
தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்
பாரதிதாசன்
பாண்டிய நாட்டி லந்நாட்
பைந்தமிழ்ப் புலவ ரெல்லாம்
மாண்டனர் என்றால் சங்க
மாண்புநம் முன்னே தோன்றும்
மீண்டவர் வந்தா ரென்று
விளம்பிடப் பாட லேக்கை
யாண்டவன் புகழைப் பெற்றோன்
பாரதி தாச னன்றோ ?
மிகுத்திடு மூடத் தன்மை
மேவிடும் சாதித் தீமை
நகத்தகுஞ் சமயக் கொள்கை
நாட்டினின் றோட்டத் தானே
தொகுத்ததன் நூலி லெல்லாம்
தூண்டினான் விளக்க மென்னும்
பகுத்தறி வியக்கந் தன்னைப்
பாரதி தாச னன்றோ?
நாட்டினில் மூடக் கொள்கை
நாட்டித்தம் வாழ்வை யின்பத்
தோட்டமாய் அமைத்துக் கொள்ளத்
தோன்றிய கயவ ரெல்லாம்
ஏட்டினை மூட்டை கட்டி
எடுத்தனர் ஓட்ட மென்னப்
பாட்டினை முழக்கு கின்றோன்
பாரதி தாச னன்றோ?
கம்பனும் பாடி வைத்தான்
கவிநயம் சொட்டச் சொட்ட
என்பவர் தாமும் பொய்யே
எழுதினா னென்று சொல்வார்!
நம்புதற் கியலாப் பாதை
நடப்பதில் உள்ள கேட்டை
மன்பதைக் கெடுத்து ரைத்தோன்
பாரதி தாச னன்றோ?
இடைக்காலப் புலவ ரெல்லாம்
இறைவனைப் பாடி மெய்யாய்
நடக்காத கதைக ளெல்லாம்
நாடியே எழுத லானார்
துடிக்காத உளந்து டிக்கத்
தோன்றிய இந்தப் பாதை
நடக்காமற் புதுமை கண்டோன்
பாரதி தாச னன்றோ?
பாரதி பாடி வைத்த
பார்ப்பானை எனத்தொ டங்கும்
நேரிய கவிதை யெல்லாம்
நினைத்தவா றழித்து விட்டார் !
பாரதி தாசன் தோன்றிப்
பாடிடும் புரட்சி கண்டு
காரியச் சூழ்ச்சி வல்ல
கயவரு மயர்ந்து போனார் !
தமிழெனில் உயிரே யென்பான்
தரிக்குமென் மூச்சே யென்பான்
அமிழ்தெனு முணவே யென்பான்
அகத்தெழு முணர்ச்சி யென்பான்
கமழ்ந்திடு மணமே யென்பான்
கவிதையின் சுவையே யென்பான்
தமிழ்க்கவி பார திக்குத்
தாசனும் நானே யென்பான்!
இலக்கண இலக்கி யத்தில்
எதுவுமே தெரியா ராகிக்
கலைக்களம் வளர்ப்போ ரென்றும்
கவிஞர்கள் யாமே யென்றும்
தலைக்கனம் கொண்டு நாட்டில்
தருக்கிடுங் கூட்டந் தன்னைத்
தொலைக்கவே பிறந்த தோன்றல்
பாரதி தாச னன்றோ ?
காதலின் தூய்மை காட்டிக்
கவிதையின் சுவையைக் கூட்டி
மாதரின் இன்பந் தன்னை
மறுத்திடும் கூட்ட மோட்டிச்
சாதியு மதமு மன்பைத்
தடுத்திடும் சதியைப் போக்கிப்
பாதகம் வீழச் செய்தோன்
பாரதி தாச னன்றோ ?
ஒளிந்தொரு கூட்டம் நம்மை
ஒழித்திடச் செய்யும் சூழ்ச்சி
தெளிந்திடச் செய்தான் ! நன்மை
திகழ்ந்திடச் செய்தான்! முன்னர்
இழந்தநம் வீரப் பண்பை
ஏற்றிடச் செய்தான்! மீண்டும்
பழந்தமிழ் வாழ்வைச் சேர்த்தான்
பாரதி தாச னன்றோ?
வறுமையைக் களைந்து நல்ல
வாழ்வினை நடத்து தற்கும்.
சிறுமையைப் போக்கி நல்ல
சிறப்பினை எய்து தற்கும்,
பொறுமையை நீக்கி நாடடுப்
பொறுப்பினை ஏற்ப தற்கும்,
திறமையை யுணர்ச்சி தன்னைச்
சேர்த்திடும் தாசன் பாட்டே !



