கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்

5. தரும வீரம்

இனிக் கண்ணன் உலகிற்குற்ற காரியம் தொடங்குகிறது: தீயர் கொடுமைகளை அழித்து, தருமத்தை நாட்டி, மகாபாரதம் (Greater India) ஆக்கவே கண்ணன் பிறந்தான். மனித மரபைப் பிடித்துப் பிளவு செய்யும் ஆசையாணவப் பேய்கள், துரியோதனாதிகளாக உருக்கொண்டு, அறவடிவமான பாண்டவர் களுக்குச் சொல்லொணாத் துயரிழைத்தன. மற்ற அசுர பலங்களை யெல்லாம் வீழ்த்திய கண்ணன், முடிவில் துரியோதனாசுரனின் செருக்கைக் கவிழ்க்கக் குறி வைத்தான்.

ஏ, ஆணவப் பொறாமையே, நின் பெயர் துரியோதனன்! தரும வீரரான பாண்டவரை என்ன பாடுபடுத் தினாய்! பீமன் கதையும் விஜயன் வில்லும் உன்னை நடுக்கின. பீமனை நீரில் அமிழ்த்தினாய்; அவன் சோற்றில் விடம் வைத்தாய்; தூங்கும்போது அவனைக் கட்டி, வெள்ளத்திற் போட்டாய்; வாரணாவதத்தில் அரக்கு மாளிகை கட்டி அதில் பாண்டவரை எரித்து விடப் பார்த்தாய்; நீ வைத்த தீ, உன் வீட்டையே எரித்தது; பாண்டவர் தப்பினர்; பாஞ்சாலத்தில் வீரப் போட்டியை வென்று, பாஞ்சாலியை மணந்தனர். ஆண்டவன் அறவோரைக் காத்தான்!

பொது மக்கள் ஒரே குரலுடன், தருமபுத்திரரே நாடாள வேண்டும் என்றனர். திருதராட்டிரன் பாண்டவருக்குப் பாதியரசு ஈந்தான். பாண்டவர் இந்திரப் பிரஸ்தத்தில் தருமராஜ்யத்தை நாட்டி, வெற்றி வேள்வி நடத்தினர். பாரத நாட்டு மன்னரெல்லாரும் தருமபுத்திரருக்கு வேண்டிய சிறப்புச் செய்தனர். கண்ணனுக்குத் தருமன் முதல் மரியாதை செய்தான். துரியோதனனுக்குப் பொறாமை பற்றிக் கொண்டது; பாண்டவரைத் தந்திரமாக அஸ்தினாபுரிக்கு அழைத் தான்; சகுனி மாமாவைக் கொண்டு தருமருடன் மாயச்சூதாடி, அரசு, செல்வம், ஆள், மனை, அனைத்தையும் பணயம் வைத்துத் தோற்கச் செய்தான். அகங்கார மகிழ்வு பொங்கி, பத்தினியான பாஞ்சாலியைச் சபை நடுவே துயிலுரிய முயன்றான். “ஹரிஹரி சரணம்!’ என்று பாஞ்சாலி முறையிட்டாள். ஆடை கடல் போல் வளர்ந்தது; துயிலுரிந்த துச்சாதனன் மயங்கி வீழ்ந்தான். பெண்ணின் பெருமையைக் கெடுத்த அரக்கனின் இரத்தத்தைத் தடவியே கூந்தலை முடிவது எனப் பாஞ்சாலி சபதம் பூண்டாள். துரியோதனன் தொடையைப் பிளக்க பலபீமன் விரதம் பூண்டான். பன்னிரண்டு ஆண்டு, காட்டிலும், ஓர் ஆண்டு காணாமலும் திரிந்து வந்தால் அரசைத் தருவதாகச் சொல்லி, அரவக் கொடியோன் பாண்டவரைக் காட்டிற் கோட்டி, அவர்களைக் கொல்ல ஓயாமற் சூழ்ச்சி செய்துகொண்டேயிருந்தான்; கொலை யாளிகளையும், அரக்கரையும், பூதங்களையும் ஏவினான்; குடி நீரில் விடங் கலந்தான். கண்ணன் அருளால் அன்பர் தீதின்றித் தப்பிப் பிழைத்தனர்! வியாசரிடம் பஞ்சாக்ஷரி உபதேசம் பெற்று விஜயன்,

அரணை நோக்கி அருந்தவம் புரிந்து, பாசுபதாஸ்திரம் பெற்று வந்தான். விராடன் அரண்மனையில் ஓராண்டு கரந் துறைந்து, பிறகு கண்ணனைத் தூதனுப்பிப் பாண்டவர் தாயாதிகளிடம் அரசுரிமை கேட்டனர். ”இருக்கக்கூட இடந்தரேன்” என்று மறுத்தான் துரியோ தனன்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !