோடு பிற்பகல் உணவு முடிந்தது. சோளக்களியை யார் தொடமுடியும். அதுதான் தொட்டாலும் அசையாத நிலைமையில் இருந்ததே!
மீண்டும் பூட்டினார்கள். மாலை 3 மணிக்கு கொஞ்சம் மணிலாக் கொட்டையைக் கொடுத்து எல்லோரும் சாப்பிடுங்கள் என்று அன்பு பொழிந்தார்கள். பிறகு மாஜிஸ்டிரேட் வந்தார். ‘இன்றைய தினமே உங்கள் விசாரணை இருக்கிறது’ என்று கூறிவிட்டுப் போனார்.
சிறிது நேரத்தில் எங்களை அழைத்தார்கள். சென்றோம்.
நீதி மன்றம்! அங்கே நாங்கள் முதலில் ஐவர் விசாரிக்கப்பட்டோம்.
பின்னர் ராமசுப்பையாவும் முப்பது தோழர்களும் விசாரிக்கப்பட்டனர்.
டால்மியாபுரம் பெயரை மாற்றவேண்டுமென்று வரி கொடுக்கும் பிரஜைகளின் சார்பாகக் கிளர்ச்சி நடத்தியது குற்றமாம்!
கல்லக்குடி எனும் தமிழ்ப் பெயரை விரும்பியது தகாத செயலாம்!
என்ன சட்டமோ எந்த செக்ஷனோ – அப்படிச் சொல்லுகிறதாம்!
அப்பட்டமாக அப்படிச் சொல்லாவிட்டாலும் – உண்மையை மறைத்து – சட்டத்தின் துணையால் வழக்கு நடத்துகிறது ஆட்சி பீடம்! ‘நீங்கள் ஏன் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது?’ என்று கேட்பதற்கு சட்டத்திற்கு நாக்கில்லை. இருந்த நாக்கும் அறுக்கப்பட்டு விட்டது இங்கே!
“நீங்கள் எப்படி கோரிக்கையனுப்பலாம் ? ” என்ற பொருள்படும் கேள்வியை ஜாடைக்குறிகளால் – ஊமை பாஷைகளால் – கேட்டிடும் திறமை சட்டத்திற்கு இருக்கிறது!
ஆகவேதான் நாங்கள் ஈடுபட்ட அறப்போருக்கு களங்கம் கற்பித்தது.
“நீங்கள் குற்றம் செய்திருக்கிறீர்கள் அல்லவா?”
“குற்றமல்ல – குறிக்கோளை நிறைவேற்ற கையாண்ட அமைதியான முறைதானிது!”
“உங்கள் செயல் குற்றமாகத்தான் கருதப்படுகிறது.”
“சட்டப்படி யிருக்கலாம் – நியாயப்படி அல்ல”
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கத் தயாராகி விட்டது. வெளியிலே நூற்றுக்கணக்கான மக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றனர்; மழைக்கிடையிலேயுங்கூட!
ராமசுப்பையாயும் முப்பது தோழர்களும் இரண்டு மாதம் கடுங்காவல் அனுபவிக்கவேண்டும். முப்பத்தி ஐந்து ரூபாய் அபராதம் – கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை ! மொத்தம் மூன்று மாத தண்டனை.
சட்டம் கொட்டிவிட்டது அவர்களை !
எங்கள் பக்கம் திரும்பியது சட்டம் – ஐந்து மாதக் கடுங்காவல் – முப்பத்தி ஐந்து ரூபாய் அபராதம் – கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை – ஆக மொத்தம் ஆறு மாதத் தண்டனை.
ஒரே குற்றம் இரண்டுவித தண்டனை!
போராட்டத் தலைவன் என்ற முறையில் எனக்கும் – என்னுடன் சேர்ந்த நால்வருக்கும் ஆறு மாதம்!
அடுத்த படைவரிசை என்ற முறையில் மற்றவர்களுக்கு மூன்று மாதம்!
அதுவும் தவறு – அவர்களிலே ஆறுபேர் முதல் படைவரிசையிலே கைது செய்யப்பட்டவர்கள்.
எப்படியோ; சட்டம் நெளிந்து வளைந்து – ஆறு மாதம் – மூன்று மாதம் என்று பரிசுகளை அளித்து மகிழ்ந்தது!
17ந் தேதி மாலை 6-30 மணி சுமாருக்கு தண்டனை பெற்றோம். தமிழர் மானத்துக்காகப் போராடியதற்கு பரிசு பெற்றோம்!
“என்ன சார்; அவர்களுக்கு மூணுமாதம் நமக்கு ஆறு மாதம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் சத்தி.
“ஆமாம் நமக்கு ஆறுமாதம் தான்” என்றேன்.
“ஏன் அப்படி? ” என்றார் வேணுகோபால்.
“அதற்கு மேல் தண்டனை தர அரியலூர் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை!” என்றேன்.
தீர்ப்பு கேள்வியுற்ற அரியலூர் மக்கள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு முன்பு திரளாக நின்றிருந்தனர். கூட்டம் கலைந்தபிறகு எங்களை அனுப்பவேண்டும் என்ற திட்டத்துடனோ – என்னவோ – கோர்ட் வாசலிலேயே நல்ல இருட்டில் எங்களை உட்கார வைத்துவிட்டனர்.
ஆகாகா! ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேனே! – மாலையில் எங்களுக்கு மஞ்சள் சோறு போட்டுத்தான் பிறகு தீர்ப்பு கூறினார்கள்.
ஆறுமாதமென்ன – ஆறுவருடமே போடட்டும்- அரியலூர் நரகத்திலிருந்து – மன்னிக்கவும், நகரத்திலிருந்து வேறு சிறைச்சாலைக்கு அனுப்பப்போகிறார்களே என்ற மகிழ்ச்சி எங்கள் எல்லோருக்கும்! மூன்று மாத தண்டனை பெற்றவர்களுக்கெல்லாம் முகம் சுருங்கிவிட்டது! வாடிவிட்டது – வதங்கிவிட்டது – காரணம்; எங்களுக்கு ஆறுமாதம் கிடைத்து விட்டதாம்; அந்தப் பொறாமையால் தான்- வேறென்ன!
“வாழ்க எம் நாடு!” என்று ஒலித்த குற்றத்திற்கு நீதிமன்றம் தந்த பரிசு கண்டு கண்ணீர் சொட்டுவது போல் வானம் மழையைக் கொட்டிற்று.
இடி-மின்னல் – பெருமழை !
இரவு 8 மணி சுமாருக்கு எங்களில் இருபத்தைந்து பேர்களை ஏற்றிக்கொண்டு போலீஸ் வண்டி புறப்பட்டது. மிச்சம் பதினோறு தோழர்களுக்கு வண்டியில்லாததால் “பிடியுங்கள் சாபம் ! இன்னும் ஐந்தாறு நாட்கள் அரியலூர் ஜெயிலில் இருங்கள்” என்று அவர்களை மட்டும் அங்கேயே வைத்துக்கொண்டனர்.
நாங்கள் இருந்த வண்டி இருட்டையும் – இடையிடையே தோன்றிய மின்னலையும் – மழையையும் கிழித்துக் கொண்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டது.
வெளியிலே எவ்வளவு மழை பொழிகிறது என்பதை எங்களால் கணக்கிட முடிந்தது எப்படியென்கிறீர்களா – பெய்த மழை முழுதும் எங்கள் தலையிலே தானே பெய்தது.
அரியலூருக்கும் திருச்சிக்கும் இடையே உள்ள சாலை இருக்கிறதே – அடடா தார்ரோடுதான்!
(தார் என்றால் வண்டிக்காரர்கள் மாடுகளைக் குத்த உபயோகிப்பார்களே; அந்தத் தார் எனப் பொருள் கொள்க வாழைத்தார் எனக் கொள்ளினும் கொள்க)
மேலே வானத்திலே இடி! கார் போகும் வேகத்திலே இங்கே ஒருவர் மேல் ஒருவர் இடி!
ஒரு தோழர் பாடினார் அவரையறியாமலே “பிர்க்காக்கள்” உருண்டன – அவ்வளவு அசைவற்ற நிம்மதியான கார் சவாரி!
எவ்வளவு தொல்லைகள் இருந்தால் என்ன; அந்த அரியலூர் காராக்கிரகத்தையும் கக்கூசையும் தலைமுழுகி விட்டு வந்தோமே என்ற ஆறுதல் எல்லாத் தோழர்களுக்கும் ஏற்பட்டது.
வானம் உறுமிக்கொண்டேயிருந்தது. சூடேறியிருந்த எங்கள் உடலிலே மழைத்துளி பன்னீர்போல கொட்டிக் கொண்டேயிருந்தது.
மனழ – திராவிடத்தின் வளப்பத்தைச் சொல்லிற்று! இடி திராவிடரின் மனக்குமுறலுக்கு அடையாளமாயிருந்தது!
மின்னல் – இன்னல் புரியும் ஆட்சி இப்படித்தான் தோன்றி மறையும் என உணர்த்திற்று!
இரவு ஒரு மணிக்கு திருச்சி வந்துசேர்ந்தோம். மழை நின்றபாடில்லை. திருச்சியின் தெருவெல்லாம் மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. மலைக்கோட்டையின் உச்சியிலே பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நகர் முழுதும் பூரண அமைதி நிலவிக்கொண்டிருந்தது. நடுநிசியிலே – நகர் அடங்கிய நேரத்திலே நாங்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் காட்சியை சித்தரிக்க இயலாது தான். நனைந்து போன ஆடை – நடுங்கும் உடல் ஆனால் தெளிந்த உள்ளம் – இவைகளோடு எங்கள் பயணத்தின் கடைசிப் பகுதியை முடித்தோம். திராவிட நாட்டுப் போராட்டப் பயணத்திற்கு கடைசிப் பகுதியல்ல; முதல் பகுதி!
அந்த முதல் பகுதியிலே நாமும் நடைபோட்டோம் என்ற எக்களிப்புடன் திருச்சி வீதிகளைக் கடந்தோம். சென்ற வழியிலே திராவிடப்பண்ணை முத்துவின் வீடு இருந்தது. அங்கே இறங்கி விசாரிக்காமல் சென்றது கிடையாது எப்போதும் ! இப்போது நிறுத்தமுடியுமா காரை ! அதை நினைத்தோம் “நீங்கள் கைதிகள்” என்ற உணர்வு வாயை மூடியது!
ஈரத்தின் கனத்தையும் தூக்கிக்கொண்டு அதோ எங்கள் லட்சியக் கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன. அவை காட்டிய வழியிலே நாங்களும் பயணம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மலைக்கோட்டையின் பச்சை விளக்கு மறைந்து விட்டது.
சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். உயர்ந்த பலமான மதில்களையும் – கோட்டைபோன்ற முகப்பையுமுடைய திருச்சி மத்திய சிறையின் வாயிலிலே போலிஸ் வண்டி நின்றது. நாங்கள் இறங்கினோம்.
அகாலமாகி விட்டதால் – மறுநாள் காலையில் தான் எங்களை விழுங்க முடியும் என்று கூறிவிட்டது சிறை அதிகாரம்.
“சரி – இதோ இந்த இடத்தில் படுங்கள்” என்று சிறைக்கு வெளியேயுள்ள ஒரு மண்டபத்தைக் காட்டினர். அதில் யோகாசனங்களும் – மாயவித்தைகளும் கற்றவர்கள் தான் படுக்கலாம். மழைத் தண்ணீர் கணுக்கால் அளவு தேங்கியிருந்தது. நீர்மேல் படுக்கும் பயிற்சி எங்களுக்கு கிடையாது. ஆகையால் தயங்கி நின்றோம். கால்வலி எடுக்கும் வரையில் நின்றோம்.
பிறகு கருணை பிறந்தது – “சரி இங்கே படுங்கள்” என்று இண்டர்வியூ பார்க்குமிடத்திற்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைக் காட்டினார்கள். அங்குபோய் உட்கார்ந்தோம். மழைச்சாரல் நிற்கவில்லை.
குளிரும் கோடி கோடித் தேளென மாறிக் கொட்டியது. கண்ணைத் திறக்கமுடியாத மின்னல்! ‘புளூரசி’ நோயினால் பீடிக்கப்பட்டவன் நான் அதற்குக் குளிர் ஆகாது – தொலைந்து போன நோய் – மீண்டும் தொடர்ந்து விடுமோ இந்தக் குளிரால் எனப் பயந்தேன்; அவ்வளவு குளிர் – சத்தி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்- அந்தக் கதகதப்பிலே கொஞ்சம் கண்ணயர்ந்தேன். கைகளைத் தேய்த்துக்கொண்டு சூடு உண்டாக்கிய படியும் – முழங்காலுக்கிடையே கைகளைப் பொத்திக்கொண்டு சுருண்ட நிலையிலும் – எல்லா தோழர்களும் அந்த பயங்க இரவை மிகக் கஷ்டப்பட்டு துரத்திக் கொண்டிருந்தனர்.
ஆரியத் தலைவர் ஆச்சாரியார் அயர்ந்து தூங்கிடும் வேளை!
அவருக்குத் தலைவர் நேரு அனந்த சயனத்திலிருக்கும் நேரம்!
அப்போது நாங்கள் – நாட்டின் விடுதலைப் படையினர் – குளிரின் பலமானப் பிடியிலே சிக்கி மழைச் சாரலில் மண் நிறைந்த தரையில் – சீரழிந்து கொண்டிருந்தோம்.
கதிர் வந்தது – கதவு திறந்தது:
வா! வா! என்று வாழ்த்துபாடி அழைத்த கதிரவன் வந்தான். ஜூலை 18ந் தேதி பிறந்தது. சிறைச்சாலையின் முன்னுள்ள சிறிய கதவு திறந்தது. இரவெல்லாம் குளிரால் வாடிய எங்களுக்கு ஒரு சிறு கோப்பையில் அரைக் கோப்பை தேநீர்- யாராவது தரமாட்டார்களா என்ற ஆசை பிறந்தது – ஆவல் துடித்தது – 15ந் தேதி காலையிலே – அதுவும் அவசரத்திலே நல்ல சாப்பாடு சாப்பிட்டவர்கள் மூன்று நாட்கள் வயிறு காலி! பசியோ கொல்லுகிறது – நாவோ காய்ந்துவிட்டது.
“ம்! உள்ளே செல்க” என்ற உத்திரவும் பிறந்து விட்டது. ஒவ்வொருவராக உள்ளே போய்க் கொண்டிருக் கிறார்கள். நாலைந்து பேர் வெளியே மிச்சம். அந்த நேரத்தில் ஒரு புதையல் கண்டெடுத்தோம். “சார்… சார்.. கொஞ்சம் நில்லுங்கள்” என்றபடி ஒரு தோழர் எங்களை நோக்கி ஓடிவந்தார். பார்த்தோம். ஒரு கோப்பைத் தேநீர்! ஆமாம் – பாலைவனத்திலே பசுந்தரை! ஆளுக்குக் கொஞ்சம் சுடச்சுட சாப்பிட்டோம். நாக்கு வெந்துபோனது கூட பிறகுதான் தெரிந்தது. அந்த தேநீர் தந்த தோழருக்கு எப்படித்தான் வாழ்த்து கூறுவது என்று புரியவில்லை!
சிறிய வாயில் எங்களை அழைத்தது. வெளியுலகத்தை இனி ஆறுமாதத்திற்குப் பிறகுதான் பார்க்கமுடியும் என்பதால் ஆசை தீர ஒருமுறை பார்த்தோம். பிறகு அடியெடுத்து வைத்தோம், உள்ளே! எங்களை உள்ளே தள்ளியதும் சிறையின் அந்த சிறிய உதடுகள் மூடிக்கொண்டன.
“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”
பாரதி தாசனின் “அந்த இலட்சிய வரிகள் இதயத்தில் புதிய இன்பம் இசைத்தன.
ஆறு மாதம் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தோம் என்றார் தோழர் வாணன். அவரும் நண்பர் செழியனும் எம்மைப் பார்க்க வந்திருந்தபோதுதான் அப்படிச் சொன்னார்கள்.
எத்தனையோ அதிர்ச்சி தரும் செய்திகளை சந்தித்திருக்கிறது திராவிடர் இயக்கம்.
வேலாயுதத்தை பட்டப்பகலில் கொலை செய்தார்கள்.
தாளமுத்து நடராசனை சிறையில் பிணமாக்கினார்கள்.
நெல்லிக்குப்பத்தில் இளைஞன் மஜிதை குத்திக் கொன்றார்கள்.
வடசென்னை பாண்டியனின் உயிரைக் குடித்தார்கள்.
இவ்வளவும் காந்தீயத்தின் பெயரால் நடைபெற்ற கொலை விழாக்கள்.
இந்தக் காட்டுமிராண்டித் தன்மைக்கு ஒரு முடிவு ஏற்படுத்த கழகம், தியாகத் தீயில் குதித்திட வேண்டிய அவசியம் – அவசரம் – முறை – துறைகள் பற்றியெல்லாம் செழியனும், வாணனும் நாங்களும் சேர்ந்து பேசிய எண்ணங்களை சென்னை கடற்கரை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறது. செழியன் வாணன் இயக்கத்திற்கு அமைந்த இரு உலைக்களங்கள் போல! அவர்கள் சொன்னார்கள் அதிர்ச்சியடைந்தோம் என்று ! பயத்தால் அல்ல! பாசத்தால்! அனைவரும் எதிர்பார்த்த புதிய அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது என்கிறபோது அதிர்ச்சியினிடையே எழுகிற ஆனந்தமிருக்கிறதே – அது எல்லையற்றது. அத்தகைய ஆனந்தம் எம்மை உந்தித் தள்ள சிறைக்கோட்டத்திற்குள் பிரவேசித்தோம்.
எங்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள எண்கள் தரப்பட்டன். ஆமாம் – எங்கள் வேட்டிகளிலே எழுதப் பட்டன.
வீட்லே என்னுடைய எண் மூன்று!
மூன்றாவது பிள்ளை நான்.
“தவமிருந்து பெற்ற பிள்ளை இப்படி சூனாமானாவாகி விட்டதே” யென்று சுற்றத்தார்சொல்லுவார்கள், முன்பெல்லாம்!
பள்ளிக்கூடத்திலே என்னுடைய எண் மறந்து விட்டேன். S. S. L. C. தேர்விலே என்னுடைய எண் – தோல்வியடைந்த எண் – சொன்னால் அந்த எண்ணுக்கு அவமானம் ஆகையால் சொல்ல வேண்டாம்!
சிறைச்சாலையிலே எனக்கு மாட்டிவிடப்பட்ட சிங்காரப் பதக்கத்தின் எண் 5779!
இன்னும் எத்தனை எண்களை சந்திக்கவேண்டுமோ; ஆனாலும் அந்த முதல் முறையாகப் பெற்ற எண்ணை மறந்துவிட முடியாது.
C. P. என்று சொல்லப்படும் CLOSE PRISON க்கு கொண்டு செல்லப்பட்டோம். முன்னூறுக்கு மேற்பட்ட நமது தோழர்கள் “வருக ! வருக !” என அழைத்தார்கள். 1865ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த சிறைச்சாலையில் அப்போது மூட்டிவிடப்பட்ட அடுப்பு இன்னும் அணையவில்லையாம் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்கிறது.
வெள்ளைக்காரன் காலத்தில் ஆயிரம்பேருக்கு அதிகமாக கைதிகள் அடைபட்டதில்லையாம் அந்த சிறையில்!
நமது காருண்ய காங்கிரஸ் சர்க்கார் வந்தபிறகு மூவாயிரம் பேருக்கு குறைந்ததே கிடையாதாம்; கைதிகளின் தொகை.
ஒரு சிறு கிராமத்துக்குள் நுழைந்தது போலவேயிருந்தது எங்களுக்கு.
சலவை செய்யப்படும் இடம் உண்டு. தலையலங்காரம், முக அலங்காரம் செய்வோர் உண்டு. வைத்திய சாலை உண்டு.தொழிற்சாலைகள் உண்டு. பாடபோதனை இல்லாவிட்டாலும் பள்ளிக்கூடம் உண்டு. வாசகசாலை உண்டு. பள்ளிக்கூடம் – மருத்துவமனை இரண்டைத் தவிர – பிற எல்லா தொழில்களையும் அங்குள்ள கைதிகளே நடத்துகிறார்கள். கைதிகளுக்காக கைதிகளால் நடத்தப்படும் ஒரு சின்னஞ்சிறிய ராஜ்யத்துக்குள் பிரவேசித்திருப்பதாகவே நாங்கள் உணர்ந்தோம்.
உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தோம். நீலக் கிண்ணம் கவிழ்த்ததுபோல வானம். சுற்றிலும் பெரிய மதிற்சுவர்கள் கைதி என்பதைச் சுட்டிக்காட்ட! உள்ளே வேப்ப மரங்கள் – சிறைவாழ்வின் சுவையை உணர்த்திட!
மதிற்சுவருக்கு வெளியே பொன்மலை – பொறுப்புகள் உனக்கு அதுபோலத்தான் காத்திருக்கின்றன வெளியுலகத்தில் என்பதை எடுத்துச்சொல்ல!
நாட்டுப் பிரிவினைப் போரில் சிவப்பாக்கப்பட்ட இலட்சியச் சாலையில் எங்கள் கால்களும் பதிந்திடுகின்றன என்ற அடங்காத பூரிப்போடு – உள்ளிருந்து அழைத்த தோழர்களுடன் ஐக்யமானோம்.
உள்ளே வந்ததும் நாங்கள் கண்ட முதல் காட்சி என்ன தெரியுமா? நமது தோழர்கள் ‘கஞ்சிப்போர்’ நடத்திக் கொண்டிருந்தார்கள். ஜெயிலர் நிற்கிறார். அவரைச் சுற்றி தோழர்கள் நிற்கிறார்கள்.
மன்னார்குடி நாராயணசாமியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கழகத்திற்குக் கிடைத்த ‘கிங்காங்’ களில் அவர் ஒருவர். முறைப்படி சிலம்பம் முதலிய கலைகளை நன்கு பயின்றவர். “சினிமாவை விடு! சிலம்பை எடு!” என்று இப்போது கூச்சல் போடு கிறார்களே; அதற்குப் பதில் சொல்வது போல – சினிமாவும் பார்த்து – சிலம்புப் பயிற்சியும் – மற்ற உடற்பயிற்சிகளும் பெற்று கழகத்தின் பலமான அரணாக இருப்பவர் மன்னைப் பகுதியில்! உடல் வளத்திற்கேற்ற உள்ள வளமும் பெற்றவர். அமைதியெனும் பண்பிலிருந்து அணுவும் நழுவாதவர். அவருடைய தலைமையிலே தான் ஜெயிலரைச் சுற்றித் தோழர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஜெயிலர் அவர்களுக்கு சமாதானம் கூறுகிறார்.
“அரசாங்க உத்திரவை எம்மால் மாற்ற முடியாது. காலையில் கஞ்சி தரும்படியாகத்தான் எங்களுக்கு சட்டமிருக்கிறது – நானென்ன செய்வது”
இது ஜெயிலர்!
“அரசியல் கைதிகளுக்கு தனிச்சலுகை கேட்டவர்கள் – இப்போது ஆளவந்தவுடன் அதை மறுக்கலாமா?”
இது தோழர்கள்!
ஜெயிலர் சிரிப்பைத்தான் பதிலாகத் தரமுடிந்தது
நான் குறுக்கிட்டேன் – நாராயணசாமியும் என்னுடன் ஒத்துழைத்தார்.
“அரசாங்கத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாதென்றுதானே அறப்போர் துவங்கியிருக்கிறோம் ஆலகால மரத்தையே ஆணிவேரோடு பிடுங்கும் ஆரம்பப் போராட்டத்தில் குதித்திருக்கிற நாம், இந்தச் சிறுசிறு கிளைகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது – கஞ்சியை வாங்கிக் கொள்ளுங்கள்” என்றேன்.
தோழர்கள் உடனே பறந்தனர் கையினில் தட்டுடன்!
அந்த கண்ணியம் நிறைந்த கட்டுப்பாடு கண்டு ஜெயிலர் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
புதிதாகப் போன எங்களுக்கு எங்கே தட்டு என்று கேட்டோம்!
உங்களுக்குக் கஞ்சித் தட்டு என்றார்கள். புரியவில்லை முதலில்!
நாங்கள் வருவது முன்பே தெரிவிக்கப்படாததால் சாலை ஆகாரம் எங்களுக்குத் தயார் செய்யப்பட வில்லையாம்! “அரியலூர்” எங்களுக்குக் கடைசியாகப் பொழிந்த கருணை அது போலும் !
15ம் தேதி காலையிலே சாப்பிட்டவர்கள் 18ந் தேதி பிற்பகல்தான் ஒரு பட்டை வெள்ளைச் சோற்றைக் கண்டோம்.
”அச்சடித்த சோறே ! அவுன்ஸ் குழம்பே! வேப்ப மரத்து நிழலே! வெல்லம் போட்ட கடலையே ! வெண்ணை எடுக்கா மோரே!”
இது அந்த ராஜ்யத்தின் நாட்டுப் பாடல்! அங்கே நாங்களும் பிரஜைகளானோம். முன்னூறு பேராயிருந்தவர்கள் இரண்டொரு நாட்களில் ஐநூறைத் தொடுமளவுக்கு நானூறைத் தாண்டிய தொகையினரானோம்.
நாங்கள் அங்கே ஒரு புதிய ராஜ்யத்தை அமைத்து விட்டோம். அந்த ராஜ்யம் இரண்டுமாத காலம் மிக அற்புதமாக நடைபெற்றது. அதற்குப் பிறகு நூறாகி – ஐம்பதாகி – ஐந்தாக மாறிவிட்டோம்.
இரண்டு மாதம் நடைபெற்ற எமது ராஜ்ய நிர்வாகத்தை சொல்லாமலிருக்க முடியவில்லை. முதலில் ராஜ்ய அமைப்பைக் கூறுகிறேன்.
C. P. பிளாக் எனப்படும் நாங்கள் அடைபட்டிருந்த இடம் நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நூறு பேருக்குமேல் அடைக்கப்பட்டிருந்தோம்.
நான்கு பகுதிகளும் – தமிழ் – தெலுங்கு – மலையாளம் – கன்னடம் என்ற திராவிடக் கூட்டாட்சியை எங்களுக்கு உணர்த்தியது.
வேறு பிளாக்கிலிருந்து கைதிகள் யாராவது வரவேண்டுமானால் அனுமதியின்றி வரமுடியாது – அது போல இந்த பிளாக்கிலிருந்தும் போகமுடியாது – நமது திராவிட நாட்டிலும் இப்படித்தான் அனுமதி முறை அமைக்கப்படும். அங்கே எல்லோருக்கும் ஒரேவிதமான உணவு. நமது திராவிட நாட்டிலும் அளவு – சுவை – தரம் – ஆகியவை இப்படி இல்லாவிட்டாலும் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்படியான வசதியிருக்கும். பட்டினி கிடப்பது அங்கே பெரிய குற்றம். நமது திராவிடத்திலும் யாரும் பட்டினியால் மாளமுடியாது. சிறைச்சாலையில் “மாதிரி திராவிட நாட்டில்” இருந்தவர்கள் எல்லாம் அடிமைகள் – கைதிகள்! உண்மை திராவிட நாட்டில் அடிமைகள் இருக்கமாட்டார்கள் சிறைச்சாலையில் அடிமைத்தனமிருந்ததற்குக் காரணம் – ஜெயில் அதிகாரம் என்ற மத்திய சர்க்கார் இருந்தது !
நம்முடைய திராவிட நாடு இந்திய மத்ய சர்க்காரின் கீழ் இருக்காது! ஆகவே அடிமைத்தனமும் இருக்காது!
சிறையிலே அந்த மத்யதி சர்க்கார் தேவை!
காரணம் அது சிறை பூமி !
திராவிடத்திற்கு தேவையில்லை வடநாட்டு மத்திய சர்க்கார்!
காரணம் இது சுதந்திர பூமி!
திருச்சி சிறையில் எங்கள் திராவிட ராஜ்யம் ஆரம்ப மாகிவிட்டது. அந்த ஆரம்ப வேலைகளில் தோழர் ராமதாஸ் என்பவர் என்னுடனிருந்து துணைபுரிந்தார்.
ஒவ்வொரு பிளாக் -அதாவது சராசரி நூறுபேருக்கு ஒரு துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாலு துணைத் தலைவர்களுக்கும் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக் கப்பட்டார். நானூறு பேரும் வசதியாகக் குளிப்பதற்கும், குடிப்பதற்குமான தண்ணீரைப் பெற “ஜல ஸ்தாபன மந்திரி” ஒருவர் நியமிக்கப்பட்டார். உணவு மந்திரி ஒருவர். கடிதப் போக்குவரத்து உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்து ஜெயில் அதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக்கொள்ள ஒரு உள்நாட்டிலாகா மந்திரியும் உண்டு. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுதல், தனி உணவுகளை நோயுள்ளவர்களுக்குப் பெற்றுத் தருதல் போன்றவைகளுக்கு சுகாதார மந்திரி யொருவர். மக்கள் மன்றம் அமைத்தல் – கூட்டுதல் – கலைத்தல் – தலைமை நிலையத்திலிருந்து – இல்லை ஆட்சி பீடத்திலிருந்து வெளியாகும் அறிக்கைகளை உடனுக்குடன் அறிவித்தல் – முதல்வர் எனப்படும் தலைவருக்கு ராஜ்ய நிலைமையை எடுத்துரைத்தல் – ஆகிய காரியங்களுக்காக ஒரு பிரதம செயலாளர் உண்டு.
ஒவ்வொரு பிளாக் தலைவர்களுக்கும் ஒரு துணைத் தலைவர் உண்டு.
பிளாக் தலைவர்கள் ஒவ்வொருவரும் நூறுபேரைக் கட்டிக் காத்தல். அவர்களுக்கு ஆவன செய்தல். இது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டும்.
மக்கள் மன்றம் பேச்சு மன்றம் என்றும் அழைக்கப்படும். அது நாள்தோறும் கூடும். மன்றத்தின் ஒவ்வொரு அலுவலாளரும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களே தான்! மன்றத்தின் அனுமதியோடு பொறுப் பேற்று பணியாற்றுகிறவர்கள்.
அவர்கள் வருமாறு:-
தலைவர் – கருணாநிதி
துணைத் தலைவர் – மன்னை நாராயணசாமி
முதல் பிளாக் தலைவர் – பேராவூரணி அடைக்கலம்
துணை – வடிவேலு
இரண்டாம் பிளாக் தலைவர்- தஞ்சை பட்டு
துணை – பக்கிரிசாமி கிருஷ்ணன்
மூன்றாம் பிளாக் தலைவர் – மாயவரம் கிட்டப்பா
துணை – வள்ளுவதாசன்
நாலாம் பிளாக் தலைவர் – ராமசுப்பையா
துணை – கோபால்சாமி
உணவு மந்திரி – சாம சுப்பையா
உள்நாட்டிலாகா – முல்லை சந்தி
சுகாதார மந்திரி – புகாரி சாகிப்
“ஜல ஸ்தாபன’ மந்திரி – அய்வநல்லூர் வேலு
பிரதம செயலாளர் – ஜெயங்கொண்டம் வேணு
மேற்கண்டவாறு இலாக்காக்கள் பிரிக்கப்பட்டு எல்லோரும் பதவியேற்றனர். இதில் மூன்றாம் பிளாக் தலைவராக தோழர் மணி நான்கு நாட்கள் பணியாற்றி – பிறகு வழக்கு சம்பந்தமாக நாகை சென்றுவிட்டார்.
இலாகா சம்பந்தப்பட்டவர்கள் விபரம்:-
தலைவர்:
கருணாநிதி – இவர் திராவிட முன்னேற்றக் கழகத்துப் பிரசாரகர், இந்த நூலின் ஆசிரியர். வயது ஏறத்தாழ முப்பது. தொண்டனாக இருந்தே தொண்டு செய்வதில் விருப்பமுள்ளவர். இதிலிருந்தே கொஞ்சம் தற்புகழ்ச்சிக்காரர் என்பதும் உள்ளங்கனி – நெல்லிக்கை போல் விளங்கும்!
துணைத் தலைவர்:-
நரராயணசாமி – மன்னார்குடியைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி முன்பே குறிப்பிடப் பட்டுள்ளது. இரும்பு உடலும் – இளகும் நெஞ்சும் பெற்றவர்.
முதல் பிளாக் தலைவர் :-
அடைக்கலம் – பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நமக்கோர் படைக்கலம். பேராவூரணி குழந்தையென்று ஒரு பெரிய ஆள் இருக்கிறார். அவருடைய பாசறையிலே தயாரான வாட்களில் ஒன்றுதான் அடைக்கலம். பழங்காலத் திராவிட மக்களின் வீரத்தையும் வேகத்தையும் காணவேண்டுமானால் பேராவூரணி செல்லலாம். அங்குள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் செய்துகாட்டும் உடற்பயிற்சி – சிலம்பக் கலைகளைக் காணலாம். செயலாற்றும் சிங்கம் அடைக்கலத்தின் ஆர்வமிக்க உழைப்பையும் அன்பர் வடிவேலுவின் அனுபவ சதனைகளையும் கண்டு ஊக்கம் பெறலாம்.
இரண்டாம் பிளாக் தலைவர்:–
தஞ்சை பட்டு! சிட்டாகப் பறந்து செயலாற்றும் தஞ்சை செயலாளர். பயந்த சுபாவமும் – பணிபுரியும் ஆர்வமும் நிரம்பப் பெற்றவர். அடக்கம் – அமைதி – கண்ணியம் இவைகளைக் கட்டிக்காக்கும் பண்பு – கொண்டவர்.
மூன்றாம் பிளாக் தலைவர் :-
மாயவரம் கிட்டப்பா! முட்டவரும் பகைவரை எட்டப்பா என்று சொல்லும் துணிவும் – கட்டுப்பாட்டுக்குப் பணிந்து நடக்கும் தன்மையும் கொண்டவர். மாயவரம் கழகத்து செயல்வீரர். இளைஞர். எழுச்சிக்காளை இன உணர்ச்சி முரசு!
நாலாம் பிளாக் தலைவர் :-
ராம சுப்பையா உணவு மந்திரி என்றால்தான் சிறையிலிருந்தவர்களுக்குத் தெரியும், விளக்கத் தேவையில்லை. உழைப்பின் உரு !
சுகாதார மந்திரி:-
புகாரி! அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர். காங்கிரசின் அனுதாபியாக இருந்து கழகத்திற்கு வந்தவர். வைத்தியத் தொழிலில் அனுபவம் பெற்றவர். பொறுமைக்கோர் எடுத்துக்காட்டாக இங்கு நடந்து கொண்டார்.
உள்நாட்டு இலாகா :-
முல்லை சத்தி – முல்லைக்கொம்பை வடிவேலு அவர்களின் இளவல். கொடுத்த பொறுப்பை செவ்வனே செய்பவர். கொஞ்சம் முன்கோபக்காரரே தவிர தோழமைக்கோர் பிசிராந்தை.
ஜலஸ்தாபன மந்திரி :-
அய்வநல்லூர் வேலு. நாகை வட்டாரத்தில் நல்லதொரு தொண்டர். அடக்கமான நடத்தை. கொள்கையிலே அடக்கொணா ஆர்வம். மெலிந்த உடல், மென்மையான மனம் – இயக்க நலனுக்கு செலவிடப்படும் இளமை.
பிரதம செயலாளர் :-
ஜெயங்கொண்டம் வேணு. அலுப்பில்லாமல் உழைக்கும் வைரக் கட்டை. ஒவ்வொரு மூச்சும், பேச்சும், கழகம் கழகம் என்றே ஒலிக்கும். பம்பரம்போல் பணிபுரியும் காளை. போட்டோ ஸ்டுடியோ வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டு கட்சிப் பணியை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர். எந்த வேலையும் சொந்த வேலையென எண்ணும் சோர்விலாளன். சுயமரியாதை இளஞ்சுடர்.
இத்தகைய அருமைமிகு செயற்குழு, சிறைச்சாலை ராஜ்யத்திலே பதவியேற்றுப் பணிபுரியத் தொடங்கிவிட்டது.
உணவு பரிமாறுதல் – தேவைகளைக் கேட்டல் – சிகிச்சைக்கு அனுப்புதல் முதலிய எல்லாக் காரியங்களையும் சிறைச்சாலை வார்டர்கள் கவனித்து வந்தார்கள். எங்கள் ராஜ்யத்தில்மட்டும் மேற்கண்ட எல்லா பொறுப்புகளையும் எமது மந்திரி சபையும் – மக்கள் மன்றமும் ஏற்றுக் கொண்டது.
எமது ராஜ்யத்தின் ஒரு நாள் நடவடிக்கைகளை முதலில் விளக்குகிறேன். சிறப்பான நிகழ்ச்சிகளை தனித் தனி தலைப்புகளின் மூலம் பிறகு விவரிக்கின்றேன். காலை ஆறு மணிக்கு எங்கள் கூண்டுகளின் கதவுகள் திறக்கப்படும். காலைக் கடன்களை முடித்துவிட்டு கஞ்சி உணவுக்கு பிரஜைகள் தயாராகிவிடுவார்கள்.
நான்கு பிளாக் தலைவர்களும் வேப்பமரத்தடியில் கூடி இன்றைய தினம் யார் யார் கஞ்சி பரிமாறுவது – எந்த பிளாக்கிலிருந்து ஆரம்பிப்பது என்பது போன்ற அலுவல்களை ஆலோசிப்பார்கள். அதற்குள் கஞ்சி அண்டாக்கள் வந்துவிடும். அந்த பெரிய அண்டாக்களை அங்குள்ள கிரிமினல் கைதித் தோழர்கள் தான் தூக்கிவர வேண்டும். அவர்கள் தான் தூக்கிவருவார்கள். ஒவ்வொரு பிளாக் பிரஜைகளும் ‘க்யூ’ வரிசையில் நின்றுகொண்டு கஞ்சியை வாங்கிக்கொண்டு போவார்கள். கஞ்சி ஒரு நாளைக்கு கெட்டுப் போயிருந்தால் உடனே தலைவரிடம் நாலு பிளாக் தலைவரும் அறிக்கை சமர்ப்பிப்பர். தலைவர் அதை தலைமை வார்டரின் கவனத்திற்குக் கொண்டு போவார். ஜெயில் அதிகாரம் உடனடியாக குறையைக் கவனிக்க முயற்சி எடுத்துக்கொள்ளும்.
கஞ்சி முடிந்த பிறகு – குளிக்குமிடத்தில் பிரஜைகள் கூடுவர். ஐம்பது பேர்தான் ஏக காலத்தில் குளிக்க வசதியுடைய தண்ணீர்த் தொட்டி. அதில் நானூறுக்கு மேற்பட்டவரை சௌகரியமாகவும் – எல்லோரும் குளிக்கக்கூடிய அளவுக்கு தண்ணீரை சேதப்படுத்தி விடாமலும், குளிக்க வைத்திடும் பொறுப்பை ஜலஸ்தாபன மந்திரி தானே நேரில் நின்று கவனிப்பார். ஒவ்வொருவரும் எத்தனை குவளைகள் ஊற்றிக் கொண்டார்கள் என்ற கணக்குப் பார்த்து – அளவுக்கு மேலாகிவிடாத நிலையில் – அங்குமிங்கும் ஆடியோடி, கட்டுப்படுத்தி – தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் பார்த்துக்கொள்வார்.
“நீர்மேல் நடக்கலாம் ” என்று பாட்டு படித்திருக் கிறோம். அப்படி நடந்து காண்பித்தவர் தோழர் வேலு. ஆமாம் – ஜலஸ்தாபன மந்திரி ! தண்ணீர்த் தொட்டியின் மேலேயே காலை முதல் பிற்பகல் 3 மணி வரையிலே நடை பழகுவார். அவர் போட்டிருந்த பனியனுக்கு உட்பட்ட பாகமெல்லாம் சிகப்பாகவும் – மற்ற இடமெல்லாம் கருப்பாகவும் மாறி – ஆளே இருகலர் மனிதனாகத் தோன்றினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்; அவர்பட்ட கஷ்டத்தை!
கஞ்சிக்கும் – குளியலுக்கு மிடையிலே -பிளாக் வாசல்களில் ஒரு ஒலி கிளம்பும். “ஆஸ்பத்ரி! ஆஸ்பத்ரி!” என்ற ஒலி! அதுபோன்ற சப்தம் நமது ஊர்த் தெருக்களிலே கிளம்பினால் “சரிதான் – சான்ஸ் எதுவும் கிடைக்காமல், யாரோ ஒரு டாக்டர் ஆஸ்பத்திரியை விலை கூறுகிறாராக்கும் ” என் று நினைப்போம். சிறை ராஜ்யத்திலே வரும் இந்த ஒலிவேறு – சுகாதார மந்திரி புகாரி சாகிப் – தன்னுடைய தேன்கூடு வடிவமுள்ள தாடியைத் தடவியபடி “ஆஸ்பத்திரிக்கு யாராவது வருகிறீர்களா?” என்று கூவுவார். அவர் ஒரு ஐம்பது பேரையாவது தினந்தோறும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்புவார்.
பத்துமணி சுமாருக்கு “சுதேசமித்திரன் “ஏடு வரும். அந்தப் பத்திரிகையிலே ஏற்கனவே இருக்கிற இருட்டடிப்பு போதாதென்று – இங்கே வேறு முக்யமான செய்திகளிலே தாரைப்பூசி அனுப்புவார்கள். அண்ணா சிறைப் பட்டார் என்ற செய்தியை ‘மித்திரன்’ மூலமாகப் பார்த்து எல்லோரும் ‘உண்ணாவிரதம்’ இருந்தோமாம்! அதற்காக எந்த ஊரிலே -எந்த நாட்டிலே – யார் சிறைப்பட்டாலும் அந்தச் செய்திக்கு தார் பூசிவிடுவார்கள்.
நான் கூட விளையாட்டாகக் கேட்டேன்;
இப்படி தேவையற்றவைகளுக்குக் கூட தார் பூசு கிறீர்களே; கோதாவரியில் வெள்ளம் என்று செய்தி வந்தால் உடனே நாங்கள் அதைப் பார்த்து “- ஆகா கோதாவரியில் வெள்ளமா? அனுதாப உண்ணாவிரதம் இருப்போம் ” என்று கூறினால் பிறகு வெள்ளத்தைப் பற்றிய செய்திகளுக்கும் தார் பூசுவீர்களா? “என்று! பதில் கிடைக்கவில்லை – அதற்கு ! – ஒரு வகையில் எமக்கு மகிழ்ச்சி ! இருட்டடிப்பு செய்யும் பத்திரிகைகளின் முகத்தில் தார் பூசவேண்டுமென்று பல நாளாக ஆசைப்படுகிறோம். அந்த அரிய வேலையை அரசாங்கத்தாரே தம் சொந்தப் பொறுப்பில் செய்து கொள்வதற்காக நன்றி தெரிவிக்கத்தான் வேண்டும்.
வந்த பத்திரிகையை எடுத்துக்கொண்டு பிரதம செயலாளர் வேணு ஓடுவார். நான்கு பிளாக்குகளுக்கும் பத்திரிகை சென்று அதைப் பத்திரமாக எடுத்துவரும் வேலையை அவர் துரிதமாகக் கவனிப்பார்.
பிற்பகல் ஒரு மணிக்குள்ளாகவே – அநேகமாக உணவு வந்துவிடும் – வெள்ளைத்துணியால் மூடப்பட்டு – நீண்ட கட்டில் எனப்படும் ஒன்றை நாலுபேர் தூக்கி வருவார்கள். முன்னே சட்டி வரும். அதிலே குழம்பு வரும். பெரிய சட்டி. இப்படி நாலைந்து பெரும் சட்டிகளும் ; நாலைந்து கட்டில்களும், ஒரு அண்டாவில் மோருமாக எங்கள் ராஜ்யத்து உயிர் வாழும் பொருள் – உணவு என்னும் தண்டனை வந்து சேரும். சிறையிலே தரப்படும் பெரிய தண்டனை உணவுதான்! சிறையிலே பெருங்குற்ற மெனக் கருதப்படுவது; அதை சாப்பிட மறுப்பதுதான்! –
பிளாக் தலைவர்களும் துணைத் தலைவர்களும் சோறு – குழம்பு – மோர் -ஆகியவைகளை வரிசை வரிசையாக வந்து வாங்கிப்போகும் பிரஜைகளுக்கு வழங்கு வார்கள். அளவு சோற்றுடன் – அளவுக் களியும் தரப்படும். இரும்பு மணம் கமழும் – பரங்கிக்காய் கீரைகள் கீரைத்தண்டு – முதலிய சிரஞ்சீவிப் பொருள்கள் தலை நீட்டிப் பார்க்கும் – இதன் பெயர் தான் குழம்பு.
புதன் சனிக்கிழமைகளில் துவரை தருவார்கள். அளவுப்படி! அதுதான் எங்கள் நாட்டுக்கு மாமிச உணவு.
சாப்பாடு முடிந்ததும் சிறிது நேரம் களைப்பாறுபடலம், உடனே உள் காட்டு இலாகா மந்திரி சத்தியின் வேலை துவங்கும். மாதம் இரண்டு முறை கார்டு கொடுப்பார்கள். அவைகளைக் கணக்குப் பார்த்து – எழுதியவைகளை வாங்கி அதிகாரிகளிடம் அனுப்பி எழுதாதவைகளை எழுதச் சொல்லி கார்டு வராதவர்களுக்கு கார்டு வாங்கிக் கொடுத்து – அந்த அலுவல்களை கவனிப்பார். புத்தகம் வேண்டுமென்பவர்களுக்கு புத்தகமளித்து படித்தவைகளை வாங்கி கணக்கு சரிபார்த்து – வாசக சாலையில் ஒப்புவிக்க முயற்சி எடுத்துக்கொள்வார்.
இதற்குள் ‘இன்டர்வியூ’ வரும். சிறையில் உள்ள தோழர்களை சந்திக்க நண்பர்களோ உறவினர்களோ- வருவர்.
அந்தத் தகவலை எடுத்துக்கொண்டு வேணு ஓடுவார். நானூறு பேரில் அவர்களை சிரமப்பட்டு கண்டு பிடித்து ‘இன்டர்வியூ’ க்கு அனுப்பிவைப்பார். புகாரி சாகிப்பின் ‘ஆஸ்பத்திரி’ கூவல் மீண்டும் கிளம்பும். மாலை 4 மணிக்கு மக்கள் மன்றத்தை கூட்டும் பொறுப்பை வேணு சரிவரிச்செய்து முடிப்பார். அந்தந்த பிளாக் தலைவர்களும் தங்கள் தோழர்களுடன் மக்கள் மன்றத்திற்கு வந்து சேருவார்கள்.
மக்கள் மன்றம் நாள்தோறும் தலைவரின் – தலைமையிலே தொடங்கும். சிறைச்சாலையில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் கழகத்தின் கடமை கட்டுப்பாடு பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தப்படும். தினம் ஒரு பொருளின் மீது பல தோழர்கள் உரையாற்றுவார்கள். இறுதியில் தலைவரின் முடிவுரையுடன் மன்றம் கலையும். சிறு குற்றம் செய்தவர்களும் – மன்றத்தில் விசாரிக்கப்பட்டு – பெரும்பான்மையோர் எண்ணத்திற்கு இணங்க – மன்றத்தின் முன்பு மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள்.
மாலை 5-30 மணிக்கெல்லாம் இரவு உணவு வந்து விடும். இப்போது சோளக்களி வராது. அரிசிச்சோறு சிறிது அளவில் பெரிதாய்விடும். மோர் வராது. கடலை உருண்டை வரும். குழம்பு உண்டு. சாப்பாடு முடியும். ஆறுமணிக் கெல்லாம் மூன்று மூன்று பேராக கூண்டுகளில் அடைக்கப்படுவார்கள். நாங்கள் ‘பி? வகுப்புக்காரர்கள் தனித்தனி ஒவ்வொருவராகத்தான் அடைக்கப்படுவோம்.
சில கூண்டுகளிலேயுள்ள ஆண் குயில்கள் பாட ஆரம்பிக்கும்! அந்த மகுடித் தொனி கேட்டு பாம்புகள் வந்துவிடும் – பாம்புகளுக்குவேறு ‘டூட்டி’ இருந்தால் தேள்களையாவது அனுப்பி வைக்கும்.
அந்தத் தேள்கள் நமது தோழர்கள் பலரை முத்தமிட்டுமிருக்கின்றன. இரவு பத்து மணிக்கு அனேகமாக எமது ராஜ்யம் அடங்கிவிடும்.
கணக்கு வருது!
ஆறு மணிக்கு தோழர்கள் அடைக்கப்பட்டதும் கைதிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்க ‘ஹெட்வார்டர்’ எல்லா பிளாக்கிற்கும் சென்று சுற்றிப் பார்த்து வருவார். கடைசியாக எங்கள் நாலாம் பிளாக்கிற்கு வருவார். உம் என்போம் நாங்கள்! கணக்கு வந்துவிட்டது.
கெடிகாரம் போவுது!
சிறைச்சாலை முழுதும் பல இடங்களிலே சுவர்களில் ஒரு வகையான சாவி பொருத்தப்பட்டு – அந்த இடங்களுக்கு ஒரு மணிக்கு ஒருதரம் வார்டர் சென்று – தன்னிடமுள்ள கெடிகாரத்திற்கு அந்த சாவி போட்டுவிட்டு வர் வேண்டும். அந்த வார்டர் எங்கும் நிற்கமுடியாது. சுற்றியபடியே காவல் காக்கவேண்டும். நின்றால் அவரிடமுள்ள கடிகாரம் காட்டிக் கொடுத்துவிடும். அவர் இரவு நேரத்தில் கையில் ஒரு விளக்குடன் போய்க் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். அவரைப் பார்த்து நாங்கள் மணி தெரிந்து கொள்வோம். அதற்காகத்தானோ என்னமோ – சிறையில் அவர் போனால் “கடிகாரம் போவுது” என்கிறார்கள்! நாங்களும் ”கணக்கு வருது !” “கெடிகாரம் போவுது” என்றுதான் சொல்லுவோம்.
இப்படி எங்கள் ராஜ்யம் நடந்துகொண்டிருக்கும் போதுதான் சென்னையில் ஆச்சாரியார் வீட்டு முன் மறியல் அறப்போரில் தலைமை வகித்த தோழர்களான – போர் பலகண்ட புலிநிகர் நண்பர் முனிசாமி, வீரமிகு மறவர் வி. டி. அண்ணாமலை, ஈரோடு தந்த இளஞ்சிங்கம் எஸ். அப்பாவு, காஞ்சிச் செல்வர்களம் பல கண்டு – நம் உளமெலாம் நிறைந்த கர்மவீரர் C. V.M. அண்ணாமலை, செயலாற்றும் சீயம் சென்னை A. K. சாமி, வடாற்காடு மாவட்ட செயலாளர் – வன்னெஞ்சர் இடுப்பொடிக்கும் வாய்மையாளர் A. L.C. கிருஷ்ணசாமி, சமருக்கஞ்சா சம்மந்தம், இன்மொழி பேசும் இன்மொழியன், செருமுனைக்கோர் சிறப்புறு படையாம் செயசந்திரன், நாசம் எதிர்க்கும் நடராசன், அயர்விலாத் தொண்டர் அரசு ஆகியோரும் முன்னூறுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்செயலாளர் அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், மதி, நடராசன் ஆகிய ஐவரும் நிபந்தனையின்றி சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது.
டால்மியபுரம் போராட்டம் புதுக்கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டம் – ரயில் நிறுத்தப் போராட்டம் – முதலியவற்றை தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெறத் துவங்கியது.
அந்த வழக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் தண்டிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெற்றாலுங்கூட – பெரிதும் நமக்கு பயன்பட்ட வழக்காகவே இருந்தது. நம்மைப்பற்றிய முழு விபரங்களை பொதுமக்களும் மாற்றுக்கட்சிகளும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்திலே வழக்கு அமைந்தது.
லட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதும் – கட்டுப்பாடு – கண்யம் – அமைதி – முதலியவை தி. மு. க. வின் லட்சியம் என்பதும் – ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகளையுடைய பெரும் இயக்கம் என்பதும் தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக நிற்கும் மாபெரும் தேசீயக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் என்பதும் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் சாட்சியங்களின் வாயிலாகவே நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஐவர்மீது தொடரப்பட்ட வழக்கு இத்தகைய கணிசமான புள்ளி விபரத்தை மக்கள் மன்றத்திற்குத் தந்திட உதவியது.
நீதிமன்றத்திலே ஐவரும் தந்த வாக்குமூலங்கள் நமது கழகக் கோட்பாடுகளை நாட்டுக்கு அறிவிக்கும் முரசங்களாக அமைந்தன.
இனிமேல் நமது கழகத்தோழர்கள் போராட்டத்திலே ஈடுபட்டால் – சிறைச்சாலைக்கு செல்வது என்பதை மட்டும் குறிக்கோளாக வைக்கக் கூடாது. என்ன குற்றம் செய்தோம்: ஏன் தண்டனை பெறவேண்டும் – என்பதையும் வாதித்து – அதன் பிறகும் தண்டனை தந்தால் அப்பீல்களுக்குப் பிறகும் தண்டனை தொடர்ந்தால் “சரி இனி மக்கள் மன்றம் தீர்ப்பு வழங்கட்டும் ” என்ற ஆறுதலோடு சிறைக்குச் செல்ல வேண்டுமே தவிர உடனடியாக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நம்மை அர்ப்பணித்துவிடக் கூடாது – என்ற உண்மையை ஐவர்மீது தொரப்பட்ட வழக்கு நமக்கு ஒரு பாடமாகத் தந்திருக்கிறது என்று கூடச்சொல்லலாம்.
வழக்கு நடைபெற்றால்தான் நாமும் எதிர்த்து வாதாடினால் தான் நல்ல தீர்ப்பு கிடைப்பது ஒருபுறமிருந்தாலும் கூட – நாட்டுக்கு நமது நிலையை விளக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வாப்பை இனி தவறவிடக்கூடாது என்பது என் தாழ்மையான தனிப்பட்ட எண்ணமுங்கூட!
அந்த எண்ணத்திற்கு வித்து ஐவர் வழக்கினால் ஏற்பட்ட நல்ல விளைவுதான்!
அம்படிப்பட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற வழக்கும் ஒருவாறு முடிவுற்றது.
கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஐவரும் மூன்றுமாத வெறுங்காவல் தண்டனை பெற்றார்கள்.
செப்டம்பர் திங்கள் முதல் நாளிலேதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தூண்டி விட்டார்களாம் ஐவரும் ! ஆகவே கூண்டி லிடப்பட்டார்கள்.
தூண்டிவிட்டது யார் ? கேள்விக்கு சரியான பதில் எது? மக்கள் மன்றம் சுட்டிக் காட்டுகிறது தூண்டி விட்டவர்கள் யார் என்று! ஆனால் அவர்கள் வெளியிலே உலவுகிறார்கள்!!
கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம். சரி – ஒத்துக்கொள்வோம்! கிளர்ச்சி செய்யும்படி கழகத்தைத் தூண்டிவிட்டது யார்?
‘நான்சென்ஸ்’ என்று கூறி தமிழர் துடிப்பைத் துண்டிவிட்டது யார்?
கல்லக்குடி என்ற பெயரை அழித்து தமிழரின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது யார்?
புதிய கல்வித் திட்டத்தைக்கொண்டு வந்து நாடெங்கும் புகைச்சலைத் தூண்டிவிட்டது யார்?
தொழிலாளர்களுக்குச் சொந்தமான ஒரு பெரும் ஆலை இருக்கிறது. அதிலே சர்க்கரை மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அது கண்டு ஒரு சிலருக்கு வயிற்றெரிச்சல். அந்த ஆலைக்குத் தீ வைக்கும்படி சில ஆட்களை அனுப்புகிறார்கள். தீ வைக்கப்படுகிறது. ஆலை எரிகிறது! அதுகண்ட பொதுநல ஊழியர்கள் புறப்படுகிறார்கள். தண்ணீரைக் கொட்டி ஆலையின் நெருப்பை அணைக்கிறார்கள். நெருப்பு அணைகிறது. பொழுது விடிகிறது. மறுநாள் தீவைக்க ஆட்களை அனுப்பிய தீயவன், தொழிலாளர்களிடம் போகிறான்.
“பார்த்தீர்களா, பாட்டாளி நண்பர்களே ! நீங்கள் அடுக்கி வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளையெல்லாம் இந்தப் பொதுநல ஊழியர் என்னும் பாவிகள் தண்ணீரை ஊற்றிக் கரைத்து விட்டார்கள் – ஆகவே அவர்கள் மீது உங்களுக்காக நான் வழக்கு போடப் போகிறேன் ” என்று கர்ஜிக்கிறார்கள்.
தீ வைத்து ஆலையை சாம்பலாக்க எண்ணியவன் சர்க்கரை மூட்டையை கரைத்துவிட்டார்கள். அணைக்க வந்தவர்கள் – ஆகவே அவர்கள் குற்றவாளிகள் என்கிறான்!
வடநாட்டு ஏகாதிபத்யம் – ஆணவப் பேச்சு-புதுக் கல்வித்திட்டம் -என்ற நெருப்புகளை வாரி யிறைத்தார்கள், நாடு சாம்பலாகிவிடுமே என்று எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம். பொதுஜன சௌகர்யம் என்ற சர்க்கரை மூட்டையை இவர்கள் கரைத்துவிட்டார்கள் என்று வழக்கு போட்டுத் தண்டித்தது அரசாங்கம்!
தீ மூட்டியின் ஸ்தானத்திலேயிருக்கும் அரசு! அணைப்பவரிடத்திலே யிருக்கும் நாம் ! சர்க்கரை மூட்டை போன்ற பொதுஜன வசதி ! இது போன்ற சர்க்கரை மூட்டைகளை ஏராளமாகத் தயாரிக்கக்கூடிய ஆலை போன்ற நமது நாடு!
தீர்ப்பு இப்போது வழங்கவேண்டும், தீர யோசித்த பிறகு!
சட்டத்தைக் கையிலே பிடித்தவர்களால் முடியாது! அது அவர்கட்கு சங்கடமான வேலை! நேர்மையை நெஞ்சிலே படைத்தவர்களால் தான் முடியும் – அவர்கள் நீதி மன்றம் அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது!
திடீர் திடீர் எனத் தோன்றியிருக்கிறது அத்தகைய நீதிமன்றம் – தீ மூட்டிகள் தோன்றியிருந்த நாடுகளிலே!
சிறை சென்றவர் செங்கோலோச்சுவதும் செங்கோ லேந்திகள் சிறை செல்வதும் சகஜமாகிவிட்ட நாட்களிலே நாம் வாழ்கிறோம்.
சிறையிலேயிருக்கும் போதுதான் அந்த செய்திகளும் நமக்குக் கிடைத்தன.
ஈரான் பூமியிலே – ஷா ஓட்டம் – முசாதிக் வெற்றி- என்ற செய்தி முதல்நாள் வந்தது! மூன்றாம் நாள் முசாதிக் கைது – ஷா ஆட்டம் – என்ற செய்தி கிடைத்தது!
கர்ச்சித்துக் கொண்டிருந்த காஷ்மீரத்துச் சிங்கம் – ஷேக் அப்துல்லா – முதல்நாள் பிரதமர் – மறுநாள் கைதி. சிக்கலைத்தவிர்க்க முடியாத சிலோன் பிரதமர் சேனா நாயகா – சிகிச்சையும் ஓய்வும் தேவையென்று – அரசு கட்டிலை விட்டு இறங்கிவிட்டார்!
இப்படி சுற்றியுள்ள நாடுகளிலே சூறாவளி அடிக்கிறது. காண்கிறோம் நாம்! ஆனால் இங்கு சூதர்கள் சிலர் அந்த சூட்சமத்தை உணராமல் இந்த சாம்ராஜ்ய அதிகாரம் சதமென எண்ணியிருக்கிறார்கள்!
நல்ல மரங்களிலேயே புல்லுருவி பாயும்போது – இந்தக் கள்ளிக்காடுகளா இருந்து வாழப் போகின்றன?
அந்த நம்பிக்கை நிறைந்த ஆறுதலோடுதான் அண்ணாவும் ஐயாயிரவரும் சிறைப்பட்டுள்ள கொடுமையை ஒருவாறு சமாளித்துக்கொண்டோம் – சிறையிலிருந்தபடியே!
இனி எமது ராஜ்யத்தின் நிலைமைகளைப் பற்றிக் கொஞ்சம் கவனிப்போம்.
சிறைச்சாலை ஒரு கிராமம் போலவே எல்லா வசதிகளும் உடையது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா?
சலவைசாலை உண்டு – தொழிற்சாலை உண்டு பள்ளிக்கூடம் உண்டு – தோட்டங்கள் உண்டு – என்றெல்லாம் படித்தீர்களல்லவா? அவைகளைப்பற்றி முதலில் சிறிது விளக்குகிறேன்.
சலவைசாலை இருக்கிறது என்பது உண்மைதான்.
சலவைசாலை யென்றதும், எல்லாக் கைதிகளும் தங்கள் உடைகளைப் போட்டு அடிக்கடி சலவை செய்து கொள்ளலாம் என்றுதானே நினைக்கிறீர்கள் – அது தான் தப்பு!
சினிமாப் படத்திலே சலவை சாலை யொன்றைக் காட்டி அதிலே ஏராளமான துணிகளையும் வெளுக்கிறார்கள் என்பதைக் காட்டும்போது எப்படி நாம் பார்த்துக் கொண்டிருக்கலாமோ அதுபோலத்தான் சிறையிலுள்ள சலவை சாலையையும் பார்த்து ரசிக்கலாம். அங்கே எல்லாக் கைதிகளின் ஆடைகளையும் சலவை செய்யமாட்டார்கள். கான்விக்ட் வார்டர் உடைகள் – மருத்துவமனைத் துணிகள் – ‘பி’ வகுப்பு கைதிகளின் உடைகள் ஆகியவற்றைத் தான் சலவை செய்து கொடுப்பார்கள்.
தொழிற்சாலையிருக்கிறது – திருச்சி சிறையைப் பொருத்தவரையிலே நெசவுத் தொழில் முக்கியமானது. ஒவ்வொரு கைதியும் நாளொன்றுக்கு இத்தனை கஜம் தர வேண்டுமென்று உத்தரவு போடப்படுகிறது. திருச்சியில் தயாராகும் மருத்துவ மனைக்குத் தேவையான ‘பேன்டேஜ்’ துணிகள் பெரும்பாலும் – திருச்சி சிறைக்கு மட்டுமின்றி, மாகாண மெங்குமுள்ள சிறைகளுக்கும் அரசாங்க மருத்துவ மனைகளுக்கும் பயன்படுத்தப்படு கின்றன.
இதுபோலவே மாகாணமெங்குமுள்ள சிறைகளில் முக்கியமான பொருள்கள் கைதிகளின் உழைப்பைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
சேலம் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும், இரும்பு சாமான்களும், பெரிய பாத்திரங்களும், அலுமினியத் தட்டு குவளைகளும் – மாகாணத்தில் உள்ள எல்லா சிறைகளுக்கும் உபயோகமாகின்றன. அதுபோக மீதியை அரசாங்க சம்பந்தப்பட்ட மற்ற ஸ்தாபனங்கள் பயன்படுத்துகின்றன.
கோவையில் உள்ள சிறையில் பெட்ஷீட்டுகளும், வார்டர் – போலீஸ் முதலியவர்களுக்கு உடுப்புத் துணிகளும் தயார் செய்யப்பட்டு, எல்லா சிறைச்சாலைகளுக்கும், மீதி அரசாங்க அலுவலாளர்களுக்கும் உபயோகமாகிறது. வேலூரில் தயாரிக்கப்படும் செருப்புகளும், பூட்ஸ்களும், அரசாங்க அலுவலாளர்களுக்கும் – எல்லா சிறைச்சாலைகட்கும் உபயோகமாகின்றன. ராஜமுந்திரி சிறைச்சாலையில் நல்ல கம்பளிகள் தயாரிக்கப்படுகின்றன.
இப்படி முக்கிய தொழில்களும் – சில்லரைத் தொழில்களும் – சிறைக் கைதிகளாலேயே செய்யப்படுகின்றன. சர்க்கார் அலுவலகங்களில் இருக்கின்ற மரச்சாமான்கள் பல கைதிகள் சிறைகளில் தயாரித்தவைதான்!
சென்னை சிறையில் அச்சகம் அமைக்கப்பட்டு எல்லா சிறைகளுக்கும் தேவையான அச்சு வசதிகள் கவனிக்கப்படுகின்றன.
தண்டனை பெற்று வந்துள்ள கைதிகள் உழைக்காமல் இருக்கவே முடியாது. தோட்டி வேலைகளையும் அவர்களில் சிலரே செய்யவேண்டும். ‘கூட்டு கேங்’ என்று ஒரு குழு, கைதிகள் நிறைந்ததாயிருக்கும். அவர்கள் சிறைச்சாலை முழுவதையும் சுத்தப்படுத்திக் கொண்டே யிருக்கவேண்டும்.
குப்பையில்லாவிட்டாலும் கூட்டவேண்டும்.
அதற்குத்தான் ‘ஜெயில் வேலை’ என்று பெயர்.
பாதைகளில் முளைத்திருக்கும் புற்களையெல்லாம் பிடுங்கும்படி உத்திரவிடுவார்கள். மண்வெட்டி கொண்டு விரைவில் செதுக்கியும் விடலாம். செதுக்கிவிட்டால் பிறகு வேலையிருக்காதே; அதற்காக புல்லைப் பிடுங்கச் சொல்வார்கள். அவர்களும் மிகவும் சுறுசுறுப்பாக – ஆளுக்கொரு நுனிப் புல்லாகப் பிடுங்குவார்கள். அப்போதுதானே மறுநாள் அந்தப்புல் வளரும் – அவர்கட்கும் வேலை இருக்கும். இதற்கும் ‘ஜெயில் வேலை’ என்று தான் பெயர். சிறை நிர்வாகத்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகளும் – கைதிகளைக் கண்காணிப்பதற்காக வார்டர்களும் இருக்கிறார்கள். மற்ற எல்லா வேலைகளையும் கைதிகளே செய்கிறார்கள்.
சிறையில் குற்றம் செய்யும் கைதிகள் சிறையதிகாரிகளால் தண்டிக்கப்படுகிறார்கள். கால் விலங்கு பூட்டுதல் – கைவிலங்கு பூட்டுதல் – நிலவிலங்கு மாட்டி வெயிலில் நிற்கவைத்தல் போன்ற கொடிய தண்டனை களும் கைதிகளுக்கு அளிக்கப்படுமாம்.
சிறைக்குள்ளேயே திருடுபவர்கள் – வேலைக்குப் பயந்து ஒளிந்து கொள்பவர்கள் – சிறை சட்டங்களை மீறி நடப்பவர்கள் – உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப்படு வார்கள்.
மாடுபோல ஏற்றங்களை இழுத்து தண்ணீர் பாய்ச்சுகிற வேலைகளையும் அவர்கள் தான் செய்யவேண்டும். எவ்வளவு குளிர் அடித்தாலும் சரி; ஒரு கால் சட்டை – ஒரு அரைக் கை சட்டை ஒரு குல்லா இவைகளால் தடுத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்ளவேண்டும். நாங்கள் சிலர் பி. வகுப்பு கைதிகளாயிருந்தாலும் கூட கடுங்காவல் தண்டனை பெற்றவர்களாதலால் நாங்களும் குல்லா அணிந்து கொள்ளவேண்டும்.
காலையில் எழுந்ததும் நாலு நாலுபேராய் Fileல் உட்காரவேண்டும். சாப்பிடப்போனாலும் – குளிக்கப் போனாலும் வேலை செய்யப் போனாலும் – காலை முதல் மாலை வரையில் பல தடவை Fileல் உட்கார்ந்த பிறகுதான் போகவேண்டும். அப்படி Fileல் உட்காரத் தவறுவது பெருங்குற்றம். ஏன்; தப்பித்து ஓடுவதற்கு எத்தனித்த குற்றமாகக்கூட ஆகிவிடலாம்! அதற்கெல்லாம் பெருந்தண்டனைகள் கிடைக்கும். தினந்தோறும் குளிப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால் அவர்களுக்குத் தரப்பட்ட உடைகளை வாரம் ஒருமுறைதான் அவர்கள் துவைத்து உடுத்துகிறார்கள். அது அவர்களின் சோம்பேறித் தனமோ – அல்லது சிறையின் உத்திரவு அப்படியோ தெரியவில்லை ! சிறை அதிகாரிகள் நல்லவர்கள் ஆகவே சிறை உத்திரவாயிருக்கமுடியாது! – மாதா மாதம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து முழுகலாம் – அதற்கு அளவு எண்ணெய் கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உண்டு. அன்றையதினம் வேலை கிடையாது. அதற்காக இஷ்டம் போல் சுற்றவும் முடியாது. அவரவர்கள் இருப்பிடத்தில் இருக்க வேண்டியது தான்.
நான், முதலில் சிறைச்சாலை ஒரு கிராமம் போலிருக்கிறது என்று சொன்னதும், “பூ – இவ்வளவுதானா?” என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இப்போது கொஞ்சம் நடுக்கம் ஏற்படுகிறதல்லவா?
ஆனால் இத்தகைய சிறைச்சாலையைத் தங்கள் ஜீவிய பூமியாக்கிக் கொண்டிருப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முதன் முறை சிறைக்கு வந்தவனுக்கு “வெள்ளைக் குல்லாய்” என்று பெயர். பலமுறை வந்தவனுக்கு “கருப்புக் குல்லாய் ” என்று பெயர்.
சிறையில் கருப்புக் குல்லாய்களுக்கு குறைவேயில்லை. நிறைய இருக்கிறார்கள்.
குழந்தை முதல் சிறையிலே இருக்கிற ஒரு கைதியையும் திருச்சியில் கண்டேன்.
எங்கள் பிளாக் ‘ஹெட் வார்டர்’ அவனை தஞ்சை இளங் குற்றவாளிகள் சிறைப்பள்ளியில் (Borstal School) சிறு பையனாக இருக்கும்போது பார்த்தாராம்!
அவனுக்கு இப்போது ஐம்பது வயது இருக்கலாம். கண்டமாலை நோய் ஏற்பட்டு குணமடைந்தவனான படியால் அவனுக்கு கண்டமாலை என்று பெயர் சூட்டி அழைத்தார்கள்.
அவன் தாயார் அவனை சிறையிலே பெற்றெடுத்த தாகவும் சொல்லுகிறார்கள். சுமார் ஐம்பதாண்டு காலத்திலே அவன் ஐந்து ஆண்டுகள் கூட வெளியுலகத்திலே யிருந்திருக்க முடியாதென்று அங்குள்ள கைதிகள் சொன்னார்கள். அவனைப்பற்றி அவ்வளவு விபரம் தெரிந்த கைதிகள் எவ்வளவு சிறை அனுபவஸ்தர்களாயிருக்க வேண்டுமென்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்! ஆனால் நான் எப்படித் தெரிந்துகொண்டேன் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள் ! நான் அரசியல் வெள்ளைக் குல்லாதான்!
சிறையில் கருப்புக்குல்லாக்கள் காலத்தை சுலபமாகக் கழித்து விடுகிறார்கள் பழைய அனுபவத்தை வைத்துக்கொண்டு! வெள்ளைக் குல்லாக்கள் தான் மிகவும் வேதனைப்படுகிறார்கள்!
சிறையிலே வேதனையில்லாமல் – ராஜபோகமாகவா இருக்குமென்று கேட்கலாம். வேதனை இருக்க வேண்டியதுதான்! முதலில் வந்த கைதிகள் எச்சரிக்கப்பட வேண்டியவர்கள் – ஆகவே அவர்கள் கஷ்டத்தைக் கொஞ்சம் குறைத்து, உணவு முதலியவற்றில் சலுகை காட்டும் முயற்சியில் அரசாங்கம் உடனடியாக கவலை யெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் கவலை எடுத்துக் கொள்ளாது! அவர்களுடைய நல்வாழ்வுக்கு வெளியிலே கவலை எடுத்துக் கொண்டிருந்தால்; ஏன் – இத்தனை பேர் கைதிகளாக மாறுகிறார்கள் ? வெள்ளையன் காலத்திலே ஆயிரம்பேர் இருந்த சிறையிலே இப்போது மூவாயிரம் பேரல்லவா இருக்கிறார்கள்!
பள்ளிக்கூடங்களை மூன்றுமணி நேரமாகக் குறைத்து சிறைச்சாலையின் கைதித் தொகையை மூன்று பங்கு அதிகமாக்கும் அதியற்புத அரசாங்கமல்லவா இப்போது நடக்கிறது!
சிறைக்கு வந்த மூன்று நாட்களுக்கெல்லாம் ஜெயிலர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்யப்பட்ட சில காகிதங்களைக் கொடுத்து அதை தமிழில் “உங்கள் நடையில் மொழிபெயர்த்துக் – கொடுங்கள் ” என்றார் அவைகளை நான் தமிழில் எழுதிக் கொடுத்தேன். கடுங்காவல் தண்டனைபெற்ற கைதியாயிற்றே; மறுக்கக்கூடாது! நான் எழுதியதை – மாயவரம் ஓவிய நண்பர் பி.டி.ராசன் சிறையிலுள்ள ‘குவாரன்டைன்’என்னுமிடத்தில் அழகிய முறையில் வர்ணத்தால் சுவற்றில் தீட்டிக் கொடுத்திருக்கிறார். அவைகளைப் படித்துப் பார்த்தால் சிறையில் உள்ள வசதிகள் – சட்ட திட்டங்கள் எல்லாமே தெளிவாகும் என்று நம்புகிறேன். நீங்கள் அவைகளைப் படிப்பதற்கு முன்பு சிறையைப் பற்றிய இன்னும் சில விபரங்களைக் குறிப்பிட்டு விடுகிறேன். சிறை அதிகாரிகள் யார் யார் என்பதும் கைதிகளை எப்படிக் கண்காணிக்கப்படுகிறது என்பதும் தெரிந்துகொள்ள வேண்டியவை யல்லவா ?
ஜெயில் சூப்பரின்டெண்ட்:
மாதம் ஐநூறு ரூபாய் வரையிலே சம்பளம் பெறக் கூடிய இவரது பொறுப்பிலேதான் சிறையின் முழு நிர்வாகமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஜெயிலர்:
இவரது மாதச் சம்பளம் சுமார் 300 ரூபாய். இவர் சூப்பரின்டெண்ட்டுக்கு அடுத்தபடியாக சிறை அதிகாரத்தில் அங்கம் வகிக்கிறார். காலையில் சிறையைத் திறக்கும் பொறுப்பு அவருடையதுதான்.
டிப்டி ஜெயிலர் :
பதவிப் பெயரிலிருந்தே இவரும் ஜெயிலருக்கு அடுத்தபடியான கௌரவம் வாய்ந்தவர் என்பது தெளிவாகும்.
கேம்ப் ஜெயிலர் என்றும், இன்டர்வியூ டிப்டி ஜெயிலர் என்றும் இன்னும் இரண்டொரு பதவிகள் இருக்கின்றன.
சீப் வார்டர்:
எல்லா வார்டர்களுக்கும், தலைமை வார்டர்களுக்கும் இவர் அதிகாரி. திருச்சி சிறையில் ‘டவர்’ என்று ஒரு இடமிருக்கிறது. அதுதான் சிறைச்சாலைக்கு இருதயம் போல! அங்கே தான் சீப் வார்டர் இருந்து காரியமாற்றுவார்.
ஹெட் வார்டர் :
ஐந்தாறு பெரும் பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையில் பல ஹெட்வார்டர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெரும் பிளாக்கின் முழுப் பொறுப்பும் இவர்களிடமே யிருக்கிறது.
வார்டர்:
நீலத் தொப்பியும், காக்கி சட்டையும் அணிந்திருப்பார்கள். ஹெட்வார்டர்களுக்கு அதேமாதிரி தொப்பியில் இரு ஜரிகைக் கோடுகள் உண்டு. இவர்களுக்கு மாதம் அலவன்ஸ் உட்பட சம்பளம் ஐம்பது ரூபாய்க்குள் தான் கிடைக்கிறது. குடும்பத்தை சரி வர நடத்த முடியாத நிலைமையிலே கஷ்டப்படுகிறார்கள். போதுமான சம்பளம் கிடைத்து – பூரிப்பான வாழ்வு நடத்த அவர்களால் முடியுமானால் இன்னும் உற்சாகத்துடன் கடமை செய்வார்கள். ஹெட் வார்டர் – வார்டர்களின் சம்பளத்தை அதிகமாக்க வேண்டுமென்று காங்கிரசார் சிறையிலிருந்த போது சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு எத்தனையோ மறந்தார்கள் அவைகளில் இதுவும் ஒன்று! சராசரி மனிதன், தன் தேவை பூர்த்தி செய்யப்படும் போது தவறு செய்ய மாட்டான் என்பதை இந்த ஆட்சியாளர் உணந்திருந்தால் கைதிகளின் தொகை இவ்வளவு பெருகியிருக்கமுடியாது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.
காணிக்கை வார்டர்:
சிறையில் வார்டர்களுக்கு அடுத்தபடியாக பதவிவகிப்பவர்கள் காணிக்கை வார்டர்கள் தான். இவர்களுக்கு சம்பளம் கிடையாது. வெள்ளை உடையும் வெள்ளைத் தொப்பியும் உண்டு. வார்டர்கள், வேலை முடிந்ததும் வெளியிலே செல்வதுபோல் இவர்கள் செல்ல முடியாது. காரணம் இவர்களுக்கு வேலை முடிவதே இல்லை. காணிக்கை வார்டர் என்பது உங்களுக்குப் புதிராக இருக்கிற தல்லவா?
கான்விக்ட் வார்டர் (Convict Warder) என்பதுதான் இப்படித் திரிந்து, தேய்ந்து, தெளிந்து – காணிக்கை வார்டராகியிருக்கிறது. மூன்று நான்கு வருடங்களுக்குமேல் தண்டனை பெற்ற கைதிகள் தங்களின் நன்னடத்தையால் சிறைச்சாலையில் பெறுகிற உத்தியோகமிது !
நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரு கைதி மெள்ள மெள்ள ஒரு மேற்பார்வையாளனாக பதவி பெறமுடியும். ‘ஓவர் சீயர்’ என்று அந்த உத்தியோகத்துக்குப் பெயர். வெள்ளைத் தொப்பியும் – கால் சட்டையும் – அரைக்கை சட்டையும் அவனது உடுப்பு! அவனது பார்வையிலே பல கைதிகள் கண்காணிக்கப்படுவார்கள்.
சிறுகச் சிறுக ஓவர்சியருக்குப் பதவி உயர்ந்து, அழகான வெள்ளைத் தொப்பியும் – வெள்ளைக் கோட்டும், நீண்ட வெள்ளைக் காலுறையும் தரப்பட்டு – ‘கான்விக்ட்’ வார்டராக மாறிவிடுவார்கள். ‘ஓவர்சீயர்’ இரவு நேரத்திலே கூண்டிலே அடைபட வேண்டும். ‘கான்விக்ட் வார்டர்’ – அதாவது கைதி வார்டர் கூண்டிலே அடைபடத் தேவையில்லை. ஆனால் இரவு நேரங்களில் மாறி மாறி – குறிக்கப்பட்ட கால அட்டவணைப்படி – பிளாக்குகளில் – மதிற் சுவருக்குப் பக்கங்களில் – காவல் புரிய வேண்டும்.
திருச்சி சிறையிலுள்ள கான்விக்ட் வார்டர்கள் பெரும்பாலும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தான். ஆயுள் தண்டனை என்பது இருபது ஆண்டு!
ஆனால் – அவர்கள் நடந்து கொள்ளும் முறை – திருந்திய நடவடிக்கை அயராத உழைப்பு இவைகளின் காரணமாக அவர்களுக்கு ‘நாட் கழிவு’ தரப்பட்டு இருபதாண்டுகட் குள்ளாகவே விடுதலையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும்பாலும் தூக்கு மேடையிலிருந்து திரும்பியவர்கள் தான்! தூக்கு மேடைக்கு செல்லும் கைதிகளுக்காக ஒரு தனி இடம் இருக்கிறது. அதற்குப் பெயர் ‘கண்டம்’ என்கிறார்கள். அதுவும் திரிந்து தெளிந்த பெயர்தான் ! Condemned Prison என்பது தான் கண்டம் என்று மாறியிருக்கிறது. அங்கு வந்த மனிதனுக்கு ஒரு கண்டம் இருக்கிறது என்பதை அது குறிப்பதால் திரிந்த பெயரும் ஒருவாறு பொருந்தும்! அந்தக் கண்டத்தில் தான் ஒரு காலத்தில் அண்ணாவும், பெரியாரும் பத்து நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். கண்டத்திலேயிருக்கும் கைதிகள் தனித்தனியே தான் வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு காவல் உண்டு. அதற்குப் பக்கத்திலேயே சிறிது தூரத்தில் தூக்குமேடையுமிருக்கிறது. நாங்கள் சென்ற பிறகு-எட்டு குற்றவாளிகள் அந்த மேடை மூலம் உலக விடுதலை பெற்றிருக்கிறார்கள். மிகவும் சோகமான செய்தியொன்று ! ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தது. அவன் அதையும் மறுத்து அப்பீல் செய்தான். அப்பீலில் அவனுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்து விட்டது. அவன் நிலைமை எப்படியிருக்குமென்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அக்டோபர் மாதம் 15ந் தேதி சூரியனைக் காணாமலே அவன் தூக்குக் கயிறை முத்தமிட்டுவிட்டான். ஒருநாளில் ஐந்துபேர் தூக்கிலிடப்பட்டார்கள். தேரழுந்தூரைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.
கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்ற கான்விக்ட் வார்டர்கள் சிறைச்சாலைக்குள்ளே மற்றவர்களோடு மிகவும் நன்றாகப் பழகுகிறார்கள் . திருந்தி நடக்க வேண்டும் என்ற ஆசையோடு காலத்தைக் கழிக்கிறார்கள்.
குடிவெறியில் கொலை செய்தவர்கள் கற்பு தவறிய மனைவியைக் கொலை செய்தவர்கள்-பங்காளிகளைக் கொலை செய்தவர்கள் -நிலத் தகராறுகளால் கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள் எதிரிகள் கொடுத்த தொல்லையால் கொலை வெறிக்குத் தூண்டிவிடப்பட்டவர்கள் – ஆகிய வர்களைத்தான் அதிகமாகக் காணமுடிகிறது சிறைச்சாலைகளில்!
இருபது ஆண்டு தண்டனை சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந் து விடுகிறது- நாற்பது வயதுக்கு மேற்பட்ட மனிதனாகத்தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை!
வாலிபத்தைக் கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால் வாழ்வின் சுகத்தை இனிமேல் – அனுபவிக்க முடியாது என்ற பருவத்திலே சக்கை மனிதனாக அவனை சிறைச்சாலை வெளியே உமிழ்கிறது! ஆயுள் தண்டனையை விட மரண தண்டனை எவ்வளவோ மேல் தான்!
ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், வெளியில் வந்த பிறகு புதிய மனிதர்களாக மாறி – கொலை வெறியைத் தடுக்கும் கொள்கைக்காகப் பாடுபட்டார்களேயானால்- ஒரு கொலையால் வந்த பழியை பல உயிர்களைக் காப் பாற்றுவதின் மூலம் போக்கிக்கொள்ளலாம். அதை விட்டு வெளியில் வந்ததும் – “என்னிடம் யாரும் வாலாட்டக் கூடாது – நான் கொலைக் கேசில் ஜெயிலுக்குப் போன வனாக்கும்” என்று மீசையை முறுக்கித் தோளைத் தட்டிக் கொண்டு நின்றால் அது வீரமுமாகாது – விவேகமு மாகாது! கோழைத் தனத்தின் கூக்குரலாகவே கருதப்படும்.
எதைப் பற்றியோ பேச வந்த நாம் – எங்கேயோ உபதேச காண்டத்திற்குப் போய்விட்டதுபோல் தெரிகிறது. திரும்ப நம்மிடத்திற்கே வருவோம். இப்போது சிறைச்சாலையில் உள்ள அலுவலாளர்களைப்பற்றி ஒருவாறு புரிந்து கொண்டோம். கொலைக் குற்றத்தால் தண்டனை பெற்றவர்கள் நிலையையும் அறிந்துகொண்டோம். கொள்ளைக் குற்றம் – கள்ளக் கையெழுத்து – பிக் பாக்கெட் அரசாங்க மோசடி இவைகளில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்கள். இப்போது திருச்சி சிறை யில் உள்ள கைதிகளில் மிகப் பெரும்பாலோர் பாதிக்கு மேற்பட்ட தொகையினர் மொத்தம் மூவாயிரம் கைதிகள் என்பதைக் குறைக்காமல் போக்கு வரத்துக் கைதிகளாக இருப்பவர்கள் சாராய வழக்கில் ஈடுபட்டவர்கள் தான். இன்று நூறு சாராய வழக்கு கைதிகள் விடுதலையானால் – நாளைக்கு நூற்றி ஐம்பது சாராய வழக்கு கைதிகள் உள்ளே நுழைகிறார்கள். காங்கிரஸ் சர்க்காரின் ‘மதுலிலக்கு’ நாற்றமடிக்கும் காட்சி சிறைச்சாலையைப் பார்க்கும்போது தான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
மதுவிலக்கினால் பதினேழு கோடி ரூபாய்களில் வரி நஷ்டம் மட்டுமில்லாமல் – மதுவிலக்குப் போலீசார் சம்பள விரயமும் – கள்ளச்சாராயம் காய்ச்சுவோரைப் பிடிக்க செலவழியும் தொகையும் பிடிபட்ட கைதிகளுக்கு சிறைச்சாலையில் உணவளிக்க ஏற்படும் செலவும் எங்கு போய் நிற்கும் என்பது தெரியவில்லை ! இவ்வளவு செலவழித்தும் சட்டம் உடையாமலிருக்கிறதா என்று பார்த்தால் – அதுவுமில்லை; அய்யோ பாவம் – துண்டு துண்டாக – செதில் செதிலாக – அணு அணுவாக- மதுவிலக்குச் சட்டம் மரணப் படுகுழியில் பிய்த் தெறியப்பட்டுக் கொண்டே யிருக்கிறது.
“மதுவிலக்கை வாபஸ் பெறாதீர்கள்! கள்ளச் சாராயம் காய்ச்சும் புதிய குடிசைத்தொழில் கெட்டு விடும்” என்று புரட்சிக்கொடி ஏந்துகிற அளவுக்கு ஒரு பெரிய வர்க்கம் உற்பத்தியாகி நிற்கிறது!
இந்த லட்சணத்திலே யிருக்கிறது ‘மதுவிலக்கு ‘ சட்டம். அரசாங்க நிர்வாக யந்திரத்தின் திறமைக்கு இது ஓர் நல்ல அத்தாட்சி?
ஒரு நாடு நலமுற சட்டங்கள் இயற்றுவது மட்டும் போதாது! அதை அமுல் நடத்தும் திறமை மிக்கவர்கள் அதிகாரத்தில் அமரவேண்டும். அந்த நிலைமை ஏற்படும் வரையிலே கண் துடைப்பு சட்டங்களால் பயன் நிச்சயமாக இல்லை. இதைத்தான் திருச்சி சிறைச்சாலையிலும், மற்ற சிறைச்சாலைகளிலும் நிரம்பி வழியும் மது காய்ச்சிய குற்றவாளிகளின் தொகை- மந்த புத்தியினருக்கு நினைவுறுத்துகிறது.
அடடா! மறுபடியும் எங்கேயோ – போய்விட்டோமே! எதையெடுத்து விவரித்தாலும் இறுதியில் அரசாங்கத் திடம் தான் போய் நிற்கிறது என் செய்வது! நாட்டின் நன்மை தீமைகளுக்கு அரசோச்சுகிறவர்கள் தானே பொறுப்பாளிகள். ஆகவே நாம் அந்த இடத்திற்குப் போய்விடுவதில் ஆச்சரியமில்லை.
சரி, மீண்டும் சிறைச்சாலைக்கே வருவோம். சிறையில் நுழையும் கைதிகளுக்கு சிறையின் சட்ட திட்டங்கள் வசதிகள் பற்றி – வெளியிலேயுள்ள ‘குவாரண்டைனில்? குறிப்பிட்டிருக்கிறார்கள் என் று முன்பு சொன்னேன். இதை நீங்கள் படித்துக் கொண்டால் சிறைச்சாலையைப் பற்றிய முழு விபரங்களை கூடியவரையில் பெற்றுவிடுவீர்கள். பிறகு நமது கதையைத் தொடங்குவோம். இதோ படியுங்கள்! நான் மொழி பெயர்த்து -ராஜன் சுவற்றில் தீட்டியது இதுதான்!
நினைவுக்கு!
‘குவாரண்டைன்’ இதுதான். இங்கு நீங்கள் பத்து நாட்கள் வைக்கப்படுவீர்கள். இங்கே நீங்களும் உங்கள் சகோதரக் கைதிகளும், வியாதியிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். டாக்டர்கள் கடமை புரிய ஒத்துழையுங்கள். அவர்கள் நோய் நீக்கப் பாடுபடுகிறவர்கள்.
கவனிக்க!
எந்த வேலையை விரும்புகிறாய்? தச்சுவேலையா? தறிவேலையா? தையற் தொழிலா? புத்தகம் தைப்பதா? பயிர்த் தொழிலா? பாய் பின்னுவதா? தேவையானதைத் தேர்ந்தெடு. வெளியிலே நீ செய்த வேலையையும் இங்கே விரும்பும் வேலையையும் சிறையதிகாரியிடம் கூறு. அவர் உனக்கு நல்ல வேலை வழங்குவார்.
கண்ணான நேரம் – பொன்னான வாய்ப்பு!
நீ படிக்க விரும்புகிறாயா? பள்ளியுண்டு சிறையிலே! ஆங்கில தமிழ் நூல்கள் நிறைந்த புத்தக நிலையம் உண்டு. உள்ளங் கவர்ந்த ஆசிரியர்களின் ஏடுகளை நீங்கள் தேர்ந் தெடுக்கலாம். எழுத படிக்க கற்க முடியும். அவ்வழி செல்ல ஆசிரியரை நாடுக பொன்னான இவ்வாய்ப்பை இழக்காதீர்கள். சிறந்த மனிதர்கள், சிறையிலே தான் பல கருத்துக்களை பெற்றிருக்கிறார்கள்.
[குறிப்பு: வாசகசாலையையும், பள்ளியையும் பெரும்பாலும் அரசியல் கைதிகள் தான் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது ஆர்.]
உடைகள் :
உனக்கு இரண்டு ஜோடி துணிகளும், ஒரு படுக்கையும் தரப்படும். உடைகளை ஒன்பது மாதங்கள் வரையில் உபயோகிக்க வேண்டும். அவைகளை சுத்தமாகவும், கால வரையறைக்குமேல் உழைக்க கூடியதாகவும் வைத்துக் கொண்டால், அதற்காக தனி நாட்குறைப்பு உண்டு. இந்த சலுகைக்கு நாங்கள் ஆக்கம் தருவோம். வேண்டு மென்றே உடைகளை வீணாக்கினால் தண்டனை உண்டு என்பதை மறவாதே. முதல் அறிவுரையையே நீ பின் பற்றுவாய் என்பது உறுதி.
பேட்டியும் கடிதமும் :
ஒவ்வொருவரும் நண்பர்களையும், உறவினர்களையும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பேட்டி காணவும் – மாதம் இருமுறை கடிதங்கள் எழுதவும் வந்த – கடிதங்களைப் பெறவும் அனுமதிக்கப் படுவார்கள், தனி சலுகையும் தரப்படும். ஆனால் கண்ணியமாய் நடப் பவருக்கே இந்த சலுகை என்பதை மறவாதே.
நாட்குறைப்பு :
நாட்குறைப்பு என்பது உன் தண்டனை காலத்தைக் குறைப்பதெனப் பொருள். மூன்று மாதமும் அதற்கு மேலும் கடுங்காவல் தண்டனை பெற்றவர்களுக்கு நன்னடைத்தைக்காக இரண்டு நாட்களும், நல்ல ஊழியத் திற்காக இரண்டு நாட்களும், ஆக மாதம் நான்கு நாட்கள் குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதுவுமன்றி தொடர்ந்து பனிரெண்டு மாதங்கள் எவ்வித குற்றமும் புரியா திருப்பின் தண்டனையில் பதினைந்து நாட்கள் குறையும். அதற்காக முயற்சித்து அதிகப்படியான பயன்பெறுக. பயனுள்ள பணிபுரிவோருக்குமுப்பது நாட்கள் – நாட்குறைப்பு கிடைக்க வசதியுண்டு.
உத்தியோக உயர்வு :
கைதிகள் பலவாறு பிரிக்கப்படுகிறார்கள். அவர் கட்கும் உத்தியோக உயர்வு உண்டு.
அறுபது நாள் நாட்கழிவு பெற்ற நல்ல ஊழியரும், – சிறந்த பண்புடையவரும் இரவுக் காவலராகவோ – (வாட்ச்மேன்) ஊழியரை மேற்பார்வை யிடுபவராகவோ உயர்த்தப்படுவார்கள், இரவு காவலனுக்கு மாதத்தில் ஐந்து நாட்களும், மேற்பார்வையாளனுக்கு ஆறு நாட்களும் தண்டனை காலத்தில் விடுமுறையாகக் குறைக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவிலும் ஆறுமாதகாலம் அலுவல் பார்த்தவருக்கு, கைதி வார்டர் (கான்விக்ட் வார்டர் ) என்ற உயர்ந்த உத்தியோக உயர்வு உண்டு. அவர்கட்கு மாதத்தில் எட்டு நாட்கள், “நாட் கழிவு” தரப்படும். ஆனால் – நல்லவன், நம்பிக்கையானவன், நாணயமுள்ளவன், என்பதை நிரூபிக்க வேண்டும். இதைப் பெறும் வாய்ப்பை நீங்கள் விரும்பத்தான் செய்வீர்கள்.
ஆலோசனை மன்றம் :
குறிப்பிட்ட கைதிகளை தண்டனை காலத்திற்கு முன்பு விடுதலை செய்வதுபற்றி – மூன்று மாதத்திற் கொருமுறை கலெக்டரும், செஷன்ஸ் ஜட்ஜும், உத்தியோகப் பற்றற்ற உறுப்பினரும் கூடி ஆலோசிப்பார்கள், இரண்டு ஆண்டும், அதற்கு மேலும் தண்டனை பெற்று அதில் முக்கால் பாகம் அனுபவித்தவர்களைப் பற்றி கவனிக்கப்படும். ஆனால் ஒழுங்கான நடவடிக்கையுள்ள கைதிகளைப் பற்றித்தான் இந்த மன்றம் சிந்திக்கும். கண்ணியமுடன் நடந்து- அதிகக் கவலை யெடுத்து இந்த அனுகூலத்தை அடைவாயாக.
நீ நோயாளியா?
இங்கே வசதி நிறைந்த வைத்தியசாலை உண்டு. உன் பிணியைப் பற்றி அக்கரை காட்டும் டாக்டர்கள் உண்டு. அமைதியாயிருந்து – அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்! – போலி வியாதிகளை மிகைப்படுத்துவோர் தண்டனைக்கு உட்படுவார்கள்.
நம்நாடு. விரும்புகிறது – பலமான உடல்களையும் – பரந்த உள்ளங்களையும்!
குறிப்பு:[இதுபோன்ற குறிப்புகள் இன்னும் சில உள. குவாரன்டைனில் ! குவாரன்டைன் என்பது – தண்டனை பெற்ற கைதிகளை பத்து நாட்கள் வைத்திருக்கும் சிறைச்சாலையின் திண்ணை போல]
பேச்சு மன்றம்
“பேச்சு மன்றம் ஒன்று உங்கள் ராஜ்ஜியத்திலே ஆரம்பித்தீர்களே; அது என்னவாயிற்று? என்று கேட்க நீங்கள் துடிக்கிறீர்கள். அது பல பேச்சாளர்களைத் தயாரித்தது. பெரிய மேடைப்பிரசங்கிகள் ஆகாவிட்டா லுங்கூட தங்கள் தங்கள் ஊர்களில் கொள்கையைத் தெளிவாகச் சொல்லும் பிரச்சாரகர்கள் உற்பத்தி செய்யப்பட்டார்கள். மாவட்டத்திலே ‘பயிற்சி முகாம்’ அமைப்பது என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது செலவாகும். அதுவும் ஒரு வாரம் நடத்த முடியும். இப்போது அரசாங்க செலவிலேயே இரண்டு மாதகாலம் பயிற்சி முகாம் நடத்திடக் கூடிய நல் வாய்ப்பை இழக்க முடியுமா என்ன?
“கடவுள் உண்டா? இல்லையா? என்பது பற்றி முதல்நாள் பல நண்பர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். உண்டு என்று சிலரும், இல்லை என்று சிலரும் வாதிட்டார்கள். இல்லையெனும் எண்ணமுடையவர்களே உண்டு என்னும் வாதத்தை சிறப்பாக நடத்தினார்கள்.
‘ஒரு கடவுள் உண்டு’ என்ற கொள்கையை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துரைக்கவில்லை என்றாலுங் கூட – கடவுள் பற்றிய விவாதத்தை, ஆராய்ச்சியை நிகழ்த்துவதிலே அதற்குத் தடையொன்றுங் கிடையாது. கடவுள் பெயரால் சீரழிக்கப்படும் பொருளாதார நிலை பற்றியும் – அதைத் தடுப்பதற்கான வகை பற்றியும் தீர யோசித்து முடிவு காணுகிற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான்!
கடவுள் உண்டென வாதிட்ட ஒரு தோழர் கூறினார்;
“கடவுள் இல்லை யென்போர் காட்டுமிராண்டிகள்” என்று!
இந்தப் பட்டத்தை கடவுள் உண்டென்போர் மிகத் தாராளமாக சூட்டிவிடுவது நாடறிந்த உண்மை. அந்த உண்மையிலும் ஒரு உண்மையிருக்கிறது.
கடவுள் இல்லையென்போர் காட்டுமிராண்டிகள் என்றால் காட்டு மிராண்டிகள் காலத்திலே கடவுள் இல்லையென்பது உண்மையாகிறது. ஆகவே ஆண்டவன் அநாதி காலந்தொட்டு இருப்பவன் என்ற கூற்று பொய்யாக்கப் படுகிறது. அவர்கள் மொழியாலேயே! ஆதி மனிதன் கடவுளை வணங்கவில்லை. வளர்ந்த மனிதன் தான் கடவுளைப் படைத்தானே தவிர – கடவுள் மனிதனைப் படைக்கவில்லை யென்ற பேருண்மையும் வெளியாகிறது. “வளர்ந்த மனிதன் ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தான் – காட்டுமிராண்டி ஆகாய விமானம் கண்டு பிடிக்கவில்லை. அவன் மூடன்!
வளர்ந்த மனிதன் புத்திமான் ! மூடன் ஆகாய விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை யென்பதற்காக ஆகாய விமானமே பொய் என்று கூறமுடியுமா? மூடன் கடவுளைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால் கடவுள் இல்லை யென சொல்லமுடியுமா?” என்ற கேள்வியை ஆத்திகர் எழுப்பக்கூடும்.
அதற்கு ஒரே பதில் –
ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்பட்டதல்ல! செய்யப்பட்டது! ஆகவே அது மனிதனுக்கு முன்பே இருக்க நியாயமில்லை. ராமாயண பாரத காலங்களிலே யிருந்ததாகச் சொல்லப்படும் வானவூர்திகள் கூட மனிதனுக்குப் பிறகு மனிதனால் செய்யப்பட்டவைதான். அது போலத்தான் கடவுளும் மனிதனால் செய்யப்பட்டார். சிருஷ்டிக்கப்பட்டார். பயத்திலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள மனிதன் போட்ட ஒலம் தான் கடவுள்! இப்போதும் கடவுளை நினைப்பவன் “கடவுள் துணை ” என்று நினைப்பதிலிருந்தே – துணைக்காகப் பயன்படுத்தப்பட்ட – பயத்திலிருந்து விடுபட உபயோகிக்கப்பட்ட ஒரு ஆறுதல் சொல் தான் கடவுள் என்பது வெள்ளிடைமலை.
நாம் அந்த சொல்லுக்கு விரோதிகளல்ல! அந்தச் சொல்லை வைத்துக்கொண்டு சுரண்டிப் பிழைப்போர் – அந்தச் சொல்தான் மக்களை சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் எனக் கூறி சூது நடுத்துவோர் – அந்தச் சொல்லை உச்சரித்து இவ்வுலகில் ஏற்படும் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டு தவளைபோல், எலிபோல் வாழ வேண்டுமென உபதேசிப்போர் வறுமையின் தென்துருவமும் – செல்வத்தின் வடதுருவமும் அந்தச் சொல்லின் மகத்துவம் – ஆகவே இரு துருவங்களும் ஒன்றாக முடியாது – அப்படி ஒன்றாக்க முயற்சிப்பது அந்த சொல்லுக்கு விரோதம் எனக் கதை கட்டும் காவியுடைப் பண்டாரத்தார் – ஆகியவர்கள் தான் நமக்கு விரோதிகள்.
அருமையான வைரம் அதைத் தற்கொலை செய்து கொள்ள ஒரு சமுதாயம் பயன்படுத்துகிறது என்றால் வைரமானாலும் பரவாயில்லையென்று உடைத்துக் கடலிலே எறியவேண்டியதுதானே! –
சுவையான சொல்லாயிருக்கலாம் கடவுள் என்பது! தற்கொலைக்கு உபயோகமாகும் வைரமாக மாறும்போது என்ன செய்யமுடியும்?
இந்தக் கேள்வியை எழுப்புவதுதான் நாத்திகவாதமாம் – நாமெல்லாம் நாட்டுக்கு கேடு தருபவர்களாம்!
நாடாளும் ஆச்சாரியார் சொல்லுகிறார், நம்மையெல்லாம் நசுக்கவேண்டுமென்று ! அவர் பக்தகோடிகளும் அதையே சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் பக்தி சிரத்தையோடு பின்பற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். சிறைச்சாலை யிலே ஒரு புத்தகம் எழுதுகிறார் பண்டிதர். அதன் பெயர் உலக சரித்திரம். அதிலே ஒரு பகுதியைக் குறிப்பிடுகிறேன் – கவனியுங்கள்.”
இந்தியாவில் அக்பர், ஆட்சி நடத்துகிறார். அவர் எம்மதத்தையும் விரோதித்துக் கொள்ளாமல் ராஜ்ய பரி பாலனம் புரிகிறார். அப்போது அவரை தமது மதத்தில் சேர்ப்பதற்காக ஏசு சங்கப் பாதிரிகள் வருகிறார்கள். அவர்களை அக்பர் சில கேள்விகள் கேட்டு மடக்கிவிடுகிறார். ஏசு சங்கப் பாதிரிகள் அக்பரைப் பற்றி ஒரு குறிப்பு தருகிறார்கள்.
“எல்லா நாஸ்திகருக்கும் பொதுவான குற்றம் அக்பரிடத்திலும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்களுடைய பகுத்தறிவை மத நம்பிக்கைக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள். மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையெல்லாம் குறைபாடுள்ள தங்கள் அறிவாராய்ச்சிக்கு உட்படுத்துகிறார்கள்.”
இதுதான் பாதிரிமார்களின் குறிப்பு. அந்தப் பாதிரிகளின் கருத்து பற்றி பண்டிதரின் கருத்து என்ன தெரியுமா?
”ஒரு நாத்திகனுக்குரிய லக்ஷணங்கள் மேற் கூறியவைகள் தான். என்றால் அக்தகைய நாத்திகரின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே ஒழிய வேறில்லை “
இதுதான் பண்டிதர் நேருவின் கருத்து ! சிறையிலிருக்கும் போதுள்ள கருத்து! சிம்மாசனம் ஏறிய பிறகு அல்ல! அவர் அதை மறந்தார் மதுரை மீனாட்சி – ஆலயத்தின் தங்க மயிலைக் கண்டு மகிழ்ந்தார்.
ஷாஜஹான் காலத்திலே செய்யப்பட்ட மயிலாசனம் எழைகளின் வியர்வை என்று எழுதினார் தமது நூலில்! மதுரை போன்ற திருப்பதிகளிலே முடங்கிக் கிடக்கும் மயிலாசனங்கள் யாருடைய வியர்வை என சொல்லிடும் துணிவை இப்போது இழந்தார்! காரணம்-முன்பு கைதி! இப்போது பிரதமர்!
அவர் மறந்ததை அவருடைய சொல்லாலேயே நாம் நினைவூட்டுகிறோம். பகுத்தறிவை மத நம்பிக்கைக்கு கீழ்ப்படுத்த மறுக்கிற நாத்தீகம், தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே ஒழிய வேறில்லை.
இது, பண்டிதரின் பொன்மொழி! பகவத் சிரோண்மணிகளே! பஜகோவிந்தப் பித்தர்களே ! பகுத்தறிவு வாதிகளின் ‘புன்மொழி’ யல்ல! பண்டிதரின் பொன் மொழி!
மறு மலர்ச்சி
மூழ்கு! மூழ்கு! ஆழமாக மூழ்கு! மூச்சடக்கி மூழ்கு! இன்னும் மூழ்கு! முத்து கிடைக்கும்.
பேசு! பேசு! பலமுறை பேசு! நாப்பழக்கம் ஏற்படும்! நன்றாகப் பேசுவாய்! ஆனால் கிளிஞ்சல்களை வாரி இறைக்காதே!
ஒவ்வொரு பேச்சு மன்றத்திலும் இதைத் தவறாமல் சொல்லி வந்தேன். உரையாடலில் கலந்துகொண்ட தோழர்கள் ஒவ்வொருவரும் ஒளிபெறு வைரங்களாகவே மாறினர். ஒருநாள் ‘மறுமலர்ச்சி’ யென்னும் பொருளிலே நண்பர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டார்கள். பேசும் தோழர்களில் G. நாராயணசாமி என்றொருவர்! அவர் பேச எழுந்ததும் பேச்சு மன்றம் ஒரேயடியாக சிரிக்கும். ஆரம்பப் பேச்சாளர் தான்! ஆனால் ஆர்வம் கொழிக்கும் குள்ளமான அந்த உருவம் கையையும் உடம்பையும் ஆட்டிப் பேசும்போது கால்முளைத்த கத்தரிக்காய் போல இருக்கும்! பேசும் பொருளைவிட அபிநயத்திலே அதிக நகைச்சுவை பொதிந்து கிடக்கும்.
ஆகஸ்டு 19ந் தேதியென்று கருதுகிறேன்; அனறு தான் ‘மறு மலர்ச்சி’ பற்றி விவாதிக்கப்பட்டது. எங்கள் மன்றத்திலே ! ஜூலை 18 லிருந்து ஆகஸ்டு 19 வரை வேறு எதையும் பற்றி விவாதிக்கவில்லையா என்று கேட்கத் தோன்றும். ஒவ்வொருநாள் மன்றத்திலும் எத்தனையோ விஷயங்களைக் குறித்து விவாதித்தோம்.
உலக சூழ்நிலைபற்றியும் – ஒவ்வொரு நாட்டின் சுதந்திரக் கிளர்ச்சிகள் பற்றியும் நமது சுழகக் கோட்பாடுகள் பற்றியும் வேறு கட்சிகட்கும் நமக்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும் ஒவ்வொரு நாளும் கூடுகிற மன்றத்திலே விவாதிக்கப்பட்டது.
முன்னூறுக்கு மேற்பட்ட கேள்விகள் கொண்ட வினாத்தாள் ஒன்று தயாரிக்கப்பட்டு மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்தாற் போல் அந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்விலே யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பதற்காக அல்ல; தெளிவு பெற வேண்டும் என்பதற்காக! ஒன்று சொல்ல மறந்து விட்டேன் – இப்போது வாய்ப்பு ஏற்படும்போது சொல்லிவிடுகிறேன். எங்கள் நானூறு பேரோடு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருபது தோழர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் பள்ளி மறியலில் ஈடுபட்டு சிறையில் சில வாரங்கள் இருந்தார்கள். அவர்களும் பேச்சு மன்றங்களில் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள்.
அந்த திராவிடர் கழகத் தோழர்களுடன் ராஜன் என்ற ஒரு பார்ப்பன நண்பரும் பள்ளி மறியல் செய்து சிறைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னூறு கேள்விகளும் கேட்கப்பட்டு – அதற்குரிய பதில்கள் சொல்லப்பட்டதும் – அந்தப் பதில்களை விளக்கி உரையாற்றப்பட்டதும் – பெரிதும் பயனுடைய தாயிருந்தது எனத் தோழர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். சில கேள்விகள் தோழர்களை திகைப்புறவும் செய்துவிட்டன. அதற்கு உதாரணம் தருகிறேன்.
ஜூலை 14ம் நாள் ஆச்சாரியார் வீட்டு மறியலுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட தோழர் சம்பத், ஏன் அந்த நாளில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார்?
இந்தக் கேள்வியைக் கேட்டதும் மன்றம் ஸ்தம்பித்து விட்டது, ஒரு விநாடி! சம்பத் கலந்துகொள்ளவில்லையா? என்ற சந்தேகக் குறிகள் அவர்கள் முகங்களில் தோன்றிவிட்டன.
“அவர் 13ந் தேதியே கைது செய்யப்பட்டு விட்டார். அதனால் கலந்துகொள்ளவில்லை!” என்று ஒரு தோழர் கூறியதும் தான் மன்றத்தினரின் திகைப்பு மாறியது.
“வயதான காலத்தில் திருமணம் செய்துகொண்ட மந்திரி யார்? ” என்று ஒரு வேடிக்கை கேள்வி கேட்டேன் ! மந்திரி என்று கேட்டதை மறந்துவிட்டு எல்லோரும் “பெரியார்” என்று கூறிவிட்டார்கள். பிறகுதான் “தேஷ்முக்” என்ற பதில் வந்தது!
சிறையின் கொடுமையைப் போக்கிக்கொள்ள வேடிக்கையும், கொஞ்சம் வேண்டியதுதானே!
எங்கேயோ போய்விட்டோமே ‘மறுமலர்ச்சி’யை விட்டு விட்டு! நாம் மறுமலர்ச்சியை விட்டுவிட்டுப் போனது போலவே மறுமலர்ச்சியும் பல நாடுகளை விட்டுவிட்டுப் போவதும் பிறகு தோன்றுவதுமாயிருந்து வருகிறது.
குமுறல் – கொந்தளிப்பு அறிவுத் தேக்கம் – மத வெறி – அரசுகளின் அக்கிரம ஆட்டம்-அநாகரீகம் – இவைகளுக்குப் பின்பு பூத்துப் பொலிகிற புதுமைக்கு மறு மலர்ச்சியென்று செல்லப் பெயரிட்டழைக்கிறோம்.
வாழ்ந்த நிலை வீழ்ந்த நிலை மீண்டும் வாழ்ந்திடும் நிலை. இந்த மாற்றமுடியாத மாறுதல் சக்கரத்தைப்போல் சுழன்றுகொண்டேயிருந்திருக்கிறது உலகம் பிறந்த நாள் முதல்! மொத்த உலகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு நாம் செல்லாமல் ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு சமுதாயமும் எப்படியெப்படி மறுமலர்ச்சி பெற்றன என்பதை சிறிது காண்போம். எல்லா நாடுகளையும் கூட நாம் ஆராயத் தேவையில்லை. பெரிய நாடுகள் சிலவற்றை நோக்குவோமாயின் அவை மோகன இயல்போடு வாழ்ந்த வரலாறும் – அந்த மலர்ச்சி கருகி மண்மேடிட்டுப் போன சோக சரித்திரமும் – அந்த சரித்திரம் தரும் பாடத்திலிருந்து நாம் பெறவேண்டிய நிலையான அறிவும் தென்படும்.
ரோமாபுரி எத்தகைய கலைப்பண்போடு வாழ்ந்த நாடு ! சீசரும், அண்டனியும் எழுப்பிய சிங்கக்குரல் எங்கே போய்த் தேய்ந்து மறைந்தது ! இத்தாலிய நாட்டுப் பிளாரன்ஸ் நகரம் – மறுமலர்ச்சியின் தாயகம் தாந்தே, பெட்ரார்க் போன்ற மகாகவிகளை உலவவிட்ட பூஞ்சோலை – லியனார்டோ போன்ற சிற்பக் கலைஞர்களை சிருஷ்டித்த பூமி – அந்தப் பெருமைமிகு இத்தாலிய மண், இப்போது உலகின் முன்னே முக்காடு போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பானேன்!
மலர்ச்சியுற்றிருந்து – பிறகு கருகிப்போய் – மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படாமலே பட்டுப் போன பூங்கொடிபோல காட்சியளிக்கும் சமுதாயங்கள் பலப்பல!
அந்த நிலையிலேயிருந்த சீன சமுதாயம் தான் இப்போது செழிப்புடன் பூத்து நிற்கிறது!
ஒரு காலத்திலே கலை, இலக்கியம், ஓவியம், ஆகியவைகளில் சீரும் சிறப்பும் பெற்றிருந்து பின்னர் சீரழிந்தது சீன நாடு. ஏன்? கலை, மக்களுக்காக, சமுதாயத்தின் நிலையைப் பிரதிபலிப்பதற்காக ஆக்கப்படாமல் மகுடமேந்திகளுக்கான கேளிக்கைப் பொருளாக ஆக்கப் பட்டது. சிற்ப இலக்கிய உணர்ச்சிகள் எல்லாம் சிற்றின்ப உணர்ச்சிகளுக்கு முன்னே நிற்க முடியாமல் அரண்மனை ஆடம்பர லாகிரிகளுக்கு முன்னே வாழமுடியாமல் தத்தளித்துத் தடுமாறிச் சாய்ந்தன. சமுதாயக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்த அங்நாள் காவலர்கள் ஆடம்பர கேளிக்கைப் போதையிலே மயங்கியிருந்தார்கள். பிறகு எப்படி நீண்டதோர் பயணத்தை நடத்த முடியும், ரோம் நகரத்துப் பள்ளியறைகளைப் பந்தயத்தில் தோற்கடிக்கும் திறமையுடையனவாய் இருந்தன சீனநாட்டுச் சிற்றின்பக் கூடங்கள், ஒரு காலத்திலே! ‘வீ’ என்று ஒரு அரசி இருந் தாளாம் – செல்வாக்குபெற்ற அரசி. கட்டிலிலே இருந்த மன்னனை ஒரு வரம் கேட்டாளாம்.
அட்டியில்லை கண்ணே! என்ன வேண்டுமென்றானாம் அவன் ! “நம் ஆட்சியின் கீழுள்ள ஆணழகரையெல்லாம் அழைத்து – அவர்கள் எல்லோரினும் சிறந்தவனை என் அந்தப்புரத்துக்கு அனுப்பிவையும்” என்று கேட்டாளாம். வேந்தனும் தலையசைத்தானாம். இன்னொருவன் இருந்தான். சீனாவின் மன்னனாய்! ஷிங் என்று பெயர். கன்பூஷியஸ் காலத்திலே வாழ்ந்தான். அவன் தன் பஞ்சணையிலே வாசனைத்தூளைப் பரப்புவான். ஊரிலே உள்ள வேசிகளையெல்லாம் அழைத்து பஞ்சணை மீது நடக்கச் சொல்லுவான். அவர்களும் நடப்பார்கள். எவளுடைய காலடி, அந்த வாசனைத்தூளின் மீது லேசாகப் பதிந்திருக்கிறதோ அவளுக்கு முத்துமாலைகளைப் பரிசளிப்பான். கனமாகக் கால் படிந்தவர்களுக்கு பட்டினி போட்டு கனத்தைக் குறைப்பான். ஆகா என்ன கவலை நிறைந்த கலா உணர்ச்சி ! சீனப் பெண்களுக்கு பாதங்கள் மெல்லியதாய் இருக்கவேண்டுமென்ற வழக்கமும் அதையொட்டித்தான் வந்தது போலும். பாதங்களைக் கட்டிப் பண்படுத்தும் பழக்கமும் சீனாவில் பரவியது அதனால் தான் போலும், சீன சமுதாயத்தை அழிக்கும் கண்மூடி வழக்கங்களை மண்மூடச் செய்திட கன்பூஷியஸ் என்ற பெரியோன் முயன்றான். அவனுடைய முயற்சி நம் நாட்டுப் பட்டினத்தார் தாயுமானவர் – இராமலிங்கர் ஆகியோரின் முயற்சி போலத்தான் முடிந்தது!
கருகிப் போய்க் கிடந்த அந்த சமுதாயம் சன்யாட்சன் காலத்திலே அரும்பிவிடத் தொடங்கியது! ஆனால் பூரணத்துவும் பெறவில்லை. மீண்டும் அடித்த புயலிலே அரும்பு உதிர்ந்துவிடாமல் காப்பாற்றி – இன்றையதினம் மறுமலர்ச்சியின் காவலனாக வீற்றிருக்கிறான் மாசேதுங்!
இரு நாடுகள் இரு பாடங்கள்!
ரோம் – வாழ்ந்து கெட்டது! மலரவில்லை இன்னும்!
சீனம் சிதைந்தது – இப்போது செழித்தது! மறு மலர்ச்சி அது !
நாம்? திராவிட நாட்டாராகிய நாம்?
வாழ்ந்தோம் – வீழ்ந்தோம் – மீண்டும் தலையெடுத் திருக்கிறோம்! மூன்றுநிலை மாறி மாறி வரும் நிலை! மூன்றாவது நிலை இனிமேல் வீழ்ந்துபடாமல் நம்மால் காப்பாற்றப் படவேண்டிய நிலை!
மூன்று நிலைகளையும் ஓரிரு உதாரணங்களால் விளக்குகிறேன். உலகத்திலே பல்வேறு நாடுகளும் தங்களுடைய சிறப்பை செங்கோலோச்சுவோரின் மூலமாகவே அந்நாட்களில் நிலைநாட்டின என்றாலுங் கூட- அந்த செங்கோலுக்கு பின்னால் மறைந்து நின்ற கலைத் திறமை – இலக்கிய வளம் – விஞ்ஞான அறிவு – ஆகியவைகளை நாம் மறந்துவிடக்கூடாது.
இங்கிலாந்து – அரசர்களாலும் பெருமை பெற்றிருக்கலாம். ஆனால் ஷேக்ஸ்பியர் ஏற்றிவைத்த புகழ்தீபம் என்றும் அணையாத சுடர் கொண்டது. பிரான்ஸ் என்றால் நெப்போலியனின் நினைவு வருவது போலவே – நாடக ஆசிரியர் மோலியேரின் நினைவும் வரத்தான் செய்கிறது. ஹாலந்து குடியரசான கதையைக் காணும் போது ஆரஞ்சு வில்லியம் எதிரே நிற்கிறான். ஹாலந்தின் ஓவிய நிபுணன் ராம் ராண்ட்டும் நிழல்போல ஹாலந்தின் புகழைத் தொடருகிறான்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இலக்கியமும் கலையும் ஓவியமும் – சிற்பமும் ஆட்சியோடு போட்டி போட்டு அந்நாட்டுக்குப் பசுமை குலையாத புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆட்சியோடு சேர்ந்து அந்நாடுகளைப் பாலைவனத் தரையாகவும் ஆக்கியிருக்கின்றன. அதே நிலைமையை நாம் நமது திராவிடத்திலும் காணமுடிகிறது.
பாயும் அருவி – பறக்கும் கிள்ளை அழகு துள்ளும் – மான் – ஆவேசம் அள்ளும் வேங்கை – இவைகளை ஒவியத் திலே சித்தரித்தார்கள்.
அந்நாளில் வீர பரம்பரை நாட்டை ஆண்டுவந்தது!
பிறகு – பாயும் அருவியிலே ஒரு தாமரை ! தாமரை இதழிலே லட்சுமி! பறக்கும் கிள்ளையிலே மன்மதன்! அழகு துள்ளும் மான் அந்த மாய மானைத் துரத்தும் ராமன் – அவனுக்கோர் புராணம்!
இந்நாளிலே பக்திமான்கள் நாட்டைப் பரிபாலித்தார்கள் ! இது இரண்டாவது நிலை – வாழ்ந்து கெட்ட நிலை!
புறநானூறு கையிலே இருந்தது ஒரு நாள் புராண இதிகாசங்கள் இலக்கியமாயின மறுநாள் – எழுத்தெல்லாம் புதுமையெனும் இனிமை, மொட்டவிழ்கிறது இந்நாள்!
ஆயிரம் நீலக்கண்களால் அழகை வாரிக்கொட்டி, மேகத்தைக் கண்டு மோகத்தால் ஆடும் மயிலைத் தீட்டி மகிழ்ந்த சித்திரக்காரன் – எழிலேற்றிக் காட்டிய ஓவியன் – அந்த மயில் மீது முருகனையும் ஏற்றிக் காட்டினான்.
அந்தத் தோகை மயில் மீதிருந்து வேலனை இறக்கி விட்டு ‘ஆடு மயிலே ஆடு’ என்று தூரிகை மூலம் உரிமை வழங்கத் துவங்கிவிட்டது இந்நாள் ஓவிய உலகம்.
இதுதான் மறுமலர்ச்சி மணம் மொண்டு வரும் தென்றலின் நுழைவு வாயில்.
“திங்களைப் போற்றுதும் – திங்களைப் போற்றுதும்.
ஞாயிறு போற்றுதும் – ஞாயிறு போற்றுதும்” என்று துவங்கிய தமிழ் ஒலி, ‘பிறைசூடிப் பித்தனைப் போற்றுதும்’ என்று களங்கமடைந்தது. இப்போது களங்கமடைந்த சமுதாயம் கண் விழிக்கிறது – அதன் அடித்தளத்திலே நின்று கொண்டு திங்கள் வாழ்க! செங்கதிர் வாழ்க!’ என்று குரலெழுப்புகிறான் கவிஞன்!
திராவிடம், தொண்டை கட்டிப்போன இசைவாணன் நிலையிலேயிருக்கிறது.
அதற்கு மருந்து எடுத்துக்கொண்டு ஓடோடியும் வருகிறது மறுமலர்ச்சி இயக்கம். அதன் முன்னணியிலே அண்ணா!
இசைவாணனின் கெட்டுப்போன குரல் சீர்படும் இன்ப மழை பொழியும்!
அதோ மறுமலர்ச்சி உதயமாகிறது. அந்த உதய தாரகையிலே நாம் கனவு காணும் உன்னத சமுதாயம் ஒளிவிடத்தான் போகிறது.
ஜனநாயகம்
சிறை வாழ்வைப்பற்றி எழுதும்போது எங்கள் ராஜ்யத்துப் பேச்சு மன்றத்தைப் பற்றி குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. அதைக் குறிப்பிடும் போது – அங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்களை விளக்க வேண்டியிருக்கிறது. அந்த விளக்கம் என்னையறியாமலே ஒரு கட்டுரையாக மாறிவிடுகிறது. அதுவும் பயன்படலாம் என்ற நம்பிக்கையோடுதான் உங்களிடையே வைக்கிறேன்.
எங்கள் ராஜ்யம் குறைவின்றி நடந்து கொண்டிருக்கும்போது சென்னையிலே அடைபட்ட அறப்போர்த் தலைவர்களும் தொண்டர்களும் வரிசை வரிசையாக விடுதலை பெற்றுக் கொண்டேயிருந்தார்கள். அண்ணாவும் துணைச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், மதியழகன்,
இருவரும் – சிறையிலேயிருந்த காரணத்தால் கழகத்தின் காரியங்களை கவனிக்கும் பொறுப்பாளர் பதவியை தோழர் கோவிந்தசாமி எம்.எல். ஏ., அவர்கள் ஏற்றுக்கொண்டார். இது நமது கழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டம் என்று கூறலாம். தோழர் கோவிந்தசாமி பொதுத்தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டு அதன் ஆதரவு பெற்று வெற்றிமாலை சூடியவர். ஜெய போதையிலே மக்களை மறந்துவிட்டு, பதவி வெறியிலே அற்பர்களாக மாறிவிடும் ஒரு சில அரசியல் மோசடிக்காரர்கள் உலவும் தமிழகத்திலே அவர்களுக்குத் தன் பொன்னான செயல்மூலம் சாட்டையடி கொடுப்பவர் கோவிந்தசாமி. கழகத்தின் முக்கியமானவர்கள் எல்லாம் சிறைக் கூண்டுகளிலே ! வெளியிலேயிருந்த ஒரு சிலத் தலைவர்களும் நாடெங்கும் மின்னல் வேகத்திலே சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைமைக் கழகப் பொறுப்புகளை தாங்கி நடத்திட கோவிந்தசாமி போன்ற தகுதி மிக்கவர்தான் தேவை. பொறுப்பேற்ற கோவிந்தசாமி, கழகத்திலே பல ஆண்டு காலம் இருந்து பழக்கப்பட்ட ஒருவரைப் போலவே கழக நண்பர்களோடு பழகிடவும் – கழக வேலைகளை மும்முரமாகக் கவனித்திடவும் துவங்கினார். கழகத்திற்கு அவர் ஓர் தூணாக மாறிய துமில்லாமல், தி. மு. க. வின் தேர்தல் கொள்கையை நையாண்டி செய்து வந்த கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம் போன்ற கட்சிகளுக்கு அசைக்க முடியாத பதிலாகவும் தன்னை ஆக்கிக் கொண்டார்.
கழகம் மக்கள் மனதிலே விசாலமான இடத்தையும் சரித்திரத்திலே நிலையான இடத்தையும் பெற்றுக் கொண்டு திராவிடத்தின் வீதிதோறும் புது நடைபோட்டு வளர்கிறது என்ற இன்பத்தேனாறு செய்திகளாக உருவெடுத்திடுவது கேட்டு புளகாங்கித முற்றிருந்தது எமது சிறை ராஜ்யம். நான் முன்பே கூறியிருக்கிறேன்; எங்கள் ராஜ்யம் இரண்டுமாத காலம் தான் பரந்து கிடந்தது என்றும் அதன்பிறகு சிறுகச் சிறுக தேய்ந்து விட்டது. என்றும்! அந்தத் தேயும் நிலை ஆரம்பமாகி விட்டது. ஆகஸ்ட் 24ம் நாள் முதன் முறையாக எங்கள் ராஜயம் குறையத் தொடங்கியது. காட்டுப்புத்தூர் வீரர்கள் தோழர் ராசமாணிக்கம் உட்பட இருபதுக்கு மேற்பட்டோர் எம்மைப் பிரிந்து சென்றார்கள். அடுத்த இரண்டு நாட்களில் பொறையாறு அபூபக்கர் முதலிய பல தோழர்கள் ராஜ்யத்தை விட்டு வெளியேறினார்கள். எஞ்சியுள்ள தோழர்களுக்கு விடுதலை உணர்ச்சியைக் கிளப்பிவிடக் கூடிய அந்தப் பிரிவுகளால் ராஜ்யம் சோபையிழந்து விடக்கூடாதே யென்பதற்காக பேச்சு மன்றம், முன்னிலும் வேகமாக பணியாற்றியது. அந்த ஒன்றரை மாத காலத்திற்குள்ளாகவே சில நல்ல பேச்சாளர்கள் தயாரானார்கள். பல திறப்பட்ட பொருள்களின் மீது விவாதம் நடத்தி பேச்சாற்றலை வளர்க்க முயற்சிக்கப்பட்டது.
ஒரு நாள் ‘ஜனநாயகம்’ என்பது பற்றி மிகவும் அருமையாக நண்பர்கள் பேசினார்கள். பேசுவது மட்டுமன்றி ஜனநாயகத்தின் உண்மை உருவத்தையும் ஜனநாயகம் என்ற பெயரால் நாட்டிலே திரியும் போலித் தலைவர்களின் தன்மையையும் ஆராய வேண்டியது – இன்றைய சூழ்நிலையிலே மிக மிக அவசியமான காரியம்.
எந்தச் சொல்லிலும், அதனதன் பெயரிலே மயங்கி விடாமல் அது புரியும் செயலை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உதாரணமாக- கும்பாபிஷேகம் கொள்ளையடித்தல் – என்ற இரு வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம்.
பழையகால மன்னர்கள் கட்டும் கோயில்களில் மூல விக்கிரகம் அமைக்கும்போது அதன் அடியில் விலை உயர்ந்த நவரத்தினங்களை அளவின்றிக் கொட்டி – அதன் மீது விக்கிரகத்தை அமைப்பார்கள், இந்த ரகசியத்தை சில பெரிய மனிதர்கள் உணர்ந்திருப்பார்கள். அந்தப் பழைய காலத்து ஆலயத்தைப் புதுப்பித்து, ‘ஜீரணோத் தாரண மகா கும்பாபிஷேகம் ‘ நடத்தப் போகிறேன் என்று பெரிய வள்ளலைப் போல கிளம்புவார்கள். அவர்களுடைய குறியெல்லாம் மூல விக்கிரகத்தின் அடியிலே அந்தநாள் மன்னர் கொட்டியிருக்கும் நவரத்தினங்களின் மீதுதான். கோயில் பழுதுபார்க்கும் வேலை நடைபெறும். அந்தப் பார்வையினுள்ளே மூல விக்கிரகத்தின் அடிப்பாகம் தோண்டப்பட்டு நவரத்தினங்கள், வள்ளல்களின் வீடு போய்ச் சேர்ந்துவிடும். கிடைத்த லாபத்தில கால் பங்கு செலவிலே – கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். “கொடைவள்ளலே! குணக்குன்றே!” எனப் பக்தர்கள் பாராட்டுவார்கள். கும்பாபிஷேகம் என்ற குளிர்ச்சியான சொல்லிலே திரைமறைவுக் கொள்ளை சுமுகமாக நடைபெற்று விடுகிறது. ஒரு சில கொள்ளைக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கொள்ளையடிப்பதே தொழில். கொள்ளைக்காரர் என்ற பகிரங்கப் பட்டமும் பெற்றவர்கள். அவர்கள் கொள்ளையடித்த பொருள்களை எல்லாம் ஏழைகளுக்கே பங்கிட்டுக் கொடுத்து அதில் ஓர் தனி இன்பம் கண்டிருக்கிறார்கள்.
இரண்டு வார்த்தைகள் கும்பாபிஷேகம் கொள்ளையடித்தல்! கும்பாபிஷேகத்தின் பெயரால் கொள்ளை – கொள்ளையின் பெயரால், கும்பாபிஷேகத்தை விட சிறப்பான செயல்!
இப்போது – ஜனநாயகம் என்ற சொல்லைப்பற்றி யோசிப்போம்! ஜனநாயகம் சர்வாதிகாரம் – கும்பா பிஷேகம் கொள்ளையடித்தல் இந்த வார்த்தைகளையும் பொருத்திப் பார்ப்போம்.
ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் நாடுகள் எத்தனையோ உண்டு! வெகுதூரம் போவானேன்; இந்தியாவிலே எத்தனை ஆதாரம் வேண்டும் அதற்கு! சட்டசபையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மதிப்பு கொடுப்பது தன்னிஷ்டத்தைப் பொறுத்தது என சென்னை மந்திரியார் ஆச்சாரியார் கூற வில்லையா?
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும், மக்கள் முன்பு தேர்தலின்போது நிற்காதவர்களும் கொல்லைப்புற
வழியாக மந்திரி நாற்காலிகளைப் பிடித்துக் கொள்ள வில்லையா? திருவாங்கூர் கொச்சியிலே ஜனநாயகச் சிசு, துடிக்கத் துடிக்க கொல்லப்படவில்லையா?
ஜனநாயகம் – இன்பமான சொல்! அதிலே நஞ்சு கலப்போரும், அந்தச் சொல்லை வைத்துக்கொண்டு போலி நாடகமாடுவோரும் உலகிலே பல நாடுகளில் காணப்படுகிறார்கள்.
இங்கிலாந்தில் சார்லசின் தலையை வெட்டி எறிந்து கிராம்வெல் நடத்திய பார்லிமெண்டு ஆட்சி சிறிதுகாலம் நடைபெற்று – மீண்டும் அரசுரிமைக்கு இடம் ஏற்பட்டு – அரசனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி பார்லிமெண்டு நாட்டையாளத் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பார்லிமெண்டு மக்களின் பிரதிநிதித்துவம் பெற்றதாகவா இருந்தது. கேட்கும் போது சுவையாகத்தானிருக்கிறது – அரசனின் அதிகாரத்தை பார்லிமெண்டு கட்டுப்படுத்தி விட்டது என்ற செய்தியை ! ஆனால் அதனுள் மறைந்து கிடக்கும் உண்மை மகா பயங்கரமானதாயிருக்கிறதே! 1793 ம் ஆண்டு இங்கிலாந்திலேயிருந்த காமன்ஸ் சபையில் 306 உறுப்பினர்கள் இருந்தார்களாம். அவ்வளவு பேரும் மொத்தம் 160 வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்களாம். 306 பேர் 160 பேரால் தோர்ந்தெடுக்கப்படுவது எவ்வளவு ஆச்சரியம் என்கிறீர்களா ? அதாவது 17ம் நூற்றாண்டில் நடந்த ஆச்சரியம் இதோ 20ம் நூற்றாண்டில் யாராலுமே தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மந்திரிகளாக வருகிறார்களே – ஜனநாயக ஆட்சியின் பெயரால் இந்தியாவில்! இது எத்துணை மகத்தான ஆச்சரியம்! கும்பாபிஷேகம் செய்து கொள்ளையடிப்பதை விட பெரிய ஆச்சரியமல்லவா இது!
கும்பாபிஷேகத்தையும் ஜனநாயகத்தையும் ஒன்றாக ஒப்பிட்டுவிட்டேனே யென்று கருதுகிறீர்களா? கும்பாபிஷேகம் நல்ல எண்ணத்தோடு செய்யப்படுவதும் – பக்தர்களால் பாராட்டப்படுவதும் கூட உண்டு! நாம் ஆராயப் புகுந்தது கும்பாபிஷேகத்தின் தன்மையை அல்ல! அதை நடத்துவோரின் குறிக்கோளைத்தான். பக்தர்களுக்கு இனிப்பான வார்த்தை நாசகாரர்களின் நாடகத்திற்கு பயன்படுகிறது. மக்களுக்கு இனிப்பான ‘ஜனநாயகம்’ என்ற வார்த்தை மதோன்மத்தர்களால் பாழ் படுத்தவும் படுகிறது. அழகான மலர்மாலையைப் பிய்த்தெறியும் மந்தியும் உண்டு. காதலியின் கழுத்திலே அணிந்து களிப்படையும் காதலனும் உண்டு. மாலையின் நிலையிலே ஜனநாயகமும், மந்தியின் நிலையிலே ஆட்சியாளரும் இருந்துவிட்டால் அந்த ஜனநாயகம் யாருக்குப் பயன்படமுடியும்!
ஜனநாயகத்தின் பெயரால் கொடுமைகள் நடந்து விடுகின்றன. உதாரணம் சுலபமான உதாரணம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உதாரணம் இந்தியா!
சர்வாதிகாரத்தின் பெயரால் நன்மைகள் மலர்வதும் உண்டு! கொள்ளைக்காரன் ஏழைகளுக்கே உதவுகிறான் என்று பார்த்தோமே அதுபோல!
உதாரணம் தற்காலிகமாக எகிப்தையே எடுத்துக் கொள்ளுவோம்! ஸ்டாலினின் ரஷ்யாவையும் காண்போம்!
தோட்டத்து மலர்கள் அத்தனையும் ஒருவனே பறிப்பது – பறிக்க உரிமை கொண்டாடுவது பறித்த – மலர்களை இப்படித்தான் கசக்கி எறிவேன் என்பது – சர்வாதிகாரம் என்றால், பறித்த மலர்களை பாங்கான மாலையாக்கி, மக்கள் மன்றம் என்ற எழிலோவியத்திற்கு அணிவிப்பது சர்வாதிகாரத்துடன் ஒட்டியிருக்கும், நல் லெண்ணம் நிறைந்த ஜனநாயக உணர்ச்சி என்றுதான் கூறவேண்டும்.
இந்த சர்வாதிகாரம் என்ற வார்த்தையை கொள்ளையடித்தல் என்ற வார்த்தையோடு கூட ஒப்பிடுவது தவறு தான் ! விளக்கம் தெளிவாக இருக்கவேண்டு மென்பதற்காக அந்த உதாரணத்தைக் கையாள நேரிட்டது.
மக்கள் தான் ஜனநாயகத்தை தோற்றுவிக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களும் அதை அழித்துவிடுகிறார்கள். “நாங்கள் வெட்டிய கிணறுதானே ! ஆளுக்கொரு கல் போட்டு தூர்த்து விடுகிறோம் ” என்று கூறுகிற அறியாமையை ஒத்ததாகும் இது. “நாம் வெட்டிய கிணறு தான் ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் எடுக்கத்தான் உரிமையிருக்கிறது – கல்போட எண்ணுவது தவறு அதற்கு உரிமையளிக்கவும் கூடாது” என்ற அறிவுரை யுடன் கற்களைத் தடுப்பதற்காக கிணற்றின் மீது இரும்பு வலை போடுவதும் உண்டு. அந்தத் தற்காப்பு வலை சில நேரங்களில் சர்வாதிகாரம் போன்று தோன்றினாலும் அது ஜனநாயகக் கிணற்றைக் காப்பாற்ற பெரிதும் பயன்படுகிறது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இந்த முறையைத்தான் வருங்காலத்தில் ஜனநாயக ரீதியில் நாடாளப் போகிற திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச் செயலாளர் மூலம் கடைப்பிடித்து நிற்கிறது. இந்தியாவின் ஆட்சியாளரும் ஜனநாயகக் கிணற்றைப் பாதுகாக்கிறார்கள். கிணற்றின் உள்ளே கல் விழாமல் இரும்பு வலை போட்டல்ல! பெரிய இரும்புத்தகடே போட்டு மூடியிருக்கிறார்கள்; கிணற்று நீரை யாரும் கொண்டு விடாமலும் – கிணற்றுக்குள்ளே சூரிய ஒளியும் – காற்றும் சென்றுவிடாமலும் பார்த்துக் கொள்வதற்காக!
பாவம் – ஜனநாயகம் மூச்சுவிடமுடியாமல் அரியலூர் சப் ஜெயில் கூண்டுக்குள்ளே அகப்பட்ட கைதிபோலத் தத்தளிக்கிறது இந்த அகிம்சா ஆட்சியாளரின் கையில் சிக்கிக்கொண்டு!
கல் விழாமல் தடுக்கின்ற இரும்பு வலை போன்ற சர்வாதிகாரமும் தோண்டியவர்களுக்குத் தண்ணீர் வழங்குகின்ற கிணறு போன்ற ஜனநாயகமும் ஒன்றோடொன்று இணைவதில் தவறில்லையென்பதுதான் நாம் தேர்ந்தெடுக்கும் முடிவாயிருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற சர்வாதிகாரம் பூந்தோட்டத்திற்கு வேலி போல!
ஆனால் “வேலியே பயிரை மேய்வது” என்ற பழமொழி பலித்துவிடாமல் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மொழிப்பற்றா – பித்தா?
பேச்சுமன்றம் புதிய புதிய கருத்துக்கள் பற்றி விவாதிக்கவும் விளக்கம் பெறவும் விரிவுரை நிகழ்த்தவும் தன்னைத் தயாராக்கிக் கொண்டது. ‘குறளோவியம்’ பற்றி இரண்டு மூன்று நாட்கள் தோழர்கள் உரையாற்றிய பின் நான் முடிவுரை கூறினேன். குறளின் காமத்துப் பாலின் சுவையை தோழர்களிடம் கூறும்போது – சிறையி லிருக்கிறோம் என்ற எண்ணத்தையும் சில நிமிடங்கள் மறந்து குறளாசிரியரின் வர்ணனையிலே ஆழ்ந்தார்கள். ஒரு தோழர் பேசும் போது குறிப்பிட்டார்; குறளுக்கு சிறப்பு சொல்ல வந்த யாரோ ஒருவர் – வாமனாவதாரன் உலகை இரண்டடியால் அளந்தான் – வள்ளுவனும் இரண்டடியால் அளந்தான் – என்பதாகப் பாராட்டியிருக்கிறார் என்று! அது பற்றி நான் குறிப்பிட்டேன் . வாமனன் இரண்டடியால் உலகை அளந்துவிட்டு, மூன்றாவது அடியை மாபலி என்ற மனிதன் தலையிலே வைத்து அழுத்தினான் ! ஆனால் வள்ளுவன் மனிதன் தலையிலே ஏறிக்கொள்ளவில்லை. மனிதனுக்காக நீதி வகுத்தான் என்று விளக்கிச் சொன்னேன்.
‘நாற்காலி’ என்னும் பொருள்பற்றி ஒருநாள் உரையாற்றினோம். இப்படி எத்தனையோ சொற்பொழிவுகள்! சிறைக்குச் சென்றாலும் அது விடுகிறதா என்ன!
ஒரு நாள் பேச்சு மன்றம் வேண்டாம் என்று ஓய்வு எடுத்துக் கொண்டாலும் தோழர் வைத்திலிங்கம் விட மாட்டார். அவர் ஓர் இளம் பேச்சாளர். சிறைக்கு வருவதற்கு முன் பே மேடைகளில் பேசி பழக்கப்பட்டவர். ‘மேடைப் பேச்சுக்கு மெருகேற்றிக் கொள்ளுகிறேன் ‘என்று கூறிக்கொண்டே அவர் தினந்தோறும் மன்றத்தைக் கூட்டும் முயற்சியில் தோழர் வேணுவுடன் சேர்ந்து கொள்வார். எல்லோரின் ஆர்வத்திலும் மன்றம், பயன் விளைவிக்கும் மணிமண்டபமாயிற்று. ‘கருப்பும் – சிவப்பும்’ என்ற தலைப்பிலே – நீக்ரோவர்- செவ்விந்தியர் நிலைமையிலிருந்து திராவிடர் நிலைமை வரையிலே விளக்கப் பட்டது.
நாமெல்லாம் மொழிப்பித்து கொண்டு அலைகிறோம் என்று அரசியல் எதிரிகள் குற்றம் சாற்றுகிறார்களே ; அது எவ்வளவுதூரம் உண்மையென்று ஒரு நாள் விவாதித்தோம். மொழிப்பற்றா? – பித்தா? என்ற தலைப்பின் கீழே ! இது பற்றி கொஞ்சம் சொல்லி விட்டு பிறகு எங்கள் அன்றாட நிகழ்ச்சிகளிலே ஏற்பட்ட வேறு சில புதுமைகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மொழியிலே பற்றா? அல்லது பித்தா? என்று ஆராய்வதற்கு முன்பு – பற்று என்பதற்கும் பித்து என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். பற்றின் உச்ச நிலைதான் பித்து, அந்தப் பித்து, தானே உண்டாவதில்லை. பற்று வைக்கப்பட்ட பொருளுக்கு ஆபத்து வரும்போது அப்பொருளின் மீது பித்து ஏற்படுகிறது. குழந்தையின் மீது தாய்க்கு அளவற்ற பற்று, குழந்தை திடீரென நோய்வாய்ப் படுகிறது. இறந்துவிடுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள். தாய்க்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அதை யாராவது தடுக்க முடியுமா? பற்று பித்தாக மாறுகிறது.
சிறைச்சாலைக்குள்ளே தூக்குமேடைக்கு அழைத்து செல்லப்படும் கைதியின் நிலைமையைப் பார்ப்போம், உயிர் மீது பற்றில்லாமலா இருப்பான் அவன். மரணத்தை நோக்கி அவன் அடியெடுத்து வைக்கும் போது – வைகறையின் இளங் காற்று அவனுக்கு இன்ப மூட்டு மென்றா நினைக்க முடியும், பித்துகொண்டு அந்தக் கைதிகள் குதிப்பார்களாம் பாடுவார்களாம் அலறுவார்களாம். இங்கே பித்து, வியாதியின் அடிப்படையிலே ஏற்படு வதல்ல. பற்றின் அடிபீடத்திலிருந்து கிளம்புகிறது.
மழலையின் மரணப்படுக்கை காணும் மாதா உயிர் தரப்போகும் கைதி பற்று கொண்ட பொருள்கள் பறிக்கப்படுகிறதே யென்கிறபோது பித்துக் கொண்டவர்களாகி விடுகிறார்கள். தாய்க்கு குழந்தையை விட கைதிக்கு உயிரைவிட ஒரு சமுதாயத்துக்கு மொழி – மிகவும் உயர்ந்தது. அந்த மொழிமீது பற்று வைக்காதவர் யாரே உளர்! அந்தப் பற்று அறுக்கப்படும்போது பற்று கொண்டோர் பித்தர்களாக மாறுவதிலே என்ன தவறு ! அந்தப் பித்து ஏற்பட அடிப்படை எது ? பற்றை அறுக்க முனைவதுதானே ! அந்த வேளையைச் செய்வது யார்?
மொழியிலே நாம் பற்று வைக்கிறோம். அதை யறுத்து நம்மைப் பித்தர்களாக்குகிறார்கள். ஆகவே பித்து பிடிப்பதும் தவறல்ல அத்தகைய பித்து தவறுமல்ல! இந்த முடிவுக்கு பேச்சு கழன்றத்தினர் வந்தோம். மொழிக்காக உயிர் கொடுத்த தாளமுத்து நடராஜன் இருவரின் கல்லறையிருக்கும் திசையைப் பார்த்து வீர வணக்கம் செலுத்தினோம்.
லத்தீன் மொழியின் ஆதிக்கம் ஐரோப்பாவெங்கும் – வேறு நாட்டுத் தாய்மொழிகள் எல்லாம் பரவி தலையெடுக்காமல் அழுந்தியிருந்த காலத்தில் தாய் மொழிப் பித்துக்கொண்டு – “இனி லத்தீனில் எழுதுவதில்லை, எமது பிரஞ்சு மொழியிலே தான் எழுதுவோம்” என்று சபதம் எடுத்துக்கொண்டுக் கிளம்பிய பிரஞ்சு நாட்டு இளம் எழுத்தாளர்களை 16 ம் நூற்றாண்டின் மொழிக் காவலர்களை பெருமையோடு கொண்டோம். அந்த சரித்திரத்தையும் படித்துவிட்டு- இப்போது தாய்மொழியை மறந்து – ஆதிக்கக்காரர் களின் மொழியாம் இந்திக்கு ஆலவட்டம் சுழற்றும் ஆஷாடபூதிகளின் வரலாற்றையும் பார்க்கின்றபோது எவ்வளவு வேதனையாயிருக்கிறது என்று கண்ணீரும் விட்டோம்.
எம்மையறியாமலேயே – மொழிப்பித்து ஏற்பட்டு விட்டது.
“தமிழென்று தோள்தட்டி ஆடு! அந்தத் தமிழ் வெல்க என்றே தினம் பாடு!” என்று பேரொலி யெழுப்பினோம்.
” கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை” என்று சூளுரைத்தோம். அன்றைய மன்றம் முடிந்தது.
அதிசயம்!
சிறைச் சாலையில் ஒரு நாள் பேச்சு மன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மன்றத்து மத்தியிலே நான் அமர்ந்திருக்கிறேன். வெள்ளுடை அணிந்த ஒரு நர்ஸ் அங்கு வந்தாள். தான் கல்லக்குடிக்குப் பக்கமுள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்ததாகவும் போராட்டத்தில் காயம்பட்டவர்களுக்கெல்லாம் தானே சிகிச்சை செய்ததாகவும் கூறினாள். அவள் பேச்சிலிருந்து நமது இயக்க அனுதாபமுடையவள் என்று புரிந்தது. நல்ல சிவப்பு. குறு குறுப்பான பார்வை. கவரும் சக்தி படைத்தவள். ‘கருணாநிதி எங்கே’ என்று என்னையே கேட்டாள். ‘நான் தான்’ என்றேன். “ஓகோ அரும்பு மீசை வைத்ததும் அடையாளமே புரியவில்லை” என்றாள். போய்விடு வாளாக்கும் என்று எதிர்பார்த்தேன். நின்றுகொண்டேயிருந்தாள். போகவில்லை.
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கிழவரும் வந்தார். அவர் அவர்களுடைய தந்தையாம். “அப்பா! இவர்தான் கருணாநிதி” என்று அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். ஏன் இருவரும் அங்கு வந்தார்கள் தெரியுமா? அந்த ‘நர்ஸ் ‘ என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.
திடீரென்று என்னைப் பார்த்துச் சொன்னாள்; “நான் உங்களைக் காதலிக்கிறேன் ” என்று ! நான் திடுக்கிட்டுப் போனேன். பேச்சு மன்றம் கொல்லென்று சிரித்து விட்டது. நர்சுக்கு அப்போதுதான் நாணம் பிறந்தது. தந்தையை அழைத்துக் கொண்டு போய்விட்டாள். நான் வெட்கத்தால் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தேன். இதோடா முடிந்தது! ஒரு தயிர்க்காரிக்கும் தோழர் சத்திக்கும் தகராறு ! தயிர்க்காரி தன் கணவனிடத்திலே சத்தியின் விஷமத்தைப்பற்றிக் கூறிவிட்டாள். அவள் கொஞ்சம் இளம் வயதுக்காரி. சத்தியும் மணமாகாதபிள்ளை! ஏதோ தவறு நடந்து விட்டது! அதை பேச்சு மன்றத்திலே சிரிப்பாய் சிரிக்க வைத்துவிட்டாள் அந்தப் பொல்லாத தயிர்க்காரி. தோழர் ராமசுப்பையா, அவளிடம் மோர் வாங்கிக்கொண்டு கடன் சொல்லி ஏமாற்றிவிட்டாராம். சிறையிலே அவர் காசுக்கு எங்கே போவார். அதையும் பெரிய குற்றச்சாட்டாக்கி காரைக்குடியாரின் நாணயத்தைப் பற்றி வெளுத்து வாங்கி விட்டாள்.
என்ன மூக்கிலே விரலை வைக்கிறீர்கள் ! சிறைச் சாலையிலே பெண்கள் எப்படி வந்தார்கள் என்றுதானே ஆச்சரியப்படுகிறீர்கள்?
பேச்சு மன்றத்திலே நடந்த (Fancy Dress) மாறுவேடப் போட்டியின் போதுகூட பெண்கள் வராமலிருந்தால் சுவைக்குமா என்ன ? பெண்கள் மட்டுமா வந்தார்கள் ? ஒரு குடு குடுப்பைக்காரன் கூட வந்தான்.
“குடு குடு குடு குடு! நல்ல காலம் பிறக்குது – திராவிட நாட்டுக்கு நல்லகாலம் பிறக்குது ! அந்த மூலையிலே ஒருத்தன் அய்யோன்னு போறான் – துரோகம் பண்ணினவன் தொலையப் போறான் – காலையிலே கூட சொன்னேன் – காலையிலே கூட சொன்னேன் சொரண்டிப் பிழைக்கிறவன் சுருக்குன்னு போறான் – குடு குடு குடு குடு ஒரு பழைய துணி இருந்தா குடு குடு குடு!”
நரிக் குறவனும் – குறத்தியும் தோன்றினார்கள் “ஆயாலக்குரி -ஆயாலக்குரி” – என்று பாடியபடியே! வயிறு புடைத்த அய்யரும் வறுமையிலடிபட்ட நெசவாளியும் வந்தார்கள்! குமரர்கள் கிழவர்களாக மாறி வந்தார்கள். ஆண்கள் பெண்களாக மாறிவந்தார்கள் அழகிகளாகக் கூட!
சிறைச்சாலையிலே ஏதோ ஒரு பெரிய மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்து அதிலே மாறுவேடவிழா நடத்துங்கள் என்று யாரும் அனுமதி தரவில்லை. வேலையில்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமையிலே தோழர்களின் சொந்த முயற்சியிலே பல வேடங்களில் தோன்றி, பாடி, மகிழ்வித்தார்கள். சிறைச்சாலையிலே பூத்திடும் மலர்கள் – நான் மேலே போட்டிருந்த பச்சைத் துண்டு போன்ற ஆடைகள் – முடிவெட்டும்போது கத்தரித்த ரோமங்கள் – அடுப்பின் கரிகள் – ஆகிய பொருள்களைக் கொண்டு, அலங்கார அணிகளும், ஆடைகளும், மீசைகளும், தாடிகளும், தயார் செய்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாத வெற்றியுடன் நடத்தப்பட்ட அந்தப் போட்டியிருக்கிறதே; அது – “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்பதைத்தான் நினைவூட்டியது. வல்லமையில்லாத ஆரியத்துக்கே புல்லும் ஆயுதமாயிருக்கும் போது வல்லமையுள்ளவர்களுக்கு இருப்பது தானா பெரிய காரியம்.
போட்டியின் நீதிபதிகளாக மன்னார்குடி நாராயண சாமி, காட்டுப்புத்தூர் ராசமாணிக்கம், பேராவூரணி வடிவேல், வைத்தீஸ்வரன் கோயில் முருகையன், K. R. கலைமணி ஆகியோர் இருந்து தீர்ப்பு வழங்கினர்.
திருச்சி டி. எ.கமலன் முதற் பரிசும், கொரனாட்டுக் கருப்பூர் G. நாராயணசாமி இரண்டாம் பரிசும், கம்பர் நத்தம் கடல்வண்ணன் மூன்றாம் பரிசும், பெரியசாமி நான்காவது ஸ்பெஷல் பரிசும் பெற்றார்கள். அவர்களுக்கு “கல்லக்குடி பதக்கம்” பரிசளிக்கப்படும் என்றும், அந்த பரிசளிப்பு விழாவை மணப்பாறையில் தோழர் கஸ்தூரி நடத்துவதென்று, விரும்பியதின் பேரில் அங்கு விழா நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.
இன்னொரு ஞாயிற்றுக்கிழமை ஒப்புவித்தல் போட்டி, முல்லை சத்தி, திருவையாறு மணி, கிட்டப்பா, திருவாரூர் விசயராகவன், கரூர் முருகேசனார் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்டு நடைபெற்றது. அதில் பாரதிதாசன் கவிதைகளும், திரு. வி. க. வின் உரை நடைகளும், அண்ணாவின் பொன்மொழிகளும், நமது திரைப்படங்களின் உரையாடல்களும், புறநானூறு செய்யுட்களும் போர்வாள் முதலிய நாடக வசனங்களும் பல தோழர்களால் ஒப்புவிக்கப்பட்டன.
அதில் முதற்பரிசு பெரியசாமிக்கும், இரண்டாம் பரிசு அடைக்கலத்திற்கும், முன்றாம் பரிசு S. M. வைத்திலிங்கத்திற்கும், நான்காது ஸ்பெஷல் பரிசு G. நாராயண சாமிக்கும் கிடைத்தது. அந்தப் பரிசளிப்பு விழாவை ஜெயங்கொண்ட சோழபுரத்தில் நடத்துவதாக தோழர் வேணுகோபால் அனுமதி வாங்கிக் கொண்டார்.
ஒரு நாள் இசைப்போட்டியும் நிகழ்வுற்றது. தோழர்கள் உள்ளிக்கோட்டை சிங்காரவேல், திருவாரூர் தென்னன், கரூர் நாராயணன் ஆகியோர் நீதிபதிகளாய் அமர்ந்தனர்.
மாயவரம் செபாஸ்டின் முதற் பரிசும், அபிவிருத்தீஸ் வரம் நடராசன் இரண்டாம் பரிசும், ஓவியன் கருணா மூன்றாம் பரிசும், (சக்கரசாமம்) அப்பாசாமி நான்காவது ஸ்பெஷல் பரிசும் பெற்றார்கள்.
இவர்களுக்கு பரிசளிப்பு விழாவை மன்னார்குடியில் தோழர் நாராயணசாமி நடத்துவதாக கொண்டார். மன்றமும் இணங்கியது. கேட்டுக் கடைசியாக ஒரு ஞாயிறன்று பேச்சு மன்றத்தின் – அறுவடையை கணக்குப் பார்க்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதுதான் பேச்சுப்போட்டி.
திருவையாறு R. S. மணி, அழகான கருத்துக்களை அள்ளிச் சொரிந்து முதற் பரிசை அடைந்தார். திருவிட மருதூர் T.A. ராமசாமி, பெருமிதமான வார்த்தை யோட்டாத்தால் இரண்டாம் பரிசைத் தட்டிவிட்டார்.
உள்ளிக்கோட்டை சிங்காரவேல், எடுத்துக்கொண்ட பொருளை எழில் ததும்பச் சொல்லி மூன்றாம் பரிசுக் குரியவரானார். பேராவூரணி வடிவேல் நகைச்சவை ததும்பப் பேசி நான்காவது ஸ்பெஷல் பரிசை ஏற்றார்.
அந்தப் போட்டிக்கு நீதிபதிகளாக, நானும், தோழர்கள் ராமசுப்பையா, அடைக்கலம், நாகை பையன், B.சாமிநாதன் ஆகிய நால்வரும் அமர்ந்து தீர்ப்பு வழங்கினோம். அவர்களுக்கு பரிசளிக்கும் விழாவை மாயவரத்தில் நடத்துவதற்கு தோழர் கிட்டப்பா கேட்டுக் கொண்டு மன்றத்தின் இணக்கம் பெற்றார்.
“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”
என்ற கவிஞரின் பாடலை உரக்கப் பாடினோம். உற்சாகம் கொப்பளிக்கப் பாடினோம்!
நானூறுக்கு மேற்பட்டோரின் மொத்த வாழ்க்கை சிறையில் எப்படி நடைபெற்றது என்பதை விவரித்து விட்டேன். என் வாழ்வு எப்படி ஓடியது என்பதைக் கூறா மலிருக்க முடியுமா?
சிறைச்சாலைக்கு வந்த சில நாட்களுக்கெல்லாம் என தருமைத் திருவாரூர் தோழர்கள் வந்து சேர்ந்தார்கள். எனது மைத்துனரும் வந்தார். எனக்குப் பக்கத்து அறைகளிலே அவர்களும் இடம் பிடித்துக்கொண்டார்கள். ராம சுப்பையா அவர்களுக்கு சரியான ஜோடியாக திருவாரூர் நாகப்பன் அவர்கள் இருந்தார். அவர்களிருவரையும் பார்த்து நாங்கள் “கிழவர்களே !” என்று கூப்பிடுவோம். ராமசுப்பையாவுக்கு உள்ளபடியே அதில் கொஞ்சம் வருத்தம்தான். திருவாரூர் தென்னன் அவரைப்பற்றி நான்ஒன்றும் அதிகமாகச் சொல்ல வேண்டாம் – நான் சிறையிலிருக்கும் போது அவர் வெளியே இருக்க முடியாது – ஒருவர்தான் தப்பித்தவறி வெளியே இருந்துவிட்டார் – C. D. மூர்த்தி என்பார்- தென்னனின் பெயரும் தெட்சணாமூர்த்திதான்! இரண்டு தெட்சணாமூர்த்திகளும் இரண்டு கண்கள் போல நட்புக்கு! இதைவிட இன்னும் என்ன சொல்ல இருக்கிறது. என்னுடைய தென்னனைப் பற்றி! அந்தத் தென்னன் தான் எமது சாப்பாட்டு விவகாரங்களை சரி பார்த்து கண்காணித்து வந்தார். நானும் சத்தியும் குளிப்பதற்குச் செல்லுவோம். வேணு ஓடிவருவார் – தண்ணீர் மொண்டு ஊற்ற! அவர்தான் என்னைக் குளிப்பாட்டி விடுவார் என்றே வைத்துக்கொள்வோமே! எண்ணெய் தேய்த்து முழுகப் போகிறோம் என்று தெரிந்தால் போதும் எப்படித்தான் தெரியுமோ, ராமசுப்பையாவுக்கு ! அவர் எண்ணெய் தேய்த்துவிடாமல் குளிக்க முடியாது. முடியாதென்ன கூடாது!
அவருடைய திருக்கரங்களால் எண்ணெய் தேய்த்து – சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டும் போது என் அன்னையின் பொற்கரங்களின் ஸ்பரிச உணர்ச்சியையே கண்டேன் நான் குளித்துவிட்டு அறைக்கு வருவோம். வீட்டிலே மனைவிகூட அவ்வளவு ஒழுங்காக உடைகளை எடுத்துத் தந்து உபசரிக்க முடியாது; அத்துணை அழகாக உடைகளை எடுத்து வழங்குவார் தோழர் கஸ்தூரி. உடை இலாகாவை அவரிடம் தான் ஒப்புவித்திருந்தோம். உடனே தென்னன் காலை உணவுடன் எங்கள் அறையில் நுழைவார். சாப்பிட்டானதும் ஒரு சிகரெட் பிடிக்கலாம் என்ற காரணத்திற்காக சாப்பிடுவோம். அத்தகைய சாப்பாட்டுக்கும் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு – நம்மோடு ஒட்டிவராவிட்டால் அதோடு நாம் ஒட்டிப்போவோம் என்ற தத்துவார்த்த சிகரமாக எம்முடன் ஒருவர் இருந்தார். அவர் தான் திருவாரூர் டாக்டர் விசயராகவன், சிறையிலே தரப்படும் கடலை உருண்டை என்றால் அவருக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா? ஒரு நாள் அவர் கடலை உருண்டைக்காக இன்னொரு தோழருடன் பந்தயம் கட்டி நூறு ‘பஸ்கி’ போட முனைந்தார். பந்தயத்தில் தோற்றதால் கடலை உருண்டை கிடைக்கவில்லை. தொடை முழுதும் கடலை உருண்டைகள் போல விங்கிவிட்டது. இரண்டு மூன்று நாள் மறுத்துவ மனையில் இருந்தார். ஜெயில் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு “ஜாம்பவான் ” வேலைக் கெல்லாம் போகலாமா?
காலை உணவு முடிந்ததும் நண்பர்கள் மன்னை நாராயண சாமி, அடைக்கலம், விசயராகவன், அத்தான், வடிவேலு, சத்தி, தென்னன், முத்துப்பேட்டை தெட்சணா மூர்த்தி, கோபாலசாமி, வேணு, வையிதீஸ்வரன் கோயில் முருகையா, திருவையாறு மணி, எதிராஜ், உசேன் ஆகி யோர் ஓரிடத்தில் கூடுவோம். பழைய காலத்து ராஜா ராணிகளைப் பற்றியும், அவர்களுக்கு ‘ஜோக்கர்’ போல இருந்த பிரபுக்களைப் பற்றியும் பேசுவோம். இங்கிலாந்து சரித்திரத்திலே இப்படிப்பட்டவர்களின் கேளிக்கைகள் மிக மிக அதிகமல்லவா? கொரியாவுக்கு செல்லும் இந்தியத் துருப்புகள் பற்றியும் விவாதங்கள் நடத்துவோம். குடியரசு காலத்திலேகூட முடியரசு இருக்கிறது பாரீர் என்று நாராயணசாமிக்கும், விசயராகவனுக்கும் தலையில் துப்பட்டியால் முண்டாசு கட்டி வேடிக்கை செய்வோம். சிறைச்சாலைக்கு சென்றதும் எப்படியெல்லாம் விளையாடத் தோன்றுகிறது பாருங்கள்.
அமைதியான தோற்றமும் – ஆர்வம் நிறைந்த உள்ளமும் நட்புக்கோர் அணிகலனுமான வைத்தீஸ்வரன் கோயில் தோழர் முருகையா, சிறைச்சாலையை விட்டு வெளியேறுகிற அந்தக் கடைசி நாளின் காலையிலே கூட ராஜா ராணி வேடிக்கை செய்து, அவருக்கு முண்டாசு கட்டிவிட்டுத் தான் வெளியே அனுப்பினோம்.
இப்படி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சிறைச்சாலையின் கொடுமைகளை விரட்டிக் கொண்டிருக்க – உதவி புரிந்த அருமைத் தோழர்கள் எல்லாம் எங்களை விட்டுப் பிரியும் காலம் வெகு விரைவில் வந்துவிட்டது. ஆச்சாரியார் ஆட்சி – எனக்கு ஆறுமாத தண்டனை கொடுத்தது கூடப் பெரிதல்ல! என் அன்புத் தோழர்களை என்னோடு சேர்த்துவைத்து, அவர்கள் பிரிந்து செல்லும் வேதனையை அடிக்கடி உண்டாக்கினதே; அதுதான் பெரிய தண்டனையாக இருந்தது.
தோழர் N.V.நடராசன், அடக்குமுறையின் கோரப் பொறியில் அகப்படுவதற்கு முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.”வெளியில் என்ன நடக்கிறதோ என்று கவலைப்படுவீர்கள்! வளர்கிறோம் வளர்கிறோம் மகிழ்ச்சி யடையுங்கள்” என்று ! சிறைச்சாலையில் என்னை சக்திக்க வந்த அண்ணா அவர்களும் சொன்னார்; “வெளியுலகைப் பற்றி நினைத்து மனதை அலட்டிக்கொள்ளக்கூடாது” என்பதால்!
இருந்தாலும் முடிகிறதா; நாங்கள் பிரிந்துவரும் போது தமிழகம் ரத்தக்காடாகவல்லவா இருந்தது! “என்ன ஆயிற்றோ? ” என்று ஏங்கிக்கொண்டுதான் கிடந்தோம்.
கல்லக்குடியிலே போராட்டம், சிந்தனைச் சிற்பி சிற்றரசு அவர்களின் தலைமையிலும் திருச்சி தீரர்களின் மேற்பார்வையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அண்ணாவும் மற்றவர்களும் சிறைக்குள்ளே அனுப்பப்பட்டு விட்டார்கள். “தலைவர்களை விடுதலை செய்” என்ற முழக்கம் நாடெங்கும் கேட்கிறது. ஆச்சாரியாரும், கவர்னரும் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடிகள் காட்டப்படுகின்றன. இந்த நிலைமையிலே வட நாட்டிலேயிருந்து நேருவும் வருகிறார்.
அக்டோபர் முதல் நாள் ஆந்திர அரசு அமைகிறது. அதைத் துவக்கிவைக்க பண்டித நேரு அழைக்கப்பட்டிருக்கிறார். மொழிவழி மாகாணத்திற்காக ஆந்திராவில் கிளம்பிய நாற்பது வருடத்துக் கிளர்ச்சிக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. பதவிக்காக கட்சிகள் மாறும் பிரகாசம், காங்கிரசில் சேர்க்கப்படுகிறார். ஆந்திராவின் முதல் பிரதமராகினார். ஆந்திர அரசு துவக்க நாளிலே மகிழ்ச்சி ஆரவாரத்துடனே தலைவர்கள் பேசுகிறார்கள்.
நேரு பண்டிதர் பேசுகிறார். சென்னை மந்திரி ஆச்சாரியார் பேசுகிறார். ஆந்திரப் பிரதமர் பிரகாசம் பேசுகிறார். எங்கே நின்றுகொண்டு ! பொட்டி ஸ்ரீராமுலுவின் எழும்பு மேட்டின் மீது நின்றுகொண்டு! ஆனால் ஒரு வார்த்தை அந்த தியாக சீலனைப்பற்றி யாரும் பேசியதாகத் தெரியவில்லை. மாறாக, உண்ணாவிரதத்தைக் கிண்டல் செய்கிறார் அந்த இடத்திலே நேரு ! உண்ணாவிரதம் நாமும் தான் தவறு என்கிறோம். அதற்காக நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு வீரனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?
காந்தியார் உண்ணாவிரதத்தின் முடிவு இதுபோல் ஆகியிருந்தால் – நேரு கிண்டல் செய்திருப்பாரா? உண்ணா விரதம் – மறியல் – அறப்போர் – முதலியவைகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுந்தான் ஏகபோக சொத்தா? மற்ற யாரும் அதைத் தொடவே கூடாதா?
எப்படியோ எல்லோரும் தியாகியொருவரை மறந்து விட்டு புதிய அரசுக்கு வாழ்த்துக்கூறினர். அதற்குள் இங்கிருக்கும் சிலர், “ஆந்திரா பிரிந்துவிட்டது – இனிமேல் திராவிடநாடு கோஷம் ஒழிந்துவிட்டது” என்று தீர்ப்புக் கூறிவிட்டனர்.
ஆந்திரா பிரிந்ததால் – “வேங்கடத்தை விடமாட்டோம் ” என்ற வீராப்புதான் வீழ்ந்ததே தவிர திராவிட நாடு பிரச்சினை மடிந்துவிடவில்லை. ஆந்திர அரசு சென்னையிலிருந்து தன்னை அகற்றிக்கொண்டது. மத்திய சர்க்காரின் பிடியிலிருந்து அது விலகிக்கொள்ளவில்லை. நாளைக்கு கேரளம் தனி மாகாணமாகலாம் – கன்னடமும் அந்த நிலை பெறலாம். பிறகு தமிழகம் தனி மாகாணமே தான்! எல்லாமே தனி மாகாண அந்தஸ்து பெறமுடியுமே தவிர வடவர் ஆதிக்கத்திலிருந்து விலகிவிட்ட தனியரசாக எப்படி ஆகமுடியும். நமது லட்சியம், வடவர் தொடர்பிலிருந்து கத்தரித்துக்கொண்டு இந்த நான்கு மொழிவழி மாகாணங்களும் ஒரு கூட்டாட்சி அமைப்பது அதற்குப் பெயர் திராவிடக் கூட்டாட்சி என்பது! இந்த முடிவை ஒரு அரசு ஏற்காவிட்டால் மற்ற மூன்று அரசுகளும் சேர்ந்து திராவிடக் கூட்டாட்சி அமைக்க முடியாதா என்ன!
எல்லையிலே சிறிது குறையலாமே தவிர ‘திராவிடம்’ என்ற சொல்லும், அந்த அரசும் எப்படிக் குலைந்துவிடும்!
பலாப்பழத்தை பாதியாக வெட்டிக் கொடுத்தாலும் அது பலாக்கனி தானே! பாகற்கனியாகிவிடாதே!
அரசியல் இலக்கணம் புரியாதவர்கள் ஏதாவது உளறிக்கொண்டு தானிருப்பார்கள். அதற்கு எடுத்துக் காட்டு தான் திராவிட நாடு செத்துவிட்டது என்ற கூச்சல்!
இவர்களாவது சாதாரணமானவர்கள்; ஏதோ வாயில் வந்தபடி உளறிவிடுகிறார்கள் – இவர்களின் தலைவராவது அரசியல் கண்ணியம் வாய்ந்தவராயிருக்கிறாரா என்று பார்த்தால் – அய்யோ! அதுவுமில்லை. ஆந்திர ராஜ்யத்தை துவக்கி வைத்துவிட்டு – சென்னை, கோவை, மதுரை, மாமல்லபுரம், பவானி, முதலிய இடங்களிலே சுற்றுப்பயணம் நடத்தினார் பண்டிதநேரு, தமிழகத்தின் தலைவர்கள் சிறையிலே! ஐயாயிரவர் அடக்கு முறைக்கு ஆளாயினர்! பிணங்கள் வீழ்ந்தன! சதி வழக்குகள் கிளம்பின! இந்த நிலைமையிலே கொதித்துப் போயிருந்த திராவிட மக்கள் தங்கள் அதிருப்தியைக் காட்ட நேருவுக்கு எல்லா இடங்களிலும் கருப்புக்கொடி காட்டினர். அவரது பொதுவாழ்விலே அதுவரையில் காணத எதிர்ப்பை அவர் கண்டார். கருப்புக்கொடி காட்டுவது, அரசியலிலே ஒரு முறை! நேருவுக்கும் தெரியாததல்ல! திராவிடரை “நான்சென்ஸ்” என்று இருமுறை இகழ்ந்தார் – ஒருமுறை மன்னித்தோம் – பெரிய மனிதர் என்பதற்காக! மீண்டும் சொன்னார் – நாம் அவர்பால் கொண்ட தவறான கருத்தை மாற்றிக்கொண்டோம்! கண்டனம் தெரிவித்தோம்!
“கண்டனம் தெரிவித்தோர் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள் கூட அல்ல; அவர்கள் எவ்வளவோ மேல்! இவர்கள் அவரினும் இழிமக்கள்” என்று சுடு மொழி கூறினார் மூன்றாவது முறை! “எனக்கு நிகர் யாருமில்லை – எல்லாமே நான் தான் “என்றான் பதினான்காம் லூயி ! அப்போது பிரான்ஸ் கொதித்தது! “புரட்சி வந்தால் எனக்குப் பின்னால் வரட்டும் ” என்று கூறினான் பதினைந்தாம் லூயி! பிரான்ஸ் குமுறியது!
“ஒரு கை பார்ப்போம்” என்றான் பாஸ்டிலியின் காவலன் பதினாறாம் லூயி! பிரான்சின் எரிமலை வெடித்தே விட்டது!
இவர்களிலே எந்த லூயி – நேருவின் வடிவத்திலே பேசுகிறானோ நமக்குத் தெரியாது ! ”உலக சரித்திரம்” எழுதிய நேருவுக்குத் தான் தெரியும்!
“அச்சம் கண்களை மறைக்கும்போது – குற்றவாளி யார் – நிரபராதி யார்- என்பது தெரியாமலே போய்விடும்.”
என்று நேருவே கூறியிருக்கிறார். கருப்புத் துணியைக் கண்டால் கலக்கம் ஒரு வகை அச்சம் ஏற்படுவது இயற்கை, நேரு போன்றவர்களுக்கு !
ஆகவே அவரது பொன்மொழிக்கு அவரே இலக்காகி விட்டார்.
‘42 ஆகஸ்டு’ போராட்டத்தின் தளபதி – நமது அறப்போராட்டத்தைப் பார்த்து காட்டுமிராண்டித்தனம் என்கிறார்.
என்ன செய்வது பாவம்;
சில நேரங்களில் சிலர், நிலைக்கண்ணாடிக்கு நேராக நின்று பேசவேண்டிய வார்த்தைகளை, தவறிப்போய் நம்மிடம் பேசிவிடுகின்றனர்.
மதுரையிலே நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய கிளர்ச்சியில், மாவீரர்கள் முத்து, அய்யாசாமி, ராசமான் மற்றும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். சென்னையிலும் முப்பதுபேருக்குமேல் கைதியாயினர். மதுரையிலும், கோவையிலும் இளங்கோவும், கண்ண தாசனும் முன்னின்று கருப்புக்கொடி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக்கினர். சென்னையிலே கண்ணபிரான், மாலை மணி பார்த்தசாரதி மற்றும் பலர் தடியடிக்காளாயினர், செங்கற்பட்டிலே அண்ணாமலை தலைமையிலே கருங்கொடி நிகழ்ச்சி வெற்றிகண்டது.
நாள் தோறும் நமது தோழர்கள் சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருப்பதும் – நாடெங்கும் கிளர்ச்சித் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதும் – தேனினுமினிய செய்திகளாக எங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தது.
எல்லோரும் போய்விட்ட காரணத்தால் – மிச்சமிருந்த ஐம்பதுக்குட்பட்ட தோழர்களை ராமசுப்பையா அவர்கள் வசம் ஒப்புவித்துவிட்டு நான் சிறிது ஓய்வுபெற்றேன்.
பேச்சுமன்றமும் கிடையாது. ராஜாவுக்கு முடிசூட்டும் விளையாட்டும் நின்றுவிட்டது. எதையாவது படிப்பது, எதையாவது எழுதுவது, மீதி நேரங்களில் வேப்ப மரத்தடி ! அங்கே சத்தியும் நானும் ! எத்தனையோ இன்பக் கதைகளை அந்த வேப்பமரம் கேட்டிருக்கிறது – பேச்சின் ஒலிக்கு மாத்திரம் சக்தியிருக்குமானால் அந்த வேப்பமரம், இனிப்பு மரமாக மாறியிருக்கும் அவ்வளவு தித்திப்பான கதைகள்!
ஒரு நாள் நீண்டு உயர்ந்த மதிலுக்கு உள்ளே ஒரு சிறிய பந்து வந்து விழுந்தது. வெளியிலே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கையிலேயிருந்து தப்பி, அது எங்கள் கையில் சிக்கியது.
உடனே ஒரு திட்டம் போட்டோம். ஒரு பழைய வேட்டியைக் கிழித்து வலைபோலக் கட்டினோம். எங்கள் கைகளைப் பந்தடிக்கும் Bat ஆக அக்கிக்கொண்டு தினந்தோறும் விளையாட ஆரம்பித்தோம். அந்த விளையாட்டுக்கு பந்தயம் எல்லாம் கட்டுவது உண்டு. தோழர் வேணு, தனக்கு வந்த கடலை உருண்டைகளை யெல்லாம் பந்தயத்தில் இழந்து துவரையை இழந்து. சோற்றையும் ஒருநாள் இழந்து தரும மகாராஜன் போல நின்று கொண்டிருந்தார். தோழர் ராமசுப்பையா பந்து விளையாட்டில் என்னுடைய கட்சி. வருகிற பந்தையெல்லாம் சாமர்த்தியமாக அடித்துவிடுவார். ஆனால் ஒரு குறை – பந்து வளையைத் தாண்டி அப்புறம் போகாது! அவ்வளவுதான்! கஸ்தூரி, சத்தியின் கட்சியிலேயிருந்து விளையாடுவார். பந்து, தானாகவே போய் அவரது கையில் மோதி எங்களிடம் திரும்பிவரும் காட்சி அற்புதமாக இருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடுவார்.
அந்த விளையாட்டிலும் இடையே தொய்வு ஏற்பட்டு விட்டது. ஜெயில் ஆகாரத்தை சாப்பிட்டு விட்டு இம்மாதிரி வேலையெல்லாம் எங்களைப்போன்ற பலசாலிகள் செய்யலாகா? எல்லோருக்கும் உடம்புவலி – உட்கார முடியாது, நிற்க முடியாது. நான் ஊசியும் போட்டுக் கொண்டேன். பிறகு மீண்டும் ஆசை பிறந்தது விளையாட! ஆனால் விளையாட்டுக்கு விரைவில் முடிவு ஏற்பட்டுவிட்டது.
காரணம்; கல்லக்குடி பட்டாளத்தை நோக்கி விடுதலை வந்துவிட்டது. விடுதலைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே ராம சுப்பையா கண்ணீர்விட ஆரம்பித்து விட்டார். விடுதலை நாளும் வந்தது. அக்டோபர் 15ம் நாள் காலையிலே அவர்களும் எம்மைப் பிரிந்தார்கள், சிறைச்சாலையிலே அகப்படும் பூக்களைக் கொண்டு ஒரு மாலை கட்டினார்கள். பிரிவுரை கூறினார்கள். கோவெனக் கதறி அழுதார்கள். அவர்கள் வாய்விட்டுக் குழந்தை போல அழுத காட்சியை இப்போது நினைத்தாலும் கலங்குகிறது.
“இனிமேல் ராம சுப்பையா போல எண்ணெய் தேய்த்துவிட யார் ஓடிவருவார்கள்?”
“வேணு போல பறந்து பணியாற்றிட யாரால் முடியும்!”
“கட்சிச் செய்திகளைக் கேட்டிட ஆர்வமுடன் ஆடிக் கூடி வர – மலைக்கோட்டை ரத்தினம் போல யாருளர் இங்கே?”
“எது கேட்டாலும் சிரித்துக் கொள்ளும் எதிராஜ்!”
இப்படி ஒவ்வொருவரையும் பற்றி எண்ணினேன். என் பின்னே அணிவகுத்துவந்த கல்லக்குடி படைவரிசை கண்ணீரைக் கொட்டியபடி நிற்பதையும் கண்டேன்.
“நேசமுள்ள நண்பர்களே ! பாசம் நிறைந்த தோழர்களே! என் ஆசைக் கண்மணிகளே!” என்றேன். அதற்குமேல் பேச முடியவில்லை. “போய் வருக ” என்று கையால் ஜாடை காட்டினேன். ராம சுப்பையா கட்டிப் பிடித்துக்கொண்டு கதறிவிட்டார். பிரிவு – பிரிவு – கட்டிக் காத்த குடும்ப பாசத்தில் குறுக்கிட்ட பிரிவு! அவர்ககள் எம்மிடமிருந்து விடுதலையென்னும் சொல் பிரித்துக் கொண்டு போய்விட்டது.
தொடர்ச்சியாக ஐந்து சிகரெட்டுகளை அன்றுதான் முதன் முதலாகப் பிடித்தேன்.
சிறையில் ‘இன்டர்வியூ’ பார்ப்பது என்பது ஒரு இன்பகரமான செய்தி. அந்த நாள் என்றைக்கு வரும் என்று எதிர்பார்த்திருப்போம். மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் தான் ‘இன்டர்வீயூ’ பார்கமுடியும், வெளியூரிலிருந்து வர விரும்புவோர், முன் கூட்டியே சிறை அதிகாரிக்கு கடிதம் எழுதி எந்த நாளில் பார்க்கலாம் என்று அனுமதி வாங்கிக் கொள்ளுவதும் உண்டு. அப்படி வந் தால் நிச்சயம், ஏமாறாமல் பார்த்துவிட்டுப் போகலாம்.
சில நேரங்களில் “ஸ்பெஷல் இன்டர்வியூ”க்களும் வாங்கலாம்.
முதல் நாள் இரவு படுக்கும்போதே – காலையில் ‘இன்டர் வியூ’ பார்க்கலாம் என்ற இன்ப நினைவுடன் படுப்போம்.
காலையிலும் சுறு சுறுப்பாக எழுவோம். முக அலங்காரம் முதலியன செய்து கொண்டு வெள்ளை உடைகள் அணிந்து – எப்போது வருவான் மனுக்காரன் என்று எதிர்பார்த்த வண்ணமிருப்போம்.
இன்டர்வியூ செய்தி கொண்டு வருகிற கைதித் தோழனுக்கு மனுக்காரன் என்று பெயர். சந்திக்க விரும்புகிறவர்கள் மனுப்போட்டுப் பார்க்கிறார்கள் அல்லவா; அந்த மனுவை எடுத்து வருபவன் மனுக்காரன். பல மனுக்கள் வந்து மறுக்கப்பட்டு திரும்பியும் போய்விட்டன.
அறிஞர் அண்ணா, மதியழகன், அரங்கண்ணல், வாணன், செழியன், K. K. நீலமேகம், கண்ணதாசன் T. K. சீனிவாசன், மாயவரம் பழனிசாமி, முல்லை வடிவேல், வெங்கிடங்கால் சந்தானம், சௌரிராசன் திருச்சி தோழர்கள் தருமு, பராங்குசம், மணி, முத்து, ராதாகிருஷ்ணன், ராபி, கடைத்தெரு கழகம் நடராசன், பாண்டு சங்கன்,கருணானந்தம், மாயூரம் காந்தி, சௌந்தரராசன், கருணை ஜமால், காஞ்சி C. V. ராசகோபால், காரைக்குடி இராம வெள்ளையன், விடுதலையடைந்து சென்ற மன்னை நாராயணசாமி, தென்னன், கிட்டப்பா, A.S. முருகையா அடைக்கலம் மற்றும் இளமுருகு, கோபால கிருஷ்ணன், மாராச்சி, கிருஷ்ண மூர்த்தி, G. P.சோமசுந்தரம், சேவியர், சௌரிராசன், செல்வரெத்தினம், S. V. லிங்கம், இளம்வழுதி M. A. B. L., வில்லாளன் B.A. Hon. முத்து மல்லப்பன் ஆதங்குடி இயக்கத்தார் ஆகிய இயக்கத் தோழர்களும், வீட்டாரும், கோவிந்தசாமி M. L. A., பழனியாண்டி M. L. A., சிற்றம் பலம் M. L. A., தங்கவேலு M. L.A., பேபி கந்தசாமி M.P, ஆகிய சட்டசபை பாராளுமன்ற உறுப்பினர்களும், கலை வாணர் N.S. கிருஷ்ணன், மதுரம், புரட்சி நடிகர் எம்.ஜி. ராமசந்தர், சிவாஜி கணேசன், S. V. சகஸ்ரநாமம், ராதா கிருஷ்ணன், M. N. கிருஷ்ணன், திருப்பதிசாமி, டைரெக் டர் கிருஷ்ணன் (பஞ்சு), மனோகரா பிக்சர்ஸ் பாலு, கதாசிரியர் ஆத்ரேயா, மாடர்ன் தியேட்டர்ஸ் சுலைமான், முதலிய கலை உலக நண்பர்களும் எங்களை வந்து சந்தித்துப் போனார்கள். அந்த நாளெல்லாம் எங்கள் ராஜ்யத்திலே ஒரு திருவிழா நாள் போல இருந்தது. நடுவிலே ஒரு பெரிய மேஜை. ஒரு பக்கத்தில் சிறையில் உள்ளவர். இன்னொரு புறத்தில் சந்திக்க வந்திருப்போர். அரசியல் விஷயங்களோ – ஆட்சேபகரமானவைகளோ பேசி விடாமல் கவனித்துக் கொள்ள அருகாமையிலே ஒரு உத்தியோகஸ்தர். இதுதான் ‘பி’ வகுப்பு கைதிகளை இன்டர்வியூ பார்க்கும் முறை.
வலை போட்ட பெரிய ஜன்னல். உள்ளே சிறையில் உள்ளவர். வெளியே சந்திக்க விரும்புகிறவர். கவனிக்க உத்தியோகஸ்தர். இருதரப்பாரும் நின்று கொண்டுதான் பேசவேண்டும். ஒருவர் முகம் ஒருவருக்கு சரியாகத் தெரிய முடியாது. இதுதான் ‘C’ வகுப்பு முறை ‘ஏ ‘ வகுப்பு என்று சிறையில் முன்பு இருந்தது – இப்போது கிடையாது.
‘பி’ வகுப்பு கைதிகளுக்கு ஒரு வசதியுண்டு. வெளியிலிருந்து சந்திக்க வருகிறவர்கள் பழம், ரொட்டி, சிகரெட், முதலியவை கொடுக்கலாம். பலகாரங்கள் எதுவும் தரக் கூடாது. P.C. P. என ஒன்றுண்டு. [Personal Cash Property] சொந்தப் பணம் வைத்துக்கொள்ளுதல். சிறையதிகாரிகளின் வசத்திலே நமக்கென பணம் வைத் துக்கொண்டு, வாரா வாரம் நமக்குவேண்டிய பொருள்களை அதிகாரிகள் மூலம் வாங்கிக்கொள்ளலாம். வேண்டிய பொருள்கள் என்றால் தேவையானது எல்லாம் அல்ல.
அதிகாரிகளால் அங்கீகரிக்கப் படுவதுதான். நாங்களும் P. C. P.யில் பணம் கட்டியிருந்தோம். அதில் வாரா வாரம் ஓவல்டின், ஹார்லிக்ஸ், பிஸ்கட், சிகரெட், பழங்கள், சோப்பு, எழுதும் பேப்பர், மை, காப்பித்தூள், சர்க்கரை, முதலியன வாங்கிக் கொண்டோம்.
ஒரு முறை பச்சைப் பட்டாணி டின் ஒன்று வாங்கி வரும்படி குறித்தனுப்பினோம். அது அங்கீகரிக்கப்பட வில்லை என்று கூறிவிட்டார்கள். “ஓ! நாம் கைதிகள்” என்று ஒரு முறை சொல்லிக் கொண்டோம். பாதுகாப்பு கைதிகளுக்கு ‘பி’ வகுப்பை விட நிறைய வசதிகளுண்டு. ஒரு சமயம் கம்யூனிஸ்டு தலைவர்கள் பாதுகாப்பு கைதி களாக வைக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும். “C” வகுப்புக் கைதிகளுக்கும் யாராவது மணியார்டரில் பணம் அனுப்பினால் சிறையில் வாங்கி வைத்துக்கொண்டு அவர்கள் விடுதலையாகி வெளியே செல்லும்போது கொடுத் தனுப்புவார்கள். அந்தப்பணத்தில் அவர்கள் தேவையானது எதுவும் சிறையிலிருந்து வாங்கிக்கொள்ள முடியாது. சிறையிலுள்ள ‘டவர்’ என்னுமிடத்தில் ரேடியோ இருக்கிறது. ஆனால் எங்கள் பிளாக்கிற்கு காதில் விழாது. எங்கள் பிளாக்கில் ஒரு ‘ஸ்பீக்கர்’ வைத்துத் தந்தால் ரேடியோ கேட்க முடியும். அதை சூப்பிரண்டிடம் கேட்பதென முடிவு செய்தோம். சூப்பிரண்டை (File) பைல் நாள் அன்றுதான் பார்க்கலாம். திங்கட்கிழமைதோறும் காலை 7 மணிக்கு ஒவ்வொரு பிளாக்கிலுமுள்ள கைதிகள் தங்களிடமுள்ள தட்டு, குவளை, எண் ஆகியவைகளுடன் அணிவகுத்து நிற்க வேண்டும். எங்கள் ராஜ்யத்திலும் நானூறு பேர் அணிவகுத்து நிற்கும் காட்சி மிக ரம்மியமா யிருக்கும். கடுங்காவல் கைதிகளான நாங்கள் சிலர் மட்டும் தலையில் குல்லா அணிந்து கொண்டு, சிறை உடைகளை மாட்டிக் கொண்டு நிற்க வேண்டும். நீண்ட காலுறையும் கையுறையும் தருவார்கள்.
அந்த அணிவகுப்பை சூப்பிரின்டெண்ட் பார்வை யிடுவார். அவருடன் D. M. O. வும் மற்ற சிறை அதிரிகாரிகளும் வருவர். கைதிகள் தங்களுடைய குறைகளை அவர்களிடம் சொல்வதற்காகவே இந்த ஏற்பாடு அமைக்கப்பட்டிருக்கிறது. அது கவனிக்கப்படுமா என்பது வேறு விஷயம். ஒரு திங்கட்கிழமை சிறை அதிகாரிகள் அணி வகுப்பைப் பார்வையிட்டு வந்தார்கள். ரேடியோ பற்றி நாங்கள் கேட்டோம். இந்த பிளாக்கிலிருந்தபடியே கேட்கிறோம், ஒரு ஒலிபரப்பி அமைத்துக் கொடுங்கள் என்று கோரினோம்.
அதற்கு ஜெயிலர் சொன்னார் உங்கள் செலவில் ஒரு ஒலிபரப்பி ஏற்பாடுசெய்து கொள்ளுங்கள், எமக்கு ஆட்சேபணையில்லையென்று ! எனக்கும் அது சரியென்று பட்டது; ஆறு மாதத்திற்கு ஒரு இரவல் ஒலிபரப்பியா கிடைக்காது – திருச்சியிலே அருமைத் தோழர் ராபி யிருக்கிறார். அவரிடம் சொன்னால் போதுமே – எத்தனையோ ஒலிபரப்பிகளை அமைத்துத் தருவார் என்று எண்ணியபடியே, “சரி நாங்களே அமைத்துக்கொள்ள அனுமதி கொடுங்கள்” என்றேன்.
“அனுமதி தருகிறோம். ஆனால் ஒன்று. அப்படி வைக்கப்பட்ட ‘ஸ்பீக்கர்’ ஜெயிலுக்குத்தான் சொந்தம். திரும்ப எடுத்துக்கொண்டு போகக் கூடாது” என்றார் ஜெயிலர்.
“நல்லவவேளை! நம்மால் ராபிக்கு லாபமில்லாவிட்டாலும், நஷ்டமில்லாமலாவது இருக்கட்டும் ” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே. “சரி சார் ! ரேடியோ கேட்டது பற்றி மீண்டும் யோசிக்கிறோம் ” என்று பதில் கூறிவிட்டோம். அவர்கள் போய்விட்டார்கள். பிறகு நாங்கள் ஏன் அதுபற்றி, யோசிக்கப்போகிறோம்! நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
ஹிட்லர் பாட்டு – சுதந்திர மெட்டு!
அக்டோபர் இருபத்திமூன்றாம் நாள் நூறாவது நாள் முடிந்துவிட்ட விழாவை நாங்கள் ஐந்தாறு பேரும் சிறையில் சிறப்பாகக் கொண்டாடினோம். காலையில் விழித்தெழுந்ததும் மேசையில் நூறாவது நாள் என்ற எழுத்துக்கள் கொண்ட சிறுதாள் ஒன்று மின்னியது. அதன் பக்கத்திலே ஐந்தாறு மல்லிகை மலர்களால் தொடுக்கப்பட்டு கொழுந்து இலைகளுடன் கூடிய சின்னஞ்சிறு பூச்செண்டும் காட்சியளித்தது. வெளியுலகைக் கண்டு நூறு நாட்கள் ஆகிவிட்டன. குழந்தைகளை வாரியணைத்து முத்தம் தந்து நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டன. பக்கத்திலே அமர்ந்து தாய் உபசரிக்க துணைவி உணவு பரிமாறி நூறு நாட்கள் முடிந்துவிட்டன. நண்பர்களோடு கூடியிருந்ததும் குலவிக்கிடந்ததுமான அந்தக் கோலாகல நாள் உருண்டுபோய் நூறு நாட்களாகி விட்டன. கிளிக்கூண்டின் கதவு படார் என் சாத்தப்படும் போது தவிர்க்க முடியாத ஒரு மின்னல் போன்ற எண்ணம் இருதயத்தைத் தாக்கி மறைவது – இன்றைக்கு நூறாவது நாள்.
இந்த நூறு நாட்கள் எங்களுக்கு மட்டுமல்ல; திராவிடத்திற்கே மிக முக்கியமான நாட்கள். வெள்ளையனை எதிர்த்த விடுதலைப் போரிலே ‘ஜாலியன் வாலாபாக்’ எவ்வளவு பிரதானம் வாய்ந்ததோ அவ்வளவு பிரதானம் வாய்ந்தகட்டம் இந்த நூறு நாட்கள், திராவிடத்தின் சரித்திரத்திலே!
தமிழகத்து மண்ணிலே குருதி ! விண்ணிலே புழுதி! புண்ணிலே வேல் பாய்ந்தது போன்ற நிகழ்ச்சிகள்! கண்ணிலே புனலும், பண்ணிலே கனலும் எழும்ப திராவிடம் தனது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளத் தயாராகிவிட்டது. தர்பார் சூரர்களோ தருக்குமிக்க துரைத் தனத்தால் உருக்குலைத்து விடலாம் இந்த உணர்ச்சியை என்று உறுமிப் புறப்பட்டு விட்டனர். வளர்ந்து வரும் எழுச்சியால், தங்கள், வயிறு வளர்க்கப் பயன்பட்டு வரும் கட்சிகள் தேய்ந்து விடுமோ என்று அஞ்சியவர்கள் நேரம் பார்த்து நஞ்சுமொழி பேசக் கிளம்பிவிட்டனர். தீரமிக்கத் திராவிடப் படையினர் ஐயாயிரவர் அகப்பட்டார் சிறையில் ஆகவே இதுதான் சமயம் காற்றுள்ளபாதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கிணங்க மூடிக்கிடந்த முக்காடுகளை விலக்கிவிட்டு மூலையில் கிடந்த ஓட்டை உடைசல்கள் முரசு தட்ட எழுந்து விட்டன. “ரத்தம் ரத்தம்! பலாத்காரமே நமது லட்சியம் ” என்று வெறிபிடித்தலைந்த நரிக்கும்பல்கள் மக்கள் மன்றத்திலே தலைநீட்டி ஆட்டுமந்தைக்கு உத்தியோகம் கேட்க நாக்கைத் தீட்டிக் கொண்டன. சரித்திரத்திலே மட்டுந்தான் இவர்களுக்கு இடம் இருக்கவேண்டும். இவர்களுடைய கணக்கைத் தீர்த்துக் கட்டியாக வேண்டும் என்று காகபட்டரின் பரம்பரைத் தோன்றல் கச்சைகட்டி கிளம்பிவிட்டது. அக்கிரகாரத்தின் குரல்களாம் ஆரிய எடுகள் தங்களின் விஷமப் பிரச்சாரத் தொனியை உச்சஸ்தாயில் உயர்த்திக் கத்தின. பயந்துபோன பண்டிதர்கள் சிலர் திராவிடர் என்பதே கற்பனையென்று கூறி போலி வாதத்திற்கு திரைபோட முடியாமல் மழுப்பியும் – வழுக்கியும் – மறைந்து திரிந்தனர். இந்தச் சிறு சந்தடிகளுக் கெல்லாம் எதிராக திராவிட விடுதலைப்படையின் சங்க நாதம் தீரமாக ஒலித்தது. விரைவில் விடியப்போகிறது ஏன்பதற்கான விடி வெள்ளி தோன்றிவிட்டது.
அந்தப் பரவலான ஒளி படர்ந்த நாட்கள் தான் நான் குறிப்பிடும் நூறு நாட்கள்.
இந்த நூறு நாட்களிலே திராவிடர் நடத்திய தீரச் செயல்களை விடுதலைப்போர் முறைகளை எப்படி வருங்காலம் மறந்திட முடியாதோ – அதுபோலவே விடுதலைப் போருக்கு எதிராக எழுந்த வீணர் குரல்களையும் விபீஷணச் செயல்களையும் தேசீய உணர்ச்சியற்ற இழி குணத்தோர் போக்கையும் – மறந்திட முடியாது.
சரித்திரத்திலே தான் இடம் இருக்கவேண்டும். உடனே இவர்கள் ஒழிக்கப்பட்டாகவேண்டும என்று ஆச்சாரியார் கூறினார். அவரால் மறுக்கவோ அல்லது நினைக்காமலிருக்கவோ முடியவில்லை நாம் சரித்திரத்தில் இடம் பெறவேண்டியவர்கள் என்பதை! ருஷ்ய நாட்டு சரித்திரத்திலே லெனின் பட்டாளத்திற்கு இருந்த இடம்- சீனநாட்டு சரித்திரத்திலே மாசேவின் படை வரிசைக்கு இருந்த இடம் நிக்சயமாக திராவிட நாட்டு சரித்திரத்திலே அண்ணாவின் அணிவகுப்புக்கு இருந்துதான் தீரும். அதை ஆச்சாரியார் தமது கண்ணீர்த் துளிகளைக் கொண்டு எழுதி முடித்தாலும் முடிப்பார். அல்லது – நாமே, நமது ரத்தத் துளிகளால் எழுதினாலும் எழுதுவோம். சரித்திரத்திலே இடம் தரவேண்டும் என்று பாராட்டிவிட்டார், பார்ப்பனகுல மகிபர்.
அதோடு விடவில்லை; இவர்களது கணக்கையும் தீர்த்தாக வேண்டும் என்று கூறிவிட்டார். இதை அவர் நேருவிடத்திலே ஜாடையாக சொன்னதாகவே நாம் பொருள் கொள்ளவேண்டும்.
வாரன் ஹேஸ்டிங்ஸ், இங்கிலீஷ் பார்லிமண்டிடத்திலே சொன்னதுபோல அல்ல இது! மௌண்ட் பேட்டன் பிரபு – அட்லி துரையிடத்திலே கூறியது போலாகும், இந்த ஆச்சாரியாரின் வாசகம். நாமும்தான் கணக்கை தீர்த்துவிட்டு புதுக்கணக்கு போட வேண்டுமென்று துடிக்கிறோம். அட்லியிடத்திலே – மௌண்ட் பேட்டன் போல, நேருவிடத்திலே ஆச்சாரியார் கணக்கு தீர்ப்பது பற்றி கூறுகிறார் என்றால் மகிழ்ச்சியடைகிறோம். அல்ல;
எமனிடத்திலே சித்திரபுத்திரன் போல-என்று அவர் கூறுவாரேயானால் – நாமும் புராணக்கதையின் படியே அவருக்கு மார்க்கண்டேயன் வரலாற்றை ஞாபகப்படுத்து கிறோம். புராணக்கதையிலே லிங்கம் வெடித்து சிவனார் புறப்பட்டார்.
ஆச்சாரியார் அறிவார்! ஆனால் புரட்சிக் கதையிலே …… அதையும் ஆச்சாரியார் அறிவார்!
“திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக்கு முதல் எதிர்” இந்த நூறு நாட்களிலே ஒருநாள் ஆச்சாரியார் உதிர்த்த உத்வேக மொழியிது!
“கம்யூனிஸ்ட்டுகளை முதல் எதிரி என்றேன்- அவர்கள் அடங்கிவிட்டார்கள் – இவர்களை முதல் எதிரி என்கிறேன் – இவர்களும் அடங்கிவிடுவார்கள்.” ஆச்சாரியாரின் திருப்தி இப்படியிருந்தது.
”மாகினாட் அரணைத் தொட்டேன் – மண்மேடாகி விட்டது! இதோ மாஸ்கோவில் நுழைகிறேன் – இதுவும் குட்டிச் சுவராகிவிடும்” என்று யுத்த போதையிலே- வெற்றி மயக்கத்திலே பாடினான், உலகம் விழுங்கப் புறப் பட்ட உன்மத்தன் ஹிட்லர்!
அதே பாட்டு இங்கும் பாடப்படுகிறது – மெட்டு, தான் வேறு! ஹிட்லர் பாட்டு! சுதந்திர மெட்டு!



