
தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்
பாரதியார்
வெட்டரிவாள் போல்முறுக்கி விட்ட மீசை
விழிகளிலே ஒளிபெருக்கும் வீரப் பார்வை
கட்டற்ற உரிமைதனை விரும்பும் நெஞ்சம்
கற்பனையில் நனைந்ததமிழ் பாடும் செவ்வாய்
சட்டைக்கு மேல்பழைய கோட்டு மற்றும்
சரிகையின்றித் தலைமேலே சேரன் போலே
கட்டிவைத்த தலைப்பாகை இதுதான் அந்தக்
கவியரசன் பாரதியின் தோற்றம் கண்டீர் !
நீருக்குள் விளக்கெரியும் விந்தை யான
நிகழ்ச்சிதனைக் கதைக்கின்ற புலவன் அல்லன்.
பாருக்குள் தான்பிறந்த நாட்டில் உள்ளார்
படுந்துயரம் தனைகண்டான். வளமி ருந்தும்
சீருக்கும் சிறப்புக்கும் இடமில் லாத
திருநாட்டின் அடிமைநிலை கண்டான். யாண்டும்
வீரக்கும் மாளமிட்டுத் தன்தாய் நாட்டார்
விளங்கும்நாள் தனக்கொணர முயன்ற வீரன் !
கலிங்கத்தை வென்றாராம் கண்ண கிக்குக்
கல்சுமக்க வைத்தாராம், இமய மீது
புலிபொறித்து வந்தாராம், புகழ்கொண் டாராம்.
புலவரெல்லாம் கதைக்கின்றார், அணுவு மின்று
வலிவில்லை தாய்நாட்டின் மக்க ளென்போர்
வாலறுந்த குரங்குகளாய் மாற்றான் ஆட்சி
வலைப்பட்டுச் சிதையும்நிலை கண்டான். இந்த
வாழ்வுநிலை மாறாதோ எனநி னைத்தான்.
கரும்புவிளை தோட்டத்தில் அரும்பு போன்ற
கைவிரல்கள் நோவெடுக்க வேலை செய்யும்
திருநாட்டின் மாதர்நிலை கண்டு கண்ணீர்
சிந்திகின்றான். தொண்டுசெய்யும் சிப்பாய்க் கஞ்சிப்
பெருமக்கள் ஓட்டமெடுத் தொளிந்து வாழும்
பேடிநிலை, பேய்,பூதம், பிசாசு போன்ற
வெறும்எண்ணத் தோற்றத்திற் கெல்லாம் அஞ்சி
வீழடிமை நிலைபோக்கத் திட்டமிட்டான்.
வாக்கினிலே உறுதியில்லை, செய்கை தன்னில்
வலிவில்லை, மாற்றானை எதிர்த்தொ ழிக்க
ஊக்கமில்லை, ஒற்றுமையோ சற்று மில்லை,
உயிரடிமை ஆய்விட்டார் எனினு மிங்கே.
மேற்குதனைத் தொழுபவரும் கிழக்கு நோக்கி
மெய்வணக்கம் செய்பவரும் உரிமை போன
தாக்குமெனத் தமக்குள்ளே தாக்கி மாய்வார்
தம்மடிமை நிலைபோக்க நினைக்க மாட்டார் !
கவிதையினாற் செந்தமிழிற் புரட்சி சேர்த்த
கவியரசன் பாரதியின் கருத்தில் இந்தச்
சுவையற்ற வாழ்க்கைநிலை போக்கும் எண்ணம்
தோன்றியதே நொடிதோறும் தோன்றி யிந்தக்
கவைக்குதவா வாழ்வுதனை மாற்ற உன்றன்
கவிதையினைப் பயன்படுத்து கவின்சேர் வாழ்வைப்
புவியிலுன்றன் தாய்நாடும் பெற்று வாழ்ந்து,
புதுநலத்தைச் சுவைக்குமெனக் கூறிற் றாமே !
முன்னாளில் ஒருபுலவர் கடவுள் பேரில்
முழநீளம் பாட்டெழுதிக் காம எண்ணம்
தன்னையங்குப் பொழிந்திருப்பார் மீண்டும் அந்தத்
தனிக்கடவுள் தனைநோக்கி ஒருவர் சொல்வார்
என்னேஇவ் வாழ்க்கைபெரும் மாய மென்றே
இன்னொருவர் கடவுள்களின் லீலை யெல்லாம்
தன்னேரில் லாதசெந் தமிழிற் பாடித்
தாம்பெரிய புலவரெனத் தருக்கிக் கொள்வார் !
ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சி தன்னை
உணர்த்துகின்ற கண்ணாடி இலக்கி யந்தான்
பெரும்புலவர் பலருமிதை மறந்தார். ஈசன்
பெருமைகளைப் பாடுவதே தொழிலாய்க் கொண்டார்.
அரும்புலவன் பாரதிதான் பிறந்த நாட்டின்
அவலநிலை சித்திரித்தான் இடித்துக் காட்டித்
“திருநாடே விழித்திடுக” எனும்பு ரட்சித்
தேன்மொழியைச் செவிகுளிரப் பாய்ச்சி விட்டான்.
உழக்குக்குள் கிழக்கென்ற வாறே யிங்கே
ஊரெல்லாம் வெள்ளையருக் கடிமை யான
இழுக்கிருக்கும் போதுயர்ந்த சாதி என்னும்
இறுமாப்பும் நிலைத்ததுவே சிலரி டத்தில்.
முழக்கினார் “இழிசாதி மக்கள் எங்கும்
முன்வரக்கூ டாதென்றே!” எதிர்மு ழக்கம்
முழக்கினான் பாரதிதான் ‘இந்த நாட்டின்
முடிமன்னர் யாவருங்காண்’ என்று ரைத்தே !
பாரதிதன் தாய்நாட்டின் மீது வைத்த
பற்றிற்கோர் எடுத்துக்காட் டுரைப்பேன் கேளீர்!
“சீரியஎன் தமிழ்நாட்டுப் பெண்ணைத் தோற்கச்
செய்யும் அழ குடையாள் இன் னெருத்தி யென்று
கூறிடினும் உளம்பொறுப்ப தில்லை” யென்று
கூறினன் உயர்கவிஞன் அவனே யன்ருே ?
கூறியதும் வீறுதனை உளப்ப டுத்தும்
கொள்கையின லன்ருேசெந் தமிழ்நாட் டாரே !
உரிமையினை முழுமையுற அடைய வேண்டின்
உணர்வடைய வேண்டுமிந்த காட்டு மக்கள்
சரியான உணர்வுபெற வேண்டு மென்ருல்
சற்றேனும் மடமையச்சம் கூடா தன்றோ ?”
புரிந்துகொண்டான் பாரதிதான் அச்சந் தானே
போக்கற்ற அடிமைநிலை சேர்க்கு மென்றே !
வரிந்துகட்டிக் கொண்டடிமை நிலைமை போக்க
வாழ்நாளைச் செலவிட்டான் புரட்சி வேந்தன்!
வாழ்நாளின் பாரதியை இழந்து விட்டோம்
வந்துவிட்டான் நம்முளமாம் மண்ட பத்தில்
வாழ்கின்றன் வீரத்தை வெற்றி தன்னை
வாழ்வுரிமை யத்தனையும் அடைந்த நெஞ்சில்
வாழ்கின்றன் ! அவன் உயர்வை எண்ணி யெண்ணி
மகிழ்கின்ற பெருமக்கள் உள்ளந் தன்னில்
வாழ்கின்றன் ! பாரதிதான் சாக வில்லை!
வாழ்கின்றன்! வாழ்கின்ருன்! வாழ்க நன்றே !



