
தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்
தமிழ் முழக்கம் செய்வீர்!
எங்கணும்பால் பொங்குமொரு மகிழ்ச்சி கண்டேன்
இன்பத்தில் திளைத்திருக்கும் மாந்தர் கண்டேன்
பொங்கிவரும் பூரிப்பில் திளைத்தி ருக்கும்
புத்துலகச் சிற்பிகளே! மாண வர்காள்!
உங்களுக்கோர் ஆணையிட்டேன் தமிழை யுங்கள்
உயிர்போலப் போற்றுவதாய் உறுதி செய்வீர்!
சிங்கத்தைப் போல்பாய்வீர் தமிழ்கெ டுக்கும்
சிறுநரிகள் தமைக்கண்டால், எழுச்சி கொள்வீர்!
தமிழ்நாட்டில் தமிழரெனப் பிறந்த வர்க்குத்
தாய்த்தமிழைப் போற்றுவதே கடமை யென்பேன்!
தமிழராய்ப் பிறந்திருந்தும் தமிழ்ப டிக்கத்
தக்கநல்ல வசதியின்றித் தவித்தி ருக்கும்
நமையொத்த தமிழர்க்கே உதவி செய்தல்
நம்கடமை மாணவர்காள் ஓய்வு நாளில்
அமைந்திடுமோர் சிங்கத்தின் மூல மாக
அருந்தமிழைக் கல்லாதார் கற்கச் செய்வீர்!
பிழையின்றிப் படித்தற்கும் எழுது தற்கும்
பெரும்பாலார் முயல்வதில்லை. இலக்க ணத்தை
நுழைப்பதற்கு மூளையிலே இடமு மில்லை
நொண்டியென வாசகத்தை எழுது கின்றார்.
அழைத்துவந்து தமிழறிவைப் புகுத்த வேண்டும்
அழகுதமிழ் கடைசிறக்க உழைத்தல் வேண்டும்
பிழையில்லாச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்
பேருலகில் தமிழ்முழக்கம் எழுப்ப வேண்டும் !
நமையெல்லாம் மகிழ்ச்சியிலே ஆழ்த்து கின்ற
நல்லதொரு செய்தியுண்டு கூறு கின்றேன்.
தமிழ்நாட்டில் ஆட்சிமொழி தமிழே யென்று
தக்கதொரு சட்டத்தை ஆக்கி விட்டார்.
இமைப்போதும் தாழ்க்காதீர் தொண்டு செய்வீர் !
எத்திசையும் உலகரங்கில் முதலி டத்தை
நமைப்பெற்ற தமிழ்த்தாய்க்கே நல்கும் வண்ணம்
நாட்டிடுமோர் உணர்ச்சியுடன் உழைக்க வாரீர்!



