
ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி
வெற்றி! வெற்றி!!
சிறையிலிருந்து மீண்ட மறுநாள் நானும், சத்தி, தர்மலிங்கம் ராமசுப்பையா, பராங்குசம் ஆகியோரும் கல்லக்குடி களத்தைப் பார்வையிடச் சென்றோம்.
“ நான் விடுதலை பெறும்போது டால்மியாபுரம்-கல்லக் குடியாக காட்சியளிக்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டு சிறை புகுந்தேன். ‘வாருங்கள் அந்த வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறேன்’ என அழைத்துச் சென்றனர் தோழர்கள். ஆமாம். ஜூலை 15ல் நான் ஒட்டிவிட்டுப் போன கல்லக்குடி என்னும் தாள் தான் அங்கே மின்னுகிறது. டால்மியாபுரம் என்ற பெயரைக் காணவில்லை.
கொரியாவுக்கும், காஷ்மீருக்கும் படைவீரர்களை அனுப்பும் பலம் பொருந்திய சர்க்கார், நாமோ சாதாரண மானவர்கள். அமைதியான அறப்போரை விரும்புகிறவர்கள். ஆனால்-நாம் ஒட்டுகிற கல்லக்குடி யென்னும் திருப்பெயரை அகற்றிட யாரும் முனையவில்லை. புகை வண்டி நிலையத்தில் நாள்தோறும் நமது கொள்கை முழக்கம் நடைபெற இடமளித்து – டால்மியாபுரம் என்கிற அவமானச் சின்னத்தின் மீது கரியைப் பூச அனுமதியும், பாதுகாப்பும் அளிக்கிறார்கள் என்றால் இதை நமது வெற்றி என்றுதானே கூறவேண்டும்.
“சர்க்கார்இன்னும் அதிகாரபூர்வமாக பெயரை மாற்றவில்லையே ” என்று ஒரு தோழர் கேட்டார். அவருக்கும் அவர்போல் சந்தேகம் கொண்ட நண்பர்களுக்கும் பின்வரும் பதிலைத்தான் நான் தரமுடியும்.
கல்லக்குடி யெனும் பெயர் அதிகாரபூர்வமாக இடப் படவில்லை யென்பது உண்மைதான். நமது வெற்றியை அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதுதான் அதன் பொருள். அதனால் நாம் வெற்றி யடையவில்லை யென்று கூறமுடியுமா?
மாசேதுங் செஞ்சீனத்தில் வெற்றிக்கொடி நாட்டினார். சியாங்கேஷேக் பார்மோசாவுக்கு ஓடினார். ஆனால் ஐ. நா. சபை இதுவரையில் மக்கள் சீனத்தின் வெற்றியை அங்கீ கரிக்கவில்லை. செஞ்சீனம் ஐ.நா. சபையில் இடம்பெற முயன்று – முயன்று – முடியவில்லை! ஆனால் பர்மோசாவில் பதுங்கிய சியாங்கின் சர்க்காருக்கு ஐ.நா.விலே இன்னும் இடமிருக்கிறது. செஞ்சீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை என்பதற்காக அதன் வெற்றியை யாராவது மறுக்க முடியுமா? சியாங்கின் தோல்வியைத்தான் மறைக்க முடியுமா? அதேபோலத்தான்- செஞ்சீன வெற்றி எனும் இடத்திலே கல்லக்குடியையும் – சியாங் சர்க்கார் என்னுமிடத்திலே ‘டால்மியாபுரம்’ என்ற பெயரையும் நிறுத்திப் பார்த்தால் நமது வெற்றி முழக்கத்திற்கு நல்லதோர் விளக்கம் கிடைக்கும்.
டால்மியாபுரம் பெயர் மாற்ற வெற்றியினாலேயே திராவிட நாட்டை திராவிடர்க்கு ஆக்கியதாக ஆகுமா என்ற ஐயமும் சிலருக்கு எழலாம்.
1917ல் ரஷ்யப்புரட்சி வெற்றி பெற்றது. 1905ல் ரஷ்யாவில் நடந்த ‘ரத்த ஞாயிறு’ புரட்சிக்கு முடிவு உண்டாக்கப் பயன்படவில்லை. புரட்சித் தொடர்கதையின் முன்னுரையாகத்தான் 1905ம் ஆண்டு எழுச்சி இருந்தது. பின்னர் பனிரெண்டு ஆண்டுகட்குப்பிறகே பாட்டாளியின் விடுதலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க முடிந்தது ரஷ்யாவில்!
அத்தனை ஆண்டுகள் இங்கே தேவைப்படாவிட்டா லும் – விடுதலை பெற அதிக விலை கொடுக்க வேண்டி
நேரிடலாம்.
திராவிடத்தின் தேசீய எழுச்சி, இனி யாராலும் அடக்க முடியாது என்ற விதத்திலே – வளர்ந்தோங்கி யிருக்கிறது.
பாசறையிலும் மாற்றாரின் குறிப்பாக தேசீய வட்டாரத்திலும் திராவிட உணர்ச்சி குமுறிக் கிளம்பியிருக்கிறது.
சிதறிக் கிடக்கும் திராவிடர்கள் சேரவேண்டியது தான் பாக்கி -நம் சிந்தைக்கினிய திராவிடத்தை மீட்டே தீருவோம் என்ற நம்பிக்கை மலர்ந்து விட்டது. அந்நிய ஆதிபத்யத்தை ஒழிக்க ஆரம்பித்த முதல் அறப்போரில் ‘ஆறுமாதக் கடுங்காவல்’ ஏற்பதற்கு முன் நான் பாடிய நண்பர் கருணானந்தம் அவர்களின் எழுச்சிமிக்க பாட்டின் முதல் வரிகளை உங்கள் நெஞ்சில் நிறுத்தி இதை முடிக்கிறேன்.
“சேர வருவீரே ! – சேர வருவீரே !
சேர சோழ தென்பாண்டி நாட்டார்!
வீர காவியம் தீட்டும் போரில் சேர வருவீரே !”
முற்றும்.
★ ★ ★



