ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி

கோரத் தாண்டவம்!

குடி! குடி! ரத்தம் குடி! வயிறு நிரம்பி வழிகிற வரையில் குடி! இரைப்பை புடைக்க எலும்புகளை மென்று தின்னு! விழுங்கு நரம்புகளை! வயதானால் என்ன – வாலிப மென்றால் என்ன சரியான மாமிசத் தீனி – மனித மாமிசம் சாதாரணமானதா – அதுவும் போர்க்களத்திலே திடீரெனச் சாயும் பிணம் ருசி கெடாது ! புசி ! புசி ! அது ஜீரணமாக ரத்தம் குடி! குடி!

இப்படி அடக்குமுறை வேங்கைக் குரலெடுத்து வெறிபிடித்து ஆடி – அகலமான வாயைத் திறந்து – “குடி குடி குருதியைக் குடி!” என்றவண்ணம் கல்லக் குடியிலும், தூத்துக்குடியிலும் குதியாட்டம் போட்டது! இரண்டு குடி! இந்நாட்டுத் திராவிடர் குடி ! இரண்டு குடியிலும் இரும்பு நெஞ்ச அடக்குமுறைக்கு சரியான உதிரக்குடி!

டால்மியாபுரப் போரின் எதிரொலியாக – வடநாட்டு மூலவர் எம்மை இழித்துச் சுடுசொல் வீசியதைக் கண்டிப்பதற்காக – இதோ ரயில் நிறுத்தம் என்றது தமிழகம் ஜூலை 15 ல்!

தூத்துக்குடியிலும் ரயில் நிறுத்தப்பட்டது. வயதேறிய இருவர் வாலிபர் இருவர் – அடக்குமுறை வேங்கையின் சொரசொரப்பான நாக்கிற்கு கோரப் பல்லுக்கு கூர்மையான இரையாக்கப்பட்டார்கள். உச்சிமா காளி என்ற இளைஞனின் உடலைக் கிழித்து குடலை மாலை போட்டுக்கொண்டது உதிரப் பசியெடுத்த அடக்குமுறை வேங்கை ! கணபதி என்ற இளைஞன் – அவனை நர நர வென்று மென்று தின்று நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு “நாலு பிணம் போதாது – இன்னும் தேவை” என்று சீரிப் பாய்ந்தது – சீனுவாசம் பிள்ளை யென்ற கிழவர் மீது! அவரை வளைத்து வாயில் போட்டுக்கொண்டு மந்திரம் நாடாரின் உயிரையும் துளைத்தது!

ஆறு பிணம் – ஆறுபிணம் ஆறவில்லை பசி அடக்கு முறைக்கு! திராவிடத் தாயே ! பாடைகள் ஆறு உன் பாலகர்களுக்கு ! ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ! ஒரே நாளில் ! ஆறு பிணம் – ஆறு மக்களை சுடுகாட்டுக்கு அனுப்புகிறாய்.

உத்தமர் காந்தியின் உலைக் களத்திலே – அகிம்சை நெருப்பிலே பழுக்கக் காய்ச்சப்பட்டு சுதந்திரம் என்னும் சம்மட்டியால் உருவாக்கப்பட்ட தூய்மை என்னும் துப்பாக்கி முனைகள் துளைத்துத் தோற்றுவித்த ஆறு பிணங்கள்! அய்யகோ! காந்தியாரின் கல்லறைக்கு முன்னே காவு கொடுக்கப்பட்டு பாரத மாதாவுக்கு படையல் போடுவதற்காக தயாரான ஆறு பிணங்கள்!

காந்தி கண்ணீர் வடிக்கிறார் – பாரத மாதா சிரிக்கிறாள் – அம்மா திராவிடம் – அழு ! அழு! கண் இமைகள் கனத்துப்போகும் வரையில் அழு ! ஒரே நாளில் ஆறு பிணம் – படுகொலை படுகொலை பாரதமாதாவின் பெயரால் – பட்டப்பகலில் பகிரங்கப் படுகொலை.

அழு; தாயே-அழு! ஒரு காலத்தில் சிரித்து செழித்த என் செந்தமிழ்த்தாயே ! அழு! கண்ணீர் சிந்து ! ரத்தக் கண்ணீர் சிந்து! ஆனால் இந்தக் கண்ணீர் வீண் போகாதம்மா !

சார்லஸ் காலத்திலே ஆங்கிலத்து மண் அழுதது வீண் போகவில்லை! லூயிக்கு நேரக பிரெஞ்சு பூமி விட்ட கண்ணீர் பயனற்றுப் போகவில்லை! ஜாருக்கு நேராக ரஷ்யத்தாய் சிந்திய கண்ணீர் ஆறு. நல்லதோர் விளைவைத்தான் தந்தது! இன்று – நீ நேருக்குநேர் விடும் கண்ணீர் இந்தப் பாருக்கு உன் நிலையை உணர்த்தத்தான் போகிறது!

தூக்கிக்கொடு ஆறு மைந்தர்களை – கண்ணீரால் குளிப்பாட்டிக்கொடு உன் கண்மணிகளை ! அவர்களை செந்நீரால் குளிப்பாட்டியவர்கள் செல்லட்டும் சிரிப்போடு!

ஆனால் தாயே! அந்த சிரிப்பு நீடிக்காது!

நீடிக்க விடமாட்டோம் மிஞ்சியுள்ள உன் கொஞ்சு மொழி மைந்தர்.

உயிரோடு ஆறுபேரை விழுங்கிய உதிரவாய்க் ‘காளிக்கு’ வயிற்றிலே கொஞ்சம் இடம் காலி அதற்காகக் கல்லக்குடியிலே சந்தனம் ஜோசப்பின் இடதுகை முழுவதையும் முறித்துப் போட்டுக் கொண்டது. அப்போதும் கொஞ்ச இடம் காலி – தூத்துக்குடி ஆசிரியர் குருசாமியின் இடது காலை வாழைப்பழம்போல் எடுத்து வயிற்றுக்குள் போட்டுக்கொண்டது.

ரத்த விருந்து முடியவில்லை – பதினாறு வயது இளைஞன் ராமச்சந்திரனின் பச்சைத் தொடைக்கரி வாலிபன் சண்முகத்தின் கணுக்கால் சதை – ரங்கநாதன் குடல் கரி – கோம்பன், கிருஷ்ணன், செல்லையா, சேர்மன், வேணுலிங்கம், சுடலை, முனுசாமி, ரத்தினம், ஈஸ்வரன், சதாசிவன், அண்ணாமலை, முனுசாமி, நாராயணன், செபாஸ்டின் ஆகியோரிடம் ஆளுக்குக் கொஞ்சம் எலும்பு, ரத்தம், சதை இவ்வளவும் சாப்பிட்டானபிறகுதான் ஆறு பேரை விழுங்கிய அகிம்சாப் ‘ பிடாரி’ ஏப்பம் விட்டாள்.

ஒருநாள் உணவு முடிந்தது என்றாள். “உயர்க அசோகச் சக்கரக்கொடி ! இன்னும் உயர்க! விண்ணில் உயர்க!” மண்ணில் உயர்க!” என்று பாட ஆரம்பித்தாள்!

ரத்த போதையில் குதித்தாள் – குதித்தாள் சித்தம் கலங்கி சிரித்தாள் – சிரித்தாள் – ஆறு உயிரோடு விட்டாளா அநேகர் குருதியோடு நின்றாளா அகப்பட்ட போதே இரையைத் தேடிக்கொள்வோம் என்று ஐயாயிரம் தோழரை அகிம்சா குகைக்குள் அள்ளிப்போட்டாள். ஒரே நாள் – ஜூலை 15! – ஆறு உயிர்! அநேகர் சித்திரவதை! ஐயாயிரம்பேர் சிறைச்சாலைகளில்!

எங்கே வாழ்கிறோம்? – திராவிடத்தில்! ஏதோடு இணைந்து ? – இந்தியாவோடு! யார் காலத்தில் ? – காந்தியாரின் வாரிசு காலத்தில்! என்ன குற்றம் செய்தோம் ? விடுதலை கேட்டோம்! ஆறு பிணம் -ஐயாயிரம் பேர் சிறையில்! மறவாதீர்!- அதை மறவாதீர்! சரித்திர ஆசிரியர்களே ! குறித்துக்கொள்ளுங்கள். காவியம் தீட்டுவோரே ! குறித்துக்கொள்ளுங்கள். பாடல் புனைவோரே! குறித்துக்கொள்ளுங்கள். கி. பி. 1953 சொல்லுகிறது – கி. மு. அல்ல! விடுதலை கேட்பது குற்றமாம்!

அதற்குத் தண்டணை ஆறு பிணம்! ஐயாயிரவர் சிறையில்! குறித்துக்கொள்ளுங்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *