முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

நெட்டிமாலைப் புலவர்

1

இராமநாதபுரம் அரண்மனையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. தமிழ்ப் புலவர்களும் மற்றவர்களும் நாள் தவறாமல் போய் வந்தார்கள். ஊர் முழுவதும் கம்பராமாயணத்தைப் பற்றியே பேச்சு.

”கம்பனுடைய வாக்கு அமுதவாக்கு. அப்படிப் பாட இனிமேல் யார் பிறக்கப் போகிறார்கள்?” என்றார் ஒருவர்.

“தெரியாமலா, ‘கம்ப நாடன் கவிதையிற் போற் கற்றோர்க்குள்ளம் களியாவே’ என்று பாடினார்கள்? அப்படிப் பாடினவர் வாயில் தேனையும் சர்க்கரையையும் கலந்து போடவேண்டும்” என்றார் ஒருவர்.

”சரியாகச் சொன்னீர்கள். கம்பன் பாட்டும் சர்க்கரைப் புலவர் விளக்கமும் பாலுந் தேனும் கலந்தது போல இருக்கின்றன. ‘கம்பன் பாட்டு உயர்ந்ததா, சர்க்கரைப் புலவர் விளக்கம் சிறந்ததா’ என்று நம்மால் எடைபோட முடியவில்லை” என்றார் மற்றோர் அன்பர்.

“தெரியாமலா இவரை நம்முடைய மன்னர்பிரான் அரசவைப் புலவர்களில் ஒருவராக ஆக்கிக்கொண்டார்?”

‘இத்தகைய புலவர்களைத்தேர்ந்தெடுத்து அவையில் வைத்துக் கொண்டிருக்கிற மன்னர் பெருமானுடைய தமிழ் ஆர்வத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.”

“ஆம், சர்க்கரை இருக்கிறது; அமுதம் இருக்கிறது.”

”அவை நாவுக்கு இனியன; உடம்புக்கு மணம் தரும் சவ்வாது கூட இருக்கிறதே!”

சர்க்கரைப் புலவர், அமுத கவிராயர், சவ்வாதுப் புலவர் என்ற தமிழ்ப் புலவர்கள் மூவரும் இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவர்களாக இருந்தனர். சர்க்கரைப் புலவர் நாள்தோறும் கம்பராமாயணத்தை அரசருடைய முன்னிலையில் விரித்து விளக்கம் கூறி வந்தார். அதனைக் கேட்கப் பலர் கூடினர்.

கிடாரம் என்ற ஊரில் வாழ்ந்த சாந்தப் பிள்ளை என்பவருடைய குமாரர் சர்க்கரைப் புலவர். அவர் தமிழ் நூல்களை நன்கு கற்றுக் கவி பாடும் ஆற்றலும் பெற்றார். திருவாவடுதுறையாதீனத்தில் சின்னப் பட்டத்தில் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் தமிழ் இலக்கண இலக்கியத்தில் மிக்க தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். சர்க்கரைப் புலவர் அவரிடம் பல காலம் தமிழ் பயின்று புலமையில் நிறைந்தார்.

கம்பராமாயணத்தில் அவருக்கு மிகுதியான ஆர்வமும் பயிற்சியும் இருந்தன. அதனைப் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். அவருடைய நூற் புலமை கவி பாடும் ஆற்றல் ஆகியவற்றை விடச் சிறப்பாக விளங்கியது, அவர் ஆற்றி வந்த கம்ப ராமாயண விரிவுரை அவரை யாவரும் ‘கம்பராமாயணப் பிரசங்கி சர்க்கரைப் புலவர்’ என்று வழங்கலானார்கள்.

அவருடைய தமிழ்ப் புலமையையும், கம்ப ராமாயணப் பிரசங்க ஆற்றலையும் கேள்வியுற்ற சேதுபதி மன்னர் அவரைத் தம் அவைக்களத்துக்கு வருவித்தார். கி.பி.1645-முதல் 1670- வரையில் அரசாட்சி செய்திருந்த இரகுநாத சேதுபதி மன்னரே அவ்வாறு வருவித்தவர். அம் மன்னரைத் திருமலைச் சேதுபதி என்றும் கூறுவது வழக்கம்.

சர்க்கரைப் புலவருடைய தமிழாற்றலை அறிந்த மன்னர் அவரைத் தம் அவைக்களப் புலவர்களில் ஒருவராகச் செய்தார். அதனால் புலவருக்குப் பின்னும் ஊக்கம் மிகுதியாயிற்று. அவருடைய விரிவுரைகளில் உரமும் நயமும் அதிகமாயின.

சேதுபதி மன்னர் புலவரிடமிருந்து ஒரு முறை இராமாயணம் முழுவதும் கேட்டுவிட வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பப்படியே கம்பராமாயண விரிவுரை தொடங்கியது. கம்பருடைய கவி நயத்தையும் நுட்பங்களையும் புலவர் எடுத்துச் சொல்லச் சொல்லத் தேனில் விழுந்த வண்டெனவே யாவரும் மயங்கிக் கேட்டு இன்புற்றனர். சேதுபதி மன்னருக்குப் புலவரிடம் அன்பு வர வர மிகுதியாயிற்று.

சர்க்கரைப் புலவர் அவ்வப்போது சேதுபதியைப் பாராட்டிப் பாடுவதுண்டு. அந்தப் பாடல்களை மன்னர் சுவைத்து மகிழ்ந்து பாராட்டுவார். ‘கம்பன் கவிக் கடலில் நீந்தும் உங்கள் வாக்கின் இனிமைக்கு அளவு ஏது?’ என்று புகழ்வார்.

சேதுபதியின் அவைக்களப் புலவரில் மற்றொருவராகிய சவ்வாதுப் புலவர் இஸ்லாமியர். அவரும் நல்ல கவி பாடும் திறமை பெற்றவர். அடிக்கடி சேதுபதி மன்னர் சர்க்கரைப் புலவரைப் பாராட்டுவதைக் கேட்ட அவருக்குச் சற்றே பொறாமை உண்டாயிற்று; “சர்க்கரை போல இந்தக் கவி இனிக்கிறது” என்று சேதுபதி மன்னர் ஒருமுறை சொன்ன போது சவ்வாதுப் புலவர், “சர்க்கரை தொண்டை மட்டும்” என்று சொன்னார். அந்தக் கவி நெடுநாள் இனிக்காது என்ற கருத்தை வைத்தே பேசினார்.

சவ்வாதுப் புலவர் மனத்தில் சிறிது மாசு படர்வதை அறிந்த சர்க்கரைப் புலவர் உடனே, “சவ்வாதோ?” என்று கேட்டார்.

சவ்வாதுப் புலவர் சிறிதும் யோசனையின்றி, “சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்” என்று சொன்னார். சர்க்கரையை விழுங்கினால் தொண்டைவரை இனிக்கும்; விழுங்கின பிறகு அதன் இனிமை தெரியாது. சவ்வாது காணும் போதெல்லாம் இன்பம் தரும். சர்க்கரையை விடச் சவ்வாது சிறந்தது என்ற கருத்தோடு இதைச் சொன்னார்.

சர்க்கரைப் புலவர் விடுவாரா? சவ்வாதுப் புலவர், “சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்” என்று சொல்லி நிறுத்தினவுடனே, “அதுவும் அந்த மட்டுந்தானே?” என்றார். ‘சவ்வாது கண்ட மட்டும்’ என்பதில், ‘கண்ட மட்டும்’ என்பது ‘கண்டம் மட்டும் என்றும் பிரிக்கும்படி அமைந்திருக்கிறது. “தொண்டை மட்டும் என்றால் என்ன? கண்டம் மட்டும் என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே?” என்ற கருத்தில், “அதுவும் அந்த மட்டுந்தானே?” என்று கேட்டார் சர்க்கரைப் புலவர்.

இந்தச் சமற்காரப் பேச்சிலே இன்புற்ற மன்னர் ”சர்க்கரையும் சவ்வாதும் சரியே என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்” என்று சொல்லிச் சமாதானப் படுத்தினார்.

2

கம்பராமாயண விரிவுரை நடந்துகொண்டிருந்தது. கடல்தாவு படலத்துக்குப் புலவர் விளக்கம் கூறிக் கொண்டிருந்தார். அநுமன் கடலைத் தாவிய நிகழ்ச்சியைப் புலவர், கம்பன் பாடலிலிருந்து எடுத்துரைத்தார். அப்போது மன்னர், ”அவர் எப்படித் தாவினார்?” என்று வியப்புற்றுக் கேட்டார்.

மிகவும் ஊக்கத்தோடு விரிவுரை ஆற்றிக்கொண்டு வந்த புலவர் காதில் இந்தக் கேள்வி விழுந்ததும், “இப்படித்தான் தாண்டினார்” என்று சொல்லித் தாம் இருந்த இடத்திலிருந்து ஒரே தாவாகத் தாவி மன்னர் இருந்த ஆசனத்தில் போய் உட்கார்ந்தார். அப்போது மன்னர் ‘சட்’டென்று எழுந்திருந்து இடம் விட்டு வேறு ஆசனத்தில் அமர்ந்தார்.

அந்த மண்டபம் நன்றாக அலங்கரிக்கப் பெற்றிருந்தது. மேலே மாவிலைத் தோரணங்களைக் கட்டியிருந்தார்கள். பல வண்ணமுடைய நெட்டி மாலைகளைத் தொங்க விட்டிருந்தார்கள். புலவர் தாவியபோது நெட்டிமாலை ஒன்று அறுபட்டது. சேதுபதி மன்னர் இடம் விட எழுந்த போது, அறுபட்ட மாலை புலவர் கழுத்தில் விழுந்தது.

நெட்டிமாலை கழுத்தில் விளங்க ஆசனத்தில் வீற்றிருந்த புலவரைச் சேதுபதி பார்த்தார். பல நிறம் பெற்ற அந்த மாலை அழகாகவே இருந்தது. “உங்களுக்கு இந்த மாலையை அநுமனே பரிசாகத் தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது” என்று சொல்லி, மேலே கதையை நடத்தச் சொன்னார்.

அன்று முதல் யாவரும் அப்புலவரை நெட்டி மாலைப் புலவர் என்றும், ‘நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர்” என்றும் அழைத்து வரலாயினர். கம்பராமாயணப் பிரசங்கம் இனிது நிறைவேறியது. பட்டாபிஷேக தினத்தன்று, சர்க்கரைப் புலவருக்கு மலர் மாலையோடு நெட்டிமாலையும் அணிந்து சிறப்புச் செய்தார்கள்.

நெட்டிமாலையை அணிந்த இந்தச் செய்தியைச் சர்க்கரைப் புலவர் ஒரு சீட்டுக் கவியில் குறிப்பிட்டிருக்கிறார்.

வந்தஜய பாரத இராமாயணத்திலே வாடாத நெட்டிமாலை மருவிட்ட திருவிட்டு வழுவாது நழுவாது வாசாம கோசரமதாய்ச் சிந்தைமிக வேசற்றும் மலையாது சபையிலே செய்யும்ப்ர சங்கநிபுணன் சேதுபதி சித்தமகிழ் சர்க்கரைக் கவிராச சிங்கம்யாம் எழுதும் நிருபம்

என்பது அந்தப் பகுதி.

3

இரகுநாத சேதுபதி சர்க்கரைப் புலவருக்கு அவ்வப்போது அளித்த பரிசில்களும் வழங்கிய மானியங்களும் பல. நிலவளம் மிக்க சிறுகம்பையூர் என்ற கிராமத்தில் வளப்பமான சில நிலங்களை அவருக்கு மானியமாக வழங்கினார். சர்க்கரைப் புலவர் அவ்வூர் தாம் வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்து, அங்கேயே குடியேறினார். அடிக்கடி சேதுபதி மன்னரை வந்து கண்டு, தம் தமிழ்க் கவிகளாலும் பழந் தமிழ் நூற் கவிகளாலும் அவருக்கு மகிழ்ச்சியை அளித்து வந்தார்.

புலவருக்கு மன்னர் வழங்கிய நிலப்பகுதிக்குக் கோணச்செய் என்று பெயர். அது மிகவும் நன்றாக விளையும் நிலம். அந்த நிலத்தின் விளைவைக் கண்டு மக்கள் வியந்தனர். “புலவருடைய வாக்கில் கவி விளைவதைப் போல அல்லவா இந்தச் செய் விளைகிறது?” என்று பாராட்டினார்கள்.

ஒரு முறை நாலு பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது புலவருடைய நிலத்தின் வளத்தைப் பற்றியும் பேசினார்கள். அப்போது அப்பக்கமாக வந்த சர்க்கரைப் புலவர் காதில் அவர்கள் பேச்சு விழவே, “ஆமாம் ஆமாம், கரும்பாலை ஆடுவதேன்? கம்பையூர்க் கோணச் செய் விளைவதேன்? சர்க்கரைக்கு, சர்க்கரைக்கு சர்க்கரைக்கு” என்று இரு சொல் அலங்காரமாகப் பேசினார்.

கேட்ட அவர்கள், “ஆம், உங்கள் புலமையையும் பெருமையையும் எண்ணியே அந்தச் செய் நன்றாக விளை கிறது. உங்கள் அதிருஷ்டமே அதிருஷ்டம்!” என்று கூறி மகிழ்ந்தார்கள். கரும்பு ஆலையில் ஆடுவது சர்க்கரை உண்டாக என்றும், கம்பையூரில் உள்ள கோணச் செய் நன்றாக விளைவது சர்க்கரைப் புலவருக்காக என்றும் அந்த இரு சொல் அலங்காரத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

நெட்டிமாலைப் புலவர் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருச்செந்தூருக்குச் சென்று வழி பட்டார். அப் பெருமானைத் துதித்து, ‘திருச்செந்தூர்க் கோவை’ என்ற நூலைப் பாடினார்.

சேதுபதி மன்னரிடம் அமைச்சராக இருந்த தாமோதரம்பிள்ளை என்பவர் சர்க்கரைப் புலவரிடம் பேரன்பு பூண்டவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் புலவர் கற்றமையால் அவருக்குச் சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஆழ்ந்த தேர்ச்சி இருந்தது. தாமோதரம் பிள்ளை சைவ சித்தாந்தத்தில் பற்றுள்ளவர். புலவருடைய சித்தாந்தப் புலமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவர் அவா. சித்தாந்த நூல் ஒன்றைப் பாட வேண்டும் என்றோ, பழைய சித்தாந்த நூல் ஒன்றுக்கு உரை எழுத வேண்டுமென்றோ அவர் கேட்டிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

“வேதாந்த சூளாமணி என்ற வேதாந்த நூலுக்குச் சித்தாந்த பரமாக ஓர் உரை எழுதுங்கள்” என்று அமைச்சர் சொன்னார். நூலின் பெயரே வேதாந்த சூளாமணி; அது வேதாந்தக் கருத்தைத் தன்பால் கொண்டது என்பதை அப் பெயரே தெரிவிக்கும்,

அப்படியிருக்க, சித்தாந்தக் கருத்துக்கு இணங்க அதற்கு உரை எழுதுவதென்பது எளிய செயலன்று. வெறும் சித்தாந்த அறிவு மட்டும் இருந்தால் போதாது; தமிழ்ச் செய்யுளுக்கு நுட்பமாக உரை விரிக்கும் ஆற்றலும் இலக்கணப் புலமையும் வேண்டும்.

இத்தகைய தகுதியை நன்றாகப் பெற்ற புலவர், அமைச்சர் தம் கருத்தைக் கூறியவுடன் மயங்கவில்லை. “அப்படியே செய்வேன்” என்று ஒப்புக்கொண்டு அவ் வுரையை எழுதி முடித்தார். அவர் எழுதி முடித்தவுடன் அதனைக் கண்டு அமைச்சர் வியந்தார். அறிஞர் பாராட்டினர். புலவர் போற்றிப் பாடினர்.

உரைதருவே தாந்தசூளா மணியுட் பொருளை உலகிலுள்ளோர் உணரவுரை செய்கஎனக் கடல்சூழ் தரை அரசன் சேதுபதி அமாத்தியனாம் தாமோ தரன்கங்கா குலதிலகன் தகுதிபெறச் சாற்ற வரையறுத்துச் சித்தாந்தப் பொருள் திறனுந் தோன்ற வகுத்தனன்நற் றுறைசைநமச் சிவாயதே சிகன்தாள் பரவுசிவக் கொழுந்துநிதி அருள்கல்விக் கடலைப் பருகுமுகில் சர்க்கரைநற் பாவலர் கோனே.

[அமாத்தியன் – மந்திரி. கங்காகுலம் – வேளாளர் மரபு. துறைசை – திருவாவடுதுறை. நமச்சிவாய தேசிகன் – திருவாவடு துறை ஆதீனத்து முதல் ஞானாசிரியர். ]

என்பது ஒரு புலவர் பாடிய சிறப்புப் பாயிரம்.

இந்தச் சர்க்கரைப் புலவர் பரம்பரையில் பல புலவர்கள் இருந்து, பல நூல்களை இயற்றிப் பெயர் பெற் றிருக்கிறார்கள். அவரில் சிலருக்குச் சர்க்கரைப் புலவர் என்றே பெயர் உண்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *