
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
8. கீதா யோகம்
அத்யாத்ம யோகத்தால் உள்ளும் புறமும் பரம் பொருளைக் கண்டு கலந்து மானிடம் தெய்வ மாறுதல் அடைந்தாலே, அசுரமாயங்கள் ஒழிந்து, உலகில் அமைதியும் இன்பமுந் துலங்கும். அறிவு, அன்பு உண்மை, உறுதி, தூய்மை, வாய்மை, சர்வாத்ம சமத்வம், ஆன்மசக்தி, இவையே, அந்த மாறுதலுக்கு வழியாகும். மனித ஜாதியிடம் யோகசக்தி யின்மை யால், இப் பெரிய காரியம் இதுகாறும் நிறைவேறவில்லை.
உள்ளும் புறமும் கடவுளைக் கலந்த சுத்த சுதந்தர சமத்வ வாழ்வையே கீதை உபதேசிக்கிறது; கீதை அறிவுப்பசிக்கு அரிய விருந்து; வீழ்ந்தோரை உயர்த்தும் வீரக்கனல்; வாழ்வுக்குச் சஞ்சிவி; பந்த வினைகளைப் போக்கும் சுதந்தர சக்தி; மனப்போர்களை ஒழிக்கும் ஞானவாள்; அது உலகிற்கே அரிய மெய் வழி வேதமாகும். கீதை வழிப்படி, எக் காரியத்தை யும் ஈச்வரார்ப்பணமாகவே வெற்றியுடன் செய்யலாம்; தேவஜீவனம், தேவஜாதி, சுவர்க்க ராஜ்யம், சத்திய யுகம், ஆத்ம சமரசம், இவையே நமது உன்னத லட்சியம். இந்த லட்சியத்தை அடையவே கீதை தக்க வழி காட்டுகிறது. உலகாட்சி மனையாட்சிமுதல், மனிதன் தன்னைத்தான் ஆளும் ஆத்ம சுயாட்சி வரை யில் உள்ள ஒவ்வொரு நுண்ணிய செயலையும் கீதா யோகமாக்கலாம்; வினை முளைத்து, அன்பு மலர்ந்து, ஞானம் பழுத்து, ஆண்டவனுக்கே அப்பழத்தை நிவேதிக்கும் அகத்துறவையே, இப் பொதுமறை போற்றுகிறது.
கீதைவீரன், ஆத்மவீரனாவான்; அவன் எதற்கும் அஞ்சான்; ஆண்டவனுக்கே ஆளாகி, காலத்திற் கேற்றபடி திருவருள் ஆணையைப் புரிந்து வாழ்வான். கீதா தருமம், வாழ்வையே யோகமாக்கி, பாரத ஜாதியை வீரதீரராக நின்று நிலவச் செய்யும்; அதைப் பின்பற்றுவோம்!
“செய் கடமை; பலனைக் கருதாதே; கடவுள் மகிழக் கடமை செய்; வீரனே! நில், வெல், செல் முன்னே” என்று கீதை தூண்டுகிறது!
பாரதப் போருக்குப் பிறகு பாண்டவர், கண்ணன் கருத்தின் படியே தரும ராஜ்யத்தை நாட்டினர்; கண்ணன் துவாரகையில் கீதா ராஜ்யத்தை நிலை நாட்டினான். இறுதி நாளில் ஒரு வேடன் அம்பு, கண்ணன் காலிற் பாய்ந்தது. அப்போது உத்தவருக்குச் செய்த உபதேசம் ஞான கீதை யாகும்: “புலனை அடக்கு; மனதை வெல்; உள்ளம் சுத்த பரமாத்மன் கோயில். ஜீவன் பரமனுடன் கலந்து இன் புறுதலே, வாழ்வின் பலன்” என்பதே அதன் கருத்து. அனைவரும் கீதா யோகத்தைப் பாராயணஞ் செய்யுங்கள்; உத்தவ கீதையைச் சாதனஞ் செய்யுங்கள்.
வாழ்க கண்ணன் திருநாமம்!
முற்றும்.
★ ★ ★



