
தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்
தமிழர் திருநாள்
வீரமிக்க என்வெற்றித் தமிழே யுன்னை
வேரறுக்கத் துணிந்துசில வீண ரெல்லாம்
ஊரறியப் பலமுயற்சி செய்தார் பின்னர்
உன்மக்கள் தமைப்பிரித்து வைத்தார். ஆனால்,
சீரகமாம் தமிழகத்தில் செழித்த உன்றன்
செம்மைதனை நீக்குதற்கு முயன்ற பேரை
வேருடனே பறிப்போமென் றார்ப்ப ரித்து
வீறுடனே யுன் மக்கள் கிளம்ப லானார் !
நெடுஞ்செழியன் ஆரியத்தின் படைக டந்தான்
நெடுங்கதையாம் சிலப்பதிகா ரத்தை நாட்டிக்
கொடுத்தஇளங் கோவினுடை யண்ண னந்தக்
கொடியவரைச் சிறையிட்டான். பின்வ டக்கே
படையெடுத்துக் கலிங்கத்தை வென்று வந்து
பாரரசன் அநபாயன் பரணி கொண்டான்.
தடைக்கற்கள் வருந்தோறும் தாவித் தாண்டித்
தாரணியிற் புகழடைந்தார் தமிழ் மக்கள் !
முயற்சியெலாம் ஊரறியச் செய்து விட்டால்
முன்னேறும் தமிழ்மக்கள் கோபம் கொண்டு
துயர்கொடுப்பார் என்றறிந்த சூழ்ச்சிக் காரர்
தூயசில நூல்கள்தமைத் தீயி லிட்டார்.
கயலோடும் நீரிலிட்டார் ! கயமைத் தன்மை
காய்த்ததனால், பழுத்ததனால், காரங் கொண்டு
வியத்தக்க நூல்களுள்ளே சிலபாட் டுக்கள்
வேண்டுமென்றே புகுத்தியவர் தமிழ்கெ டுத்தார்!
கீழ்ச்செயல்கட் கஞ்சாத பகைவர் தங்கள்
கெடுதல்செயும் கினைப்பினையும் செயலில்
அன்னார் சூழ்ச்சிசெயும் திறத்தினையும் கண்ட மக்கள்
உளங்கொதித்தார், வெகுண்டெழுந்தார், ஊரி லெல்லாம்
வீழ்ச்சியுற்ற தமிழர்நிலை விளக்கிக் காட்டி
வீணான வேற்றுமைகள் விலக்கச் சொல்லி
சூழ்ச்சிதன்னை வஞ்சகத்தைப் பொருமை தன்னைத்
துள்துாளாய்த் தொலைப்பதற்குத் துவங்கி விட்டார்!
பகைவர்களை எச்சரிக்கும் ஒருநா ளாகப்
பாண்டியரின் வழிவந்த தமிழ் மக்கள்
மிகையான மகிழ்ச்சியிலே திளைத்தி ருக்கும்
மேலான ஒருநாளா யிலங்கு கின்ற;
வகைவகையாய்த் தானியங்கள், கரும்பு மஞ்சள்
வண்டிவண்டி யாய்க்குவியும் வளங்க ளார்ந்த
வகைசெய்யும் நன்னளைப் பொங்கல் நாளை
வாழ்த்தியவர் திருநாளாய்க் கொள்ள லானர் !
கழகங்கள் பலவமைத்தார் செயல்க ளாற்றக்
கடிதிளைஞர் பல்லோரும் துணிந்து வந்தார்
உளமார்ந்த தொண்டாற்றி யூர்கள் தோறும்
உயர்த்துகின்றார் செந்தமிழை வான ளாவ !
பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டு மக்கள்
பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் காத்து நிற்கக்
குழைந்தபொங்கல் ஏந்திவந்து தமிழ் மங்கை
குமரருக்கும் செல்வியர்க்கும் படைக்க லானாள்!



