தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்

தமிழ் வளர்கிறது!

விடுதலைத் தமிழ ரென்று
வீறுடன் பேசு கின்ற
முடிநிலை காண்ப தற்கு
முழக்கடா சங்க மென்று
திடுமென வீர ரெல்லாம்
திரண்டுவந் தெழுப்பு மோசை
கடிதினிற் கேட்டேன் இன்பக்
களிப்பினில் துள்ளி வந்தேன்.

வடவரின் பிடியி னின்றும்
வளர்தமிழ் நாட்டை மீட்கத்
திடமுடன் தொண்ட ரெல்லாம்
திரண்டனர் என்ற போது
கடனெலாம்” தீர்ந்தவன் போல்
களிப்புடன் ஓடி வந்து
படையினில் சேர்ந்து கொண்டேன்;
பாடினேன் தமிழ்வாழ் கென்றே.
தமிழ் வளர்கிறது!

தமிழரின் நாட்டை மீட்போம்
தமிழ்நறு மொழியைக் காப்போம்
தமிழரின் கொடியை ஏற்றித்
தமிழ்மகள் மானம் காப்போம்
தமிழரின் அரசு நாட்டித்
தமிழர்பண் பாடு காப்போம்
தமிழரின் வீட்டி லெல்லாம்
தமிழ்மணம் கமழச் செய்வோம்.

எழுச்சியும் ஆர்வத் தீயும்
என்னுளே எழுந்து பொங்கக்
கிளர்ச்சிசெய் வாரைக் கூடிக்
கிடந்திடும் அந்தப் போதில்
தளர்ச்சிநான் உற்றே னென்றால்
தனிவியப் படைவீர், அந்த
வளர்ச்சியின் நிலையைக் கண்டால்
வடிந்திடும் கண்ணீ ரன்றே !

தமிழினை வளர்ப்போ மென்றும்
தமிழர்நா டடைவோ மென்றும்
அமிழ்தென மொழிவோ ரெல்லாம்
அவரவர் கொள்கை கொண்டு
சுமைசுமை யாகத் தீமை
தோற்றுவித் திடுதல் கண்டேன்.
அமைந்திடும் தமிழர் நாட்டுக்
கவர்பணி வேண்டாம்! வேண்டாம் !

சொல்லழகு மனம்பறிக்கப் புலவன் பாட்டுச்
சுவையறிந்து பரிசளித்துத் தமிழ்வ ளர்த்த
நல்லதமிழ் மன்னர்வழிப் பிறந்தி ருந்தும்
நாடாளும் அமைச்சர்களாய் வீற்றி ருந்தும்
மெல்லமெல்லப் பிறமொழியைத் திணிப்ப தற்கு
மேலுதவி செய்துவரும் போக்கைக் கண்டு
நல்லவர்கள் மனம்வருந்தப் புல்ல ரெல்லாம்
நன்மைவந்த தெனக்களித்துக் குதிக்கின் றாரே !

பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில்
புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துக்கச்
செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச்
செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று
மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து
மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள்
செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே
திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் !

தென்றமிழில் வடமொழியின் சொற்கள் வந்து
திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி
அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே
அழிவழக்குப் பேசிடுமோர் கூட்டத் தாரும்
இன்றமிழை வளர்க்கின்ரறோம் யாங்க ளென்றே
ஏமாந்த தமிழ்நாட்டார் முன்னே வந்து
நின்றிருப்பார் பூமாலை கைச்செண் டோடே
நிகழ்த்திடுவார் வரவேற்புத் தமிழர் தாமே.

பெண் கல்வி வேண்டுமென்றே ஒருவர் சொன்னால்
பெரியவளாய் ஆகும்வரை படிப்ப தென்று
தண்டமிழ்க்குப் பண்டிதர்கள் உரைவ குத்த
தந்திரம்போல் மற்றொறாவர் விளக்கம் சொல்வார்.
கண்ணைநிகர் கல்வியினைக் கற்ப தற்கே
கல்லூரி வருமந்தக் கன்னி தன்னை
மண்டுதமிழ் மாணவரோ சுற்றி வந்து
மனமயக்கம் கொண்டிடுவார் மான மின்றி !

தமிழ்நாட்டில் வானொலியை இயக்கு விக்கும்
தனியுரிமை பெற்றவரோ வடமொ ழிப்பேர்
அமைத்ததனை அழைக்கின்றார்; இந்தி தன்னை
அருமுயற்சி செய்திங்கே பரப்பு கினறார்.
சமைத்துவைத்த அறுசுவைசேர் உணவி ருக்கச்
சரக்குதனைக் குடிப்பாட்டும் சழக்கர் போலே
நமைத்துன்பப் படுத்துகின்ற ஆள வந்தார்
நாட்டுமொழி வளர்ச்சியினைத் தடுக்க லானார் !

கொள்ளைகொலை ஆபாசச் செய்தி யென்னும்
குப்பையெலாம் பரப்புகின்ற செய்தித் தாள்கள்
கள்ளமிலா நாட்டினரின் உள்ளங் தன்னைக்
கயமைவழிச் சேர்க்கின்ற கதையி தழ்கள்
வெள்ளம்போல் பெருக்கிரும்பால் விலைப்ப டுத்தி
விந்தையுறத் தமிழ்வளர்ப்ப தாகக் கூறும்
குள்ளர்களும் இந்நாட்டில் பெருகிப் போனார்
குணங்கெட்டார் இவைபடித்தார் நூறு நூறாய் !

இருசொற்கள் புணர்ந்திடுங்கால் தோன்று மொற்றை
எடுத்துவிட்டுத் தமிழெழுதும் கூட்ட மொன்று,
“விரியுலக வழக்கினிலே விளங்கு கின்ற
வேற்றுமொழி பலகண்டோம் புணர்ச்சி யென்னும்
ஒருவிதியைக் கண்டதில்லை! தமிழில் மட்டும்
உண்டெனிலோ அதுபடிக்க நேர மில்லை
கருதுவதை யெழுதுங்கால் ஒற்று மிக்குக்
காண்பதனால் என்னபயன்” என்று கேட்கும்!

செந்தமிழில் மறுமலர்ச்சி சேர்ப்ப தற்கே
சிறுகதைகள் புதுக்கவிதை வசனப் பாட்டு
விந்தையுற எழுதுகிறோம் என்று சொல்லி
விளையாடும் எழுத்தாளர் கூட்ட மொன்றாம் !
அந்தநாள் ஆபாசக் கதையை யெல்லாம்
அச்சாக்கி மலிவான விலைக்கு விற்றுச்
செந்தமிழைப் பரப்புவதாய்ப் பசப்பு கின்ற
சிறுவணிகர் கூட்டந்தான் மற்றொன் றாகும்!

இலக்கியத்தைத் தெருவெல்லாம் பரப்ப வென்றே
எழுந்ததோர் இயக்கமெனில், தெருவின் பேச்சை
இலக்கியமாய்த் தொகுத்தெழுதிப் பெருக்கு தற்கும்
எதிரியென ஓரியக்கம் இருக்கக் கண்டோம்.
கலக்கமின்றித் தெளிவான நீர்கு டிக்கக்
கருதியொரு திருக்குளத்தில் இறங்கும் போது
மலக்குவையைத் தனக்குணவாய்க் கொள்ளும் பன்றி
மணிகுளத்தில் நீராடித் திரிதல் போலே!

வருவாளை வராளென் றெழுது வோனும்
வருவானோ ரெழுத்தாளன் என்று கூறி !
திருவான தமிழேடு தெருவில் வந்தால்
செழித்தோங்கும் எனநம்பி வழிதி றந்தோம்.
தெருவீதிப் புழுதியெலாம் பறந்து வந்து
திருவீட்டில் நுழைந்துதமிழ் ஏட்டி லேறி
உருவான தமிழொளியை மறைக்கக் கண்டோம் !
உடன்புழுதி துடைப்பதற்கோர் இயக்கம் வேண்டும்!

ஆங்கிலத்தைத் தமிழ்மொழியில் கலப்ப தாலே
அறிவுயரும் மொழிவளரும் நாட்டிற் கென்றும்
தீங்கிலையே எனமொழிவார்; தமிழில் எங்கும்
செஞ்சொற்கள் இலையென்றும் கூறி நிற்பார்.
தேங்கியுள்ள சாக்கடையின் தண்ணீ ராலே
தேனாற்றில் பெருக்கெடுத்த தென்பார் போலே
பாங்கிலுள்ள வடமொழியும் சொற்கள் தந்து
பழந்தமிழை வளர்த்ததுவே சான்றா மென்பார் !

கற்கண்டைக் கடியாமல் விழுங்கிப் பல்லைக்
காப்பாற்ற வேண்டுமென்றும். அதனைப் போலே
கற்கண்டைக் கல்க்கண்டென் றெழுதி னாற்றான்
கடுந்தமிழைப் புரிந்துகொள்ள முடியு மென்றும்
சொற்களிலே எளிமையினைத் தோற்று விக்கத்
தோன்றிவந்தோம் நாமென்று சொல்லிக் கொண்டு
முற்கழகப் புலவர்தமை மூட ராக்கி
முன்னேறும் புதுப்புலவர் பல்லோர் வந்தார்!

தாய்போன்ற பெண்ணொருத்தி தன்னைச் சுட்டித்
தடித்தனமாய் அவள்வந்தாள் இவள்போ னாளென்
றோயாமல் எழுதுவதும். இலக்க ணத்தில்
உள்ளபடி தானெழுது கின்றோ மென்று
வாயாலே அடிப்பதுவும் சான்றோர் சொல்லை
மறுப்பதுவும் தொழிலான சிற்றி னத்தார்
தாயான தமிழ்நாட்டின் விடுத லைக்கே
தாமுழைக்க வந்ததுவாய்க் கூவு கின்றார் !

ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன்
அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால்
பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை
படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் !
ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர்
உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா?
ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை
எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப்போச்சாம் !

அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும்
ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் !
திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத்
திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார் !
உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்றால்
ஒதுங்குகின்றார் ! நூற்பொருளில் திருத்தம்சொன்னால்
கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்றார் !
காண்பதெல்லாம் விந்தைகளே ! தமிழர் நாட்டில்.

ஏனென்று கேட்பதற்கோர் ஆளு மின்றி
இருக்கின்ற காரணத்தால் தமிழர் நாட்டில்
தானென்று திரிகின்ற போக்குக் கொண்டார்
தலைகனத்துத் திரிகின்ற நிலைமை கண்டோம்.
பேனொன்று தலையேறி இருந்து விட்டால்
பெருமையுள்ள தாய்விடுமா என்று பார்த்தால்.
யானென்றும் உயர்ந்தவனென் றெண்ணு கின்ற
அவர்நிலைமை யறிந்திடுவார் உண்மை காண்பார்!

வள்ளுவனின் மறைவளர்ந்த தமிழர் நாட்டில்.
வளங்கொழிக்கும் கீழ்க்கணக்கு நூல்க ளாலே
உள்ளமெலாம் தெளிவுற்று நெறிகைக் கொண்டே
ஒப்பற்ற சான்றோர்கள் வாழ்ந்த நாட்டில்,
தெள்ளுதமிழ் வளர்கின்ற விந்தை யான
சிலநிகழ்ச்சி நாம்கண்டோம். இந்தப் போக்கே
கொள்ளுமெனில் இந்நாட்டில் முன்னேற் றத்தைக்
கொண்டுவரல் முயற்கொம்பே கண்டீர் !கண்டீர் !

ஒழுக்கமுடன் வளர்கின்ற பிள்ளை யன்றோ
உயர்ந்தவனாய் விளங்கிடுவான். நடத்தை தன்னில்
வழுக்குடைய பேர்வழியும் சிறப்ப துண்டோ ?
வான்கோழி மயிலைப்போல் ஆவ துண்டோ?
அழுக்குடையோன் நோயின்றி வாழ்தல் உண்டோ ?
அழகுடைய தமிழ்கெடுக்கும் அன்ப ரெல்லாம்
இழுக்குடைய கொள்கைகளை விட்டு விட்டே
என்றும்நல்ல தமிழெழுதி வாழ்க நன்றே!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *