முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

விச்சுளிப் பாய்ச்சல்

1

தொண்டை நாட்டிலிருந்து கழைக் கூத்தாடும் பெண்பிள்ளை ஒருத்தி வந்திருக்கிறாள் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. எத்தனையோ கழைக் கூத்தர்கள் மூங்கிலை நட்டு அதன்மேல் ஏறிப் பலவகை விளையாட்டுக்களைச் செய்கிறார்கள். ஆனால், இந்தக் கழைக் கூத்தியோ விச்சுளிப் பாய்ச்சல் என்ற புதுமையான விளையாட்டில் வல்லவளாம்.

விச்சுளி என்றால் மீன்கொத்திப் பறவைக்குப் பெயர். மீன் கொத்திக் குருவி நீருக்குமேலே ‘பட பட’ வென்று சிறகை அடித்துக் கொண்டு ஓரிடத்திலே நிற்கும். மீனைக் கண்டவுடன் ‘லபக்’கென்று கொத்திக் கொள்ளும். அது போலக் கம்பத்தின் மேலிருந்து விளையாடும் அந்தப் பெண் யாரேனும் பரிசுப் பொருளாக மோதிரத்தையோ வேறு அணிகலனையோ வீசினால், கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே குதித்து, குதிக்கும்போதே அந்தப் பொருளைப் பற்றிக் கொள்வாள். அதோடு நிலத்தில் விழாமல் மறுபடியும் கம்பத்திலே பாய்ந்து பற்றிக் கொள்வாள். வீசும் பொருளைப் பிடிப்பது பெரிதல்ல; அதைப் பிடித்துக்கொண்டு, மீண்டும் கம்பத்தைச் சார்வதுதான் மிகப் பெரிய விளையாட்டு. தவறினால் உயிருக்கே தீங்கு நேரும் வித்தை அது.

பாண்டியன் அவளுடைய கழைக் கூத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். நகரத்துப் பெருமக்கள் பலர் கூடியிருந்தனர். பாண்டியனுடைய தேவியும் இந்த வேடிக்கையைப் பார்க்கத் தன் தோழிகளுடன் வந்திருந்தாள். அரண்மனை முற்றத்தில் பரந்த வெளியில் தொண்ணூற்றாறடிக் கம்பம் ஒன்றை நட்டிருந்தார்கள். விளையாட்டரங்கைச் சுற்றிக் கயிறு கட்டினார்கள். அந்தப் பெண்மணியோடு முரசறையும் இளம் பையனும் வேறு சிலரும் இருந்தார்கள். அவர்கள் அந்தக் கயிற்று வட்டத்துக்குள் இருந்து தமக்குரிய வேலைகளைச் செய்தார்கள்.

கழைக்கூத்தியின் விளையாட்டு மாத்திரமன்றி அவள் அழகும் ஆடவர் கண்களைக் கவ்வுவதை யாவரும் உணர்ந்தார்கள். அங்கே வந்திருந்த பெண்மணிகளும் அது பற்றிப் பேசிக்கொண்டார்கள். பாண்டியன் மனைவியும் அவள் அழகைக் கவனித்தாள். அவள் அந்தப் பெண்ணையும் அவள் விளையாட்டையும் பார்த்ததோடு, அடிக்கடி பாண்டிய மன்னனையும் பார்த்தாள். பெண் இயல்பு இது. அவன் கண்கள் சிறிதும் வேறு பக்கம் திரும்பாமல் கம்பத்திலேயே இருந்ததை அரசி கவனித்தாள். கழைக்கூத்தியையே அந்தக் கண்கள் விடாமல் சுற்றின என்பதை உணர்ந்தாள். அவளுக்கு ஏதோ குழப்பம் உண்டாயிற்று. பாண்டியன் பார்வையைத் தன்னிடம் திருப்ப எண்ணினாள். அவன் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் அங்கே கூடியிருந்த மக்கள் தம்முடைய வியர்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அரசனோ வியப்பே வடிவமாக அமர்ந்திருந்தான்.

பல விளையாட்டுக்களை அந்தப் பெண் செய்து காட்டினாள். இனி விச்சுளிப் பாய்ச்சல் ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தாள். ஒருகால் ஏதேனும் தவறு நேர்ந்தால் பாதுகாப்பாக நான்கு ஆட்கள் முரட்டுப் படுதா ஒன்றைக் கீழே பரவலாகப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். தவறி விழுந்தால் அதன்மேல் விழலாம். ஆனால், அது அவ் வளவு பெரிய பாதுகாப்பன்று.

பாண்டியன் மிகவும் கூர்மையாக அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் கையில் இருந்த மோதிரம் ஒன்றை ஒருவனிடம் அளித்து விச்சுளிப் பாய்ச்சல் நடக்கும்போது அதை வீசும்படி சொன்னான். மோதிரத்தை அவன் கழற்றும் போதே அரசியின் மனம் துணுக்குற்றது. “வேறு போடலாமே!” என்று தடுத்தாள்.”இல்லை, இல்லை; இதுவே இருக்கட்டும்” என்றான் மன்னன். வீசி எறியும் பொருள் பிறகு அந்தக் கழைக் கூத்திக்கே உரியதாகிவிடும். தன் கணவனுடைய மோதிரத்தை அந்தப் பெண்மணி அணிவதை நினைத்துப் பார்க்கக் கூட அர சிக்கு விருப்பம் இல்லை. அதைக் கழற்றி அரசன் கொடுத்துவிட்டான். இனி என்ன செய்வது?

அரசிக்கு விளையாட்டின் மேல் மனம் போகவில்லை. அவள் உள்ளத்தே சினம் மூண்டது. கழைக்கூத்தி விச்சுளிப் பாய்ச்சல் செய்யப் போகிறாள் என்று அத்தனை பேரும் தம் மூச்சைக்கூட மெத்தென்று விட்டார்கள். கண்ணை இமைக்காமல் கம்பத்தின் மீதே விழிகளை நட்டார்கள். ஆனால், அரசியின் மனமோ விளையாட்டில் செல்லவில்லை. அவள் உள்ளம் புழுங்கினாள்; பெரு மூச்சு விட்டாள்.

“என்னுடைய அணிகளில் ஒன்றைத் தருகிறேன்” என்று மெல்ல அரசனிடம் கூறினாள்.

“நீ பேசாமல் இரு” என்று அரசன் கடிந்து கூறினான்.

அரசிக்கு அச்சம் மிகுதியாயிற்று; அரசன் கூறிய கடுஞ் சொல்லால், அன்று அவன் உள்ளம் அந்தப் பெண்ணை நாடுகிறது என்று எண்ணிக்கொண்டாள். பாண்டி நாட்டுக்கு அரசன் ஒரு கழைக்கூத்தியை விரும்புவதா! அவள் இதை நினைக்கையிலே உடல் நடுங்கியது; வேர்த்தது.

அரசியின் உள்ளத்தில் புயல் மூண்டு அவளை அலைத்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில், மற்ற அனைவரும் பொம்மைகளைப் போல ஆடாமல் அசையாமல் சிறிதும் மூச்சுப் பேச்சின்றி விச்சுளிப் பாய்ச்சலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பெண் கம்பத்தின் மேல் ஏறி உச்சியை அடைந்து விட்டாள். அவள் ஏறுகிற நெளிவுதான் -எத்தனை ஆச்சரியம்! அவள் உடம்பு மெழுகினால் ஆனதோ! அவள் வலிமையைப் பார்த்தால் இரும்பின் உரம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. நெளிவைப் பார்த்தாலோ வளையும் கொடி போல இருந்தது.

அதோ அவள் கம்பத்தின் உச்சியில் நிற்கிறாள். கீழே இருக்கிற ஆள். இவள் இனிப் பாயப்போகிறாள் என்பதைச் சொல்கிறான். அரசன் ஈந்த மோதிரம் அவன் கையில் இருக்கிறது. அதை வீசப்போகிறான். கம்பத்தின் உச்சியில் இருப்பவள் மீன்கொத்தியைப் போலப் வாய்ந்து அந்த மோதிரத்தைக் கவ்விக்கொண்டு, தரையில் குதிக்காமல் கம்பத்திலேயே ஒட்டிக்கொள்ளப் போகிறாள். அது எப்படி முடியும்? மோதிரத்தைப் பற்றிக் கொண்டு உடனே கம்பத்தைப்பற்றிக் கொள்வது எப்படி?

எல்லாருடைய கண்களும் கம்பத்தில், அதன் மேலுள்ள அந்த அழகிய பெண்ணுருவில் பதிந்து கிடந்தன.அவளுடன் அந்தக் கண்களும் விச்சுளிப் பாய்ச்சலுக்கு ஆயத்தமாக இருந்தன.

அரசி ஊடலால் குமுறினாள். அவள் கம்பத்தைப் பார்க்கவில்லை. தனக்குத் தீங்கு செய்ய வந்திருக்கும் அந்தப் பாதகியைப் பார்க்க அவளுக்கு வெறுப்பாக இருந்தது. பாண்டியனையே தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தன் பார்வையைச் சிறிதளவும் சிதறவிடாமல் கழைக் கூத்தியின்மேல் பதித்திருந்தான்.

தான் அருகில் இருக்கத் தன்பால் சிறிதும் கண்ணை ஓட்டாமல் அந்தப் பெண்ணுக்கே அவன் தன் பார்வையை உரியதாக்கி விட்டானே! இது இனி நிகழப் போகும் நிகழ்ச்சிக்கு அறிகுறியோ? வாழ்க்கையிலேயே அவன் தன்னைப் பாராமல், அந்த வஞ்ச மகளையே பார்த்துக்கொண்டு இருந்து விடுவானோ?- அரசியின் மனம் ஐயம் என்னும் தூணை நட்டு, அதில் தலைகீழாக விளையாடிக் கொண்டிருந்தது. அது விளையாட்டா? வினை அல்லவா?

கழைக்கூத்தி இதோ பாயப்போகிறாள். கீழே நின்றவர்கள் படுதாவை விறைப்பாகப் பிடித்தார்கள். மோதிரத்தை வைத்திருந்தவன் அதை வீசிவிட்டான். ஒரே கணந்தான். அதற்குள் என்ன அற்புதம் நிகழ்ந்து விட்டது! கம்பத்தின் உச்சியில் இருந்தவள் பாய்ந்தாள். அவள் மோதிரத்தை எப்படிப் பற்றினாள் என்பதைக் கவனிக்க முடியவில்லை. கம்பத்தின் நடுப் பகுதியில் அவள் மறுபடியும் தொத்திக் கொண்டாள். இப்போது அவள் கையில் மோதிரம் இருந்தது. யாவரும் ஒரே ஆரவாரம் செய்தார்கள்.

ஆனால், பாண்டியன் அதைப் பார்க்கவில்லை. உள்ளத்திலே எழுந்த பேரலைகளை அடக்க ஒண்ணாமல் திணறிக் கொண்டிருந்த அரசி சற்றே கம்பத்தின் அடியைப் பார்த்தாள். மோதிரத்தோடு நின்று கொண்டிருந்த ஆள் அவள் கண்ணிலே பட்டான். அவள் பார்வையைத் திருப்புவதற்கும் அவன் மோதிரத்தை வீசுவதற்கும் சரியாக இருந்தது. அவளுக்கு என்ன தோன்றியதோ! ‘வீல்’ என்று கத்திக்கொண்டு பாண்டியன் தோளின் மேல் சாய்ந்துவிட்டாள். அவளுடைய இந்தச் செயலால் பாண் டியன் கவனம் திடீரென்று அவள்பால் திரும்பியது. “என்ன!” என்று கேட்டபடியே அரசியைப் பற்றிக் கொண்டான். அதே சமயத்தில், அங்கே விச்சுளிப் பாய்ச்சல் நடந்துவிட்டது. வெண்ணெய் திரளும்போது பானை உடைந்த கதை ஆகிவிட்டது பாண்டியனுக்கு.

அவனுக்கு ஒரு பக்கம் கோபம்; ஒருபுறம் ஏமாற்றம்; ஒருபுறம் கவலை. இந்தச் சமயத்தில் அரசி சாய்ந்ததனால் கோபம்; விச்சுளிப் பாய்ச்சலைப் பார்க்க முடியாமற் போனதனால் ஏமாற்றம்; அரசியின் உடல் நிலையைப் பற்றிக் கவலை. உடனே தோழிமார்களைக் கூவி அரசியை அந்தப்புரத்திற்கு மெல்ல அழைத்துச் செல்லும்படி ஏவினான். பாதி மயக்க நிலையில் இருந்த அவளை அவர்கள் மெத்தென எடுத்துச் சென்றார்கள். கூட்டம் சற்றே கலகலத்தது.

பாண்டியன் நிதானம் தவறவில்லை. விச்சுளிப் பாய்ச்சலைத் தான் பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றமே பெரிதாக இருந்தது. கம்பத்திலிருந்து கீழே இறங்கி வந்த பெண் மோதிரத்தைக் கொண்டு வந்து அரசன் முன்னிலையில் வைத்துக் கும்பிட்டாள்.

அரசன் அவளைப் பார்த்தான். “இந்த மோதிரம் உனக்கே உரியது. அதுமட்டும் அன்று. மற்றொரு மோதிரமும் உனக்குத் தரவேண்டுமென்று விரும்புகிறேன்” என்றான்.

கழைக்கூத்தி திடுக்கிட்டாள். “மற்றொரு மோதிரமா! எதற்கு?” என்று கேட்டாள்.

“விச்சுளிப் பாய்ச்சலை நான் சரியாகப் பார்க்க வில்லை. இன்னும் ஒரு முறை பார்க்கவேண்டும். இரண்டாந் தடவையும் நீ செய்து காட்டினால் இரண்டாவது மோதிரம் கிடைக்கும்” என்றான் அரசன்.

கழைக்கூத்தி விடை கூறவில்லை. அவளுக்கு அருகில் நின்றவன் – அவளுக்குத் தந்தை அவன் – மறுமொழி சொன்னான். “மன்னர் மன்னா, அப்படிக் கட்டளை பிறப்பிக்கக் கூடாது. விச்சுளிப் பாய்ச்சல் அவ்வளவு எளிதான வேலை அன்று. மூச்சை அடக்கிச் செய்யவேண்டும். அதை ஒருமுறை செய்தால் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இதைக் கடைசியில் செய்கிறோம்” என்றான்.

“இவளைப் பார்த்தால் களைப்படைந்தவளாகத் தெரியவில்லையே! இன்னும் பல விளையாட்டுக்களைச் செய்யக்கூடியவள் என்று தோன்றுகிறதே!” என்றான் பாண்டியன்.

“அப்படித் தோன்றினாலும் இவள் இயல்பு எனக்குத் தெரியும். கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார் கள். ஏதோ இந்த மட்டில் இவள் சாமர்த்தியமாகச் செய்தாளே என்று மகிழ்ச்சி அடைகிறேன். மன்னர் பிரான் சோதனை செய்யக்கூடாது.”

“நான் பார்க்கவில்லையே! அதற்கு என்ன செய்வது? எப்படியாவது விச்சுளிப் பாய்ச்சலைப் பார்க்க வழி செய்யவேண்டும்.”

“அரசர் பிரானுடைய ஆணையை மீறுவது முறையன்று என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் எனக்கு மகளை உயிரோடு கொடுங்கள். இரண்டாம் முறையும் கம்பத்தில் ஏறினால் என் மகள் உயிரோடு மீளுவாள் என்ற உறுதி எனக்கு இல்லை. வேண்டுமானால் பின் ஒரு நாள் செய்துகாட்டச் சொல்கிறேன்.”

அதற்குள் அருகில் இருந்த அமைச்சன் ஒருவன், “தம்முடைய தொழிலைப் பற்றி இப்படி யாவரும் சொல்லிக் கொள்வது வழக்கம். ஒரே நாளில் இரண்டு ஊர்களில் வித்தை காட்டுவது இல்லையா?”என்றான்.

கழைக்கூத்தியின் தகப்பன், “வீதியிலே குரங்கை வைத்து ஆடுகிற விளையாட்டு அன்று இது. இதுவும் ஒருவகை யோக சாதனை” என்றான்.

அமைச்சன், “மன்னர் பெருமான் ஏவலை மறுக்கும் துணிவு இங்கே யாருக்கும் இல்லை” என்று கடுங்குரலில் சொன்னான்.

பாண்டியன் ஒன்றும் பேசவில்லை. எதிர் நின்ற கழைக்கூத்தனும் ஒன்றும் சொல்ல இயலாமல் தடுமாறினான். அப்போது அந்தப் பெண்ணே பேசத் தொடங்கினாள்; தன் தகப்பனை நோக்கித்தான் பேசினாள்.

“அப்பா, மன்னர் மன்னருக்குப் பாண்டி நாட்டுக் குடிமக்கள் உயிரைப் பாதுகாப்பதுதான் கடமை போலிருக்கிறது. தொண்டை நாட்டிலிருந்து வந்து பாண்டி நாட்டுத் தெய்வமாகிய மீனாட்சிக்கு என் உயிரைப் பலியாகக் கொடுக்கவேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால், அதை மாற்றமுடியுமா? நான் மறுபடியும் கம்பத்தின் மேல் ஏறுகிறேன். ஆனால் -“

பாண்டியன் அவள் பேச்சைக் கேட்டுப் பிரமித்துப் போனான். அது பேச்சாக இருக்கவில்லை; சாட்டையை எடுத்துப் பளீரென்று விலாவில் வீசியதுபோல இருந்தது. அரசனால் பேச முடியவில்லை. அவள் இன்னும் பேச்சை நிறுத்தவில்லை. ‘ஆனால்-‘ என்று இழுத்தவள் சற்றே மௌனமாக நின்றாள். வானத்தைப் பார்த்தாள். ஏதோ சொல்லத் தொடங்கினாள்.

இது என்ன! அவள் ஏதோ கவியை அல்லவா சொல்கிறாள்? சொல்லும்போதே தடுமாறுகிறாளே! ஆ! அவள் அழுகிறாள். பாட்டைச் சொல்லிக்கொண்டே அழுகிறாள். பாட்டே அழுகை; அழுகையே பாட்டாக அல்லவா வருகிறது?

மாகுன் றனையபொற் றோளான்
வழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்து என்னைப்
பார்த்திலன்; பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற்
கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனள்என்று சொல்லீர்,
அயன்றைச் சடையனுக்கே!

பாட்டுத் தெளிவாகக் காதில் விழுகிறது. பாண்டியன் பேர் அதில் வருகிறது. ‘மாகுன்றனைய பொற்றோ ளான் வழுதிமன்’ என்று சொல்கிறாள். பிறகு? பாண்டியன் நன்றாகக் கவனித்தான். பாட்டை மீட்டும் அவள் சொல்கிறாள்; நிறுத்தித்தான் சொல்கிறாள்; யாரோ அயன்றைச் சடையனாமே! அவன் பேர் அல்லவா பாட்டில் வருகிறது? அவள் காதலனோ அவன்?

பாண்டியனுக்கு இப்போது விச்சுளிப் பாய்ச்சல் மறந்து போயிற்று. அவள் பாடும் பாட்டில் ஈடுபட்டுப் போனான். அந்தப் பெண்ணின் அழுகுரல் அவன் உள்ளத்தை உருக்கியது.

“ஏ பெண்ணே, ஏன் அழுகிறாய்? இந்தப் பாட்டை ஏன் பாடுகிறாய்? இது யார் பாடியது?”

இப்போதும் தந்தைதான் விடை கூறினான். “இவளுடைய துக்கந்தான் பாட்டாக வருகிறது பெருமானே. அயன்றைச் சடையனார் எங்களைக் காப்பாற்றும் தெய்வம். அயனம் பாக்கத்தில் உள்ள வேளாண் செல்வர். அவருடைய அன்பை நினைத்துப் புலம்புகிறாள்” என்றான்.

பாண்டியனுக்கு இன்னும் தெளிவு ஏற்படவில்லை. “அவனை நினைத்துப் புலம்புவானேன்?” என்றான்.

“நான் இவளைப் பெற்ற தந்தை; அவர் வளர்க்கும் தந்தை. இனி உயிர் வாழ முடியாது என்ற எண்ணத்தின்மேல் அவரை நினைத்து அழுகிறாள்…” கிழவனுக்கு மேலே பேசமுடியவில்லை. தொண்டை அடைத்தது.”

“பாடல் யார் பாடியது?”

இந்தப் பாவி மகள்

‘இப்போது பாடுகிறாள்!’

கிழவன் விம்மத் தொடங்கினான்.

பாண்டியன் அமர்ந்திருந்தவன் எழுந்தான். அவனும் உணர்ச்சி வசப்பட்டுப் போனான். “இவள் தமிழ்ப் புலமை உடையவளா!” என்ற கேள்வியிலே அவனுடைய தமிழ் அன்பும் மதிப்பும் புலனாயின.

”பெண்ணே, நீ கவலைப்படாதே! இனி நீ ஆட வேண்டாம். உன் அழுகையை நிறுத்தி, பாட்டை மறுபடியும் சொல்” என்றான்.

அவள் துக்கத்தை அடக்கிக்கொண்டு அந்தப் பாட்டை மெல்லச் சொன்னாள்.

2

சென்னைக்கு அருகில் அயனம்பாக்கம் என்ற ஊர் இருக்கிறது. இப்போது புழலேரி என்று வழங்கும் ஏரி உள்ள ஊருக்குப் புழல் என்று பெயர். தொண்டைமண்டலத்தைப் பழங்காலத்தில் இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து, ஆட்சியை நடத்தி வந்தார்கள். அந்தக் கோட்டங்களில் ஒன்று புழற்கோட்டம்; அதன் தலைநகர் புழல். அந்தக் கோட்டத்தைச் சார்ந்தது அயனம்பாக்கம். அயனம்பாக்கம் என்பதைப் புலவர்கள் அயன்றை என்று சொல்வார்கள். அவ்வூரில் சடையனார் என்ற பெயருள்ள வேளாளச் செல்வர் ஒருவர் இருந்தார். தம்முடைய செல்வத்தைப் பிறருக்கு வழங்குவதில் இன்பம் காணுகிறவர் அவர்.

தமிழ்ப் புலவர்களோடு பொழுது போக்குவதில் அவருக்கு விருப்பம் அதிகம். அதனால் அவரை நாடி அடிக்கடி கவிஞர்கள் வந்து கொண்டிருப்பார்கள். தங்களுக்கு எவ்வகையான குறைகள் இருந்தாலும் அயன்றைச் சடையனார் போக்கிவிடுவார் என்ற எண்ணம் புலவர் நெஞ்சில் உண்டாகும்படி அவர் களுக்கு வேண்டியவற்றை வழங்கிப் புகழ்பெற்றார் அந்த வேளாளச் செல்வர்.

அயன்றைக்கு ஒருநாள் முன்பு சொன்ன விச்சுளிப் பாய்ச்சலில் வல்ல பெண்மணி தன் தந்தையுடன் வந்தாள். ஊரில் பெரிய மனிதராகிய சடையனாரை வந்து இருவரும் கண்டார்கள். அந்த ஊரில் கழைக் கூத்து நடத்த வந்திருப்பதாகச் சொன்னார்கள். தன் னுடைய பெண் மிக அருமையான விச்சுளிப் பாய்ச்சலில் வல்லவள் என்பதை அவளுடைய தந்தை எடுத்துச் சொல்லி, அது இத்தகையது என்றும் விளக்கினான்.

அயன்றை மக்கள் கூடினர். சடையனார் முன்னிலையில் கழைக்கூத்து நடைபெற்றது. மக்கள் வியந்து பாராட்டினார்கள். சடையனார் அந்தப் பெண்ணுக்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்.

“இளமையும் எழிலும் வாய்ந்த இவளை ஏன் இப்படிக் கூத்தாடும்படி பயிற்ற வேண்டும்?” என்று அவளுடைய தந்தையைக் கேட்டார்.

“எங்கள் குலத்தொழில் இது. பரதநாட்டியம் ஆடித் தம் கலைத் திறத்தைப் பெண்மணிகள் காட்டுவதில்லையா?

அதுபோல நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலைக் கற்று, இதையே எங்கள் வருவாய்க்கு ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். வேறு வகையான ஆட்டங்களை எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதுவோ அத்தகையது அன்று. இந்த விச்சுளிப் பாய்ச்சலில் வல்லவர்களாக இரண்டு மூன்று குடும்பத்தினரே இருக் கிறார்கள். இந்தக் கலையும் காப்பாற்றப்பட வேண்டியது தானே?” என்றான் அவன்.

‘அந்தத் தொழிலை இவளுக்குக் கற்றுத் தருவானேன்?’ என்று கேட்டார் சடையனார்.

“எங்கள் குலத்தில் சோம்பேறியாக யாரும் இருக்கக்கூடாது. கணவன் கழைக்கூத்து ஆடினால் மனைவியும் ஆடவேண்டும்; இல்லையானால், முரசையாவது அடிக்க வேண்டும். பெரும்பாலும் கல்யாணம் ஆகிறவரைக்கும் பெண்கள் கம்பத்தின்மீது ஏறி ஆடுவார்கள். எங்களுக்குப் பொருள் வருவாய் தரும் தொழில் இது. நாங்கள் பிச்சை வாங்கவில்லையே!”

சடையனாருக்கு மேலே கேள்வி கேட்க விருப்பம் இல்லை. ‘இந்த இளம் பெண் இப்படியெல்லாம் ஆடும் படி இருக்கிறதே!’ என்ற இரக்கத்தால் அவர் கேட்டார். அது அவர்கள் குலத்தொழில் என்று தெரிந்துகொண்ட பிறகு அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் ஒரு பரிவு அவர் உள்ளத்தில் இருந்து வந்தது.

பேச்சுவாக்கில், ”இவள் தமிழ் நூல்களையும் படித்திருக்கிறாள்” என்றான் கழைக்கூத்தன்.

”அப்படியா! என்ன என்ன நூல்களைப் படித்தாள்? யாரிடம் பாடம் கேட்டாள்?” என்று கேட்டார் வள்ளல்.

“எங்கள் ஊரில் ஒரு புலவர் இருக்கிறார். அவரிடம் சில காலமாகப் பாடம் கேட்டாள். கவியும் பாடுவாள். அந்தப் புலவர்கூட இவளைக் கழைக்கூத்தாட வேண்டாம் என்று சொன்னார். வெறும் கவி சோறு போடுமா?”

சடையனாருக்கு வியப்புக்கு மேல் வியப்பு உண்டாயிற்று. அந்தப் பெண்ணையே பார்த்து, “எங்கே, நீ பாடிய கவிகள் சிலவற்றைச் சொல் பார்க்கலாம்” என்று கேட்டார்.

அவள் சில கவிகளைச் சொன்னாள். அது மட்டுமா? அயன்றைச் சடையனாரைப் பற்றியே ஒரு கவியை அப்பொழுது சொல்லிவிட்டாள்.

சடையனாருக்கு அவளிடத்தில் இப்போது மதிப்பு உண்டாயிற்று. அவர்களைச் சில நாள் அந்த ஊரிலே தங்கியிருக்கச் செய்தார். அவள் கழைக்கூத்தைப் பார்ப்பதைவிட அவளோடு பேசுவதிலும், அவள் கூறும் கவியைக் கேட்பதிலும் அவர் மிக்க மகிழ்ச்சியை அடைந்தார். அவளுக்குப் பின்னும் பரிசுகளை அளித்து விடை கொடுத்தனுப்பினார். “அடிக்கடி இங்கே வந்து கொண்டிருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

அது முதல் அயன்றைச் சடையனாருடைய ஆதரவு அந்தப் பெண்ணுக்கு உண்டாயிற்று. ஒரு விதமான பாசம் அவள்பால் அமைந்ததென்றே சொல்லலாம். ஊர் ஊராகச் சுற்றி, நாடு நாடாக அலைந்தாலும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மகளும் தந்தையும் அயனம்பாக்கம் போகாமல் இருக்க மாட்டார்கள்.

இந்த அன்பினால்தான் அந்தப் பெண், தான் இறக்கும்படி ஆகிவிட்டால் சடையனார் வருந்துவாரே என்று எண்ணினாள். அவள் துயர உணர்ச்சி கவியாக வெடித்தது.

மாகுன் றனையபொற் றோளான்
வாழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப்
பார்த்திலன்; பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள், புழற்
கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனள் என்று சொல்லீர்
அயன்றைச் சடையனுக்கே

என்று பாடினாள். ‘பெரிய குன்றைப் போன்ற பொலிவு பெற்ற தோளுடையானாகிய பாண்டிய அரசன், பெருமையையுடைய கரும்புப்பாகு என்று உவமை கூறும் சொல்லையுடைய தன் தேவியைப் பார்த்ததனால் விச்சுளிப் பாய்ச்சல் பாய்ந்த என்னைப் பார்க்கவில்லை. மெல்ல மெல்லப் பறந்து போகின்ற பறவைக் கூட்டங் களே. நீங்கள் புழற்கோட்டம் போவதாக இருந்தால் அயனம் பாக்கத்தில் உள்ள சடையனுக்கு (உனக்கு வேண்டிய இன்னாள் பாண்டியன் கட்டளையினால்) சாகின்றாள் என்ற செய்தியைச் சொல்லுங்கள்’ என்ற பொருள் உடையது அது.

பாட்டை மீட்டும் கேட்ட பாண்டியன் அயன்றைச் சடையனாரைப்பற்றி விசாரித்தான். அவ்வள்ளல் புலவர்கள் எதைக் கேட்டாலும் தருபவர் என்பதை அவர்கள் வாயிலாக உணர்ந்து கொண்டான். கழைக்கூத்திக்குப் பரிசுகளை அளித்து அனுப்பினான். அவள் ஊரை விட்டுப் போனாலும் அவன் உள்ளத்தை விட்டுப் போக வில்லை. ‘ஒரு கழைக்கூத்திக்கு இத்தனை புலமை இருக் கிறதே!’ என்று எண்ணி எண்ணி வியந்தான். அவளுடைய உள்ளம் வாடும்படி தான் செய்த காரியத்தை நினைந்து நாணினான். இத்தகைய கலைஞர்கள் உயிர் விடும்போதும் மறவாமல் நினைக்கும் வண்ணம் இருக்கும் செல்வரைப் பற்றிப் பின்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.

அரசனாக இராமல் இருந்தால் அவன் உடனே தொண்டை நாடு சென்று, அயனம்பாக்கத்தை அடைந்து, சடையனாரைப் பார்த்து அளவளாவி யிருப்பான். இப்போது, அவன் வேண்டுமானால் அவரை வருவிக்கலாம். ஆனால், முன் பழக்கம் இல்லாமல் நெடுந் தூரத்தில் தொண்டை நாட்டில் உள்ளவரை எப்படி அழைப்பது?

கடைசியில் அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘நம்முடைய அவைக்களப் புலவர்களைத் தொண்டை நாட்டுக்கு அனுப்பி, அவருடைய இயல்புகளைத் தெரிந்து கொண்டு வரச் செய்யலாம்’ என்பதே அவன் நினைப்பு.

பாண்டியனும் தமிழ் ஆர்வமுடையவன்; தமிழ்ப் புலவன்; கவிஞன். ஆகவே, தமிழ் தெரிந்தவர்கள் என்ன தொழில் செய்தாலும் அளவற்ற அன்பு பாராட் டும் அயன்றைச் சடையனாரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு எழுந்தது.

இரண்டு புலவர்களை அழைத்து, “நீங்கள் தொண்டை நாட்டில் புழற்கோட்டத்தில் உள்ள அயன்றைக்குச் சென்று அங்குள்ள வேளாண் செல்வராகிய சடையனாரைக் கண்டு அவர் இயல்பை அறிந்து வாருங்கள்” என்று கூறிப் பாண்டியன் அனுப்பினான். அப்படியே அவர்கள் புறப்பட்டார்கள். பாண்டி நாடும் சோழ நாடும் கடந்து தொண்டை நாட்டை அடைந்து புழற்கோட்டத்துக்கு வந்தார்கள்.

அயனம்பாக்கத்துக்குப் போய்ச் சடையனாரை அவர்கள் கண்டார்கள். பாண்டியனுடைய அன்பிலே ஊறிய அப் புலவர்களுக்கு ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றியது. ‘யாரும் செய்வதற்கு மறுக்கும் காரியம் ஒன்றைச் செய்யும்படி நாம் கேட்டுக் கொள்வோம். புலவரின் பொருட்டு எதையும் செய்வார் என்பது முழு உண்மையா, அல்லது அரைகுறை உண்மையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்’ என்று எண்ணினார்கள்.

சடையனார் அந்தப் புலவர்களை வரவேற்று சரித்தார். விருந்து வழங்கினார். தமிழ் நூல்களின் நயங் குறித்துப் பேசி அளவளாவினார். புலவர்கள் தாம் அவரைப் பற்றிப் பாடியிருந்த கவிகளைச் சொன்னார்கள். சடையனார் அவற்றைக் கேட்டு மகிழ்ச்சி பெற்றார். இப்படி அளவளாவி வருகையில் புலவரில் ஒருவர் பேச்சினிடையே, “தங்களிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றார்.

“விண்ணப்பம் என்ற வார்த்தை வேண்டாம். தடை யின்றி மனம் திறந்து சொல்லுங்கள்” என்றார் வள்ளல். “ஒருகால் நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்னைப் பைத்தியம் என்று எண்ணினாலும் எண்ணலாம்; அல்லது சினம் கொண்டாலும் கொள்ளலாம்.”

“இப்படி எல்லாம் நீங்கள் நினைப்பதற்குக் காரணமே இல்லை. அறிவும் பண்பும் மிக்க புலவர்கள் தகாதது எதையும் சொல்ல மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆதலால், நீங்கள் எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்.”

“நான் கேட்பது வாங்கிக் கொள்ளும் பொருள் அன்று. ஒரு விரதத்தால் நான் அவதியுறுகிறேன். அந்த விரதத்தை நிறைவேற்ற முடியாமல் அல்லற்படு கிறேன்.”

“என்ன விரதம் அது?”

“உணவு சம்பந்தமான விரதம் அது. சிலர் தரையை மெழுகி, அதன்மேல் சோறு வைத்துச் சாப்பிடுவார்கள். அது ஒருவகை விரதம். அது போன்றது இது.”

“நீங்கள் சுற்றிச் சுற்றிப் பேசாமல் தெளிவாக என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள். அப்படியே செய்யலாம்.”

“அந்த விரதம் ஏதோ ஒரு விசித்திரமான சந்தர்ப்பத்தில் தொடங்கியது. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் முதுகில் சோறு இட்டு, அதைச் சாப்பிடவேண் டும் என்பதே அந்த விரதம். இப்படிச் செய்வதாக வேண்டிக் கொண்டால் உன் நோய் தீரும் என்று ஒரு பெரியவர் சொன்னார். நான் வேண்டிக் கொண்டேன்; நோய் தீர்ந்தது.ஆனால், நான் வேண்டிக் கொண்டதை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகிறேன்” என்றார்.

சடையனார் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியைப் புலவர் தெரிந்து கொண்டிருந்தார். அவ் விருவரும் வீட்டுக்குள் நுழையும்போதே அந்த அம்மாளைக் கண்டார்கள். அப்போதே இந்தப் புலவருக்கு, ‘இவ்வாறு இவரைச் சோதனை செய்ய வேண்டும்’ என்ற கருத்து உருவாகிவிட்டது.

சடையனார் சற்றே யோசித்தார். “இது தானா? நல்ல வேளை! உங்கள் விரதத்தை நிறைவேற்ற வேறு இடங்களுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. என் மனைவி இப்போது கர்ப்பவதி. அவள் முதுகிலே நான் சோறிடுகிறேன்” என்று அவர் சொன்னபோது அவருக்கு நடுக்கம் ஏற்படவில்லை; கேட்ட புலவர் தாம் துணுக்குற்றார். ‘உண்மையிலேயே சடையனார் ஒப்புக் கொள்கிறாரா?’ என்ற ஐயம் அவருக்கு எழுந்தது.

‘உங்கள் மனைவி எதற்கு? வேறு யாரேனும் இருந்தால் போதும்’ என்றார் புலவர்.

“வேறு ஒருத்தியைத் தேடுவானேன்? வெண்ணயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா? எப்போது உங்கள் விரதம் நிறைவேற வேண்டும்?’

புலவர் சற்றே தயங்கினார்.

“நீங்கள் இதுபற்றிச் சிறிதும் கவலைப்பட வேண்டாம். உங்கள் விரதத்தை நிறைவேற்றத் துணைசெய்யும் பேறு எங்களுக்குக் கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடை கிறேன். இப்போதே அதை நிறைவேற்றலாமே” என்று சடையனார் கூறினார்.

உடனே சூலி முதுகில் சோறிடுவதற்கு ஆவன செய்தார் சடையனார். வயிறு நிரம்பிய பிள்ளைத் தாய்ச்சியான அவர் மனைவி குனிந்துகொண்டு நிற்க, அவள் முதுகில் சோற்றைப் பிசைந்து போட்டார்கள். புலவர் நின்றபடியே அதை உண்டார். அப்போதெல்லாம் அவர் நெஞ்சு அவரைச் சுட்டது. அதே சமயத்தில் வியப்புணர்ச்சி அவரை ஆட்கொண்டது.

அன்று மாலையே பாண்டி நாட்டுப் புலவர்கள் அயன்றைச் சடையனாரிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவரைப் பலபடியாகப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள். அயன்றைச் சடையனார் புலவருடைய விரதத்தை நிறைவேற்ற வேண்டி, கருவுற்றிருந்த தம் மனைவியின் முதுகில் சோறு இட்டு உண்ணச்செய்தார் என்ற செய்தி எங்கும் பரந்தது.

சோதனை செய்ய வந்த புலவர்கள் தம் ஊர் சென்று பாண்டியனை அணுகினர். தாம் செய்த சோதனையையும் சடையனாருடைய பேரன்பையும் கூறித் தம் வியப்பையும் புலப்படுத்தினார்கள். “இவ்வளவு கடுஞ்சோதனையை நீங்கள் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் சோதனையில் அவர் வென்றுவிட்டார். அவரை நான் பார்த்துப் பழகவேண்டும். இவ்வளவு உயர்ந்த இருப்பதனால்தான் கழைக்கூத்தி அப்படிப் பாடினாள்” என்று அரசன் சொன்னான்.

அவனுக்குச் சடையனார்பால் பெருமதிப்பு உண்டாயிற்று. தான் மன்னனாக இருந்தாலும் நல்லவர் இயல்பைச் சொல்வது நலம் என்று கருதி, அயன்றைச் சடையனாரைப் பாராட்டி ஒரு பாடல் பாடினான். அந்தப் பாட்டைக் கேட்டால் ஒருகால் சடையனார் தன்னை நாடி வரலாம் என்பது அரசன் எண்ணம். ‘நம்மை ஆதரிக்கும் உபகாரிகள் யார் இருக்கிறார்கள்?’ என்று தேடும் புலவர்களையும், பிறரிடம் இரந்து வாழ்வு நடத்தும் ஏழைகளையும் பார்த்து, ”நீங்கள் பெரிய செல்வத்தை அடையலாம். அயன்றைச் சடையனிடம் இருப்பது எதுவானாலும் கேளுங்கள். மற்ற இடங்களில் கிடைக்காததையும் கேளுங்கள். அவன் தந்து விடுவான்” என்று சொல்லும் வகையில் அந்தப் பாடல் அமைந்தது.

இரவ லாளரே, பெருந்திரு உறுக!
அரவுமிழ் மணியும் அலைகடல் அமுதும்
சிங்கப் பாலும் திங்கட் குழவியும் முதிரை
வாலும் குதிரை மருப்பும்
ஆமை மயிரும் அன்னத்தின் பேடும்
ஈகென இரப்பினும் இல்லென அறியான்;
சடையனை அயன்றைத் தலைவனை
உடையது கேண்மின் உறுதிஆராய்ந்தே.

[பிறரிடம் பொருளைப் பெறும் இயல்புடையவர்களே, நீங்கள் பெரிய செல்வத்தை அடைவீர்களாக! நாகப்பாம்பு உமிழ்கின்ற மணியையும், அலைவீசுகின்ற கடலில் பிறந்த அமுதத்தையும், சிங்கத்தின் பாலையும், பிறைச் சந்திரனையும், துவரையின் வாலையும், குதிரைக் கொம்பையும், ஆமை மயிரையும், பெண் அன்னத்தையும் கொடுப்பாயாக என்று கேட்டாலும், இல்லை என்று சொல்லத் தெரியாதவனாகிய சடையனை, அயன்றை என்னும் ஊரிலுள்ள செல்வனை உமக்கு நன்மை தரும் பொருள் இன்னது என்று யோசித்து அந்தப் பொருளைக் கேளுங்கள்.

இரவலாளர்- யாசகர். திரு – செல்வம். முதிரை – துவரை. மருப்பு- கொம்பு. உறுதி ஆராய்ந்து அவ்வுறுதியுடையதைக் கேண்மின் என்று கூட்டிப் பொருள் செய்யவேண்டும்.]

இந்தப் பாடல் புலவர்கள் வாயிலாகச் சென்று அயன்றைச் சடையனார் காதில் விழுந்தது. அதைக் கேட்டுப் பாண்டியனுடைய ஆர்வத்தை அவர் உணர்ந்து கொண்டார். பின்பு ஒரு முறை அவர் பாண்டியனை வந்து கண்டு அளவளாவி இன்புற்றார். விச்சுளிப் பாய்ச்சலில் வல்ல கழைக் கூத்தியின் கூத்தும் கவியும் அரசனையும் கொடையாளரையும் நண்பர்கள் ஆக்கின.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *