

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்
ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டில் வாழ்ந்த அரசர்களின் வரலாறுகள் மட்டும் தெரிவிக்கும் என்பது இல்லை. குடிமக்களில் பலர் பெருஞ் செல்வர்களாக இருந்து அரசர் செய்யாத நற் செயல்களைச் செய்திருக்கிறார்கள். முடியுடை மன்னர்களல்லாமல் அங்கங்கே சிறிய பகுதிகளுக்குத் தலைவர்களாக இருந்த குறுநில மன்னர்களும் வேளிர்களும் பல அரிய வண்மைச் செயல்களையும் வீரச் செயல்களையும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் பல உண்டு.
இலக்கியங்களால் தெரிய வரும் அத்தகைய நிகழ்ச்சிகள் நாட்டு வரலாற்றின் பகுதிகள் என்றே சொல்வதற்குரியன. வரை யறையாக வரலாற்றை எழுதி வைக்கும் வழக்கம் இந்த நாட்டில் இல்லை. ஆயினும் பல பெருமக்களுடைய செயல்களை இலக்கியங்கள் அங்கங்கே புலப்படுத்துகின்றன. புறநானூறு என்னும் சங்க நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் இத்தகைய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழுந்தது.
பிற்காலத்தில் ஒவ்வொரு மண்டலத்தின் பெருமையையும் தெரிவிக்கும் நூல்கள் எழுந்தன, என்ன காரணத்தாலோ ஒருவர் நூறு என்ற வரையறை செய்து சதகமாக அத்தகைய நூலைப் பாட மற்ற மண்டலங்களின் சிறப்பைத் தெரிவிக்க வந்தவர்களும் சதகங்களையே பாடிவிட்டார்கள். தொண்டை மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், சோழ மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், என்ற பெயர்களுடன் அவை வழங்குகின்றன. அந்தச் சதகங்களில் உள்ள பாடல்கள் அந்த அந்த மண்டலங்களில் வாழ்ந்த பலருடைய வரலாற்றோடு சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளைச் சொல்கின்றன. பல புலவர்களையும் புரவலர்களையும் பெண்மணிகளையும் செல்வர்களையும் வள்ளல்களையும் பக்தர்களையும் அந்தச் சதகங்களில் காணலாம். பல அருங்குணங்களின் இருப்பிடமாகிய அப்பெரு மக்கள் வரலாறுகள் எண்ண எண்ண இன்பம் தருவன. பலவகைச் சுவைகளும் அந் நிகழ்ச்சிகளில் உள்ளன.
இவற்றையன்றித் தனிப் பாடல்களில் பொதிந்துள்ள நிகழ்ச்சிகள் பல உண்டு. தமிழ் நாவலர் சரிதையால் தெரிகின்ற புலவர்கள் வரலாறுகள் பல.
இத்தகைய நிகழ்ச்சிகளைத் துருவி ஆராய்ந்து உருவாக்கி எழுதும் கலையை என்னுடைய ஆசிரியப்பிரானாகிய மகாமகோபாத்தியாய ஐயரவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன். அதன் பயனாக அவ்வப்போது பல வரலாறுகளை எழுதினேன். அவை புத்தக உருவிலும் வெளியாகியிருக்கின்றன. புதுமெருகு, எல்லாம் தமிழ், தமிழின் வெற்றி என்ற புத்தகங்கள் இத்தகைய நிகழ்ச்சி ஓவியங்கள் அடங்கியவையே.
அந்த முறையிலே எழுதிய வரலாறுகளின் கோவையே இந்த நூலும் ஆகும். இதில் உள்ள வரலாறுகளில் ‘முந்நீர் விழா’ என்பது சுதேசமித்திரன் தீபாவளி மலரிலும், ‘ஒத்த மரபு’ என்பது புதுமையிலும் வெளி வந்தவை. ஏனையவை தினமணி – கதிரில் வந்தவை. இவற்றை வெளியிட்டு உதவிய அப்பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு என் நன்றி உரியதாகும்.
முந்நீர் விழா என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், பத்துப்பாட்டு என்பவற்றில் வரும் செய்திகளை வித்தாகக் கொண்டது. புறநானூற்றுப் பாடல் ஒன்றே பசிப்பிணி மருத்துவனை எழுதக் காரணமாயிற்று. கடலும் கிணறும் என்பது ஒரு தனிப் பாட லுக்கு நிகழ்ச்சி உருவில் கற்பனை செய்து அமைத்த விளக்கம். கூவம் தியாக சமுத்திரம்,விச்சுளிப் பாய்ச்சல், அற்புதக் கொடை என்பன தொண்டைமண்டல சதகத்தை ஆதாரமாகக் கொண்டவை. கவிஞனும் செழியனும், ஒத்த மரபு, முத்திருளப்பர், நெட்டிமாலைப் புலவர், குட்டிப் பாம்பு என்பவை தனிப் பாடல்களிலிருந்தும் பிரபந்தங்களிலிருந்தும் தெரிந்துகொண்ட வரலாறுகள். திண்ணையில் கெண்டை, சோழமண்டல சதகத்திலிருந்து எடுத்த வரலாறு.
நிகழ்ச்சிகளை நிலைக்களமாகக் கொண்டமையால் இடையே வரும் பாடல்கள் எளிதில் மனத்தில் பதியும் தன்மை உடையவை. அவற்றின் பொருளையும் அங்கங்கே தெரிவித்திருக்கிறேன்.
உரையாடலும், வருணனையும், நிகழ்ச்சியைச் சொல்லும் போக்கும் சேர்ந்து ஒவ்வொரு வரலாற்றையும் சலிப்பின்றி ஊக்கத்துடன் படிக்க உதவும் என்ற எண்ணத்தால் அவற்றை விரவ வைத்திருக்கிறேன்.
தமிழ் நாட்டின் வரலாறு பெரிய கடல். அதில் இத்தகைய முத்துக்கள் பலவற்றை எடுக்கலாம். உண்மைக் கதைகளாகிய இவை மனிதப் பண்பின் பல பகுதிகளைப் புலப்படுத்தும் ஓவியங்களாக இருப்பதை இவற்றைப் படிப்பவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
கி.வா.ஜகந்நாதன்



