ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை

தமிழும் ஆரியமும்

தமிழும் வட மொழியும் தனித்தனி மொழிகளாக இருந்திருக்கின்றன என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் தமிழில் சம்ஸ்கிருதம் எப்போது கலந்ததென்று எவராலும் சொல்ல முடியாது. வடமொழியிலுள்ள இலக்கணக் குறைவு தமிழில் கலக்கக் கூடாதென்றே வடமொழி இலக்கணத்தை நன்றாக அறிந்த தொல்காப்பியனார் எல்லா விதத்திலும் வடமொழி இலக்கணத்துக்கு முற்றிலும் வேறான இலக்கணத்தைத் தமிழுக்குச் செய்ததாகத் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் பாடின பனம்பறனார்.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை
தமிழ் கூறும் நல்லுலகத்து மயங்கா
மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படாமை யோனே!”

என்று பாடியுள்ளார். இதில் கூறப்படும் ‘ஐந்திரம்’ என்பது இந்திரனால் செய்யப்பட்டதாகச் சொல்லுகிற ஒரு சம்ஸ்கிருத இலக்கண நூல். இதில் ஐந்திரம் என்னும் இலக்கணத்தை நன்றாக அறிந்த தொல்காப்பியர் தமிழுக்கு மயங்கா மரபின் எழுத்து முறை காட்டினான் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இப்படித் தனி இலக்கணத்தோடு திகழ்ந்த தமிழில் எப்போது வடமொழி கலந்தது என்று சொல்ல முடியவில்லை. இது எதனால் என்றால், வடமொழி கலவாத் தமிழ் இலக்கியம் என்று சொல்லப்படுகிற புறநானூறு ; என்ற நூலுக்கு முன்னாலேயே தமிழ் மக்களுள் வடமொழி சம்பந்தங்கள் வந்துவிட்டதாக நிச்சயமாகத் தெரிகிறது. எப்படியென் றால் ‘புறநானூறு என்ற நூலில் உள்ள சில தமிழ்ப் புலவர்களின் பெயர்களையும் அரசர்களின் பெயர்களையும் பாருங்கள்

புலவர்கள்: (1) பிரமர் (2) பெருந்தேவனார் (3) பெருஞ் சித்திரனார் (4) பெரும்பதுமனார் (5) மார்க் கண்டேயனார் (6) வான்மீகியார்

அரசர்கள்: (1) தரும புத்திரன் (2) சோழன் நல்லுருத்திரன் (3) பாண்டியன் பலியாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி- என்பன.

இந்தப் பெயர்கள் ‘புறநானூ’றி லுள்ள செய்யுள்களைச் செய்த புலவர்களுடைய பெயர்கள்தான் என்றாலும் இந்தப் பெயர்கள் எல்லாம் வடமொழி சம்பந்தமுடையனவாக இருக்கின்றன. எனவே இவர்கள் காலத்துக்கு முன்னாலேயே வடமொழிப் பெயர்கள் வழக்கத் துக்கு வந்துவிட்டதை இது காட்டுகிறது. போப் துரையும் கால்ட்வெல் துரையும் சுத்தமான தமிழ் எழுதியிருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் இருவரும் ஆங்கில சம்பந்த முள்ளவர்கள் என்பதை அவர்களுடைய பெயர்களே காட்டவில்லையா? அதைப் போலத்தான்.

ஆகையினால் ‘புறநானூறு’ காலத் துக்கு மூன்னாலும், தொல்காப்பியர் காலம் என்று மதிக்கப்படுகிற நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட மொழி சம்பந்தம் தமிழுக்கு வந்து விட்டது கண்கூடாகத் தெரிகிறது.

இனி வடமொழிப் பதங்களும் அப்பதங்களைக் காட்டிலும் வடமொழிக் கருத்துக்களும் தமிழில் கலந்ததை கவனிப்போம்.

தமிழுக்குத் தலைசிறந்த நூல்களுள் முதன்மை பெற்ற திருக்குறளில் ‘அகரம் முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற முதற் குறளில் ஆதி ‘பகவன்’ என்பதில் வடமொழிப் பதங்கள் கலந்திருப்பது மட்டுமல்லாமல் பின்னாலுள்ள குறள்களில் வடமொழிக் கருத்துக்களும் கதைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ‘இந்திரனே சாலும் கரி’ என்று சொல்லுகிறார், ‘மடியிலா மன்னன் எய்தும் அடியளந்தான் தா அயது எல்லாம் ஒருங்கு’ என்னும் குறளில் அடியளந்தான்’ என்பது மூன்றடி மண் கேட்டு இரண்டே அடியில் மண்ணையும் விண்ணையும் அளந்து விட்ட திருவிக்கிரம நாராயணன் கதை வருகிறது.

காமத்துப்பாலில் ‘தாம் வீழ் வார் மென்தோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு?’ என்று வைகுண்டத்தைப்பற்றிக் குறிப் பிடுகிறார். இது நிற்க.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் என் னும் தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய நூலைப் பார்ப்போம். இது தமிழ் நாட்டு மன்னர்களாகிய சோழன், பாண்டியன், சேரன் என்ற மூவரையும் சம்பந்தப் படுத்தி, அந்த மூன்று தமிழ் நாடுகளிலும் நடந்த ஒரு தமிழ்க் கதையைச் சொல்லுவது. இதை இயற்றியவர் சேர நாட்டு இளவரசனாகிய இளங்கோ வடிகள். இந்த நூலில் வடமொழிப் பதங்கள் சிலவே. ஆனால் இதில் வடமொழிக் கருத்துக்கள் நிரம்ப வந்திருக்கின்றன.

சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம். பல நூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் ‘பத்தினிக் கடவுள்’ என்று பணிந்து வந்திருக்கிற கண்ணகியின் கதையைப் படிக்கத் தெரியாதவர்களும் அறிவார்கள். கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம் பட்டினத்தை விட்டு மதுரைக்கு வந்து மதுரையின் எல்லைப் புறத்திலுள்ள ஆயர்பாடியில் மாரி என்ற மங்கையின் ஆதரவு பெற்று அவள் வீட்டில் தங்குகிறார்கள். மாரியின் மகள் ஐயை என்பவள் கண்ணகிக்கு பணிப் பெண் போல் உதவினாள். அவளுடன் அந்த வீட்டில் கண்ணகியை விட்டு விட்டு கோவலன் சிலம்பு விற்க மதுரைக்குப் போய் விடுகிறான். போன கோவலன் திரும்பி வரவில்லை. மாதரிக்குப் பல கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. ஏதோ உற்பாதம் வரப் போகிறதென்று அஞ்சி ஆயர்கள் கண்ணகியின் நலத்தைக்கோரி மகாவிஷ்ணுவைக் கருதி உற்பாதங்களுக்கு உபசாந்தியாக ‘குரவை’ என்னும் கூத்து நடித்து மாயவனை வணங்குகிறார்கள். அங்கே வருகின்ற சில வரிகளை மட்டும் பாருங்கள்.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்.
கொன்னையஞ் சாரல் குருந்தொசித்தான் மாயவன்கோகுலம் மேய்த்துக் குருந்தோசித்தான் என்பவரால்

என்பன.

பின்னும் கீழே காணப்படும் மூன்று பாட்டுகளையும் முழுசாகப் பாருங்கள்.

மூவுலகு மீரடியால் முறை நிறம்பா வசை முடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியோடுங் கான் போந்து சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே திருமால் சீர்கேளாத செவியென்ன செவியே பெரியவனை மாயவனை பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணைத் திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் ணென்ன கண்ணே மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் பொற்றத் தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்ற நாவென்ன தாவே.

இந்தப் பாட்டுகளால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே வடமொழி இலக்கியங்களான பாரதத்தையும் இராமாயணத்தையும் தமிழர்கள் எவ்வளவு உரிமையோடு எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் இந்தக் கதைகள் இவ்வளவு சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றன என்றால், அந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு எவ்வளவு காலத்துக்கு முன்னாலேயே தமிழர்களுடைய வாழ்வில் இந்தக் கதைகள் கலந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். எந்த ஆரியன் இந்த வடமொழிக் கதைகளை மூட்டை கட்டிக்கொண்டு வந்து தமிழில் புகுத்தியிருக்க முடியும்? தமிழைக் கெடுக்க எண்ணிய இளங்கோவடிகளின் கையைப் பிடித்து இவற்றை எழுதக் கட்டாயப்படுத்தியிருக்க முடியும்? ஆகையால் இந்த ஆரியக் கதைகளை யாரோ வடநாட்டார் வந்து தமிழில் புகுத்தி விட்டார்கள் என்பது வெறும் பொய்.

சிலப்பதிகாரத்தின் காலத் துக்கு வெகு காலம் முந்தினதாகச் சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் நிலப்பரப்பை – முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல்,பாலை என்ற ஐந்து இனங்களாகப் பிரித்து, அவற்றுள் பாலை என் பது மக்களுக்குப் பயனற்றதான வெறும் மணற்பரப்பாக இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற நான்கையும் மட்டும் வசிப்பதற்குத் தகுந்தனவென்று ஒன்று சேர்த்து, நானிலம் – நான்கு நிலங்கள் – என்று தமிழிலக்கியங்களில் உலகம் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலத்திணை வகுப்புத் தமிழுக்கே தனி வழக்கமானது. மற்ற எந்த மொழி இலக்கியத்திலும் இந்தத் திணை வகுப்பைக் காண முடியாது. இந்த நான்கு இனத்துக்கும் வெவ்வேறு வழக்கங்களும், தொழில்களும் தெய்வங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தெய்வங்கள் எல்லாம் வடமொழி சம்பந்தமான தெய்வங்களாகவே இருக்கின்றன. அதன் உண்மையை இந்த நான் நிலங்களின் அதிகாரத் தேவதைகளைக் குறிப்பிடும் முறையில்,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்

என்று தொல்காப்பியம் குறிக்கிறது. இந்தத் தெய்வங்கள் முறையே திருமாலையும், குமரக் கடவுளையும், இந்திரனையும், வருணனையும் குறிப்பன. இவர்கள் நால்வரும் வடமொழியிலுள்ள தெய்வங்கள். இன்றளவும் தமிழ் நாட்டு மக்கள் இந்தத் தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இந்தத் தெய்வங்களை நம் வாழ்க்கையில் சேர்த்துவிட்ட வட நாட்டான் யார்? இப்போது தமிழ் நாட்டின் கோயில்களில் கும்பிடப்பட்டு வரும் இந்தத் தெய்வங்களை யெல்லாம் நீக்கி விட்டால் நமக்கு மிஞ்சுவது வீரன், இருளன், காட்டேரி பாவாடை முதலிய தெய்வங்கள்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *