
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
2. பிருந்தாவனம்
அழகான முல்லை நிலம்; மலர்கள், பலநிறப் புன்னகை புரிகின்றன. யமுனை இன்ப அலைவீசித் தவழ்கிறது; ஆக்கள் மடி சுரக்கின்றன; குயில்கள் ‘கண்ணா’ என்று கூவுகின்றன; கிளிகள் ‘கிருஷ்ணா’ என்று கொஞ்சுகின்றன; வானம்பாடி ‘ஹரி கோவிந்தா’ என்று பாடிப் பறக்கிறது! கோவர்த்தன கிரி ‘நான் இருக்கிறேன்!’ என்று அபயமளித்து நிற்கிறது. இதுதான் பிருந்தாவனம், ஆயர்பாடி, கோபகோபியர் வாழும் சிற்றூர்!
இந்த ஊர் முழுதும் கண்ணன் மயந்தான்! தென்ற லெல்லாம் அவன் குழலோசையைப் பருகி வரும்; மலர்களெல்லாம் “கண்ணா எம்மைச் சூட்டிக்கொள்’ என்று புன்னகை புரிந்து கெஞ்சும்; மாடு கன்றுக ளெல்லாம் கோபாலன் குழலோசையில் மயங்கி நிற் கும்; கோபாலர்க ளெல்லாரும் அவன் பேச்சே பேசு வார்கள்; கோபிகளுக் கெல்லாம் மனம் அவனிடமே நிலைத்திருக்கும்! கேளுங்கள், ராதை ஒரு கோபியிடம் பேசுவதை:



