
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
1. கண்ண பரமாத்மா!
இ–ம்: செஞ்சுருட்டி] [திஸ்ர ஏக தாளம்
உன்னடியில் அன்பு வைத்தோம் கண்ணபர மாத்மா!
உலகெல்லாம் நீயெமக்குக் கண்ணபர மாத்மா!
வன்ன மலர்க் காலையிலே கண்ணபர மாத்மா!
வசந்தமணம் பரப்புகிறாய் கண்ணபர மாத்மா!
பொன்பரவும் அருணனிலே கண்ணபர மாத்மா!
புன்னகைசெய் அருளழகா கண்ணபர மாத்மா!
மின்னொளிரும் மேகத்திலே கண்ணபர மாத்மா!
மின்னுவதுன் வண்ணமடா கண்ணபர மாத்மா!
நச்சரவு மேலிருந்தே கண்ணபர மாத்மா!
நர்த்தனஞ்செய் உத்தமனே கண்ணபர மாத்மா!
அச்சமில்லை அச்சமில்லை கண்ணபர மாத்மா!
அருளெம்மைக் காக்கு மப்பா கண்ணபர மாத்மா!
காற்றினிலுன் பூங்குழலே கண்ணபர மாத்மா!
காதில் வந்து கொஞ்சுதப்பா கண்ணபர மாத்மா!
ஆற்றினிலுன் வேதவொலி கண்ணபர மாத்மா!
ஆத்மசுகம் பேசுதப்பா கண்ணபர மாத்மா!
ஆவியிலே கலந்துவிட்டாய் கண்ணபர மாத்மா!
அறிவினுக்கும் அறிவானாய் கண்ணபர மாத்மா!
நாவினிலுன் கீதை சொல்லிக் கண்ணபர மாத்மா!
நாட்டினிலுன் பணி புரிவோம் கண்ணபர மாத்மா!



