
ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை
தமிழின் பிறப்பு
தமிழ் மொழியின் துவக்கம் எப்போது என்று எவராலும் சொல்ல இயலவில்லை. அதை அனுமானிக்கக் கூட நமக்கு ஆதாரமில்லை.
ஆனால் தமிழ் மொழியை உண்டாக்கினது யார் என்று சொல்ல முடியாததற்காக, இறைவன் என்ற பொருள் ‘சிவன்’ என்ற பெயரில் அந்தத் தமிழை உண்டாக்கினது என்று மட்டும் சொல்லி வந்தார்கள். இன்ன எழுத்து இன்ன இலக்கணம் என்று சொல்ல முடியாமலிருந்த அந்த மொழியை அகத்தியன் என்பவன் உருப்படியாக்கி இலக்கணம் செய்து வைத்தான் என்று அறிகின்றோம். அகத்தியன் தான் தமிழுக்கு இலக்கணம் செய்தவன் என்பதை நான் சொல்ல முடியாது; அதை அகத்தியன் செய்யவில்லை என்றும் எவரும் சொல்ல முடியாது. ஏனெனில் அது எனக்கும் தெரியாது, அவர்களுக்கும் தெரியாது.
ஆனால், தமிழுக்கு முதல் இலக்கணம் செய்தவன் அகத்தியன் என்று எண்ணிறந்த தமிழ் இலக்கியங்கள் உறுதியாகச் சொல்லுகின்றன. அந்த உண்மையை நெருப்பால் எரிக்க முடியாத, நீரால் நனைக்க முடியாத, காற்றால் அசைக்க முடியாத, மண்ணால் மக்கச் செய்ய முடியாத ஆகாசத்தினாலும் அணுக முடியாத ‘கற்றோர் இதயம்’ என்ற காணாத இடத்தில் வீற்றிருக்கும் கம்பன் தனது ராமாயணத்தில் அகத்தியனைப் பற்றிச் சொல்ல வேண்டிய இடத்தில் ‘நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்! என் றும்’ ‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்’ என்றும் ஏறக் குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லியிருக்கிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த அவன் காணாத உண்மைகளை நாமென்ன கண்டுவிட முடியும்?
கம்பனை விட்டுவிட்டு பாரதியைப் பார்ப்போம். கம்பனையாவது சிலர் கட்சிச் சண்டைக்காக இகழ்ந்து பேசுகிறார்கள். கம்பனை இகழந்து பேசுகிறவர்களும்கூட புதுமைப் புலவனாகிய பாரதியைப் புகழ்ந்தே போற்றுகின்றனர். ஏனெனில் இவர்கள் கட்சிக்குச் சாதகமாக பாரதியார்,
‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, என்றும்
‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னினுடல் வேர்ப்பான்‘
பிள்ளைக்குப் பூணூலாமென்பான் – நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான் பாயும் கடிநாய் போலீசு—காரப் பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு‘-
என்றும் பாடியிருக்கிறார். அப்படிப்பட்ட இந்தத் தலைமுறையின் புலவனாகிய மகாகவி சுப்ரமணிய பாரதி தமிழின் பிறப்பைப் பற்றியும் இந்த அகத்திய னைப் பற்றியும் என்ன சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள்; தமிழ்த் தாய் சொல்லுகிறாள்:
ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்து – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.
தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் என்று மிகத் தெளிவாக பாரதி பாடுகின்றார். தமிழுக்கு இலக்கணம் செய்தவன் ‘ஆரிய மைந்தன்’ என்று பாரதி வாழ்த்துகிறாரே – என்று பாரதியாரையும் இகழலாம்.
பாரதியாரை இகழ்ந்து பேசுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடுவது குற்றமாகாது. ஒருவர் சொன்னார்: “பாரதியை நான் நேரில் கண்டால் என்ன செய்வேன் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, அவர் என்ன செய்வார் என்பதையும் சொன் னார்.
ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கிருப்பவ ரன்றோ’ என்று பறையர்களை ஈனப் பறையர்கள்’ என்று இகழ்ந்து கூறுகிறாரே பாரதி, என்ன திமிர்?’ என்றார்.
பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதை எண்ணி அப்படிச் சொன்னாரோ அல்லது பறையர்கள் எனப்படும் ஹரி ஜனங்களைத் தன்னுடைய கட்சிக்கு வசப்படுத்தச் சொன்னாரோ தெரியவில்லை. எதை எண்ணிச் சொல்லி யிருந்தாலும் அந்த மனிதர் மிகவும் பரிதப்பிக்கத் தகுந்தவர். நல்ல மனிதர்களும் தீங்கு தரும் பிரசாரத்தைச் செய்து விடக் கூடும் என்பதற்கு ஒரு திருஷ்டாந்தம். அது போகட்டும்.
தமிழ் மொழியின் பிறப்பைத் தொடர்வோம். தமிழுக்கு ஆதி இலக் கணம் செய்தவன் என்ற அகத்தியனுடைய காலத்தை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. அனுமானிக்கக் கூட ஆராய்ச்சிக்காரர்களுக்கு ஆதாரம் கிடைக்கவில்லை. அன்றியும் தமி ழுக்கு முதல் இலக்கணம் தந்தவன் அகத்தியன் என்பது மட்டுந்தான் தெரிகிறதே ஒழிய அந்த இலக்கணமும் நமக் குக் கிடைக்கவில்லை.
எனினும் பாரதியும் அவருக்கு முன்னாலிருந்த எழுத்தாளர்களும் அகத்தியன்தான் தமிழுக்கு ஆதி இலக்கணம் செய்ததாக ஐயம் திரிபு இல்லாமல் நம்பி வந்திருக்கிறார்கள்.
அகத்தியருக்குப் பிறகு தொல்காப்பியர் என்பவர் ‘தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கணத்தைச் செய்தார். இந்தத் தொல்காப்பியம் அகத்தியரைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கருதப்படுவதால் இது அகத்தியத்தின் பிற் காலப் பிரதி என்றே பல அறிஞர்கள் எண்ணுகின்றார்கள். தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் தமிழுக்கு இன்றளவும் கிடைத்துள்ள ஒரே இலக்கணமாகிய தொல்காப்பியத்தைச் செய்தவரைப் பற்றித் தமிழுக்கு இலக்கணம் செய்தவராகச் சொல்லப் படவில்லை. இந்தத் தொல்காப்பியம் அகத்தியத்திலிருந்து எழுதப்பட்டது தான் என்ற காரணத்தாலோ என்னவோ தொல்காப்பியரை தமிழுக்கு இலக்கணம் செய்தவராகச் சொல்ல வில்லை போலும். இந்தத் தொல்காப் பியம் அகத்தியத்தை ஒட்டினதோ அல்லது அதனின்று வேறாக தொல்காப்பியர் சொந்தமாகத் தோற்றுவித்ததோ எப்படியிருந்தாலும் தமிழ் மொழிக்கு உருப்படியாகக் கிடைத்த முதல் இலக்க ணம் தொல்காப்பியம்தான். அதைத் தான் இன்றளவும் தமிழ் இலக்கண மாகப் போற்றி வருகிறோம். அது தமிழ் மொழிக்கு மட்டும் இலக்கணமல்ல; தமிழர்களின் வாழ்க்கையின் சரித்திரத்துக்கே இலக்கணம்.
இந்தத் தொல்காப்பியம் எந்தக் காலத்தில் ஏற்பட்டது என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. பல ஆராய்ச்சிக்காரர்கள் பலவிதமான முடிவுகளைக் காட்டுகிறார்கள். சிலர் இந்தத் தொல்காப்பியம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டானது என்று எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆராய்ச்சிக்காரர்கள் அதைவிடக் குறைவாகத் தான் சொல்லுகிறார்கள். இதைப் பற்றிய எல்லா ஆராய்ச்சிக் காரர்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பது சரியல்ல. ஆனால் இதைப்பற்றி வெகு பாடுபட்டு ஆராய்ந்து மிக நுட்பமான ஆதாரங்களைக் காட்டி எழுதியிருக்கிற கடைசி எழுத்தாளர் உயர்திரு கா.சுப்ரமணியப் பிள்ளை அவர்கள், எம்.ஏ., எம்.எல்.இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர். ‘தாகூர் ஞாபகார்த்தப் பரிசு’ என்று சட்ட விரிவுரைப் போட்டியில் கல்கத்தா சர்வகலா சாலையில் ரூபாய் ஆறாயிரம் பரிசு பெற்றவர். இவர் தமது ஆராய்ச்சியில் தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து என்ற நூலில் தொல்காப்பியருடைய காலம் குறைந்தது நாலாயிரத்து நானூறு வருஷங்களுக்கு முற்பட்டது என்று நிச்சயிக்கிறார்.
அந்த நூலை எல்லாரும் படித்துப் பார்ப்பது நல்லது. இவர் சொல்லுகிற நாலாயிரத்து நானூறு ஆண்டுகள்தான் சரியென்று நான் சொல்ல வரவில்லை. ஏனெனில், எல்லா ஆராய்ச்சிகளிலும் அனுமானங்கள் தான் அதிகம். தொல் காப்பியத்தின் உண்மையான இதற்குக் குறைவாகவு மிருக்கலாம்;கூடுதலாகவும் இருக்கலாம். வருஷக் கணக்கு எதுவாக இருந்தாலும் இந்தத் தொல் காப்பியமே அதன் பெயர் குறிக்கிற மாதிரி மிகப் பழைய இலக்கியம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்த அகத்தியனும் தொல்காப்பியனும் ஆரியர்கள் என்று அனுமானித்துக்கொண்டு, இப்போது அரசியல் கட்சிச் சண்டைகளால் அதிகப்பட்டி ருக்கிற ஆரிய திராவிட நிபந்தனைகளை அவர்கள் தலையிலும் போட்டு அவ்விரு வரும் தமிழைக் கெடுத்து விட்டவர்கள் என்ற அபாண்டத்தால் தமிழ்மொழியின் பெருமைக்குச் செய்யப்பட்டு வரும் அநியாயத்தையும் அகற்ற வேண்டும். பிறமொழி அறிவு கொஞ்சமாவது உள்ளவர்கள் அப்படிப் பேசமாட்டார்கள். ஏன் எனில் ஆரியமொழி என்று சொல் லப்படுகிற (சம்ஸ்கிருதம்) வடமொழியின் இலக்கணத்தையும் இந்தத் தொல் காப்பியத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழி இலக்கணத்தின் வாடை கூடத் தொல்காப்பியத்தில் இல்லை. அப்படியிருக்க வடமொழியைத் தமிழில் புகுத்தி அகத்தியரும் தொல்காப்பியரும் தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்பது அறிவின்மை.



