முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

கவிஞனும் செழியனும்

புறக்கண் இல்லாமற் போனாலும் அகக்கண் ஒளி படைத்த பெரியோர்கள் பலர் உண்டு. புலவர்களிலும் கண் இழந்தவர் சிலர் இருந்தார்கள். கவி வீரராகவ முதலியார் என்பவர் 16-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர். பிறவியிலேயே கண் இழந்தவர். தொண்டை மண்டலத்தில் உள்ள உழலூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய தகப்பனார் வடுகநாத முதலியார் என்பவர்.

கண் இல்லாதவராயினும், இவருடைய அறிவு மிகவும் கூர்மையாக இருந்தது. தம்முடைய முதுகில் எழுதச் செய்து தமிழைக் கற்றார் என்று சொல்லு வார்கள். ‘தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் கவி முத்தமிழையுமே’ என்று ஒரு புலவர். இவர் தமிழ் கற்ற சிறப்பைப் பாராட்டியிருக்கிறார்.

கம்பராமாயணம் முழுவதும் இவருக்கு மனனம் ஆயிற்று. ‘இன்ன சொல் கம்பராமாயணத்தில் எங் கெங்கே வந்திருக்கிறது?’ என்று கேட்டால், அது வந்த இடங்களை யெல்லாம் எடுத்து உரைப்பார். ‘இன்ன உவமை எத்தனை இடங்களில் இருக்கிறது?’ என்றால் அந்த இடங்களைச் சொல்லுவார். இவ்வாறு சொல்வதை அவதானம் என்பார்கள். கம்ப ராமாயண அவதானம் செய்வதில் சிறந்து விளங்கிய வீரராகவமுதலியாரைப் பார்த்துக் கண் உடையவர்கள் எல்லாம் வியந்து பாராட்டினார்கள். ‘கண்ணினால் ஏட்டைப் படித்து மனனம் செய்தவர்களும் இப்படிச் சொல்ல முடியாதே! இவருடைய நினைவாற்றல் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது!’ என்று கொண்டாடினார்கள்.

கல்வி கேள்விகளிலே சிறந்து விளங்கியதோடு கவி பாடும் ஆற்றலும் இவருக்கு உண்டாயிற்று. கருத்தை அழகாகவும் தெளிவாகவும் சொல்லும் கவிகளைப் பாடினார். திருக்கழுக்குன்றப் புராணம், திருவா ரூர் உலா, சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களை இயற்றினார்.

அக் காலத்தில் இலங்கையின் வட பகுதியைப் பரராச சிங்கம் என்னும் அரசன் ஆட்சி செய்து வந் தான். யாழ்ப்பாணத்தில் தமிழறிவில் சிறந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்று, இவர் கடல் கடந்து இலங்கை சென்றார். பரராச சிங்கத்துக்கு முன் கம்பராமாயண அவதானம் செய்து காட்டி அவ்வரசனையும், அங்கிருந்த புலவர் பெருமக்களையும், பிறரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

அரசன் இவருடைய இணையற்ற புலமைத் திறத்தைப் பாராட்டிப் பல பரிசுகளை ஈந்தான். ஒரு யானைக் குட்டியையும் சில ஊர்ப் பகுதிகளையும் வழங்கினான். ‘யானைக் கன்றும் வளநாடும் புலவர் பெற்றார்’ என்று சொல்லுவார்கள்.

அக் காலத்தில் சின்னச் சேலத்தில் செழியதரையன் என்ற ஒருவன் இருந்தான். மழையில்லாமல் அங்கே தண்ணீர்ப் பஞ்சம் உண்டாயிற்று. விளைவு குறைந்தால் பிற இடங்களிலிருந்து நெல்லும் அரிசியும் வருவித்து உண்ணலாம். குளிக்காமல் இருந்து சில நாட்கள் பொழுது போக்கலாம். ஆனால், தண்ணீர் குடியாமல் ஒரு வேளையாவது இருக்க முடியுமா? ஊரில் இருந்த கிணறுகள் யாவும் வற்றி விட்டன. பக்கத்தில் இருந்த ஏரிகள் வற்றின. இந்த நிலையில் மக்களும் விலங்குகளும் நீர்வேட்கையால் துன்புறும்படி ஆகி விட்டது. மாடுகள் இறந்தன. ஆடுகள் அழிந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரை விட்டுப் புறப்பட்டனர். எங்கே பார்த்தாலும் மயானம் போன்ற காட்சி. பாலைவனமாகி விட்டது அந்தப் பகுதி முழுவதும்.

அப்போது மக்களின் துன்பத்தைக் கண்ட செழிய தரையன், அதனைத் தீர்க்க வழி என்னவென்று ஆராய்ந்தான். மழை பெய்தாலன்றி நீர்வளம் உண்டாகாது. மழை நாம் விரும்பியபோது பெய்யாதே! கீழ் நீரைக் கிணற்றின் வழியே இறைத்துப் பயன் படுத்தலாம். கிணறுகள் யாவும் வற்றிக் கிடந்தன. ஊரை விட்டுச் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் தாகத்தைத் தீர்க்கவும் ஒரு வழி அவனுக்குத் தோன்றியது. காசைக் காசென்று பார்த்தால் ஒருவருக்கும் பயன் இல்லை என்று தேர்ந்தான். நான்கு இடங்களில் பெரிய கிணறுகளை நீர்சுரக்குமளவும் தோண்டும் முயற்சியை மேற்கொண்டான். பாதாள உலகம் வரையில் வெட்ட வேண்டியிருந்தாலும் விடுவதில்லை என்று துணிந்தான். பாறையை மருந்து வைத்து உடைத்து, நிலத்தைத் தோண்டத் திட்டம் இட்டான். இந்தத் தொழிலில் வல்லவர்களை அழைத்து வேலை செய்யச் செய்தான். மற்றவர்களுக்கும் மண்ணை எடுத்துப் போடுவது, கல் தச்சர்களுக்கு வேண்டிய ஏவலைச் செய்வது முதலிய வேலைகளை அளித்தான்.

சோழநாட்டிலிருந்து வண்டி வண்டியாக நெல்லை வருவித்தான். கொங்கு நாட்டில் ஒரு சிறிய பகுதியில் காவிரியாறு ஓடுகிறது. அப்போதைக்கு நீர் வேண்டும் அல்லவா? அதற்காகக் கொங்கு நாட்டு மோகனூரில் காவிரியாற்றிலிருந்து பெரிய பெரிய ஆலைக் கொப்பரைகளை வண்டியில் வைத்து, அதில் நீரைச் சேமித்துக் கொண்டு வரச் செய்தான். இத்தகைய வேலைகளுக்குக் கணக்கு இல்லாத பொருள் செலவாயிற்று. ஆனாலும் பல மக்கள் சாவாமலும் ஊரைவிட்டுக் குடி போகாமலும் இருக்கும்படி செய்தன, அவ்வள்ளலின் செயல்கள். தாகமுடைய மக்கள் காவிரி நீரால் தாகம் தீர்ந்தனர்.

கிணறுகள் வெட்ட வெட்டப் பாறையும் மண்ணும் வந்தனவேயன்றி, நீரைக் காணவில்லை.

எவ்வளவு உழைப்பு வேண்டியிருந்தாலும் எத்தனை நாளானாலும் கீழ் நீரைக் கண்ட பிறகுதான் மறு காரியம் பார்ப்ப தென்ற துணிவு அவனுக்கு. வேலை நடக்கும் இடத்தில் உலாவினான் செழியதரையன்.

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற பழமொழி பொய்யாகுமா? கடைசியில் தண்ணீர் தலை காட்டியது. சில இடங்களில் வேகமான ஊற்றே கிட்டியது. கிணற்றில் தண்ணீரைக் கண்ட மக்களின் கண்கள் உவகையால் நீரைச் சொரிந்தன. மக்கள் தாகம் தீர்ந்தனர். அது முதல் செழியதரையனுக்குத் தாகம் தீர்த்த செழியதரையன் என்ற பெயர் வழங்க லாயிற்று.

தாகம் தீர்த்த செழியனுடைய புகழ் பிற மண்டலங்களையும் எட்டியது. வள்ளல்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் புலவர்கள் அவனை அடைந்து பாடினர். அந்தகக் கவியாகிய வீரராகவ முதலியாரும் அவனை நாடிச் சென்றார். அவனைக் கண்டு அளவளாவிப் பல பாடல்களைப் பாடினார். பல பரிசில்களைப் பெற்றார். அவனிடம் விடை பெற்றுக் கொண்டபோது புலவர் பிரிவாற்றாமல் வருந்தினார். அப்போது அவ் வள்ளல், “உங்கள் தமிழை நான் ஒருவனே நுகர்வதென்பது முறையன்று. நாடு முழுவதும் உங்கள் திறமையை அறியவேண்டும். உங்களால் இன்புற வேண்டும். ஆகையால் பல இடங்களுக்கும் நீங்கள் போய் வரவேண்டியது அவசியம். ஆனாலும், சேலத்தையும் என்னையும் மறக்க வேண்டாம். எப்போது வந்தாலும் உங்களுக்கு ஏவல் செய்ய நான் காத்திருக்கிறேன். என்ன வேண்டுமானா லும் கேளுங்கள்; தருகிறேன். நீங்களே வர வேண்டும் என்பது இல்லை. காக்கையின் காலில் ஒரு சீட்டு எழுதி விடுங்கள். வேண்டியதை அனுப்புகிறேன்” என்று சொல்லி அனுப்பினான்.

கவிஞர் பல இடங்களுக்குச் சென்று புகழ் பெற்றார். அங்கங்கே உள்ள உபகாரிகளை நாடிச் செல்லும்போது கால் நடையாகவே சென்றார். சில இடங்களில் வண்டியில் சென்றார். இவருக்குத் துணையாக ஒரு மாணாக்கன் எப்போதும் இருந்து வந்தான்.

“இப்படி நீங்கள் அலைகிறீர்களே; ஒரு வண்டியோ குதிரையோ உங்களுக்கென்று சொந்தமாக இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்!” என்று ஓர் அன்பர் இவரிடம் சொன்னார். இவருக்கு அது நல்ல யோசனையாகப் பட்டது. வண்டி வைத்துக் கொள்வதைவிடப் பெரிய குதிரையாக இருந்தால் அதை ஓட்டுகிறவன் ஒருவனும் தாமும் ஏறிச்செல்லலாம் என்று எண்ணினார். வேண்டுமானால் வண்டியிலும் பூட்டிக் கொள்ளலாம். குதிரை கிடைக்க வேண்டுமே!

அப்போது புலவருக்குச் சேலத்துச் செழிய தரையனுடைய நினைவு வந்தது. தம் கற்றுச் சொல்லியை அழைத்து, ஓலையில் எழுதச் சொல்லி ஒரு கவி சொன்னார். ‘எனக்குக் குதிரை வேண்டும்’ என்று அக் கவியில் குறிப்பிட்டார். அந்தச் சீட்டுக்கவியின் முதலில் தம் பெருமையைச் சொன்னார். சீட்டுக் கவிகளில் புலவர்கள் தம்முடைய பெருமைகளைச் சொல்லிக் கொள்வது தவறாகாது.

ஏடா யிரங்கோடி எழுதாது தன்மனத்
தெழுதிப் படித்த விரகன்
எதுசொலினும் அதுவே எனச் சொலும் கவிவீர
ராகவன் விடுக்கும் ஓலை.

பிறகு செழியனுடைய புகழைச் சொன்னார். அவன் ஆதிசேஷனும் சிரமசைக்கும் கலைஞன் என்றும், கங்கா குலமாகிய வேளாளர் குலத்தில் உதித்தவன் என்றும், தாகம் தீர்த்தவன் என்றும் பாடினார்.

சேடாதி பன்சிரம் அசைக்கும் கலாகரன் திரிபதகை குலசேகரன் தென்பாலை சேலம் செனித்ததா கந்தீர்த்த செழியன்எதிர் கொண்டு காண்க.

(சேடாதிபன்-ஆதிசேஷன்.திரிபதகை – கங்கை தென் பாலை – நீர் இல்லாமல் பாலையாகிப் போன இடம்.]

பிறகு தமக்குக் குதிரை வேண்டுமென்பதைச் சமற்காரமாகத் தெரிவித்தார். குதிரைக்கு நிகண்டில் எத்தனை பேர் உண்டோ, அத்தனையையும் அடுக்கினார். அந்தச் சொற்களுக்கு வேறு பொருள் இருந்தாலும் அவை அல்ல என்று கூறி, குதிரை என்பதைக் குறிப்பித்தார். கந்தருவம் என்பதற்கு இசையென்றும் குதிரை யென்றும் பொருள் உண்டு. குதிரை என்பதைத் தெளிவாக்க, ‘பாடாத கந்தருவம்’ என்றார். இப்படியே பந்து அன்று என்று தெரிவிக்க, ‘எறியாத கந்துகம்’ என்றார். மூலையாகிய கோணம் அன்று. குதிரை என்று காட்ட, ‘பத்தி கோணாத கோணம்’ என்றார். இப்படியே பறக்கும் கொக்கை விலக்கி, ‘பறவாத கொக்கு’ என்றும், கோடைக் காலத்தை விலக்கி, ‘அனற்பண்ணாத கோடை’ என்றும், வேலை விலக்கி, ‘படையாய்த் தாடாத குந்தம்’ என்றும், பாதிரிப்பூவை விலக்கி, ‘சூடாத பாடலம்’ என்றும், மாமரத்தை விலக்கி, ‘பூவாத மா’ என்றும், சடையை விலக்கி, ‘தொடுத்து முடியாத சடிலம்’ என்றும், கிளியை விலக்கி, ‘சொன்ன சொற் சொல்லாத கிள்ளை’ என்றும் கூறினார். இப்படிப் பத்துச் சொற்களால் குதிரையைக் குறித்து, ‘அதனை எனக்கு அனுப்ப வேண்டும்’ என்று பாடினார்.

பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,
பத்திகோ ணாத கோணம்.
பறவாத கொக்கு, அனற் பண்ணாத கோடை, வெம்
படையாய்த் தொடாத குந்தம்,
சூடாத பாடலம், பூவாத மாவொடு,
தொடுத்துமுடி யாத சடிலம்.
சொன்னசொல் சொல்லாத கிள்ளை ஒன் றெங்கும்
துதிக்கவர விடவேண்டுமே.

சீட்டுக்கவி தாகம் தீர்த்த செழியனுக்குப் போயிற்று. அவன் உடனே குதிரை ஒன்றை அனுப்பினான். அந்தக் குதிரையின் மீது ஏறிக் கவிஞர் வீரராகவர் சேலத்துக்கே வந்தார். அவரைக் கண்டவுடன், நீங்கள் எங்கோ போகவேண்டுமென்றல்லவா குதிரை கேட்டனுப்பினீர்கள்? இங்கே வரத்தானா? என் பாக்கியமே பாக்கியம்!” என்றான் செழியன் மகிழ்ச்சியுடன்.

“எத்தனை தரம் இங்கே வந்தாலும் எனக்குச் சலிப்பு இல்லை. உங்களுக்குத்தான் தொல்லை.”

“தொல்லையா? தமிழ் அமுதம் தெவிட்டுமா? எத்தனை முறை வந்தாலும் எனக்கு இன்பந்தான்.”

“யார் கொடுக்கிறார்களோ, அவர்களிடந்தான் அடிக்கடி புலவர்கள் போவார்கள். காய்த்துப் பழுத்த மரத்தில்தான் திரும்பத் திரும்பக் கல்லை எறிவார்கள். எங்கே தண்ணீர் கிடைக்கிறதோ அந்த இடத்தில் தான் தோண்டுவார்கள். பசுமாடு கறக்குமானால் எப்படியாவது அதன் பாலைப் பெறுவதற்காக அதன் காலையும் கட்டிப் போடுவார்கள். பெரிய உப்புக் கடலை யார் மதிக்கிறார்கள்? பாற்கடலைத்தான் மத்திட்டுக் குழப்புவார்கள். பழம் தருவதென்று மரத்தைக் கல்லால் எறியக் கூடாதென்று யார் சும்மா இருக்கிறார்கள்? அவ்வண்ணமே கொடுக்கும் உபகாரியை வருத்தியாவது மீட்டும் வேண்டியதைக் கொள்ளத் துணிவது உலகத்து இயல்பு. புலவர்களுக்கோ அதைத் தவிர வேறு வழி இல்லை” என்று அந்தக் கவிஞர் சொல்லி மகிழ்வித்தார். அதனோடு நில்லாமல் அந்தக் கருத்தை ஒரு பாடலாகவே பாடிவிட்டார்.

சாலப் பழுத்த மரம்பார்த்து
எறிவர்; தண் ணீர் சுரக்கும்
ஞாலத்து அகழ்வர்; கறக்கின்ற
ஆவைநற் கால்தளைவர்;
நீலக் கடல்விட்டுப் பாலாழி
மத்திட்டு நிற்பர் என்னீர்,
சேலத்து வேந்தன் அகத்தாகம்
தீர்த்த செழியனுக்கே.

[ஞாலத்து – நிலத்தில். தளைவர் – கட்டுவர். நீலக் கடல்-உப்புக் கடல். என்னீர் -என்று சொல்லுங்கள்.]

வேறு ஒருவரைப் பார்த்து, “நான் அடிக்கடி வரு கிறேன் என்று நினைக்க வேண்டாம். எங்களுக்குப் போக்கிடம் எங்கே?” என்ற கருத்தோடு சொல்லுவதாக அமைந்தது பாட்டு.

புலவர் செழியனுடைய தமிழ்த் தாகத்தைத் தீர்த்தார். அவன் பல பரிசில்களை வழங்கினான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *