
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
4. கம்ஸன் வதம்
ஒருநாள் நாரதர், ஒரே சமயத்தில் கண்ணனை வீடு தோறுங் கண்டார்! நாரதர் கம்ஸனிடம் கண்ணன் பெருமையை வருணித்தார். மாமாவின் மனம், பகீரென்றது; அவன் அக்ரூரரை அனுப்பி, தான் புரியும் ஒரு வேள்விக்காகக் கண்ணனை அழைத்தான். வழியில் பல இடர்களைத் தாண்டிக் கண்ணன், அண்ணா பலராமருடன் மதுரை சேர்ந்து, இரவில் பூக்காரன் ஸுதாமன் வீட்டில் தங்கி, விடிந்ததும் வேள்விக்குச் சென்றான். கம்ஸனுக்குக் கிலி பிடித்தது; முஷ்டிகன் சாணூரன் என்னும் கொடிய மல்லரை, அவன் ஏவினான். அண்ணன் தம்பிகள் இருவரும் இவ்வரக்கரைக் குத்திக் குமைத்தனர். பார்த்தான் கம்ஸன். “இத்தனை சூழ்ச்சிகளும் பலிக்கவில்லையே; இனி நாமே முடிவாக ஒரு கை பார்த்து, இச் சிறுவனை நொறுக்கி யெறிவோம்” என்று தோள் கொட்டிப் பல்லைக் கடித்துக் கண் கனல் பறக்கக் கண்ணன் மீது பாய்ந்தான். ஒரே சுழற்றில் தொடையோடு பற்றிக் குப்புற வீழ்த்தி மார்பைப் பிளந்து, இந்த அதருமக் கம்ஸனைக் கண்ணன் கொன்று பூதேவியின் பாரத்தைத் தீர்த்தான்;
உடனே தாய் தந்தையரை விடுவித்தான்; உக்கிரசேனனுக்கு மதுரை யாட்சியைத் திருப்பி வழங்கினான். அதன்பின் கண்ணன் சிறிதுகாலம் சாந்தீபி முனிவரிடம் குருகுல வாசம் செய்தான்; பிறகு மதுராபுரியில் தரும ராஜ்யத்தை நாட்டி அரசாண்டான். இப்போது கம்ஸன் மாமனார் ஜராசந்தன் போருக் கிழுத்தான்; கண்ணன் ஜராசந்தனைப் பிளந்து கொன்றான். அதன் பீன் நரகாசுரன், பாணாசுரன், சிசுபாலன் முதலிய கொடிய அரக்கர்களை வீழ்த்தினான்.



