முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

கூவம் தியாக சமுத்திரம்

தொண்டை நாட்டில் உள்ள கூவம் என்னும் ஊர் பாடல் பெற்ற தலம். இன்றும் கூவம் என்ற பெயருடனேயே அது விளங்குகிறது. அதற்குத் திருவிற் கோலம் என்றும் ஒரு பெயர் உண்டு. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அந்தத் தலத்துக்கு ஒரு புராணம் பாடியிருக்கிறார்.

பழங்காலத்தில் அதற்குத் தியாக சமுத்திரம் என்ற பெயரும் வழங்கியது. கூவம் தியாக சமுத்திரம் என்று சேர்த்து வழங்குவதும் உண்டு. அங்கே தமிழ்ப் புலவர்களும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் வள்ளல்களும் இருந்தார்கள்.

இராமாயணத்தைப் பாடிப் புகழ்கொண்ட கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் ஒரு முறை தொண்டை நாட்டுக்கு வந்தார். அவருடைய வரவை அறிந்து கூவத்துப் பெருமக்கள் அவரைத் தம்முடைய ஊருக்கு வந்து சில நாள் தங்கச் சொன்னார்கள். அக்காலத்தில் தொண்டை மண்டலமும் சோழனுடைய அரசாட்சிக்கு அடங்கி யிருந்தது. சோழனுடைய ஆதரவு கம்பருக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர் வடக்கே புறப்பட்டுத் தெலுங்கு நாடளவும் சென்று வந்தார்.

அக்காலத்தில் வாணியர் குலத்தில் தோன்றிய தாதன் என்ற புலவன் சோழ மன்னனுடைய பாராட்டைப் பெற்றான். அவன் கம்பர் பாட்டில் குறை கூறினான். கம்பரும் அவனை இழித்துப் பாடினார். இதனால் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது.

வாணியத் தாதனுடைய புலமையைப் பாராட்டிச் சோழ மன்னன் அவனுக்குக் கூவம் தியாக சமுத்திரத்தை முற்றூட்டாக வழங்கினான். அதனால் அப் புலவன் அடிக்கடி கூவத்துக்கு வந்து சில நாள் தங்கிச் செல்வது வழக்கம். அவனுடைய புலமை நலத்தை அறிந்து, அவனை உபசரித்து அளவளாவி இன்புற்றனர் அவ்வூர் மக்கள்.

கம்பர் அந்தப் பக்கமாக வருகையில் கூவத்திலுள்ள பெருமக்கள் அவரைத் தம் ஊருக்கு வரவேண்டுமென்று அழைத்தபோது, அவர் வர மறுத்துவிட்டார். வாணியத் தாதனுக்கு உரிய ஊர் அது; அங்குள்ளவர்கள் அவனிடம் மிக்க ஈடுபாடுடையவர் என்பதை உணர்ந்தே அப்படிச் செய்தார்.

கம்பர் வரமாட்டேன் என்று மறுத்தாலும் கூவத்து மக்கள் அவரை விடவில்லை. சிலர் சேர்ந்து, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து சென்றார்கள். சில சமயங்களில் ஒருவரும் அறியாமல் அவருடைய சிவிகையைச் சுமந்தார்கள். அதைக் கம்பர் தரிந்துகொண்டார்; “நீங்கள் யார்? ஏன் என் சிவிகையைச் சுமக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“கலைமகள் ஆணுருவுடன் எழுந்தருளியிருக்கும் அவதாரம் தாங்கள். தங்கள் சிவிகையைச் சுமக்கும். பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது பற்றிப் பெருமிதம் அடைகிறோம்” என்றார்கள் அவர்கள்.

“உங்கள் ஊர் எது?”

“கூவம் தியாக சமுத்திரம்.”

“உங்கள் வாணியத் தாதனுடைய சிவிகையைத் தூக்கிச் செல்லாமல், இங்கே ஏன் வந்தீர்கள்?” என்று சற்றே சினக் குறிப்போடு கம்பர் கேட்டார்.

‘தமிழில் எங்களுக்கு வேறுபாடு இல்லை. இராமாயணம் பாடிய திருவாயால் எங்கள் ஊரும் ஒரு பாடலாவது பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கு நாங்கள் செய்த தவம் போதவில்லை. இந்தச் சிவிகையைச் சுமக்கும் புண்ணியம் அந்தத் தவக் குறையை நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.’

கம்பருக்குச் சற்றே மனம் இளகியது. அப்போது அவர் கீழே இறங்கி ஓரிடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். கூவத்திலிருந்து வந்தவர்களில் ஒருவர் நல்ல வாசனைப் பண்டங்கள் சேர்ந்த தாம்பூலத்தை அவரிடம் நீட்டினார். அதைக் கம்பர் போட்டுக் கொண்ட போது அது மிகவும் நன்றாக இருந்தது. அப்போது தான் தமக்கு அதைக் கொடுத்தவரைக் கூர்ந்து பார்த்தார். அவர் சிறந்த செல்வர் என்று அவர் தோற்றமே சொல்லியது. ‘இவர் யார்? நமக்குத் தாம்பூலம் தருகிறாரே!’ என்று எண்ணிய கம்பர், “நீர் யார்?” என்று கேட்டார்.

“கூவம் தியாக சமுத்திரத்தில் தங்கள் பொன்னடி படவேண்டுமென்று தவம் செய்பவர்களில் அடியேனும் ஒருவன்” என்று அவர் பணிவுடன் கூறினார். அப்படிச் சொல்லிக் கொண்டே, மற்றொரு வெற்றிலைச் சுருளை நீட்டினார்.

“உம்மைப் பார்த்தால் வளவாழ்வு வாழ்பவராகத் தோன்றுகிறீர். இப்படி அடைப்பைச் சேவகம் செய்யலாமா?” என்று கேட்டார் கம்பர்.

“இது செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. இராமபிரானுடைய வடிவழகையும் அருங்குணங்களையும் பாடிய திருவாயில் சேரும் தாம்பூலத்தை அளிக்கும் பாக்கியம் எளியதா?” என்று விடை வந்தது.

உடன் இருந்தவர்கள் அடைப்பைச் சேவகம் செய்தவர் பரம்பரைச் செல்வரென்றும், இரந்தார்க்கு இல்லை யென்னாது ஈபவரென்றும் எடுத்துச் சொன்னார்கள்.

“தங்களைப் போன்ற புலவர் பெருமக்களுக்கு முன் நான் எம்மாத்திரம்? கொடுக்கக் கொடுக்கக் குறையும் பொருளை நாங்கள் வைத்திருக்கிறோம். கொடுக்கக் கொடுக்கக் குறையாத தமிழ் தங்களிடம் இருக்கிறது. நாங்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்கும் பொருள் சில நாட்களுக்கே பயன்படும். தாங்கள் வழங்கும் கவியோ என்றும் நிலைத்து நின்று புகழைப் பரப்பும். நாங்கள் கொடுக்கிறோம் என்று பெயர் பெறுவதைவிடத் தங்களிடம் வந்து இரந்து நிற்பதையே பெரிதாக எண்ணுகிறோம். தக்கவர்களிடம் இல்லை என்னாமல் தம்மிடமுள்ள பொருளை வழங்குபவர்களிடம் இரப்பதும் சிறந்ததே என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதனால் இப்போது தங்கள் முன் வந்து இறைஞ்சி நிற்கிறோம்.’

அவர் படித்தவர் என்பதும், பண்புடையவர் என்பதும் அவர் பேச்சால் வெளியாயின. கவிஞர் அவருடைய பணிவையும் பேச்சிலுள்ள ஆர்வத்தையும் கண்டு வியந்தார்.

“உங்கள் ஊருக்கு வருகிறேன்” என்று கம்பர் கூறியதைக் கேட்டவுடன் கூவத்துக்காரர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள் வந்தவர்களில் சிலர் ஊர் சென்று, அக் கவிஞர் பெருமானை வரவேற்பதற்கு வேண்டியவற்றைச் செய்யத் தொடங்கி விட்டனர்.

கம்பர் கூவம் சென்றார். ஊர் முழுவதும் சிவிகையில் வலம் செய்தார். அப்போது அவர் சிவிகையை ஊர்க்காரர்களே சுமந்தார்கள். கம்பர் வேண்டாமென்று சொல்லியும், கேளாமல் சுமந்தார்கள். முன் சொன்ன செல்வர் அடைப்பையைச் சுமந்து வெற்றிலைச் சுருள் கொடுத்தார்.

அவர்களுடைய அன்பையும் உபசாரத்தையும் கண்ட கம்பர் உருகினார்; சில நாட்கள் அங்கே தங்கினார். அப்போது அவர்களுக்கு இருந்த தமிழார்வத்தையும் நன்றாக உணர்ந்து வியந்தார். அவ்வூரையும் ஊராரை யும் பாராட்டிச் சில பாடல்கள் பாடினார்.

பிற்காலத்தில் வந்த கவிஞர் ஒருவர் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, கூவத்தைப் பற்றி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

ஓங்கிய செந்தமிழ்த் தாதற்
கடிமை அவ் வூர்; அதனால்
நாம்கவி சொல்வதும் இல்லைஎன்
றேகம்ப நாடன்சொல்ல
ஆங்கவன் ஏறும்சிவிகை
சுமந்தும் அடைப்பையிட்டும்
தாம்கவி கொண்டது கூவம்
தியாக சமுத்திரமே.

2

இந்தக் கூவம் தியாக சமுத்திரத்தில் ஒரு காலத்தில் நாராயணர் என்ற பெயருள்ள பொற்கொல்லர் ஒருவர் இருந்தார். அவர் தம் கலையில் வல்லவராக இருந்ததோடு தமிழ்ப் புலவர்களை வரவேற்று ஆதரிக்கும் வள்ளன்மையும் உடையவராக இருந்தார். எத்தகைய புலவராக இருந்தாலும் அவருடைய கவியைக் கேட்டு, அவரவர் தகுதிக்கு ஏற்பப் பரிசு வழங்கி வந்தார்.

மன்னர்களிடமும், வேறு செல்வர்களிடமும் பரிசு பெற்றவர்களும் நாராயணரிடம் பரிசு பெறுவதை மதிப்பாகக் கருதினார்கள். இவ்வாறு செய்து வந்தமையால் அவருடைய புகழ் எங்கும் பரவியது. ஒரு புலவர் கூவத்தைச் சிறப்பித்துப் பாடுகையில் அந்தப் பொற் கொல்லரையும் பாராட்டினார்.

மட்டாருஞ் செங்கழு நீர்மணி
மார்பரை வாழ்த்தும் அந்தக்
கிட்டாத யாசகர் கிட்டிவந்
தால் அதைக் கேட்டு முன்னாள்
பட்டோலை வாசித் தவரவர்க்
குள்ள பரிசிலெல்லாம் தட்டான்
அளிப்பதும் கூவம்
தியாக சமுத்திரமே.

(மட்டு- தேன். செங்கழுநீர் மணி மார்பர்-செங்கழு நீர் மாலையை யணிந்த அழகிய மார்பையுடைய மன்னர்கள். கிட்டாத யாசகர் – யாரிடத்திலும் சென்று பரிசில் பெறாத அரிய புலவர்கள். அதை – அவர் பாடும் பாடலை.)

ஒரு முறை அந்த ஊருக்கு ஒருவர் வந்தார். அந்த ஊரின் பெயரைக் கேட்டார். கூவம் என்பதற்குக் கிணறு என்று பொருள். “இந்த ஊரின் பெயர் முரண்பாடுடையதாக இருக்கிறது. கிணறு எங்கே, சமுத்திரம் எங்கே? கூவம் என்பது கிணறு. அதை எப்படிச் சமுத்திரம் என்று சொல்வது? கூவம் தியாக சமுத்திரம் என்று இணைத்துச் சொல்வது பொருத்தமாக இல்லையே!” என்றார்.

அவ்வூரில் உள்ள அறிஞர் ஒருவர் அவருக்கு விடை கூறினார். “இது சிறிய ஊராக இருந்தாலும் புகழால் பெரியது. தியாகத்தால் பெரியது. அதனால் வெறும் சமுத்திரம் என்று பெயர் பெறாமல் தியாக சமுத்திரம் என்ற பெயர் பெற்றது” என்றார்.

“அப்படியானால் தியாக சமுத்திரம் என்றே இருக்க லாமே!’ என்றார் முன்னவர்.

”பழைய பெயர் கூவம். அதனை மறக்காமல் அதையும் சேர்த்து வழங்குகிறோம்” என்றார் ஊர்க்காரர்.

“தியாக சமுத்திரம் என்கிறீர்களே; இந்த ஊரில் கொடையாளிகள் மிகுதியோ?” என்று கேட்டார் வெளியூர்க்காரர்.

”எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த ஊர்ப் பொற்கொல்லர் நாராயணருடைய பெருமையை நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்றார் ஊர்க்காரர்.

”அவர் யார்?”

“நீங்கள் அவர் பெயரை அறியாமல் இருப்பது மிக்க வியப்பாக இருக்கிறது. அவரையே தியாக சமுத்திரம் என்று சொல்ல வேண்டும்.”

”அவரை நான் பார்க்கலாமா?” என்று வந்தவர் கேட்டார்.

“நன்றாகப் பார்க்கலாம்” என்றார் உள்ளூர்க்காரர். இருவரும் நாராயணரிடம் சென்றார்கள். உள்ளூர்க்காரர் தங்கள் இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலைத் தெரிவித்தார். வெளியூர்க்காரர் அவர் சொல்வது உண்மைதான் என்றார். பொற் கொல்லர் புன்முறுவல் பூத்தார்.

‘கூவம் என்றால் கிணறு என்பது உண்மைதான். இந்த ஊரில் கிணறும் தியாக சமுத்திரமாக இருக்கும்’ என்றார் நாராயணர்.

அவர் கூறியதன் குறிப்பை முன்னால் இருந்த இருவரும் உணர்ந்து கொள்ளவில்லை.

‘”அது எப்படி?” என்று கேட்டார் வந்தவர்.

”மற்ற ஊர்க் கிணறுகளில் கிடைக்காத அரிய பொருள் இந்த ஊர்க் கிணற்றில் கிடைக்கும்” என்று பொற் கொல்லர் கூறினார்.

“நீரும் மீனும் கிணற்றில் கிடைக்கும். இந்த ஊர் கிணற்றில் வேறு என்ன கிடைக்கும்?” என்ற கேள்வி எழுந்தது.

“நீங்களே அதை நாளைக்குத் தெரிந்து கொள்ளலாம். நாளைக்கு இங்கே வாருங்கள். எங்கள் வீட்டுக் கிணற்றைக் காட்டுகிறேன். உங்களுக்கு என்ன கிடைக் கிறதோ அதை நீங்களே எடுத்துக்கொள்ளலாம்.”

வெளியூர்க்காரருக்கு அவர் கருத்து விளங்கவில்லை. என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் முந்தியது. அடுத்த நாள் வரையிலும் தம்மால் பொறுத்திருக்க முடியாது போல உணர்ந்தார். ஆனாலும் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

மறுநாள் விடிந்தது. அயலூர்க்காரரும் அவர் நண்பரும் நாராயணர் இல்லம் வந்தார்கள். அப்போது அந்தக் கொடையாளி ஒரு நீண்ட தூண்டிலை அயலூராரிடம் கொடுத்து, “வாருங்கள்; கிணற்றங் கரைக்குப் போகலாம்” என்று புன்முறுவலுடன் அழைத்துச் சென்றார்.

அயலூராருக்கு எல்லாம் வினோதமாக இருந்தது. அவருடன் புறக்கடைக்குச் சென்றார்.

“கிணற்றில் உள்ள பொருளை இந்தத் தூண்டிலால் எடுக்கலாம். நீங்கள் தூண்டில் போட்டுப் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் அதைப் போட்டு இழுங்கள் என்ன கிடைக்கிறதென்று பாருங்கள். எது கிடைத்தாலும் அது உங்களுக்குத்தான்” என்று கொடையாளி கூறினார்.

புதியவர் தூண்டிலை மெல்லக் கிணற்றுக்குள் விட்டார். தூண்டிலின் முனையில் ஒரு கொக்கி இருந்தது. கிணற்றுக்குள் தூண்டிலை விட்டு அசைத்தார். ஒன்றும் அகப்படவில்லை.

“கிணற்றைச் சுற்றித் தூண்டிலின் கயிறு போகட்டும். எளிதிலே கிடைக்குமா?” என்றார் பொற்கொல்லர்.

சிறிது நேரம் தூண்டிலைச் சுழற்றினார், புதியவர். பிறகு ஏதோ கொக்கியில் அகப்பட்டுக் கொண்டது போல் இருந்தது. மெல்ல மேலே வாங்கினார். கயிறு மேலே வந்தது. இறுதியில் தூண்டில் முள்ளும் வந்தது. என்ன ஆச்சரியம்! அதில் ஒரு மீனும் இருந்தது.

வெறும் மீனா அது? பளபளப்பான மீன்! உடம்பு முழுதும் தங்க நிறம் பளிச்சிட்டது. அதை எடுத்தார் தூண்டிற்காரர். அது உண்மையில் தங்கமீன்; தங்கத் தால் பண்ணிய மீன்.

“என்ன இது?” என்று அவர் வியப்புத் தாங்காமல் கேட்டார்.

”உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று நகைத்தார் கொடையாளி.

“தங்கத்தால் செய்த மீன் அல்லவா?”

“ஆம். இந்தக் கூவம், இப்போது தியாக சமுத்திரமா, அல்லவா சொல்லுங்கள்.”

தூண்டில் போட்டவர் நெஞ்சில் வியப்பும் அந்த வள்ளல்பால் பெருமதிப்பும் கரையிறந்து பொங்கின.

“இது கூவம் தியாக சமுத்திரந்தான். நான் இதை உணர்ந்துகொண்டேன்” என்று வாய்விட்டுக் கூவினார். இந்த அற்புத நிகழ்ச்சியைத் தொண்டை மண்டல சதகம் பாராட்டுகிறது.

தன்னால் இசைபெறக் கூவம்
தியாக சமுத்திரம் என்று
அந்நாள் ஒருவன் நெடுந்தூண்டில்
இட்டிட,ஆங்கொருமீன்
பொன்னால் அமைத்துப் பொருந்திடச்
சேர்த்துப் புகழ்கொண்டதால்
மன்னா உலகத்து மன்னிய
சீர்த்தொண்டை மண்டலமே.

3

இத்தகைய சிறப்பைப் பெற்று வாழ்ந்த நாராயணரைப் பல புலவர்கள் பாடினார்கள். அவர் உலக வாழ்வை நீத்தபோது, ஒரு புலவர் பாடியுள்ள பாடல் உள்ளத்தை மிகவும் உருக்குவது.

‘உலகத்தில் கொடுப்பவர் எண்ணிக்கை மிகக் குறைவு: யாசகம் பண்ணுவோர் தொகைதான் பெரிது. இத்தகைய உலகத்தில் நாராயணன், பெருங்கொடையாளியாக விளங்கினான். அவனைப் போய்ப் படுபாவியாகிய எமனே, நீ கொன்றுவிட்டாயே! அடுப்புக்கரி வேண்டுமென்று பயன் இல்லாத மரங்களை வெட்டலாம், கற்பகத்தை வெட்டலாமா? நாராயணன் இரவலர்களுக்கு கெல்லாம் கற்பகச் சோலையாக இருந்தானே? கரிக்காகக் கற்பகப் பூஞ்சோலையை வெட்டலாமா?’ என்று புலம்பினார் அவர்.

இடுவோர் சிறிது இங்கு இரப்போர் பெரிது;
கெடுவாய்! நமனே, கெடுவாய்!- படுபாவி!
கூவத்து நாரணனைக் கொன்றாயே!
கற்பகப்பூங் காவெட்ட லாமோ கரிக்கு?

(இடுவோர் – கொடுப்பவர்.கா சோலை.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *