
முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்
அமைச்சர் முத்திருளப்பர்
1
இராமநாதபுரம் மன்னர்கள் சேதுவாகிய திருவணைக்குக் காவலர்கள் ஆதலின் அவர்களைச் சேதுபதி என்றும், சேது காவலர் என்றும் சொல்வார்கள். இராம பிரானால் சேது காவலராக நியமிக்கப் பெற்ற மாவீரருடைய மரபு என்று அம்மன்னர்களைச் சொல்வதுண்டு. அவர்கள் தமிழ்ப் புலவர் வாழ்வுக்கு வளமும் நாவுக்கு வீறும் ஏறச் செய்தவர்கள். சேதுபதி மன்னர்களிற் சிலர் புலமை உடையவராகவும் இருந்திருக்கிறார்கள். சேது சம்ஸ்தானத்தில் புலவர்களாக இருந்த பெரியோர் பலர்.
அந்த நாட்டில் அமைச்சராக இருந்து நற்செயல் பல புரிந்தும், அரசர்கள் பெயரை எங்கும் பரவச் செய்தும், வீரச் செயல் காட்டியும் புகழ்பெற்ற பெருமக்கள் பலர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுர மன்னராக இருந்தவர் முத்து ராமலிங்க சேதுபதி என்பவர். அவருடைய மந்திரியாக இருந்தவர் முத்திருளப்ப பிள்ளை என்னும் மதியூகி. அவருடைய மதித் திறமையையும் கொடைத் தன்மையையும் நற்செயல்களையும் புலவர்கள் பாராட்டிப் பாடியிருக்கிறார்கள்.
ஒரு முறை ஒரு புலவர் முத்திருளப்ப பிள்ளைக்கு ஏதோ ஒரு பொருள் வேண்டுமென்று செய்யுளாக ஒரு கடிதம் எழுதினார். அவ்வாறு எழுதும் கவிக்குச் சீட்டுக் கவி என்று பெயர்.
புலவர் சில நாள் தம்முடைய கடிதத்துக்கு விடை வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். மறுபடியும் ஒரு பாடற் கடிதம் எழுதினார்.
‘நான் எழுதிய கடிதம் தெளிவாக இல்லையா? பாடலாக அல்லவா எழுதியிருக்கிறேன்? படிக்கத் தெரியாமல் கிறுக்கி எழுதினேனா? உன்னைப் பாடும் பாவாணர் எழுத்திலே கிறுக்கு வர நியாயம் இல்லையே. உன்னால் அச்சுறுத்தப்பட்ட வேந்தருக்குத்தான் உன் ஆணைக்குப் பயந்து மதி மயக்கமாகிய கிறுக்கு வரும். உன் நாட்டில் திருடின கள்ளர்களுக்குக் கிறுக்கு வரும் நீதி தப்பித் தலைமறைவாக இருக்கின்ற பேர்களுக்குக் கிறுக்கு வரும். என் ஓலையிலே கிறுக்கு வராதே! அப்படி இருக்க நீ விடை எழுதாத காரணம் என்ன? என்ற கருத்தை அமைத்து அதை எழுதினார்.
உறுக்குமதி வேந்தருக்கும், கள்வருக்கும்,
நீதிதப்பி ஒளிக்கின் றோர்க்கும்
கிறுக்குவரச் செயுந்துரையே, பாவாணர்
ஓலையினும் கிறுக்குண் டாமோ?
பொறுக்கும் அர சரிமைமுத்து ராமலிங்க
சேதுபதி பூமி எல்லாம்
நிறுக்குமதி மந்திரிமுத் திருளப்பா
அருளப்பா நிருபந் தானே.
‘என் பாட்டிலே கிறுக்கு இல்லை; ஒருகால் உனக்குத் தலைக்கிறுக்கு இருக்கலாமோ என்னவோ? அது உன்னால் தண்டிக்கப்பட்டவர்களுக்கல்லவா வரவேண்டும்?” என்ற குறிப்பும் இதில் அடங்கியிருக்கிறது.
2
ஒரு முறை முத்திருளப்ப பிள்ளையிடம் சில ஏழைகள் வந்து தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றும், அதற்குப் பொருள் இல்லை யென்றும் முறையிட்டுக் கொண்டார்கள். அவர்களுடைய நிலை கண்டு அமைச்சர் மனம் இரங்கினார். ‘நம்மிடம் துணிந்து வந்து தம் குறையைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் இவர்கள். இவர்களை அல்லாமல் இன்னும் எத்தனை ஏழைகள் தம்முடைய வறுமையை வெளியிலே சொல்லாமல் வாடுகிறார்களோ!’
என்று எண்ணிப் பார்த்தார்.
உலகத்தில் ஏழைகளும் செல்வர்களும் அருகருகில் இருப்பது இயல்பாகப் போய்விட்டது. அதை மாற்றுவது அவ்வளவு எளிதன்று. ஆனால்,பணம் இல்லாமையால் எத்தனை கன்னிப் பெண்கள் தமக்குரிய மணாளர்களோடு வாழ வகையில்லாமல் தத்தளிக்கிறார்கள்! இதை நினைக்கையில் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி உண்டாயிற்று. தம்முடைய நாட்டில் மணப் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் அரசாங்கத்தின் ஆதரவில் தருமமாகக் கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று எண்ணினார். அது ஒருவாறு நடைபெறக்கூடிய காரியம் என்று நம்பினார்.
முரசங்கள் முழங்கின. திருமணப் பருவமுள்ள ஏழைப் பெண்களுக்குத் திருமணம் இன்ன நாளில் முடிக்கப் பெறும் என்ற செய்தி எங்கும் பரவியது. பல ஏழைப் பெண்கள் தமக்கு விடிவு காலம் வந்துவிட்ட தென்று மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அமைச்சர் தாம் எண்ணியதை எண்ணியபடியே செய்து நிறைவேற்றினார். அவர் மனத்திண்மை உடையவர். அதைக் கண்டு நாடே மகிழ்ந்தது. புலவர்கள் பாராட்டுவது வியப்பு அல்லவே! ஒரு புலவர் இந்த நிகழ்ச்சியை அழகாகப் பாடினார்.
முத்திருளப்ப பிள்ளை காலத்தில் சேதுபதிக்கு யாரும் பகைமன்னர் இல்லை. ஆதலால் போரும் இல்லை. இப்போது ஒருவன் மாத்திரந்தான் வில்லையும் அம்புகளையும் வைத்துக் கொண்டு இடையீடு இல்லாமல் போர் தொடுத்துக் கொண்டே இருக்கிறான். அதற்குரிய வாய்ப்பை அமைச்சர் ஏற்படுத்தி விட்டார். அவர் திருமணம் செய்து வைத்தபடியால், கணவன் மனைவியானவர்கள் பலர். அவர்களிடம் மன்மதன் இப்போது தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஓய்வு இல்லை, ஒழிவு இல்லை! அந்த மன்மதன் ஒருவனைத் தவிர, சமருக்கு என்று எதிர்த்து வருகிற மன்னர் இந்தத் தரையில் இல்லை.
அமரிக்கை யாளன், முத்து ராமலிங்க
சேதுபதி அவனிக் கெல்லாம்
சுமுகப்ர தாபன் எங்கள் முத்திருளப்
பேந்த்ரமந்த்ரி துலங்கு நாளில்
சமருக்கென் றெதிர்மன்னர் தரையில்இலை,
மதன் ஒருவன் தவிர.
[அமரிக்கை – சாந்தம். சேதுபதியின் அவனிக்குப் பிரதாபன். சமர்-போர்.]
இதற்கு முன் திருமணம் ஆகாத குமரிப் பெண்கள் பலர் அங்கங்கே முக வாட்டத்தோடு இருந்தார்கள். இப்போது யாவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. ஊரில் மருந்துக்கும் ஒரு குமரி இல்லை. குமரி இல்லை யென்றா சொன்னார்? இல்லை, இல்லை.
ஒருகுமரி இருக்கிறாள். சேது வேந்தன் நாட்டில் போர் செய்ய ஒரு மன்னரும் இல்லை யென்றாலும் மன்மதன் ஒருவன் இருப்பது போல, மணம் செய்து கொள்ளாத குமரிப் பெண் ஒருத்தியும் இல்லையென்றாலும், ஒரே ஒருத்தி இருக்கிறாள். அவள் நித்திய குமாரி; நித்திய கன்னிகை. அவள் யார் தெரியுமா? சாட்சாத் கன்னியா குமரிதான். அவளுக்கு மணம் முடிக்க யாராலே ஆகும்?
இவ்வாறு நயமாகப் பாட்டைப் பாடி முடித்தார் புலவர்.
அமரிக்கை யாளன் முத்து ராமலிங்க
சேதுபதி அவனிக் கெல்லாம்
சுமுகப்ர தாபன்எங்கள் முத்திருளப்
பேந்த்ரமந்த்ரி துலங்கும் நாளில்
சமருக்கென் றெதிர்மன்னர் தரையில் இலை
மதன்ஒருவன் தவிர; மின்னார்
குமரிக்குள் கன்யாகு மரியல்லால்
மற்றிலைப்பெண் குமரி தானே!
3
சேதுபதி வேந்தர்களின் பாதுகாப்பிலே இராமேசுவரம் திருக்கோயில் இருந்து வந்தது. அக்கோயிலில் வகையான திருப்பணிகளை அவர்கள் செய்திருக் கிறார்கள். வெறும் மணற் பரப்பான இராமேசுவரத் தீவில், கடல் கடந்து சென்று அவ்வளவு பெரிய திருக் கோயிலைக் கட்டுவதற்கு எத்தனை ஆற்றல் வேண்டும்!
இரண்டு பிராகாரங்கள் அக் காலத்தில் திருக்கோயிலுக்கு இருந்தன. மூன்றாவது பிராகாரம் ஆரம்பித்திருந்தார்கள். அதைக் கட்டி முடிக்கவேண்டும் என்ற எண்ணம் அமைச்சர் முத்திருளப்பருக்கு உண்டாயிற்று. மன்னர் உடன்பட்டார். அக் காலத்தில் சின்னப் பிரதானியாக இருந்தவர் கிருஷ்ணையங்கார் என்பவர். அவரும் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டுத் தொண்டு புரியச் சித்தமானார்.
முத்திருளப்பர் நல்ல நாளில் திருப்பணியைத் தொடங்கினார். பெரிய பெரிய தூண்களை நிறுத்தி, பாவு கற்களைப் பரப்பிப் பிராகாரத்தைச் சமைக்கச் செய்தார். சிறந்த சிற்பிகள் வந்து வேலை செய்தார்கள். கட்டிடக் கலைஞருக்கும் மற்றத் தொழிலாளர்களுக்கும் அறுசுவை உண்டி நாள்தோறும் கிடைக்கச் செய்தார். அவர்கள் தங்கள் குடும்பத்தோடே வந்து இராமேசுவரத்தில் தங்கி வாழலானார்கள். ஒரு நாளா, இரண்டு நாளா? பல ஆண்டுகளாகச் செய்ய வேண்டிய திருப்பணி அது. செங்கற்களும் கருங்கற்களும் சுண்ணாம்பும் மலை மலையாகக் குவிந்தன.
பெரிய பிராகாரம் ஆதலின் நன்றாகத் திட்டம் செய்து கட்ட வேண்டியிருந்தது. மெல்ல மெல்லக் கட்டிடம் உயர்ந்து வந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் பிராகாரம் கட்டி முடிந்தது. கட்டிய பிறகு அதைப் பார்த்தவர்கள் யாவரும் அது மனிதர்களால் செய்து முடியாத காரியம் என்று வியந்தார்கள்.”தெய்வத்தின் திருவருள் இல்லாவிட்டால் இந்தக் காரியத்தைச் செய்து முடிக்க இயலாது. அமைச்சருடைய பக்தியும் ஆற்றலுமே இந்தச் செயற்கரிய செயலை நிறைவேற்றக் காரணமாயின” என்று யாவரும் பாராட்டினார்கள். வெளியூர்களிலிருந்து பல செல்வர்களும் அன்பர்களும் இராமேசுவர தரிசனத்துக்கு வந்து வந்து இந்தப் பிராகாரத்தைக் கண்டு பிரமித்துப் போனார்கள்.
புலவர் ஒருவர் இந்தப் பிராகாரச் சிறப்பைப் பாட்டிலே பதித்துப் பாடினார்.
“நீ எழுப்பிய தூண் ஒவ்வொன்றும் ஒரு மலை. பாவு கற்களை வளையாமல் தாங்கும் போதிகைக்ளோ மேரு மலை. இத்தகைய பிரம்மாண்டமான திருப்பணியின் பெருமையை என்னவென்று எடுத்துச் சொல்வது! உன்னுடைய ஈகையினால் இந்தக் காரியத்தை நீ சாதித்துக் கொண்டாய். உன் கை கற்பகம் போன்றது; பொன்னும் பொருளும் சோறும் துணியும் வழங்குவது. உன்னை இறைவன் இந்தத் திருப்பணிக்காகவே படைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. பிரம தேவன், நீ உன் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் போதே திருப்பணிக்கு ஏற்ற ஆற்றலை அளித்து உருப் பண்ணியிருக்கிறான்” என்று அதில் பாராட்டினார்.
பருப்பதங்கள் ஒவ்வொருதூண்;பாவுக்கல்
வளையாத பார மேரு;
சுரிப்படங்காப் போதிகை! நீ செய்த பணிப்
பெருமைஎன்ன சொல்வேன் ஐயா!
தருப்பொலியும் கரதலமுத் திருளப்ப
சாமி!நின்றன் தாய்பால் உன்னைக்
கருப்பணிநின் திருப்பணிக்கென் றுருப்பணினான்
மருப்பொலியும் கமலத் தோனே.
[பருப்பதம் – மலை. சுரிப்பு-முடங்குதல், தரு -கற்பகத்தின் தன்மை. கருப்பண்ணித் திருப்பணிக்கு என்று உருப் பண்ணினான். மரு -நறு மணம். கமலத்தோன்- பிரமன்.]
வேறு புலவர்களும் இந்த அற்புதமான திருப் பணியைப் பாராட்டிப் பாடினார்கள். 1740-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தத் திருப்பணி இருபது ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றதென்று தெரிய வருகிறது.
அந்தப் பிராகாரத் தூண்களில் அமைச்சர் முத்திருளப்ப பிள்ளையின் திருவுருவமும் அவருக்கு உதவி இருந்த சின்னப் பிரதானி கிருஷ்ணையங்காரின் திருவுருவமும் அமைக்கப் பெற்றிருக்கின்றன
புலவர்களாகிய சொற் சிற்பிகளால் தம்முடைய பாடல்களாகிய சொற் கோயில்களிலும், கற்சிற்பிகளால் கற்கோயில்களிலும் அமைத்துப் பாராட்டப் பெற்ற புகழுடம்பு உடையவர் முத்திருளப்ப பிள்ளை. அவருடைய தெய்வபக்திச் புலவரைப் போற்றும் இயல்பையும் சிறப்பையும் தண்டமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன.



