

ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை
புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றி, விதமான தமிழ் நடைகள் விரிந்து வருவது மிகவும் விரும்பத் தகுந்த விளைவு. நாளுக்கு நாள் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது. அதற்குக் காரணம் பாமர மக்களிடையிலும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் படிக் கிறவர்களுடைய தொகை பெருத்து வரு வதாக இருக்கலாம். எழுத்துக்களின் இனங்களைப் பிரித்து அறிந்து பெருமை காணக்கூடிய திறமையும் வாசகர்களிடையே வளர்ந்திருக்கிறது. அந்த அறிவு பெண் மக்களிடையேயும் பெருகியிருப்பது பெருமை தரக்கூடியது. அதனால் தினுசு தினுசான எழுத்தாளர்களுக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. சஞ்சிகைகளும் அதிகமாக சஞ்சரிக்கின் றன. அச்சடிப்போரும் வெளியிடுவோரும் பற்பல நூதனமான வண்ணங்களை நுழைத்து வருகிறார்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் இவற்றுக்கு அவசியமான எழுத்தாளர்களோடு கூடவே சித்திரக்காரர்களும் சிறப்படைந்து வருகிறார்கள். போட்டோ கிராவ்’ வேலையும் ‘ப்ளாக்’ செய்யும் வேலையும் எழுத்தாளர் வேலைக்கு ஏற்றமுண்டாக்கி அதனால் தாமும் வளர்ச்சியடைகின்றன. இவைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் போது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பாக வசன நடை வளர்ச்சிக்கு நல்ல காலம் வந்திருக்கிற தென்றே நம்பலாம்.
எழுத்தாளர் என்று சொல்லும் போது இயல், இசை, நாடகம் என்ற மூன்று நடைகளையும் எண்ணித்தான் பேசுகின்றோம். இந்த மூன்றில் எந்த நடைக்கானாலும் கல்வியறிவும் கற்பனா சக்தியும் கலைத் திறமும் அவசியம். நாடக இலக்கியம் நடிப்புக்கென்றே எழுதப்படுவதாகையால் தினசரி வாழ்க்கையில் எடுத்தாளப்படுவதில்லை. ‘இயல்’ விரிவான எழுத்தானதால் அதிலுள்ள கற்பனைக் கலைத் திறத்தை பல பக்கங்களைப் படித்துக் கூட்டினால்தான் பார்க்க முடியும். அதனால் அதையும் தினசரிப் பேச்சுகளில் எடுத்தாள இயலுவதில்லை. இசை செய்யுள் வடிவமாக ஜீவசத்துக் குளிகைகள் போல (வைடமைன் பில்ஸ்) சுருக்கமாக இருப்பதால் சுலபமாக மேற்கோளாக எடுத்தாள இசைகின்றது. அத்துடன் மற்ற இரண்டு நடைகளிலும் இல்லாத சங்கீத இன்பமும் இசையில் இருப்பதால் அதை மற்ற இரண்டிலும் உயர்ந்ததாக உலகம் மதிக்கிறது. எனினும் இந்த மூன்று நடைகளையும் வெற்றிகரமாக எழுதத் தெரிவதற்கு மூல காரணமாகிய திறமை ஒன்றேதான்.
எந்த மொழியிலானாலும் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள எழுத்தாளர்கள் தான் மக்களின் அறிவை வளர்க்கும் சக்திகள் ; அன்பைப் பெருக்கும் ஆற் றல்கள்; உணர்ச்சிகளுக்கு ஊற்றுக் கண்கள்; அமைதியைக் கொடுக்கும் அரண்கள்; சட்டதிட்டங்களைச் சரிப்படுத்தும் சம்மட்டிகள்; சீர்திருத்தங் களுக்குச் சேவகர்கள்; கல்விக்கும் கலைகளுக்கும் காப்பாளர்; மரபைக் காக்கும் மன்னவர்கள்; பண்பைப் பயிர் செய்யும் பாட்டாளிகள்; வாழ்க்கைக்கு வழிகாட்டிகள் ; அரசியலுக்கு அமைச்சர்கள்; எழுத்தாளர்களுக்கு எல்லா வல்லமையும் உண்டு. எல்லா எழுத்தாளர்களும் ஒரு மனப் பட்டு விட்டால் அங்கே எல்லாம் வல்ல இறைவனைக் காணலாம். மனித வர்க்கத்தின் நலன்களை ஆக்கவும் காக்கவும் அழிக்க வும் அவர்களிடத்தில் ஆற்றல் உண்டு. நீண்டகால எழுத்தாளர்களை நீக்கிவிட்டு தினசரி எழுத்தாளர்கள் மட்டும் சேர்ந்து விட்டால் நொடிப்பொழுதில் ஒரு நல்ல காரியத்தைக் கெடுத்துவிடலாம். கெட்ட காரியத்துக்கும் கீர்த்தி உண்டாக்கி விடலாம். ஆக்க வேலையைக் காட்டிலும் அழிவு வேலையை வெகு சுலபமாகச் செய்துவிடலாம். நீண்ட காலத்துக்கு உதவக் கூடிய இலக்கியங்களை எழுதுகிறவர்களிடத்தும் இந்த வேலை உண்டு. ஆனால் அதன் பலன்களை இப்படி உட னுக்குடன் காண முடியாது. அவை ‘ஹிட்லர்’ எழுதிய ‘மீன் காம்ப்’ போல நிதானமாக நிலை குலைக்கும். எழுத்தாளர்களுக்குள்ள இந்த சக்திகளைக் கண்டுதான் ‘வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையுடையது’ என்று சொன்னார்கள்.
ஆதலால் எழுத்தாளர்களின் பொறுப்புகள் எண்ணிக்கை யற்றவை. கடமைகளும் கணக்கற்றவை.
எழுதுவதும் மற்ற எல்லாக் கலைகளையும் போலவே மனிதனைச் செயலுக்குத் தூண்டிவிடக் கூடிய ஒரு கலை. இன்னது செய் என்று குறிப்பாக ஒரு செயலையும் சொல்லாமல் வெறும் பொழுதுபோக்குப் படிப்பிற்கென்று எழுதப் படுகிறவைகளிலும் உணர்ச்சியைக் கிளப்பிச் செயலுக்கு ஊக்கிவிடக் கூடிய சூழ்நிலைகள் நம்மை அறியாமலேயும் அமைகின்றன. பெரும்பாலும் எழுத்துக்கள் செயலைத் தூண்டத்தான் செய்யப்படுகின்றன. அவற்றில் கலைத் திறம் எவ்வளவு கலந்திருக்கின்றதோ அவ்வளவு செயலும் நிகழும். எல்லாக் கலைகளும் அப்படித்தான். ஆனால் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு கலை களை வெவ்வேறு காரியங்களுக்காகப் பிரயோகப்படுத்தி யிருக்கிறார்கள்.
உதாரணமாக, சங்கீதக் கலையை எடுத்துக் கொள்வோம். சங்கீதத்தை எந்த சாகித்யத்தோடு சேர்க்கிறோமோ அந்த சாகியத்திலுள்ள செயலை அல்லது குணத்தை அது தூண்டுகின்றது.
இங்கிலாந்தில் இந்த சங்கீதம் நெடு நாளாக பிரிட்டானியா கடலை அலை ஆள்கின்றது. கடவுள் நம் அரசனைக் காப்பாராக’ பிரிட்டிஷ் மனம் போருக்குப் புறங்கொடுக்காது’ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை ‘ என்பன போன்ற கருத்துக்கள் அடங்கிய சாகித் தியங்களுடன்தான் பெரும்பாலும் சம்பந்தப்படுத்தப்பட்டு ஏகாதிபத்திய எண் ணத்தையும் ராஜ விசுவாசத்தையும் போர் வெறியையும் புகட்டுவதற்கே துணையாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதே சங்கீதம் ஜெர்மனியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அடியோடு வீழ்த்தி ஜெர்மன் ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இச்சையைப் பரப்பக்கூடிய சாகித்தியங்களிலேயே இணைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பது பிரசித்த விஷயம்.
பின்னும் அதே சங்கீதத்தை ஜப்பானில் அந்த நாட்டின் சக்ரவர்த்தி கடவுளின் வடிவமென்றும், அவரைத் தவிர வழிபட வேண்டிய தெய்வம் வேறு இல்லையென்றும் அந்த மன்னனுக்காக உயிரைக் கொடுப்பதே உத்தம தர்மமென்றும் உபதேசிக்கக் கூடிய சாகித்தியங்களுடன் தான் உறவு இருந்து கொண்டு வந்திருக்கிறது.
இப்படியே மற்ற நாடுகளிலும் பிரான்சில் சிற்றின்ப நுகர்ச்சிகளையும் அமெரிக்காவில் செல்வ வளர்ச்சியையும் குறியாகக் கொண்ட சாகித்தியங்களோடுதான் சங்கீதம் நுழைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்திய நாட்டில் சிறப்பாக நம் தெய்வத் தமிழ் நாட்டில் இசைக்கலை ஏற்பட்ட நாளாகச் சங்கீதத்தைக் கடவுள், அன்பு, கருணை என்பவற்றுடன் மட்டும்தான் இசைத்திருக்கிறார்கள். கடவுளுக்கென்று கட்டப்பட்ட கோயில்களி லெல்லாம் தமிழர்கள் கலைகளையும் சேர்த்து வைத்துத்தான் கடவுளை வழிபட்டார்கள்.
ஏனைய நாடுகளில் கலைகளை எப்படி உபயோகப்படுத்தி யிருந்தாலும் தமிழ் நாட்டில் எல்லாக் கலைகளும் இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் கோயில் என்ற ஒரு எண்ணத்தையே வெவ்வேறு வழிகளில் இடைவிடாது பரப்பிச் சமூக வாழ்வின் சமாதானம் ஒன்றுக்காகவே உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கின் றன. இதுதான் தமிழ் மரபு.
மற்றக் கலைகளை ஒருபுறம் ஒதுக்கி விட்டு எழுத்துக் கலையை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த மரபைப் பாருங்கள். இலக்கியமென்று நாமறிந்து தமிழ் எழுத்துக்களில், சங்க காலத்து இலக்கியங்கள் ஆதியாக சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் அந்தமாக எல்லா எழுத்தாளர்களும் இந்த மரபில் ஒளி மங்காதிருக்க ச் செய்திருக்கிறார்கள். அதுதான் தமிழ் எழுத்துக் கலையின் தனிச் சிறப்பு. அந்த மரபுக்கு மாறுபட்ட எந்த எழுத்தும், அது தமிழ் மொழியில் இருந்தாலும் தமிழ்க் கலையில் இருக்காது. இந்த இடத்தில்,நான் இந்த மரபுகளில் தீயனவற்றையும் மாற் றிக்கொள்ள மறுப்பதாக மதித்துவிடக் கூடாது. ‘தமிழ் மரபு’ என்று சொல் லுகிறபோது தமிழ் நாட்டில் உள்ள தீய வழக்கங்களை மனதில் கொண்டு விடக்கூடாது. தீய வழக்கங்களைத் தீர்த் தொழிக்கவேதான் நாமெல்லாம் கங் கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதைப் பற்றிச்சிறிதும் ஐயமில்லை.
தமிழ் மரபு என்பதால் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் தனிமை காட்டக் கூடிய நல்ல குணங்களைக் காட்டும் நல்ல மரபைத்தான் குறிக்கிறேன்.
மனிதனுக்கு மனிதன் எப்படி முக வித்தியாசங்கள் இருக்கின்றனவோ அப்படியே இனம், நிறம், ஜாதி, மதம் மொழி, நாடு, பழக்கவழக்கம் முதலிய வைகளில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், ‘பூமியில் உள்ள எல்லா மனிதர்களும் சமம்’ மனிதனுடைய சுக துக்கங்கள் எங்கு எவர்க்கும், ஒரே மாதிரிதான் என்ற சமதர்மத்தைக் குறைந்தபட்சமாகச் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே அறிந்து இன்றளவும் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்திருக்கிறவர்கள் தமிழர்கள். இதுதான் தமிழ் மரபு விடாத தமிழ் வாழ்க்கை.
இரண்டு மகா யுத்தங்கள் அடுத்தடுத்து நடந்து, எல்லா நாடுகளிலும் எண்ணத் தொலையாத உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் செய்து மிஞ்சியுள்ள மக்களுக்கும் மிதமிஞ்சிய இன்னல்களை உண்டாக்கிக் கடைசியாக அணுகுண்டு தோன்றி, ‘மனிதரை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே சாம்பலாக்கி விடுவேன் என்று பயமுறுத்திய பிறகுதான் எல்லா நிறங்களும், எல்லா மதங்களும், எல்லா நாட்டு மக்களும் சமம்’ என்ற உணர்ச்சி ஏனைய நாடுகளில் உண்டாகியிருக்கிறது. அதற்காகவே உலகத்திலுள்ள அரசியல் அறிவாளிகளெல்லாம் ஒன்று கூடி, ஐக்கிய நாடுகள் என்ற சங்கத்தை நிறுவி, இந்த சமத்துவ உணர்ச்சியைப் பலப் படுத்தி, உலக சமாதானத்தைப் பாதுகாக்க, உலகத்துக்கே ஒரு பொதுப் பஞ்சாயத்து அரசாங்கத்தை உண்டு பண்ண உழைக்கிறார்கள்.
எண்ணவும், எழுதவும், பேசவும் தெரிந்த எல்லாருக்கும் இப்போது முன்னால் நின்று முறைக்கின்ற பிரச்னை இதுதான். இந்த உலக சமாதானத் துக்கு ஒரு சிறிதும் உதவியற்றதாகி, உள்நாட்டு சமாதானத்தையும் கெடுத்து தமிழின் மரபை மறந்து, தமிழர்களுக்குள் பிளவுண்டாக்கி, நல்லவர்கள் மனதைக் கலக்கி, நாட்டின் பொதுநலத்தை விலக்கிவரும் சில விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வருவதே என் நோக்கம்.
நேயர்களின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று நான் கருதுகின்ற சில விஷயங்கள் தமிழ் மொழியின் பிறப்பு, அதன் வளர்ச்சி, தமிழின் தனிமை, தமிழும் ஆரியமும், ஆரியர் – திராவிடர், தமிழ் நாடு, தமிழ் அரசு, தமிழ்ப் பண்பு என்பன.
இவற்றுள் அபிப்பிராய பேதத்துக்கு இடமே இல்லாத உண்மைகளைப் பற்றியும் புதுப்புது அபிப்பிராய வேற்றுமைகளை வேண்டுமென்று கற்பனையாகப் புகுத்தித் தமிழ்மக்களின் மரபையும் மனசையும், மாண்பையும் கெடுக்க முயலும் தீங்கு தரும் பிரசாரங்களைத் தீர விசாரிக்க வேண்டும். இந்தத் தீங்கு தரும் பிரசாரத்தைச் செய்கிறவர்கள் எல்லாரும் தீயவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் மிகவும் நல்லவர்களும் உண்மைகளைத் திரிபாகத் தீர்மானித்துக் கொண்டு தெரியாமலேயே தீங்கு செய்து விடலாம்.



