முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

கடலும் கிணறும்

அது சிறிய ஊர்; ஆனாலும் பெரிய மனமுள்ள மக்கள் அதில் வாழ்ந்தார்கள். அவர்களுடைய பெருமையை உலகத்துக்குத் தெரிவிப்பதற்காகவே இருப்பவர்களைப் போலப் பல சிறிய மனமுடையவர்களும் அங்கே இருந்தார்கள். ஒருவர் சில நிலங்களை வைத்துக் கொண்டு தம்மால் இயன்ற அளவுக்கு அறம் செய்து வந்தார். வேறு பலர் நாளுக்கு நாள் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். அந்தச் செல்வர்கள் வாழ்ந்ததனால் ஊருக்குப் புகழ் உண்டாக வில்லை. சின்னக் குடித்தனக்காரராகிய வேளாளர் இருந்ததனால் வேறு ஊர்களிலிருந்து ஏழைகள் வருவார்கள்; புலவர்கள் வருவார்கள்; அந்த அறச் செல்வரிடம் உதவி பெற்றுச் செல்வார்கள்; தாம் போகும் இடங்களில் எல்லாம் அவருடைய புகழைப் பரப்பிக் கொண்டே போவார்கள். இதனால் அந்த ஊருக்குப் புகழ் உண்டாயிற்று.

அடிக்கடி புலவர்கள் வந்து போவார்கள். அந்த வேளாளருக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். புலவர்களிடம் பாடல்களைக் கேட்டு இன்புறுவார். தமிழன்பும் அற நினைவும் ஒருங்கே இணைந்த அவரிடம் யாருக்குத்தான் அன்பு பிறக்காது?

ஒருநாள் ஒளவையார் காதில் அந்த நல்லவருடைய புகழ் விழுந்தது. நல்ல மனிதர்கள் எங்கே இருந்தாலும் தேடிச் சென்று பார்த்துப் பாராட்டுவது அந்தப் பெருமாட்டிக்கு இயல்பு. இந்த வேளாண் செல்வரையும் பார்க்க விரும்பி ஒரு நாள் அவர் ஊருக்குச் சென்றார். ஊருக்குள்ளே நடந்து வரும்போது பல பெரிய மாளிகைகளைக் கண்டார். இந்த மாளிகைகளில் ஒன்றில்தானே அவர் வாழ்கிறார்?’ என்று உடன் வந்தவர்களை ஒளவையார் கேட்டார்.

“இல்லை; அவர் சிறிய வீட்டில் வாழ்கிறார். இந்த மாளிகைகளில் வாழ்கிறவர்கள் அவரைக் காட்டிலும் பெரிய செல்வர்கள்” என்கிறார்கள் அவர்கள்.

“இந்த ஊரில் இவ்வளவு பெரிய பெரிய செல்வர்கள் இருக்கிறார்கள் என்று யாரும் சொல்லவில்லையே!” என் றார் தமிழ் மூதாட்டியார். அதற்கு விடை ஒன்றும் யாரும் கூறவில்லை.

ஒளவையார் வேளாண் செல்வர் வீட்டுக்குப் போனார். அவர் வருவதை அறிந்த அவர் எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்தார். பாட்டி தனியாகவா வருவார்? அவருடன் வேறு சில புலவர்களும் வந்திருந்தார்கள். ‘பாட்டி வாயிலிருந்து எந்தச் சமயத்தில் என்ன முத்து உதிருமோ? அதை உடனே பொறுக்கிக் கொள்ளவேண்டும்’ என்று மிகுந்த ஆவலோடு அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த உபகாரி யாவரையும் அமரச் செய்து உபசாரம் செய்து விருந்து அளித்தார். அவர் இட்ட விருந்தும் பேசிய பேச்சும் இனியனவாக இருந்தன. ஊரில் உள்ள பலர் ஒளவையாரைப் பார்க்க வந்து விட்டார்கள்.

எல்லோரும் உணவு உண்டு அமர்ந்திருந்தார்கள். அப்போது அந்த ஊர்க்காரராகிய பெரியவர் ஒருவர் ஒளவையாரை நோக்கி, “ஒரு விண்ணப்பம்” என்றார்.

“என்ன, சொல்லுங்கள்?” என்றார் ஒளவையார்.

“தாங்கள் இந்த ஊருக்கு எழுந்தருளியது, கலை மகளே எழுந்தருளியது போல இருக்கிறது. தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்தச் சிறிய ஊருக்கு வருவதற்கு இந்த ஊர் என்ன புண்ணியம் செய்ததோ, தெரியவில்லை. ஊரில் உள்ளவர்கள் புண்ணியம் செய்ததனால் தாங்கள் வந்தீர்கள் என்று சொல்லுவது தவறு. இந்தப் புண்ணியவான் இந்த ஊரில் இருக்கிறதனால்தான் தங்களைப் போன்றவர்கள் இந்த ஊரைத் தேடி வருகிறார்கள்.”

இதற்குள் அந்த உபகாரி, “தாத்தா, வேறு விஷயங்ளைப்பற்றிப் பேசுங்கள்” என்றார்.

கிழவர் மேலே தொடர்ந்தார்: “நான் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்பதில்லை. தாங்கள் தெய்வாம்சம் உடையவர்கள். தங்கள் திருவாக்கால் இந்தப் புண்ணியவானை ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். எவ்வளவோ பேர்கள் தங்கள் வாக்கால் புகழ் பெற்றிருக்கிறார்கள். இந்த வள்ளலையும் தாங்கள் செந்தமிழ்ப் பாவால் வாழ்த்த வேண்டும்.”

வீட்டுக்கு உடையவர் ஒளவையாரைப் பார்த்து, ”அந்தப் பெரியவர் என்னிடம் உள்ள அபிமானத்தால் பேசுகிறார். இந்த ஊரில் பல பெரிய செல்வர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நான் மிகவும் சிறியவன். இறைவன் அவர்களுக்கு அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். இந்த ஊரில் அவர்கள் இருப் பதும் ஒரு பெருமைதான். பொதுவாக எல்லோரையும் வாழ்த்துவதுதான் முறை. இந்த எளியேனைத் தனியே வாழ்த்துவதற்கு நான் என்ன செய்துவிட்டேன்!” என்றார்.

ஒளவையார் இதுவரையில் பேசாமல் இருந்தவர் இப்போது வாயைத் திறந்தார். முன்னால் பேசிய கிழவரைப் பார்த்து, “இந்த ஊரில் வேறு செல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறாரே; அவர்கள் இவரை விடப் பணக்காரர்களோ?” என்று கேட்டார்.

“ஆமாம், அவர்கள் பணத்தைச் செலவழிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே வருகிறார்கள். இவருக்குப் பணத்தைச் செலவழிக்கத் தெரியுமே யொழியச் சேர்க்கத் தெரியாது. அதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்வேன்.”

“அப்படியா! ஏதாவது ஒன்று சொல்லுங்கள்; கேட்கிறேன்.”

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பக்கங்களில் பஞ்சம் வந்தது. நெல் சாரியாக விளையவில்லை. இருக்கிறதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு செட்டாக வாழ வேண்டியிருந்தது. அப்போதும் இவரிடத்தில் யார் யாரோ புலவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அந்தப் பணக்காரர்கள் தங்கள் வாசலை அடைத்துக் கொண்டார்கள். இந்தப் புண்ணியவானோ எப்போதும் போல் வருவாரை வரவேற்றார். இவர் சாப்பிட்டாரோ, இவர் மனைவி சாப்பிட்டாளோ, நான் அறியேன். ஊரெல்லாம் திண்டாடும் அந்தச் சமயத்தில் வரும் புலவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது இவர் செய்த தருமத்தைப் பார்த்த நாங்கள், இவரைத் தெய்வப் பிறவி யென்றே எண்ணினோம்.”

‘இவரைப் பாடவேண்டும் என்று நீங்கள் சொல் கிறீர்கள்.”

”ஆமாம்.”

“இவரோ, எல்லோரையும் பாடவேண்டும் என்று சொல்கிறார்.”

அந்த உபகாரி, “ஆமாம், இந்த ஊர் வாழ்ந்தால் தான் நான் வாழ்வேன். ஊர் என்பது எல்லோரும் சேர்ந்ததுதானே? ஆகையால் எல்லோரையுமே வாழ்த் துங்கள்” என்றார்.

“உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, உடன் இருந்த புலவர்களின் முகங்களைப் பார்த்தார் தமிழ்ப் பிராட்டியார். அவர்கள் மூதாட்டியார் எப்படிப் பாடப்போகிறார் என்று ஆவலோடு காத்திருந் தனர்.

“அவர்கள் பெரிய செல்வர்கள் என்று சென்னீர்கள். உங்களுக்கு அத்தனை செல்வம் இல்லை அல்லவா?” என்று ஆற அமரப் பாட்டி கேட்டார்.

”ஆமாம்.”

“அவர்கள் செல்வம் கடலைப் போன்றதானால் உங்கள் செல்வத்தைச் சிறிய கிணறாகச் சொல்லலாமா?”

“தங்கள் திருவுள்ளம்.”

“அவர்களுக்கு மேன்மேலும் செல்வம் பெருகட்டும் என்று பாடப் போகிறேன்.”

இப்போது யாரும் பேசவில்லை. பாட்டி பாடலைச் சொல்லத் தொடங்கினார். அந்தப் பாட்டின் பாவத்தை முதலில் தெரிந்துகொண்டால் பிறகு பாட்டு நன்றாகச் சுவைக்கும்.

பிறரைக் கடலென்றும் அவரைக் கிணற்று நீரென்றும் பாடினார் ஒளவையார். வெறும் அளவுக்கா அவ்வாறு அவர் சென்னார்? கடல் அளவில் பெரியதுதான். ஆனால், அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீராவது தாகத்துக்கு உண்ணமுடியுமா? அதற்கு அருகிலேயே தோண்டிய கிணற்றில் சிறிய ஊற்றிலிருந்து வரும் நீரோ தாகத்தைப் போக்கும். சிறிய ஊற்றாக இருந்தால் என்ன? கையில் அள்ளிக் குடிக்கப் போதாதா? வற்றாமல் நீர் வந்து கொண்டிருப்பதாயிற்றே!

கடல் நீரை மேகம் வற்றச் செய்து உறிஞ்சிக் கொண்டு போய் எங்கோ பொழிகிறது. அந்தச் செல்வர்களின் செல்வத்தையும் வேறு யாராவது வற்புறுத்தி அடித்துக்கொண்டு போய்ச் செலவழிப்பார்கள். ஒளவை யார் இந்த எண்ணங்களை யெல்லாம் புதைத்துப் பாடினார். “உப்புக் கடலைப் போன்ற பெரிய பணக்காரர்களும் இருக்கிறார்கள்; கிணற்றில் உள்ள ஊற்று நீரைப் போல நீயும் இருக்கிறாய்” என்று பாட்டைத் தொடங் கினார்.

உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே!
கிணற்றுஊற் றன்ன நீயுமார் உளையே!

பிறகு வாழ்த்தலானார். “அந்தப் பணக்காரர்களுக்கு மேலும் மேலும் பெருஞ் செல்வம் உண்டாகட்டும் நீ… இப்போது அருகில் இருந்தவர்களின் ஆவல் மிகுதி யாயிற்று. “நீ பல காலம் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்!”

செல்வர்தாம் பெருந்திரு வுறுக!பல்பகல்
நீவா ழியரோ! நெடிதே.

ஒளவையார் இதனோடு நிறுத்தவில்லை. இந்த உபகாரியின் பெருமையைச் சொல்லாமல் பாட்டு முடியா தல்லவா? பஞ்சகாலத்தில் அவர் புலவர்களைக் காப்பாற்றிய செய்தி பெரிய சிறப்பாகத் தோன்றியது.”யாரும் தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் பதுக்கி வைத்துக்கொள்ளும் பஞ்ச காலத்திலும் உன்னிடத்தில் உள்ள பொருளை எங்களைப் போன்றவர் களுக்கு வழங்கி, எங்கள் பாடலை ஏற்றுக்கொள்பவன் நீ.” – இவ்வாறு பாடி முடித்தார்.

ஈயாச்
சிறுவிலைக் காலத் தானும்
உறுபொருள் தந்துஎம் சொற்கொள் வோயே!

[சிறுவிலைக் காலம் – பஞ்சகாலம். சொல்-புகழும் வார்த்தைகள். கொள்வோயே – கொள்பவனே; கொள்வாய் என்றும் பொருள் செய்யலாம்.]

அவர்களுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தாலும் கடைசியில் யாரேனும் அடித்துக்கொண்டு போகப் போகிறார்கள். இவர் நீடுழி காலம் வாழ்ந்தால் எப்படியும் அறம் புரிந்து கொண்டே இருப்பார். பணக்காரர் பணம் சேர்வதனால் வரும் தீங்கை அறத்தால் போக்கிக் கொள்ளலாம். அது செய்யாதவர்களுக்குப் பணம் சேரச் சேரத் துன்பமும் உடன் சேரும். பாட்டிக்கு இந்த உண்மைகள் நன்றாகத் தெரியும். அதனால் அவர்களுக்குத் துன்பம் உண்டாகட்டும் என்று சபிக்க வில்லை; ‘இன்னும் பணம் சேரட்டும்’ என்று சொன்னார்.

உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே!
கிணற்றூற் றன்ன நீயும் ஆர் உளையே;
செல்வர்தாம் பெருந்திரு வுறுக!
பல்பகல் நீவா ழியரோ நெடிதே! ஈயாச்
சிறுவிலைக் காலத் தானும்
உறுபொருள் தந்துஎம் சொற்கொள் வோயே!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *