
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
7. கீதா சாரம்
1. எழுந்திரு வீரா! போரிடைச் சோர்வேன்? யாக் கையே அழியும்; ஆன்மா வாழும். அனைத்தையும் ஆன்மமயமெனப் பாராய்; அனைத்துள்ளும் யானே ஆன்ம வடிவாயிருக்கிறேன். என் பணிக்காகவே, என் னுடன் வந்தாய்; என் உலக வடிவைப் பார்! நான் காலசக்தி. இந்த அதரும அரக்கரை உண்டு, பூப் பொறை நீக்கி, அத்யாத்ம தரும ராஜ்யத்தை நிலைநாட்டவே வந்தேன்! இது என் இச்சை; உன் சுதர்மம்.
2. சுயநலப் பற்றை விடுத்து, என் பணி புரி; விருப்பு வெறுப்பு என்னும் இருமை விலக்கு.
3. பல நினைவகற்று; ஒருமனப்படு; அன்புமும் அடக்கமும், அமைதியும் தெளிவும், ஆத்ம வீரமும், அஞ்சா வுறுதியுங் கொள்; அனைத்திலும் யானே; அனைத்தும் என்னுள். சம சித்தத்துடன் என்னை நினைத்து, என்னடி புகுந்து, எனக்கே வேள்வியாய், இயற்றுவ தியற்று.நான், அடைக்கலம் புகுந்த அன்பரைக்காப் பேன்; நானே ஸர்வாத்மனாதன்!
4. நானே காலம்; நானே ஞாலம்; உயிர்களி லெல்லாம் உறையுள் யானே: முதலும், நடுவும் யானே; புலன் களில் நுகர்வும், புந்தியி லொளியும், வீரர் வீரமும், வெற்றித் திறனும் யானே! வாழ்வை எனக்கே வேள்வி யாக்கு; பணியும் பயனும் எனக்கே நிவேதி. பன்மணிக் கயிறெனப் பாருயிர்க் கெல்லாம் ஆதார மாக அமைந்தவன் யானே!
5. எல்லாப் பொருளும் என்னுள் அடக்கம். என் இயற்கை, என் யோக மாயை, என் சக்தியினின்றே கற்பமும் ஊழியும் காட்டி மறையும்; சாட்சியா யிருக்கும் ஜீவன்,புருஷன், க்ஷேத்திரக்ஞன் யானே. தூல சூக்கும வுடலான இயற்கை (பிரகிருதி), எனது செயற்கருவி. புருஷப் பிரகிருதியைத் தாங்கும் புரு ஷோத்தமன் யானே!
6.ஆசை,அச்சம்,சினம்,பொறாமை, தளர்வு, தன்னலப் பற்றுகளை நீக்கு; மனக் கட்டுமானங்களை விடு; கடவுளுணர்வில் வாழ்வாங்கு வாழ்! காலத்திற் கேற்றபடி ஆண்டவன் உன்னுள் ஏவும் பணிகளைத் துணிந்து செய்; அறிவினால் உணர்; அன்பினால் நெருங்கு; யோகத்தால் ஒன்றுபடு. அனைவருள்ளத்தும் யானொருவன் உள்ளேன்; எங்கு முள்ளேன்! நம்பு,நினை, முயல்; தீரனாக நிமிர்ந்து நில், வெல்! எவர் எங்கே எந்த வடிவில் என்னைப் போற்றினும் அந்த வடிவில் ஆங்காங்கு அவரவர்க்கு அருள்புரி வேன்.
7. பொறுமையும் பணிவும் புலனடக்கமும் அறிவும் அன்பும் ஆண்மையும் போற்றி, அச்சம் அகந்தை அடிமைப்பற்று, பதற்றம் மயக்கம், பொறாமை யின்றி, முக்குணக் கட்டை முற்றிலும் உடைத்து, என் னையே நம்பி, என்னிலே நினைத்து, எனக்கே வேள் வியாய் என் பணி புரிக! என்னுடன் ஒன்றி யிருத் தலே யோகம்; உயிர்வாழ் வெல்லாம் யோக மாகுக. ஓம் தத்ஸத்!



