முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

ஒத்த மரபு

ஆந்திர நாட்டில் உள்ளது ஹம்பி என்னும் நகரம். விஜய நகர சாம்ராஜ்யத்தின் இராசதானியாக இருந்த ஊர் அது. அங்கே அரசனுடைய பிரதானியாக அறம் வளர்த்த முதலியார் என்னும் வேளாண் செல்வர் இருந்தார். அவர் தமிழ் நாட்டில் உள்ள செம்பூர் என்ற ஊரிலே பிறந்தவர். அவர் மதியிற் சிறந்தவராக இருந்தமையால் அரசன் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தான்.

அம்பி அறம் வளர்த்த முதலியார் தமிழ்ச்சுவை தேரும் இயல்பு உடையவர். தமிழ்ப் புலவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஆதரிக்கும் வள்ளன்மை உடையவர். அவர் தம் ஊருக்கு வரும்போது அக்காலத்தில் சிறிய பகுதியை ஆண்டு கொண்டிருந்த பாண்டிய மன்னனைக் கண்டு அளவளாவிச் செல்வார்.

பெருஞ் சிறப்புப் பெற்று வாழ்ந்த பாண்டியர்களுக்குப்பின் அவர் மரபில் பெயருக்குப் பாண்டிய மன்னனாகச் சிறிய நாட்டுப் பகுதியை ஆண்டுவந்தான் அப் பாண்டியன். அவன் தமிழ்ப் புலமை மிக்கவன். நல்ல கவிஞன். அறம் வளர்த்த முதலியார் பேரரசனுடைய பிரதானியாக இருந்தமையால் அவருடைய நட்புத் தனக்குக் கிடைத்ததைப் பெரிய சிறப்பாகக் கருதினான் அவன். முதலியாரும் பாண்டியனுடன் மனம் கலந்து பழகி இன்புற்றார்.

சில நூல்களை இயற்றினான் பாண்டியன். அம்பி அறம் வளர்த்த முதலியாரைப் புகழ்ந்து ஒரு சிறிய நூல் இயற்ற வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவரிடம் சொல்லாமல் ஒரு கலம்பகம் பாடினான். அவருக்கு அந்தச் செய்தி தெரிந்தபோது, பிறரால் பாடல் பெறும் தகுதி உள்ள நீங்கள் என்னைப் பாடலாமா?” என்று தம் பணிவைக் காட்டிக்கொண்டார். நூல் சிறப்பாக அரங்கேற்றப்பெற்றது.

ஒரு நாள் பாண்டியன் தனக்கு வேண்டிய புலவர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தான். கலம்பகம் பாடி யது கேட்டு அறம் வளர்த்த முதலியார் சொன்னதை அப்புலவரிடம் சொன்னான். அந்தப் புலவர் முதலியாரின் பணிவைப் பாராட்டவில்லை. “பார்த்தீர்களா? நான் அப்போதே நினைத்தேன்” என்றார்.

“என்ன நினைத்தீர்கள்?” என்று பாண்டியன் கேட்டான்.

“அவர் வேளாளர். நீங்கள் முடி மன்னர்களாகிய பாண்டிய மரபில் உதித்தவர்கள். அவர் உங்கள் குடி மக்களில் ஒருவராக இருக்கும் நிலையினர். அப்படி இருக்க நீங்கள் சாமானியப் புலவனைப் போல உங்கள் பெருமையைக் குறைத்துக் கொண்டு அவரைப் பாடலாமா? முறையன்றுதான்” என்றார் புலவர்.

அது கேட்ட பாண்டியன் புலவருடைய அறியாமைக்கு இரங்கினான்.

“சோழ அரசர்கள் முடிமன்னர்கள் அல்லவா?”

“ஆம்.”

“கிள்ளி வளவன் என்ற சோழனைப்பற்றிக் கேள்வியுற்றதுண்டா?”

புறநானூற்றில் அவனைப்பற்றிய செய்திகள் வருகின்றன.

“அவன் ஒரு வேளாளனைப் பாடியிருக்கிற பாடலைப் பார்த்தது உண்டோ? அதுவும் புறநானூற்றில்தான் இருக்கிறது.

“யாரைப் பாடினான்?”

“சிறு குடி கிழான் பண்ணனைப் பாடியிருக்கிறான். யான் வாழும் வரைக்கும் பண்ணனும் வாழட்டும் என்று அந்த வேளாண் செல்வனைப் பாடியிருக்கிறான்.”

புலவர் சற்றே யோசித்தார். பிறகு, “ஏதோ ஒரு பாட்டு, அரைப்பாட்டு அவசியமான சந்தர்ப்பத்தில் பாடியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு முழுநூலை யாரும் பாடியிருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களைக் குறைத்துக் கொண்டது மட்டும் அன்று; பாண்டிய மரபின் பெருமைக்கே இது இழுக்கு” என்று மிடுக்குடன் பேசி விட்டார். சோழனை உதாரணம் காட்டியதனால் வந்த ரோசம் அப்படிப் பேசத் தூண்டியது.

பாண்டியன் சற்றே நிதானித்தான். புலவருடைய படபடப்பு அடங்கட்டும் என்று காத்திருந்தான்.

பிறகு மெல்லப் பேசத் தொடங்கினான்.

‘புலவரே, உங்கள் மனம் எனக்குத் தெரியும். எங்கள் மரபுகள் உயர்வு தாழ்வுடையவை, சமானமானவையல்ல என்று நினைக்கிறீர்கள்.’

“நினைப்பது என்ன? யாருமே சொல்வார்களே!”

‘நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் மரபு ஒன்றற்கொன்று ஒத்து நிற்பவை.’

“எப்படி?”

“சொல்கிறேன். பாண்டிய மரபு சந்திரகுலம் அல்லவா?”

“ஆம்.”

“அறம் வளர்த்த முதலியார் வம்சம் இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா?”

“வேளாண் குலம்.”

“அவர்களுடைய குலத்துக்கு முதல் யார் என்று தெரியுமா?”

”அவர்களைக் கங்கா குலத்தினர் என்று சொல்வார்கள்.”

“நாங்கள் திங்களின் வழிவந்தோர்; அவர்கள் கங்கை வழி வந்தோர். எங்கள் இருவர் மரபுக்கும் மூலமாக இருப்பவர்கள், ஒத்த நிலையில் உள்ளவர்கள். பரமேசுவரனே அவர்கள் சமானமானவர்கள் என்றுகருதித் தன்னுடைய சடைமுடியில் அவர்களுக்கு இடம் கொடுத்திருக்கிறான். கங்கையும் திங்களும் இறைவன் திருமுடியில் அருகருகே சமானமாக விளங்குவதை யார் அறியமாட்டார்கள்? இறைவனே திங்களும் கங்கையும் ஒப்புடையவர்கள் என்று தலையாலே தாங்கிக் காட்டும் போது அவ்விருவர் மரபும் ஒப்புடையன, உறவுடையன என்று நாம் கொள்வது பிழையாகுமா? இது தெரிந்துதான் நான் பாடினேன்” என்று பாண்டியன் முடித்தபோது புலவர் வாய் அடைத்து நின்றார்.

பாண்டியன் தன் கருத்தை ஒரு பாட்டாகவே பாடி விட்டான்.

உங்கள் மனம்தெரி யும்புல
வீர்! ஒரு சீர்மரபோம்;
திங்கள் மரபினம்; திங்களின்
கூடச்செம் பூர் அறமா
துங்கன் மரபினிற் கங்கையும்
சூடினன் சோதியன்றோ?
எங்கள் மரபொன் றெனக்கவி
பாடினம் யாம் அவற்கே.

(ஒரு சீர் மரபோம் – ஒரே சீருள்ள மரபினை உடையோம். திங்கள் – சந்திரன். அறமா துங்கன் – அறம் வளர்த்த முதலியார். மரபு-வம்சம். சோதி – சிவபெருமான். ஒன்று என -ஒரு தன்மையை உடையன் என்று எண்ணி. அவற்கு – அந்த முதலியாரின் மேல்.)

இன்ன காரணத்தால் தான் பாடியது முறையே என்று பாண்டியன் காரணங் காட்டி நிறுவிவிட்டான். ஆனால் அவன் பாடியதற்கு உண்மையான காரணம் அன்புதானே?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *