முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

பசிப்பிணி மருத்துவன்

1

அரசர்களைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். புலவர் பாடும் புகழை உடையவர்களுக்கு, இம்மையிலும் மறுமையிலும் இன்பம் உண்டென்று அரசர்கள் எண்ணினார்கள். ஆனால், அரசன் தன் நாட்டில் வாழும் குடிமகன் ஒருவனைப் பாடுவது என்றால், அந்த நல்லோனுக்கு அளவிறந்த சிறப்பு இருக்க வேண்டும். குறுநில மன்னனாக இருந்தால் அவ்வளவு வியப்படைய வேண்டியதில்லை. முடியுடைய மன்னன் ஒருவன் பாடுவதானால், அந்தப் பாட்டைப் பெற்றவன் எவ்வளவு பெருமையை உடையவனாக இருக்கவேண்டும்!

தமிழ் நாட்டில் முடியுடை மன்னர்கள் மூவரே. சேர, சோழ, பாண்டியர்களாகிய அம்மூவர்களும், ‘படைப்புக் காலந் தொட்டு’ வருகிறவர்கள் என்று புலவர்கள் கருதினார்கள். பல மன்னர்களை ஆளும் சக்கரவர்த்திகள் அவர்கள். முடிபுனையும் உரிமை, அந்த மூன்று குலத்தினருக்கு மாத்திரமே இருந்து வந்தது.

காவிரியால் வளம்பெறும் சோழ நாட்டை ஆண்ட சோழர்களில் பலர் தமிழ்ப் புலமை உடையவர்கள். பாடல்களின் சுவையைப் பொதுமக்கள் நுகரும் முறை வேறு; புலமையுடையோர் நுகரும் முறை வேறு. புலமையுடைய புலவர்கள் தாம் கவிஞர்களாக இருப்பதனால் சிறந்த கவிதையை நன்கு சுவைத்தார்கள். அவர்களிடம் பரிசு பெறுவதைச் சிறப்பாக எண்ணினர் புலவர்.

கிள்ளிவளவன் என்னும் அரசன் புலவர்களைப் போற்றி வாழ்ந்தவன். கவிதை பாடும் புலமையும் பெற்றவன். அவன் சோறுடைய சோணாட்டுக்கு அரசனாதலின், அந்தச் சோற்றின் பெருமையை நன்கு உணர்ந்திருந்தான்.

உடம்பு படைத்தோருக்கு நோய் வருவது இயற்கை. அவை மருந்தால் தீரும், நல்ல உடம்பு படைத்திருந் தாலும் ஒருவனுக்கு ஒரு நோய் வரும். அந்த நோய் யாவருக்கும் உண்டு. அது இருப்பதனால்தான் மனிதன் உழைக்கிறான். அதுதான் பசிநோய். பசி நோய்க்கு உட்படாமல் இருப்பவன் யாரும் இல்லை.

பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய் செய்த பறிதான்

என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடினார். பசி நோய் நம் வாழ்நாளிற் பெரும்பகுதியைப் பறித்துக்கொள்கிறது. இந்த நோயைத் தீர்ப்பதற்கு மனிதன் என்ன என்ன ஆட்டமெல்லாம் ஆடுகிறான்!

சேவித்தும் சென்றிரந்தும்
தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும்
பாட்டிசைத்தும் போவிப்பம்
பாழில் உடம்பை
வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்

என்பது ஔவையார் பாட்டு. வயிற்றுக் கொடுமையைப் போக்க நாழி அரிசி வேண்டும்; அதற்காகப் பிறரைச் சேவித்துத் தொண்டு செய்கிறோம். கையால் ஆகாத போது சோறுடைய செல்வரிடம் சென்று கை ஏந்தி இரந்து நிற்கிறோம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறோம். பலபல விதமாக வேடம் போட்டு நடிக்கிறோம். மன்னாதி மன்னன் கூட நாட்டை ஆள்வதனால் பசிப் பிணியை வென்றவனாவதில்லை. அவனும் தன் பசியைத் தீர்க்க வேண்டிய செயல்களைச் செய்கிறான். கலைஞன் தன் கலையைப் பிறர் நுகரச் செய்து, அதனால் வயிற்றைக் கழுவிக்கொள்கிறான்.

தானே ஈட்டினாலும் ஈட்டாவிட்டாலும், ஒருவேளை கூடத் தவறாமல் வயிற்றுக்குச் சோற்றைப் போட வேண்டியிருக்கிறது. ‘இன்று இவனுக்குச் சம்பாத்தியம் இல்லையே! சோறு கேளாமல், பசியைக் காட்டாமல் இருக்கலாம்’ என்று அது இருப்பதில்லை. ‘நீ எப்படிப் போனாலும் போ; எனக்குப் போடுவதைப் போட்டுவிடு’ என்று அது கேட்கிறது.

பசியென்னும் இந்த வியாதி யாவருக்கும் வருவதால், இதைப் பெரிய வியாதியென்றே சொல்ல வேண்டும். சிறிய நோய்க்குச் சிறு மருந்தும், சிறிய மருத்துவனும் இருந்தால் போதும். பெரிய வியாதிக்குப் பெரிய மருந்தும், பெரிய வைத்தியனும் வேண்டும். பசிப் பிணிக்கு மருந்தாக உதவுவது சோறு.

இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்

என்று வரும் பாட்டில், மனிதன் தன் பசியை அவித்துக் கொள்ள உதவும் தண்ணீரையும், சோற்றையும் இரு மருந்து என்று மருந்து இயற்கையில் கிடைக்கிறது. வெறும் தண்ணீரை நாலு கை அள்ளிக் குடித்தால் தாகம் தீருமே யன்றிப் பசி போகாது. அதற்குச் சோறு வேண்டும். சோறு, நெல்லை விளைத்து அரிசியாக்கிச் சமைப்பவர்களிடம் இருக்கிறது. அவர்கள், தாம் உண்டு தம் பசி தீர்கிறார்கள்; அதோடு, பிறரும் உண்டு பசியைத் தீர்த்துக் கொள்ளும்படி சோற்றை வழங்குகிறவர்கள் பெரிய வைத்தியர்கள்.

சோழ நாட்டில் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந் திருந்தான் பண்ணன் என்னும் வேளாண் செல்வன். பல வயல்களை உடையன் ஆதலின் நெல் வளம் அவனிடம் சிறந்திருந்தது. அதோடு, அவன் உள்ளம் அன்பு வளம் உடையதாகவும் இருந்தது. பிறர் பசியைத் தான் விளைவித்த சோற்றினால் போக்கிப் புகழ் படைத்த அறச் செல்வன் அவன். அவனைத்தான் கிள்ளிவளவன் பாடினான். ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சிறப்பித்துப் பாடினான். ‘என்னுடைய வாழ் நாளை இவனுக்கு வழங்க முடிந்தால் மிக்க மகிழ்ச்சி யோடு செய்வேன். நான் வாழும் வாழ்நாளையும் இவன் பெற்று வாழட்டும்!’ என்று மனம் குளிர்ந்து பாடினான்.

2

புலவர்கள் ஒரு வள்ளலைப் பாடுவதென்றால், அக் கவியைச் சொல் ஓவியமாக்கிப் பாடுவார்கள், நாடகக் காட்சிபோல் அமைத்துப் பாடுவார்கள். கிள்ளிவளவன் பண்ணன் புகழைப் பாடத் தொடங்கினான்.

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய

என்று தொடங்கினான். மேலே பாட்டில் ஒரு கற்பனைக் காட்சியைக் காட்டுகிறான்.

பண்ணன் கலைஞர்களைப் பாதுகாக்கிறவன். அன்ன தானத்தில் சிறந்தவன். முக்கியமாக, குழந்தைகளுக்கு வயிறு நிரம்பச் சோறு போட்டுக் கையிலும் கொடுத்து அனுப்புகிறவன், தம் பசிக்குத் தாமே ஈட்டிக்கொள்ள இயலாதவர்கள் குழந்தைகள். தாமே தமக்குச் சோறு சம்பாதிக்காவிட்டாலும், பிறர் மகிழ்ந்து ஊட்டி இன்புறும் நிலையில் இருப்பவர்கள் இரு வகையினர். கடவுளர் ஒரு வகை; குழந்தைகள் மற்றொரு வகையினர். இவர்களில் கடவுளர் தாமே உண்பதில்லை. குழந்தைகள் உண்பார்கள். அவர்களுக்குப் பண்ணன் ஆர்வத்துடன் சோறு அளித்து வந்தான். இது மிக மிகச் சிறப்பான செயலென்று எண்ணிச் சோழன் அதை அழகாக எடுத்துச் சொன்னான்.

பசியினால் வருந்தும் பாணரும், பிற கலைஞரும் ஒரு கூட்டமாகக் கூடிப் பண்ணனை நாடி வறாகிறார்கள். அவர்களோடு ஒரு புலவரும் வருகிறார். அவர்களுக்கு எதிரில் ஒரு பாணர் கூட்டம் பண்ணன் வீட்டில் விருந் துண்டு, பரிசும் பெற்றுக்கொண்டு வருகிறது. அக் கூட்டத்திலுள்ள பாணரைப் பார்த்துப் புலவர், “பண்ணன் வீடு அருகில் இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய

என்று தொடங்கிய அந்தப் பாட்டு,

பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ? கூறுமின் எமக்கே

என்று முடிகிறது.

”பாணரே, இவனைப் பாருங்கள். இவனுடைய சுற்றத்தாரைப் பாருங்கள். பசியினால் வாடிக் குலையும் இவர்களைப் பார்த்தாலே, ‘ஐயோ,பாவம்!’ என்று இரங்கத் தோன்றுகிறதல்லவா? இவர்களும் நானும் பண்ணனை நாடி வருகிறோம். அவன் வீடு எங்கே?” என்று கேட்கிறார் புலவர்.

“அதோ, உணவு கொள்கிறவர்களின் ஆரவாரம் உங்கள் காதில் விழவில்லையா?” என்கிறான் எதிரில் வரும் பாணன்.

கேட்கிறது. புதியதாகப் பழுத்த ஆலமரத்தில், பறவைகளெல்லாம் சேர்ந்து ஒலித்தாற்போல, எங்கோ உண்ணுபவர்களுடைய ஊணொலி அரவம் கேட்கிறது.

ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை.

“இதோ பாருங்கள்; இந்தக் குழந்தைகள் அவ னுடைய வீட்டிலிருந்துதான் வருகிறார்கள்” என்று, பாணன் சோற்றைக் கையிலே வைத்துக்கொண்டு களிப்புக் குரலோடு செல்லும் குழந்தைகளைக் காட்டு கிறான்.

புலவர் அந்தக் கூட்டத்தைப் பார்க்கிறார். “முன்பு இருந்தே இந்தக் காட்சியைக் கண்டு வருகிறோம். மேகம் மழை பெய்யப் போவதை உணர்ந்து எறும்புகள் தம் வாயில் முட்டையைக் கவ்விக்கொண்டு மேட்டு நிலத்தை நோக்கிச் சாரி சாரியாகப் போவதைப் பார்த்திருக்கிறேன். வரிசை வரிசையாக இந்தக் குழந்தைகள் வெள்ளைச் சோற்றுருண்டையோடு போவது அந்த எறும்புக் கூட்டத்தின் காட்சியை நினைப்பூட்டுகிறது. தூரத்திலிருந்து பார்த்தால், தலைகள் ஒரே கறுப்பாகத் தோன்றுகின்றன. கையில் உள்ள சோற்றுருண்டைகள் பளிச்சென்று வெள்ளையாகத் தெரிகின்றன. நான் சொல்லும் உவமை பொருத்தமாக இல்லையா?”

ஆம்; மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இப்படிப் போகும் சிறுவர்களைக் கண்டிருக்கிறீர்கள். கண்டும், பண்ணன் வீடு எங்கே என்று கேட்கிறீர்களே!’

“இந்தக் குழந்தைகளின் வரிசையை முதலில் கண்டபோது, அருகில்தான் அவன் வீடு இருக்கும் என்று எண்ணினோம். ஆனால், வர வர வழி மாளவில்லை. எத்தனை பிள்ளைகள்! உலகத்துக் குழந்தைகள் எல்லாருமே இங்கே வந்து விட்டார்களோ? இந்த வரிசை ஒரு காதம் இருக்கும்போல இருக்கிறதே! சட்டென்று அவன் வீட்டுக்குப்போய் உண்ண வேண்டிய நிலையில் இருக்கிறவர்கள் இவர்கள். உணவு கண்டு பல நாட்கள் ஆயின. மெல்ல இந்தக் குழந்தைகளைக் கண்டு களித்துப் போகலாம் என்பதற்கு இல்லை. ஆகையால் கேட்கிறோம். உங்களை மாத்திரம் கேட்க வில்லை; எவ்வளவோ பேரைக் கேட்டுவிட்டோம்; கேட்டுக்கொண்டே வருகிறோம். இந்தக் குழந்தைகளின் வரிசையைப் பற்றிச் செல்லுங்கள்’ என்று சொல்லுகிறார்கள். அப்படித்தான் வந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் புறப்படும் இடத்தை, அந்தப் பசிப்பிணி மருத்துவனுடைய இல்லத்தை நாங்கள் கண்டோம் இல்லை.ஐயா! சொல்லுங்கள், அவன் வீடு பக்கமா, தூரமா? தயை செய்து சொல்லுங்கள்.”

இப்படி எதிரே வரும் பாணனைப் பார்த்து ஒரு புலவர் பாடுவதாகக் கிள்ளிவளவன் பண்ணனைப் பாராட்டி யிருக்கிறான்:

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர், காண்கிவன் கடும்பின திடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊண்ஒலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ, சேய்த்தோ? கூறுமின் எமக்கே.

[வாழிய – வாழட்டும். பாணர் – பாணரே. காண்க இவன். கடும்பினது இடும்பை – சுற்றத்தாரின் துன்பத்தை. யாணர் – புதியதாகப் பழுத்த. பழுமரம் – பழுத்த ஆலமரம். புள் – பறவை.இமிழ்ந்தன்ன – ஒலித்தாற்போன்ற. பொய்யா எழிலி – பொய்க்காத மேகம். வற்புலம் – மேட்டு நிலம். சில் ஒழுக்கு – சிறிய வரிசை.ஏய்ப்ப – ஒப்ப.வீறு வீறு – வேறு வேறாக. இருங்கிளை – பெரிய கூட்டம். சிறாஅர் – சிறுவர்களை. காண்டும் – காண்கிறோம். தெற் றென – தெளிவாக. அணித்தோ – அருகில் உள்ளதோ. சேய்த்தோ – தூரத்தில் உள்ளதோ. ]

சோறு கொண்டு செல்லும் குழந்தைகளின் கூட்டத்தை நெடுந்தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு வருகிறார்கள் இவர்கள். பசித்தவர்களுக்குச் சோறு கிடைக்கும் இடம் தெரிந்தால் அங்கே போவதற்கு விரைவார்கள். இவர்களும் பசிக் கொடுமையால் விரைகிறார்கள். கணக்கில்லாத குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் பண்ணன் புகழை,இப்படி அழகிய காட்சி ஒன்றைக் காட்டிப் பாடுகின்றான் கிள்ளிவளவன்.

இந்தப் பசிப்பிணி மருத்துவனை, ‘சிறுகுடி கிழான் பண்ணன்’ என்று வழங்குவர் புலவர். இந்தப் பாடல் புறநானூற்றில் இருக்கிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *