முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

திண்ணையில் கெண்டை

சோழ நாட்டில் புங்கனூர் என்னும் ஊரில் ஒரு வேளாண் செல்வர் இருந்தார். அவர் நல்ல வள்ளன்மை உடையவர். சுற்றத்தாரைப் பாதுகாக்கும் பெருந்தன்மை படைத்தவர். அவரிடம் மக்கள் யாவரும் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய இயற்கையான பெயரை யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. புங்கனூர் கிழார் என்று சொல்லுவார்கள். புங்கனூர் வள்ளல் என்றும் கூறுவர். அவரை ஊரினால் சுட்டுவதையன்றிப் பேரினால் சுட்டுவதை மதிப்புக் குறைவாகக் கருதினார்கள், அக்காலத்து மக்கள். பெரியவர்களின் பேரைச் சுட்டாமல் ஊரை மாத்திரம் சொல்லுதல் அவர்களுடைய பெருமையைப் புலப்படுத்தும். ‘ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே’ என்ற பழமொழி இந்த வழக்கத்தை நினைப்பூட்டுகிறது.

புங்கனூர் கிழாருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை நாடிப் புலவரும் இரவலரும் வந்தார்கள். ஏற்றவர்களுக்கு இல்லை என்னாது ஈயும் இயல்பு அவரிடம் இருந்தது.

அவர் தம் மகனுக்குக் கல்யாணம் செய்ய எண்ணினார். நல்ல குலத்தில் பெண் பார்த்துத் திட்டம் செய்தார். தம் நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாகத் திருமணத்தை நிறைவேற்ற வேண்டுமென்பது அவர் ஆவல்.

அவருக்குப் பல உறவினர்கள் இருந்தார்கள். நண்பர்களோ அவர்களைவிட அதிகம். அவர்களையெல்லாம் அழைத்து உபசரித்து மகிழவேண்டும். அன்றியும் ஏழைகளுக்கு வயிறு நிரம்பச் சோறு போடவேண்டும். பரதேசிகளுக்கு ஆடையும் உணவும் வழங்கவேண்டும். இப்படியெல்லாம் விரிவாகத் திட்டம் வகுத்தார்.

ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொருவரை நியமித்து, குறையே இல்லாதபடி யாவும் உரிய காலத்தில் உரிய முறைப்படி நடத்த வேண்டும் என்று ஒழுங்கு செய்தார். உணவைக் கவனிக்க ஒருவர்; வரவேற்க ஒருவர்; அலங்காரத்துக்கு ஒருவர்; உக்கிராணத்திற்கு ஒருவர். அவர்களுக்குப் பலர் துணையாக நின்று உதவி செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் இப்படி முன்கூட்டியே ஒழுங்கு பண்ணாவிட்டால் பின்பு ஒரே குழப்பமாகி விடுமல்லவா?

கல்யாணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நெருங்கிய உறவினர்கள் வந்துவிட்டார்கள். பத்து நாட்களுக்கு முன்பு சற்றுத் தூர பந்துக்கள் வந்தார்கள். நாளுக்கு நாள் கூட்டம் மிகுதியாயிற்று அங்கங்கே பந்தல்கள், வரவேற்பு மண்டபம், ஆடல் பாடல் கொட்டகை என்று பல அமைப்புக்கள் நிர்மாணமாயின.

கல்யாணத்தன்று பார்த்தால், புங்கனூரே புதிய தோற்றம் அளித்தது; எங்கே பார்த்தாலும் தோரணங்கள், வாழைகள்; வீதி முழுவதும் கல்யாணத்துக்கு வந்த மக்கள்! இவ்வளவு பேருக்கும் சாப்பாடு போட்டு ஆக வேண்டுமே!

கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்யாண விருந்து நடக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே சமயத்தில் விருந்து அளிப்பதென்பது இயலாத காரியம். ஆதலால், பந்தி பந்தியாக விருந்து நடந்து கொண்டிருந்தது. யார் சாப்பிட்டார்கள், யார் சாப்பிடவில்லை என்று கண்டுபிடிக்க வகை இல்லை. அவரவர்கள் தாமே முயன்று சாப்பிட்டுவிட்டுப் போனால்தான்!

இந்தக் கூட்டத்தில் பல ஏழைகளுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை; அங்கங்கே வீட்டுத் திண்ணைகளில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சோர்வினால் சிலர் படுத்துவிட்டார்கள்.

அத்தகைய கூட்டத்தில் ஒரு புலவரும் இருந்தார். அவர் முதல் நாளே பட்டினி. அன்றாவது அந்தக் கல்யாணத்தில் வயிறு நிறைய உண்ணலாம் என்ற எண்ணத்தோடு வந்திருந்தார். வந்த இடத்திலும் எளிதில் உணவு கிடைக்குமென்று தோன்றவில்லை.

என்ன செய்வார், பாவம்! பசி மிகுதியால் அவர் கெண்டைக் காலில் குரக்கு வலி உண்டாயிற்று. அது தாங்காமல் அவர் வருந்தினார். அந்த நிலையிலும் அவர் கற்பனை வேலை செய்தது. அவர் கவிஞரல்லவா? சொல் அலங்காரம் தோன்ற ஒரு கவியைப் பாடத் தொடங்கினார். பசியினால் பலர் துன்புறுவதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது அவர் கருத்து; ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லாமல், மறைத்து வைத்து அலங்காரமாகச் சொன்னார்.

அந்தப் பாட்டில், முதலில் புங்கனூர் கிழாரைத் திருமாலுக்கு ஒப்பாகச் சொன்னார். அரசர்களையும் மிக்க செல்வம் உடையவர்களையும் நெடுமாலாகச் சொல்வது மரபு. இரு வகையினரும் திருவை உடையவர்கள் அல்லவா? இங்கே அவர் புங்கனூர் கிழாரைக் கண்ண பிரானாகப் பாடினார்.

கண்ணன் வெண்ணெயைத் திருடினான். அதைக் கண்டு கோபித்து, அவன் அன்னை மத்தால் அடித்தாள். அதனால் மேலே புண் உண்டாயிற்று. திருட்டுக் கண்ணன் கையில் வெண்ணெய் இருக்கிறது. அதைப் பார்க்கிறான். உடனே அன்னையின் சிவந்த கண்களை ஓரக் கண்ணாலே பார்க்கிறான். பிறகு, தன் மேனியில் மத்தடியினால் உண்டான காயத்தைப் பார்க்கிறான். வெண்ணெய் திருடிய கண்ணனாகிய திருமாலே புங்கனூர் கிழார் என்று பாடினார், புலவர்.

வெண்ணெயும் பார்த்தன்னை
கண்ணையும் பார்த்துத்தன் மெய்யிற்பட்ட
புண்ணையும் பார்த்த திருநெடு
மால்புங்க னூர்கிழவன்

என்று பாடினார். இதற்கு மேல் தாம் சொல்லத் துணிந்த பொருளை வைத்தார். அந்தப் பகுதி அந்தச் செல்வருடைய நீர்வளத்தையும் நில வளத்தையும் சொல்லி வியப்படைவது போல் அமைந்திருக்கிறது. இவருடைய வயலில் சேல் மீன்கள் துள்ளும்; குளங்களில் கயல்கள் பாயும்; இவை ஆச்சரியம் அன்று; திண்ணையிலும் ‘கெண்டை மீன்கள் புரளும்’ என்ற பொருள் தொனிக்கும்படி அமைந்தது அந்தப் பகுதி.

புங்க னூர்கிழவன்
பண்ணையும் சேல்உக ளும்; தடம்
நீள்கயல் பாயும்; நெடுந்
திண்ணையும் கெண்டை புரட்டும்கல்
யாணத்தில் சென்றவர்க்கே.

2

பாட்டை மேல் எழுந்த வாரியாகப் பார்த்தவர்களுக்கு ஏதோ ஓர் அற்புதத்தைக் கண்டு, ‘அடடா! வயலிலும் குளத்திலும் மீன்கள் துள்ளுவதுபோல், வெறும் தரையாகிய திண்ணையிலும் கெண்டைமீன்கள் புரளுகின்றனவே!’ என்று சொன்னது போல் இருக்கும். ஆனால் இதில்தான் புலவர் தம் கருத்தைப் புதைத்திருக்கிறார்.

இந்தப் பாட்டுச் சோழ மண்டல சதகம் என்ற நூலில் உதாரணமாக வரும் செய்யுள். இதன் உட்கருத்து விளங்காமல், ‘கெண்டை சோமனில் கரையில் உள்ள கெண்டை’ என்று ஒருவர் எழுதினார். நல்ல வேளை! ‘உணவிலே உள்ள கெண்டை’ என்று சைவத்துக்கு. மாறுபாடாக எழுதாமற் போனாரே!

விருந்துணவு கிடைக்காமல் பசியினால் துன்புறுகின்ற கூட்டத்தில் புலவரும் ஒருவராக இருந்தார். தம் நிலையை வீட்டுக்காரருக்குத் தெரிவிக்க வழி என்ன என்று பார்த்து இந்தப் பாட்டைப் பாடினார்.

குரக்கு வலி உண்டாவதைக் கெண்டை புரட்டுதல் என்று சொல்வார்கள். பலவீனம் உடம்பில் இருந்தால் காலில் கெண்டை புரட்டும். பசியினாலும் கெண்டை புரட்டும்.

ஒருவன் ஓர் ஊருக்குப் போனான். அங்கே அவனுக்கு இரண்டு உறவினர்கள் வேறு வேறு வீதிகளில் இருந்தார்கள். இரண்டு வீட்டுக்கும் சென்று பேசியிருந்து, மறுநாள் ஊருக்குப் போகப் போவதாகச் சொல்லிவிட்டு, தான் வந்த காரியத்தைப் பார்க்கச் சென்றான். அதை முடித்துக்கொண்டு இரவில் வீட்டுக்குப் போனான். அங்குள்ள உறவினர், மற்றோர் உறவினர் வீட்டில் உண்டிருக்கக்கூடும் என்று எண்ணி, அவனை உண்ண அழைக்கவில்லை. அழைக்காத வீட்டில் சோறு போடென்று சொல்வது முறையல்லவே என்று எண்ணி, மற்றோர் உறவினர் வீட்டுக்குப் போனான். அவரும், அவன் முன்போன வீட்டில் சாப்பிட்டிருப்பான் என்று எண்ணினார். அவன் போவதற்கு முன்பே எல்லாரும் உண்டு பாத்திரங்களை மூடிவைத்து விட்டார்கள்.

இப்படி இரண்டு வீட்டுக்கும் விருந்தாளியாகப் போகலாம் என்று எண்ணியவன், திட்டமாகச் சொல்லாமையால் இரவு பட்டினியிருந்தான். முன்பே மெலிவுள்ளவன் ஆகையால், இரவில் அவன் காலில் கெண்டை புரட்டியது. பசி தாங்காமல் இறந்துவிட்டானாம். இந்தக் கதையைக் குறிக்க ஒரு பழமொழி உண்டு. ‘இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்துப் போனான்’ என்ற அப் பழமொழி இதைப் புலப்படுத்துகிறது.

பட்டினி கிடந்தால் கெண்டை புரட்டும் என்பதை இந்தப் பழமொழியால் தெரிந்து கொள்ளுகிறோம். தாங்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பதால், தங்களுக்குக் கால்களில் குரக்கு வலி இழுக்கிறது என்பதைக் குறிப்பித்து, ‘திண்ணையும் கெண்டை புரட்டும் கல்யாணத்தில் சென்றவர்க்கே’ என்று பாடினார் புலவர்.

புலவர், புங்கனூர் கிழவன் என்று சொல்லி ஏதோ பாடியதைக் கேட்டவுடன் அங்கிருந்தவர்களுக்கு அவர் மேல் கவனம் சென்றது. அவரைச் செல்வரிடம் அழைத்துச் சென்றார்கள். புலவர் அவரிடம் பாடலைச் சொன்னாரோ இல்லையோ, அவர் உடனே மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார். அவருக்குப் பாட்டின் கருத்துத் தெளிவாகப் புலப்பட்டது. மானவுணர்ச்சி மீதூர்ந்தமையால் அவர் மூர்ச்சை போட்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தெளிய வைத்தார்கள். அவர் ஏவலின்படி, உடனே திண்ணையில் இருந்தவர்களுக்கெல்லாம் தனியே உணவு அளித்து உபசரித்தார்கள். புலவரும் விருந்துண்டதோடு நல்ல பரிசிலும் பெற்றார்.

வெண்ணெயும் பார்த்தன்னை கண்ணையும்
பார்த்துத்தன் மெய்யிற்பட்ட
புண்ணையும் பார்த்த திருநெடு
மால்புங்க னூர்கிழவன்
பண்ணையும் சேல்உக ளும்,தடம்
நீள்கயல் பாயும், நெடுந்
திண்ணையும் கெண்டைபுரட்டும்,கல்
யாணத்தில் சென்றவர்க்கே

என்ற பாட்டில், புலவர் புங்கனூர்ச் செல்வரைக் கண்ணனாகப் பாடினார். அவன் தன் மெய்யிற் பட்ட புண்ணைப் பார்த்தான். அந்தச் செல்வரைப் புகழுடம்பிலே பட்ட புண்ணைப் பார்க்கும்படியாக இந்தப் பாட்டுச் செய்துவிட்டது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *