முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

முந்நீர் விழா

பாண்டியன் மாகீர்த்தி தன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். அமைச்சரும் புலவரும் சுற்றி அமர்ந திருந்தனர். அரசனுடைய பல்வகைப் புகழையும் யாவரும் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

கீழ் கடற்கரைக்கு ஒரு மாதத்திற்கு முன் பாண்டியன் சென்றிருந்தான். அங்கே கடற்கரை நகரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தான். முத்துச் சலாபம் அப்போது நிகழ்ந்தது. முத்தெடுத்துக் கரையிலே குவித்த மாவீரர்களை அவன் அன்புடன் நல்லுரை கூறிப் பாராட்டினான். கடலின் அடி வயிற்றிலிருந்து எடுத்த முத்துக்களைச் சுத்தப்படுத்தி நட்சத்திரத்தைக் குவிப்பது போலக் கடற்கரை அரண்மனைக் கூடத்தில் குவித்திருந்தார்கள். பாண்டி நாட்டு முத்து என்றால் அதற்கு எப்போதுமே தனிச் சிறப்பு. உலகம் எங்கும் கடல் பரவி இருக்கிறது. எல்லாக் கடல்களிலும் மீன் பிடிக்கலாம். சில கடல்களில்தான் முத்து எடுக்கலாம். அவற்றிலும் சில துறைகளில்தான் சிறந்த முத்துக்கள் கிடைக்கும். பாண்டி நாட்டுத் துறையில் கிடைக்கும் முத்துக்கள் மிக மிக அற்புதமானவை. யவன நாட்டு மடமங்கையர் விரும்பி அணியும் நித்திலங்கள் அவை. ஆதலின், தமிழ் நாட்டு முத்து வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று பெயர் பெற்றது.

கிடைத்த முத்துக்களில் மிக உயர்ந்தவற்றைப் பொறுக்கிக் கடற்பகுதித் தலைவன் பாண்டிய மன்னனுடைய திருவடிகளிலே கொண்டு வந்து வைத்தான். அவற்றைக் கோத்து மன்னனுக்கு ஆரமாக அணியச் செய்யலாம் என்பது அத்தலைவனது ஆசை.

பாண்டியன் என்ன சொன்னான் தெரியுமா? “இப்படியே மாலையாக்கி நம்முடைய தலைநகர்த் திருக்கோயிலில் உள்ள அம்மைக்குச் சாத்தச் செய்யவேண்டும்” என்றான். பாண்டிய குலத்தில் பிறந்தவர்களுக்கு வேறு என்ன எண்ணம் தோன்றும்?

கடற்கரைக்கே மன்னன் சென்றிருந்தான். ஆலித்துப் பாயும் அலைகள் கரைகளை மோதின. பாண்டியனது திருவடியிலே வந்து புரண்டன. உடன் இருந்த புலவர் ஒருவர், “நிலம் மட்டும் அன்று; கடலும் உனக்கு அடிமை என்று காலிலே பணிகிறது” என்றார் தலைமைப் புலவர், “தன்னுடைய இருப்பிடத்துக்கு வந்தமையால், வருணன் தன் கரங்களால் அடி கழுவுகிறான்” என்றார். “ஆம், ஆம்” என்று அமைச்சர்கள் தலையை அசைத்தனர்.

முத்துக் குவைகளை அவ்விடத்திலேயே வாங்கிச் செல்வதற்குப் பல நாட்டிலிருந்து வாணிக மக்கள் வந்திருந்தனர். பாண்டி நாட்டில் தம் நாட்டுச் செல்வத்தைக் கொண்டு வந்து குவித்துவிட்டு, அந்த நாட்டு முத்துக்களை வாங்கிச் சென்றார்கள் அவர்கள்.

இந்தக் காட்சிகளை எல்லாம் புலவர்களும் அமைச்சர்களும் அப்போது புகழ்ந்து கொண்டிருந்தனர். அரசனும் தன் அகக் கண்ணால் அந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தான். கடல் அலை தன் அடியை நனைக்கக் கடற்கரையில் நின்ற நினைவுதான் அடிக்கடி அவன் உள்ளத்தே தோன்றியது.

“கீழ் கடற்கரைக்குப் போய் அங்கு உள்ள காட்சிகளைக் கண்டோம். இப்படியே மேல் கடற்கரைக்குப் போய்ப் பார்த்து வரவேண்டாமா?” என்று கேட்டான் மன்னன்.

“திருவுள்ளத்திற்கு எப்படி உவப்போ அப்படியே செய்யலாம்” என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.

“மேல் கடற்கரையில் கீழ் கடலில் உள்ள முத்து இல்லாவிட்டாலும் அங்கே பவளம் விளைகிறதென்று தெரிகிறது” என்றார் மற்றோர் அமைச்சர்.

“அங்கும் போய்ப் பார்த்துவர வேண்டியதுதான்” என்று மாகீர்த்தி தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

மேல் கடற்கரைக்கும் மன்னன் சென்று வந்தான். அங்கும் கடற்கரையில் அலைகள் தன் அடியை வருடச் சிறு குழந்தையைப் போலக் களிப்புடன் சிறிது நேரம் நின்றான். “கீழ் கடலும், மேல் கடலும் அடிவருட நிற்கும் பேறு வேறு எந்த மன்னருக்கு உண்டு?” என்று புலவர்கள் பாடினார்கள். “பாண்டி நாட்டுக்கு இருபுறமும் கடலே எல்லை. இதனிடையே யாருக்கும் உரிமை இல்லை. இந்தக் கடல்கள் பாண்டிய மன்னருடைய புகழைத் தங்கள் அலைகளால் உலகம் முழுவதும் பரப்பு கின்றன” என்று ஒரு புலவர் பாடினார்.

இந்தப் பாடல்களைக் கேட்டபோது மன்னனுக்கு முன்பு போல முகத்தில் மலர்ச்சி உண்டாகவில்லை. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு குறை அப்போது தோன்றியிருக்க வேண்டும். இல்லையானால் அந்தப் பாராட்டைக் கேட்டு அவன் பெருமூச்சு விடக் காரணம் இல்லையே!

தன்னுடைய இராசதானி நகருக்கு வந்த பிறகு அரசன் தன் அமைச்சர்களைக் கூட்டி வைத்து மந்திரா லோசனை செய்தான். அக் காலத்தில் தமிழ்நாடு இப்போதுள்ள குமரி முனைக்கும் தெற்கே பல காவதங்கள் விரிந்திருந்தது. அங்கே பஃறுளியாறு என்ற ஆறும் குமரி மலையும், குமரியாறும், சில நாடுகளும் இருந்தன. பாண்டி நாட்டுக்குத் தெற்கே உள்ள சில சிறிய நாடுகளைக் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். பாண்டியன் மாகீர்த்தி அரசு கட்டிலேறிச் சில ஆண்டுகளே ஆயின. அதற்குள் அவன் சில போர்களில் வெற்றி பெற்றான். தெற்கே இருந்த மன்னர்கள் சிலர் அவனுக்குத் திறை செலுத்தி வந்தார்கள். சில காலமாக அவர்களில் சிலர் பாண்டியனால் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பினால் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டார்கள். வேறு சில மன்னர் தனியாட்சி நடத்தினர்.

கீழ் கடலையும் மேல் கடலையும் பார்த்துவிட்டு வந்த பாண்டிய மன்னனுக்குத் தென் கடலையும் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. வடக்கே கடல் இல்லை. தெற்கே உள்ள கடலுக்கும் சென் று அதுவரையில் தன் புகழை நாட்டவேண்டும் என்ற நினைவு, மேல்கடற்கரையில் அலைகள் தன் அடியை வருடும்படியாக நின்றபோது அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் உடனே அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது. அவனிடம் பகை பாராட்டும் மன்னர் சிலர் இடை வழியில் இருந்தனர். அவர்களை ஒடுக்கினால்தான் தென் கடலுக்குச் செல்ல முடியும்.

அமைச்சருடன் சூழ்ந்தான். பழங்காலத்தில் எல்லா மன்னர்களும் பாண்டிய மன்னருக்கு அடங்கியே இருந்தனர். இடையில் சில காலமாகப் பாண்டிய மன்னர்களின் வலிமை குறையவே, சிறிய மன்னர்கள் தலையெடுத்தனர். அவர்கள் மிடுக்கை அடக்க வழி என்ன என்று மாகீர்த்தி இப்போது ஆராய்ந்தான். தூதுவரை அனுப்பித் தென் கடற்குச் செல்லும் பாண்டியனை வரவேற்கும்படி சொல்லச் செய்வதென்றும், முரண் உடை யவர் யாரேனும் இருந்தால் வீரத்தால் வென்று அடிப்படுத்தி மேலே செல்ல வேண்டுமென்றும் முடிவு செய்தார்கள். அதன்படியே தெற்கில் உள்ள நாடுகளுக்குத் தூதுவரை விடுத்தார்கள்.

சில மன்னர்கள் மாத்திரம் பாண்டிய அரசன் வருகையை ஏற்றுக்கொண்டார்கள்.

வேறு சிலர், “எங்கள் நாட்டில் வேற்று மன்னன் அடி வைக்க ஒட்டோம்” என்று வீறு பேசினர்.

பாண்டியன் மாகீர்த்தி நெடிய உருவம் படைத்தவன். அதனால் அவனைப் புலவர்கள், “நெடியோன்” என்று பாராட்டிப் புகழ் பாடுவார்கள். “தென்னாட்டு மன்னர்களை வென்று புறங் காண்பேன்” என்று நெடியோன் வஞ்சினம் பூண்டான். படைகளைத் திரட்டினான்.

முன்பே சில போர்களில் வெற்றியைச் சுவைத்திருக்கும் வீரர்கள் இப்போது பின்னும் ஊக்கமுடன் எழுந்தனர். புதிய வீரர்களும் வெற்றி நிச்சயம் என்ற துணிவோடு படையில் சேர்ந்தனர்.

“இந்தப் பெரும் படையைக் கொண்டு வட இமயம் வரையிற் சென்று, அடிப்படுத்தலாமே!” என்று படைத் தலைவர்கள் பெருமிதம் கொண்டனர்.

அரசன் படைகளுடன் புறப்பட்டான். கையில் வேலை ஏந்தி, “தென் கடலளவும் சென்று அக்கடல் நீரினால் என் அடிகளைக் கழுவிய பின்பே திரும்புவேன்! அவ்வாறு செய்யேனாயின், நான் பாண்டிய மரபிற் பிறந்தவன் அல்லேன் ஆவேன்! தமிழ் மொழியைப் பேணும் இன்பத்தை நான் இழக்கக் கடவேன்! குடி மக்கள் தூற்றும் பழியோடு கொடுங்கோலை உடையவனாவேன்! அன்று புலவர்கள் கீழ் கடலும் மேல் கடலும் பாண்டி நாட்டின் எல்லையென்று போற்றினார்கள். மூன்று திசையிலும் கடல் எல்லை காட்டப் புகழ் மண்டிக் கிடப்பது பாண்டி நாடு’ என்று புலவர்கள் பாடும்படி செய்யாவிட்டால், என் ஆண்மை மாசுற்றுப் போவதாக!” என்று வஞ்சினம் கூறினான். பகைவர்களுக்கு நேரப் போகும் துன்பங்களை நினைந்து மகளிர் நடுங்கினர். அரசன் போர்க்கோலத்தோடு புறப்பட்டு விட்டான்.

படை வேகமாகச் சென்றது. பாண்டி நாட்டை அடுத்திருந்த மன்னன் பாண்டியனை எதிர்க்கவில்லை. அவன் உரிய கையுறைகளுடன் எதிர்கொண்டு வரவேற்றான். தன் சிறு படையின் ஒரு பகுதியையும் பாண்டியன் படையுடன் சேர்ந்து செல்லும்படி விடுத் தான். போரின்றியே பெற்ற முதல் வெற்றியாக இது முடிந்தது. அதனால் போர் வீரர்களுக்கு ஊக்கம் பின்னும் மிகுதியாயிற்று.

படை மேலும் தென் திசை நோக்கிப் படர்ந்தது. ஏழு சிறிய நாடுகளை உடைய தெங்க நாடு என்ற பகுதியை ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் ஓரளவு மிடுக்கும் வீரமும் உடையவன். பாண்டியனது படை வன்மையை அவன் அறியாதவன். அவன் நாட்டின் தலை வாயிலில் பெரும் போர் மூண்டது. பாண்டியன் படையுடன் வர இருப்பதை முன்பே ஒற்றர்களின் வாயிலாக உணர்ந்திருந்தான் அவன். ஆதலால் பாண்டியனை வாளொடும் வேலொடும் எதிர் நின்று பொர அவன் ஆயத்தமாக இருந்தான். இரு படைகளுக்கும் கடுமையான போர் மூண்டது. பாண்டிய வீரர் தம்முடைய ஆற்றலின் முழுப் பகுதியையும் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்கள் நேர்ந்தன. இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்தப் படையை வென்று விடலாம் என்று நெடியோன் நினைத்தான். ஆனால் தெங்க நாட்டரசன் எங்கிருந்தோ புதிய புதிய படையை வருவித்தான். சரியாக ஏழு நாட்கள் போர் நிகழ்ந்தது. தென் கடல் நீர் எளிதிலே கிடைப்பதன்று என்ற உணர்வு பாண்டிய மன்னனுக்கு உண்டாயிற்று. அதனுடன் மான உணர்ச்சியும் தலையெடுத்தது. பின்னும் வீறுகொண்டு போர் செய்தான். ஏழாவது நாள் தான் வெற்றியைக் காண முடிந்தது.

அரிதிலே கிடைத்த வெற்றி ஆதலின் அதன் மதிப்பு மிகுதியாகத் தோன்றியது. மேலே பாலை நாடு, குன்ற நாடு, காரை நாடு, குறும்பனை நாடு என்ற நாடுகளைத் தாண்டித் தென்கடலை அடைய வேண்டும். மாகீர்த்தி முன்பே தக்க வண்ணம் ஆராய்ந்தே இந்தப் போரை மேற்கொண்டான். போரின் தொடக்கமே கடுமையாக இருந்தது; அதனால் படை வீரர்கள் தம் முடைய முழு ஆற்றலையும் காட்டினால்தான் இந்தப் போரில் வெற்றி பெற்று மீள முடியும் என்று தெரிந்து கொண்டார்கள். அவர்களுடைய விறல் முந்தியது.

தெங்க நாட்டரசனை அடிப்படுத்தி, அவன் தந்த திறைகளைப் பெற்றுக்கொண்டு, நெடியோன் மேற்கொண்டு தன் போர்ப் பயணத்தைத் தொடங்கினான். அடுத்த நாட்டரசனைத் தெங்க நாட்டில் செய்தது போலக் கடுஞ் சமர் செய்யாமலே எளிதில் மடக்கினான். பின் சில மன்னர் அஞ்சி வந்து அடிவீழ்ந்தனர். எஞ்சிய சிலரைப் போரிட்டு அடக்கினான். சில மன்னர் போரில் மாண்டனர். அந்நாடுகளில் அவருக்கு அடுத்த உரிமை யாளருக்கு அரசு நல்கினான் பாண்டியன்.

நாளுக்கு நாள் படை வீரர்களின் விறல் ஓங்கியது. பாண்டியனுடைய வீரம் விளங்கியது. அவன் வாகையின் மேல் வாகையாகச் சூடினான். தான்பெற்ற வெற்றிகளை இப்போது பாண்டியன் அளவிட்ட முறையே வேறு. எத்தனை மன்னர்களை வென்றோம் என்று அவன் கணக்கிடவில்லை. எத்தனை நாடுகள் நம்மைப் பணிந்தன என்பதையும் அவன் எண்ணிப் பார்க்கவில்லை. தன் தலைநகரை விட்டு எவ்வளவு தூரம் வந்தோம் என்றும் அளவிட்டுப் பார்க்கவில்லை. தென் கடலை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம் என்ற ஒரே நினைவில்தான் அவன் திளைத்திருந்தான். தென் கடல் அலைகள் அவனுக்கு வரவேற்புக் கூற, அந்த வடிம்பில் அலைகள் அடிகளை அலம்பும்படி நின்றால் அவன் வஞ்சினம் நிறைவேறும். பகையரசர்களை வெல்ல வேண்டும் என்று அவன் தோள் தினவெடுத்தது. அதற்கு மேலே, தென் கடற்கரையில் நின்று அந்தக் கடல் நீரில் நனையவேண்டும் என்று அவன் கால்கள் தினவெடுத்து நடந்தன.

இன்னும் ஒரு காவத தூரத்தில்தான் இருந்தது தென் கடற்கரை. அந்தக் கடல் நீரைக் காண்பதற்கு முன் போர்க் களத்தில் செந்நீரோட்டத்தைக் காண வேண்டியிருந்தது. துண்டுபட்ட உடல்களையும், சேறு பட்ட மூளையையும் வழும்பையும், ஆறாக ஓடும் குருதியையும் மிதித்து மிதித்துப் பாண்டியன் மாகீர்த்தியின் கால்கள் வீரச் செருக்குற்றிருந்தாலும் தூய்மை கெட்டிருந்தன.

அவற்றை மீட்டும் கடல் நீரில் அலசித் தூய்மை பெறச் செய்ய வேண்டும். மேல் கடல் அலை தன் காலை வருடும்போது இதைத்தான் அவன் சிந்தித்து ஏங்கினான். அந்த ஏக்கம் இன்னும் தீர்ந்தபாடில்லை. அந்த ஆவல் இன்னும் நிறைவேறவில்லை. அது நிறைவேறும் காலமும் இடமும் அண்மையிலே வந்துகொண்டே இருந்தன.

தென் கடற்கரைக்குத் தலைவனாக இருந்த அரசன் தெங்க நாட்டரசனைப் போல விடாப்பிடியாக எதிர்த்தான். அவனுடைய வீரத்தைப் பாண்டியன் உள்ளத்துக்குள் வியந்து மெச்சினான். சுத்த வீரனுக்கு அழகு இது. கடைசியில் அவனும் பணிந்தான். பாண்டியன் இப்போது பாரத தேசத்தின் தென் கோடியில் நின்றான். கடற்கரையை அடைந்தான். அந்த அலை கடலோசை அவன் காதில் இனிமையாக ஒலித்தது. அதைக் கேட்க அவன் எத்தனை வீர முரசையும் வாளொலியையும் வேலின் ஒலியையும் எழுப்பவேண்டியிருந்தது! அமைச்சரும் புலவரும் படைத்தலைவரும் சூழ்ந்து வரக் கடலை அணுகினான். அன்று பாண்டி நாட்டிலிருந்து புறப்பட்ட போர்ப் பயணம் நிறைவேறிய நாள். மற்ற வெற்றிகளைக் கொண்டாடியது போல அதைக் கொண்டாட மன்னனுக்கு விருப்பம் இல்லை. அந்த வெற்றி அவனுக்கு ஈடும் எடுப்பும் இல்லாத வெற்றி. ஆதலால் அது பாண்டிய நாடு முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டிய விழாவாக இருக்கவேண்டும் என்பது அவன் ஆசை.

கடற்கரையில் மணலில் ஆவலோடு நடந்தான் மன்னன். கையில் வேலைப் பிடித்திருந்தான். அன்று, தன் நகரத்திலிருந்து புறப்படுவதற்கு முன் அந்த வேலைப் பிடித்துக்கொண்டு தான் சபதம் செய்தான். இன்று அந்தச் சபதம் நிறைவேறிவிட்டது. அவன் இதற்கு முன் இரண்டு கடலை எல்லையாகப் பெற்ற நாட்டை ஆண்டுவந்தான். இப்போது பாண்டி நாட்டு எல்லை விரிந்தது. தென் கடல் மூன்றாவது எல்லை ஆயிற்று. தன் படையினால் அளந்து வெற்றி பெற்று, அந்த எல்லையை அடைந்திருக்கிறான். நாட்டு எல்லை கடல் வரைக்கும் இருக்கிறது அல்லவா? இப்போது கடல் விளிம்பை நோக்கி நடந்து வருகிற பாண்டியன் தன் காலால் தன் வெற்றியை அளக்கிறான். தனக்கு அகப்படாதிருந்த தென் கடல் வரைக்கும் தன் நாடு விரிந்திருப்பதை மற்ற மன்னவர்கள் உணரும்படி, அவன் இப்போது அளந்து காட்டுகிறானோ! அவன் நடந்தான்; கடல் நெடுந்தூரம் விலகியிருப்பது போன்ற உணர்ச்சி அவனுக்கு. அது பக்கத்தில்தான் இருந்தது; ஆனாலும் அவனுடைய ஆவல் அப்படி இருந்தது.

கடல் விளிம்புக்கு வந்து நின்றான்.தென் கடல், பல காலும் காணாது அலமந்து வரவு பார்த்திருந்த தன் நாயகனுக்குப் பாத்தியம் வழங்குவது போல, அலைகளால் அவன் அடியை அலம்பியது. அவனை இவ்வளவு. அல்லலுக்கு ஆளாக்கியதற்காக அடி வீழ்ந்து புலம்பியது. அவன் அடியை அலைக் கரங்களால் வருடியது. தென் கடல் அலைகள் தன் அடியை வருடியபோது பாண்டிய மன்னன் பெற்ற இன்பத்துக்கு எல்லை ஏது? முன்னே விரிந்து கிடந்த கடலைப் போல இன்பம் உள்ளத்துள் எல்லையின்றிக் கொந்தளித்தது.

அவன் சற்றே உண்முக நோக்கில் ஒன்றினான். மூன்று கடல்நீரிலும் தன் அடியை நனைக்கவேண்டும் என்று அவன் உள்ளத்தே தோன்றிய எண்ணம், இவ்வளவு பெரிய போருக்கு விதையாயிற்று; இவ்வளவு மக்கள் போரில் பட்டு மடியும்படி விளைந்தது. தான் கடந்துவந்த போர்க்களங்கள் எல்லாம் அவன் அகப் பார்வையிலே தோற்றமளித்தன. அந்தக் களங்களில் பல பிணத்தையும், தசையையும், குருதியையும் மிதித்து நடந்து வந்து தென் கடல் நீரில் கால் வைத்தான். கடல் அவன் அடிகளை இப்போது தூய்மை ஆக்கி விட்டது.

கையில் உள்ள வேலை நோக்கினான். அது பகைவர் மார்பிலே புகுந்து வந்திருந்தது. பல களிறுகளின் தலை வழும்பின் நாற்றம் அதில் வீசியது. ரத்தக் கறை படிந் திருந்தது. அது தூய்மையுற வேண்டாமா? இப்படியே காலையும் வேலையும் கறைப்படுத்திக் கொண்டிருந்தால் அமைதி பெறுவது எப்போது? கலைநயம் தேர்வது எப் போது? தமிழை மாந்துவதற்குக் காலம் எங்கே?

என்னவோ நினைத்துக்கொண்டான். தன் கையில் இருந்த வேலை ஆத்திரத்தோடு முன்கிடந்த கடலை நோக்கி எறிந்தான். புலவர்கள் அது கண்டு வியந்தனர். “ஆம். அப்படித்தான் இந்த முரட்டுக் கடலை அடக்க வேண்டும். இனி வேலை வீச இடம் இல்லை; கடல் ஒன்றுதான் என்ற குறிப்பை மன்னர் பிரானுடைய செயல் காட்டுகிறது” என்று பாராட்டினார்கள்.

முன்பு கீழ்கடல் விளிம்பும் மேல் கடல் வடிம்பும் தன் அடிகளை அலம்ப நின்ற நெடியோனாகிய பாண்டியன், இன்று தென் கடல் வடிம்பும் தன் திருவடியை அலம்ப நின்றான். இன்றுவரை அவன் இருநீர் வடிம்பலம்ப நின்றான். இன்று முந்நீர் வடிம்பு அலம்ப நின்றான். இந்த அரிய செயலை ‘முந்நீர் விழவு’ என்று அன்று கொண்டாடினார்கள்

மன்னன் தென் கடலையும் தன்னுடையதாக்கிக் கொண்டு வந்துவிட்டான் என்ற செய்தி பாண்டி நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேனைப் பெய்தது. அவர்கள் இப்போது புதிய விழா ஒன்றைப் பெற்றார்கள். அதுதான் முந்நீர் விழா. அந்த விழாவைச் செய்வதற்குக் காரணமாக மாகீர்த்தி இருந்தமையல் அவனை, “முந்நீர் விழவின் நெடியோன்” என்று புலவர்கள் பாராட்டினார்கள். முந்நீர் விழாவுக்கு முன் பல நாடுகளை அடிப்படுத்தியமையால், “நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்றும் அவன் புகழைப் பாடினார்கள்.

பாண்டி நாட்டினர் அந்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் கடல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட லாயினர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *