ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை

தமிழ் அரசு

தமிழ் நாட்டில் நடக்கப் போகிற தமிழ் மாகாண அரசாட்சி தமிழை அரசாங்க மொழியாகக் கொண்டு தமிழ் மரபும் தமிழ்ப் பண்பும் தவறாத முறையில் நடத்தப்படுகிற ஒரு ஜனநாயக பஞ்சாயத்தாகத் தான் இருக்க வேண்டும். இந்த ஒரு ஜன நாயகப் பஞ்சாயத்து முறைதான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடந்தது. அவர்களுக்குச் சில தனி அதிகாரங்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் தினசரி நடப்பு அதிகாரங்கள் முற்றிலும் ‘ஐங்குழு’ என்ற பஞ்சாயத்துக்களிடத்தில் இருந்தது.இதைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் இருக்கின்றன. இந்த ஐங்குழு பஞ்சாயத்து முறையைத் தான் மகாத்மா காந்தியும் ஆதரிக்கிறார். ‘காந்தீய அரசியல்’ என்று அகர்வால் எழுதிய நூலிலும் இந்த தமிழ் நாட்டு முறையைக் குறிப்பாகச் சொல்லுகிறார்.

சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்த அரசியல் முறைகளை யும், அதனால் மக்களுக்குள் இருந்த அமைதியையும். அப்போது வளர்ந்த கலைகளையும், அதனால் விரிந்த நாகரிகத்தையும் புகழ்ந்து பல ஐரோப்பிய எழுத்தாளர்கள் விதம் விதமாக வியந்து எழுதியிருக்கிறார்கள்.

அப்படி அன்னிய நாட்டு அறிஞர்களாலும் புகழப் படுகிற அந்த மூவேந்தர் பெரும் புகழை நாம் பேசுகின்றோம், ஆனால் அவர்கள் அருங்குணத்தில் கூசுகின்றோம்; அவர்கள் வீரத்தை வாழ்த்துகின்றோம். ஆனால் அதன் சுகத்தைத் தாழ்த்துகின்றோம்; அவர்கள் விட்டு வைத்த சரித்திரத்தில் களிக்கின்றோம், ஆனால் அவர்கள் கட்டிவைத்த கோயில்களைப் பழிக்கின்றோம்; அவர்கள் போர்த் திறத்தைச் சொல்லி நித்தம் கதைக்கின்றோம், ஆனால் அவர்கள் சேர்த்துவைத்த நல்லறிவைச் சிதைக்கின்றோம்; அவர்கள் மாட்சிமிக்க அரசியலில் மலைக்கின்றோம், ஆனால் அவர்கள் ஆட்சி கண்ட அமைதிகளைக் குலைக்கின்றோம்; அவர்கள் செய்யாததில்லை என்று மகிழ்கின்றோம். ஆனால் அவர்கள் செய்து வைத்த இலக்கியத்தை இகழ்கின்றோம். அவர்கள் நீதி நெறி முறைமைகளை வந்தித்தோம், ஆனால் அவர்கள் ஆதரித்த புலவர்களை நிந்தித்தோம்; மாண்டு போன அம் மன்னர்களுக்காகக் கண்ணீர் விடுகிறோம்; ஆனால் மாளாதிருக்கும் அவர்கள் அறப் பயிர்களுக்கு வெந்நீர் விடுகிறோம்; அவர்களுடைய புறச் சின்னங்களாகிய வில், மீன், புலிக் கொடிகளை ஏற்றுகின்றோம், ஆனால் அவர்களுடைய அகச் சின்னங்களாகிய அன்பு தெய்வம் அறங்களைத் தூற்றுகின்றோம். களையெடுக்க எண்ணி முளையெடுக்க முனைந்து விட் டோம். சீர் திருத்தம் பேசி வேர் பறித்தல் செய்கிறோம். சமாதானம் காட்டி சண்டைகளை மூட்டுகின்றோம். ஒற்று மையைக் கூறி வேற்றுமைகளை விரிவாக்குகிறோம்; அன்பென்று பேணி வம்புகளை வளர்க்கிறோம். அறமென்று நினைத்து மறங்களிலே மனம் செலுத்துகிறோம்.

தமிழ் நாடு தனி மாகாணமாகி, தமிழ் மக்கள் தனி அரசு கொண்டு, தமிழ் மொழி ஆட்சி புரிய வேண்டுமானால் சேரனும் சோழனும் பாண்டிய னும் காட்டிய செந் நெறிகளில் செல்ல வேண்டும். அவர்கள் விட்டுப் போன அறங்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் போற்றி வைத்த இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் நல்லுணர்ச்சிகள் நம்மதாக வேண்டும். அப்போது தான் சேரன் செய்தது போல வடநாட் டையும் வணங்க வைக்க முடியும். அப் போது தான் பாண்டியனைப் போல சங்கம் வளர்க்க முடியும். அப்போது தான் சோழன் கட்டி வைத்த பெரிய கோயிலைப் போன்ற அரிய வேலையை ஆற்ற முடியும். அப்போது தான் நெற்றிக் கண்ணுக்கும் அஞ்சாது குற்றம் கடிந்த நக்கீரனைக் காண முடியும். அப்போதுதான் கொடுங்கோலை வீழ்த்திய கண்ணகி போன்ற பத்தினிக் கடவுளரைப் பார்க்க முடியும். அப்போது தான் இளங்கோவைப் போன்ற எழுத்தாளர்கள் உதிப்பார்கள். திருவள்ளு வரைப் போன்ற மகாத்மாக்கள் தோன்றுவார்கள். கம்பனைப் போன்ற கவிஞன் பிறப்பான். அப்போதுதான் பல பாஷைகளில் வல்லவனாகி, பத்தே நாளில் பிற மொழியில் பண்டிதனாகி வாதுக்கு வந்தவர்களை வணங்கச் செய்து வட நாட்டு மன்னனிடம் வரிசைகள் பெற்ற குமர குருபரரைப் போன்ற தமிழறிஞர்களைக் காணலாம்.

அதை யெல்லாம் விட்டு விட்டு, அணுகுண்டை வீசி உலகத்தை அழிக்கப் பார்க்கிற ஐரோப்பிய அநாகரிகங்களில் மோகங்கொண்டு தெய்வ நிந்தனைகள் பேசித் திரிவதற்குத் தமிழ் நாட் டில் தமிழரசு வந்தாலென்ன, இங்கிலீஷ் அரசே இருந்தால்தானென்ன?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *