
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
3. பால கோபாலன்
ராதை : மாயக் கண்ணன் இன்னும் வரவில்லையே! உள்ளம் துடிக்குதம்மா ; ஊனும் உருகுதம்மா! இன்னும் எந்த அரக்கன் இக்கோபாலனைப் பழிவாங்க வந்தானோ; பயமா யிருக்கிற தம்மா!
கோபி : பயமேன் ராதை ? கண்ணன் முன்னே எந்த அதர்ம ராக்ஷஸன் நிற்கமுடியும்? கம்ஸன் வேலை இனிப் பலியாது.
ராதை : தோழீ! அந்தக் கம்ஸனுக்கு இந்தக் கண்ணனிடம் ஏனடீ இப்படிப் பகை மூண்டது?
கோபி : கேளம்மா கதையை: யதுகுல அதர்மனான கம்ஸன் தந்தை, உக்ரசேனனைச் சிறையிட்டுப் பலாத்காரமாக மதுரையை ஆளுகிறான். சகோதரி தேவகிக்கும் வசுதேவனுக்கும் திருமணம் நடந்தது. பவனி வரும்போது கம்ஸன் தேரோட்டினானாம். அப்போது, “அடே கம்ஸா! இதே தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்வானடா” என்றோர் அசரீரி வாக்குக் கேட்டதாம்! கொடிய கம்ஸன் உடனே வாளுருவித் தேவகியை வெட்டப் போனான். வசுதேவர் தடுத்து, “அப்பா, பெண் கொலை ஆகாது; பிறக்குங் குழந்தையை உன்னிடம் தந்து விடுகிறோம்” என்று சமாதானம் சொன்ன பிறகு, கோபந் தணிந்தானாம். தேவகி கர்ப்பமானதும் அவளைக் கணவனுடனே சிறையிட்டான் கம்ஸன். அவளுக்குப் பிறந்த குழந்தைகளை யெல்லாம் மாமா அசுரன் கொலை செய்து வந்தான். கண்ணனைக் கருத்தரித்த தேவகி, கவலை கொண்டழுதாள். அப்போது,”அம்மா, கவலைப்படாதே; உலகம் அசுரக் காடானது; அதைச் செப்பனிடவே நான் உன் வயிற் றில் பிறக்கப் போகிறேன்! பிறந்ததும் என்னை ஆயர் பாடி யசோதை பக்கத்தில் வைத்துவிட்டு, அவளுக்கு அதேசமயம் பிறக்கும் மாயை என்னும் பெண் குழந் தையை இங்கே கொண்டு வாருங்கள்; நான் வழிவிடுவேன்!” என்று உள்ளக் கண்ணன் ஒளி வடிவாகத் தோன்றி, தைரியப்படுத்தினான்!
கண்ணன் பிறந்தான்! வசுதேவர் குழந்தையை நம் ஆயர்பாடிக்குக் கொண்டுவந்து, மேற்சொன்ன படியே செய்து, மாயையைக் கொண்டு போனார். அதுகாறும் உலகம் இருள் மூண்டது; மழை பொழிந் தது. எல்லா உயிர்களும் மாயவுறக்கத்தில் ஆழ்ந்தன! இயற்கை வழிவிட்டது! விடிந்ததும் வந்தான் கம்ஸன்; குழந்தை மாயையைப் பற்றி வாளால் வீசினான்: “அடே! அசுரப் பதரே! கொலைபாதகா! உன் ரத்தவாளால் காற்றைப் பிளந்தாலும், உன் சினப் புயலால் கதிரை அணைத்தாலும், என் உயிரை அவிக்க முடியாதடா! உன் உயிரை வாங்கும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறான்; கவனம்!” என்று மாயை மறைந்தது! அசுர மாமா, “அப்படியா? ஹா!” என்றெழுந்து ஆயர்பாடியில் வளரும் கண்ணனைக் கண்டு, கொலை செய்யப் பல அசுரரை அனுப்பினான்; அவர்களே இப்படி வந்து தொல்லை செய்கிறார்கள்!
நினைத்தாலும் பயமா யிருக்கிற தம்மா! பூதகிப்பேய் விஷப்பால் கொடுக்க வந்தாள். முலையு டன் அவள் உயிரையும் உறுஞ்சிவிட்டான், என் கண்ணன்! சடகாசுரன் வந்தான். குழந்தை, காலால் உதைத்து நொறுக்கினான். குறாவளியாய் வந்தான் திருணாவர்த்தன். அவனை நசுக்கி யெறிந்து கொன்றான் கண்ணன். கன்றாக வந்தான் ஓர் அரக்கன்; இளங்கண்ணன் அவனைக் காலைவாரி ஒரு கனிமரத்தின் மேல் எறிந்தான்; கலகலவென்று கனிகள் உதிர்ந்தன. பாற்கடல் போல விரிந்த பசுமந்தையை நடத்திக் கொண்டு கண்ணன் புலன்களுக்குச் செல்வான். ஆயிரம் கோபாலர்களுடன் அவன் குழலூதி ஆடிப் பாடிச் செல்லும் காட்சியே காட்சி! ஒருநாள் பசு மேய்க்கும்போது அகாசுரப் பாம்பு, கோபாலர்களை அப்படியே விழுங்கியது. கண்ணன் தானும் பாம்பு வாயிற் புகுந்து, உருவைப் பெருக்கிவிட்டான்! பாம்பு கண் பிதுங்கி வயிறு வெடித்து இறந்தது. கோபாலர்களுடன் கண்ணன் வெளியே வந்து விளையாடினான். இன்னொரு நாள் கொக்கு ராக்ஷஸன் குழந்தையை விழுங்க வந்தான். கண்ணன் அவனைப் பிளந்தெறிந்தான். இன்னொருநாள் கழுதை யரக்கன் ‘காழ் காழ்’ என்று வந்தான். அவனையும் காலைவாரி யடித்துக் கனியுதிர்த்தான் கண்ணன்.
ஒருநாள் பிரமதேவனே பசுக்களையும் கோபாலச் சிறுவர்களை யும் எங்கோ ஒளித்துவிட்டான். கண்ணன் ஒவ்வொரு வீட்டிலும் தானே அவரவர் குழந்தைகளாக விளையாடினான். அதைக் கண்ட பிரமதேவன் வியந்து பயந்து, பசுக்களையும் பாலரையும் திருப்பித் தந்து கண்ணனைத் துதித்து வணங்கினான்! இவற்றையெல்லாம் விட ஆச்சரியம், காளிங்க நர்த்தனமே! காளிங்க மடுவை அந்த அகங்காரப் பாம்பு விஷமாக்கியது; அதன் வாடை பட்டாலும் உயிர் போய்விடும். கண் ணன், சிறு பையன்; தைரியமாகப் பாம்பின் தலை மேல் ஏறி நடம்புரிந்தானே! ஆ, உடனே பாம்பின் விஷக்கொழுப்பும் அடங்கியது!
ராதை : தோழீ! அசுர சக்திகள் பலவடிவில் வரு கின்றன. இந்தக் காலமே அசுரர் காலம். தெய்வ சக்தியால் கண்ணன் அசுர சக்தியை அழித்து வருகிறான்!
கோபி : அவன் ஆக்குவதும் அழிப்பதும் விளையாட்டாகத்தான் இருக்கின்றன. வீட்டிலும் விளையாட்டு, நாட்டிலும் விளையாட்டு. வீடெல்லாம் கண்ணன்; வீதியெல்லாம் கண்ணன். அதிலும் நம்முடன் அவன் ஆடும் விநோதங்கள் சொல்லி முடியா தம்மா. நம் வீட்டுக்குள் எப்படியோ வருகிறான். உரியை எட்டி வெண்ணையைத் திருடுகிறான்; தோழருக்கும் குரங்குகளுக்கும் தருகிறான். ‘பிடி பிடி’ என்று துரத்தினால் ஒரே ஓட்டம்; திரும்பினால், பின்னால் வந்து கண்ணைப் பொத்துகிறான்! சடையைப் பிடித் திழுக்கிறான்; யாரடா என்றால் சிரிக்கிறான்; கன்றுகளை அவிழ்த்து விடுகிறான்; கேட்டால், “கட்டுண்டவருக்கு விடுதலை தருகிறேன்” என்கிறான்! கண்டிப் போமென்றால், அவனைக் கண்டதும் நம்மையே மறக்கிறோம்! யசோதையிடம், “அம்மா! உன் பிள்ளை மகா துஷ்டன்” என்கிறோம்; யசோதை கண்டிக்கப் போகிறாள். குழந்தை சாதுவாக உறங்குகிறான்! தாயார் தயிர் கடையும் போது வெண்ணை கேட்கிறான். “இருட்டியதும் தருகிறேன்” என்றால், கண்ணை மூடிக்கொண்டு, ‘இதோ இருட்டு! கொடு நவநீதம்’ என்கிறான்! கொடுத்தால் தோழருக்குத் தந்து, இன்னும் என்கிறான். அம்மா அப்புறம் போனால்,பால் பானையை உருட்டுகிறான். நாங்கள் அடுத்த வீட்டுக்குச் சற்றே போனால், இவன் உள்ளே புகுந்து பானைகளை உருட்டுகிறான். “அட துஷ்டக் கண்ணா!” என்று மிரட்டினால், “உனக்கென்னடீ அடுத்த வீட்டில் வம்பு!” என்று கண்டிக்கிறான். அவன் விஷமம் பொறுக்காமல் யசோதை உரலில் கட்டிப் போட் டாள். குழந்தை உரலையும் இழுத்துத் தவழ்ந்து சென்று, இரண்டு மருத மரங்களைச் சாய்த்து விட்டானம்மா!
ராதை : முன்னே காமவெறியால் சாபம் பெற்ற நளகூபர மணிக்ரீவர்களே அந்த மரமாயிருந்து முக்தி பெற்றனர். தோழி! கண்ணன் ஆடலெல்லாம் அவ தாரலீலை; அவன் செய்வதெல்லாம் நன்மைக்கே!
கோபி : உண்மைதான்; இருந்தாலும், பெண்களிடம் அவன் செய்யும் சேட்டை மிதமிஞ்சிப் போனது. நாம் குளிக்கும் போது புடவைகளைப் புன்னை மரத்தில் எடுத்தொளித்து வேடிக்கை செய்கிறான்! சொல்லக்கூடாத பேச்சும் செய்கையும் உலகிற்கு நன்றாயில்லை. கண்ணனை ஸ்திரீலோலன் என்று எல்லாரும் பழிக்கிறார்கள்; கோபிகா லீலையைக் கேலி செய்கிறார்கள்.
ராதை : தத்துவம் தெரியா அசடரே, என் கண்ணனை அப்படிச் சொல்லுவார்கள். எட்டு வயதுக் குழந்தை நம்முடன் விளையாடினா லென்னடீ? கண்ணன் விளை யாட்டு, காம விளையாட்டா? கண்ணன் யாரென்றே தெரியாமல் கண்டபடி சிலர் பேசுகிறார்கள்; நம் உள்ளத்தில் உள்ள உத்தமனே கண்ணனாகக் கண்ணெ திரே விளையாடுகிறான்! நம் உயிரும் உள்ளமும் அவனிடமே இருக்கின்றன. நாம் கோவர்த்தன கிரியில் இந்திரனுக்குப் பொங்கலிட்டோம். அதைக் கண்ணனே உண்டான். இந்திரன் கோப மழை பெய்தான். கண்ணன் மலை நிழலில் நம்மைக் காத்தானே. அதைக் கண்டு இந்திரனும் வெட்கிச் சரண்புகுந்தானே. இந்திராதி தேவர்களும் சரண்புகும் அருளமுதனாகிய கண்ணன் செயலை, யார் அறியமுடியும்? அவன் செய்வது, நமக்கு அற்புதம்! அவனுக்கு ஆடல்! அந்தர்யாமியான கண்ணன் நம் ஆத்மநாத னன்றோ?
கோபி : ராதை, அவன் பெருமையை அறிந்த நீ யேன் பயப்பட்டாய்? நீ அவன் அன்பன்றோ?
ராதை : இருந்தாலும் என் அன்பு மனம் கண் ணனைக் காணாவிட்டால் வேதனை செய்கிற தம்மா!
இப்படி இவர்கள் பேசும்போது குழலோசை கேட்கிறது! “கண்ணன் அழைக்கிறான்; வாருங்கள், வாருங்கள்!” என்று கோபிமார் கூச்சலிட் டோடுகின்றனர். ராதையும் வெறி பிடித்தது போல், “கோபாலா, கண்ணா வருகிறேன்” என்றோடுகிறாள். நல்ல நிலா இரவு; யமுனைக்காடு மலர் மணம் வீசுகிறது. கண்ணன் குழலில் மயங்கிக் கோபிமார் தற்போத மிழந்து நிற்கின்றனர். வானும் புவியும் மயங்கி நின்றன. கண்ணன் கோபியருடன் விளையாடினான்.
ஒவ்வொரு கோபியும் தன் அழகில் கண்ணன் மயங்கி விட்டதாகச் செருக்குறவே, கண்ணன் மறைந்தான்! எல்லாரும் அவனைத் தேடிச் சரணடைந்தனர். சரணடைந்த ஆன்மாக்களுடன் கண்ணன் கை கோத்து ராஸநடனம் புரிந்தான். ஒவ்வொருவர் உள்ளமும் கண்ணன் ஆலிங்கனத்தை உணர்ந்தது! ஜீவாத்மத் தொகுதியுடன் பரமாத்மா. இப்படியே விளையாடு கிறான். இதுதான் கண்ணனின் பிருந்தாவன லீலா ரகசியம்!



