ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை

தனித் தமிழ்

தமிழில் பிறமொழிப் பதங்கள் கலவாமல் தமிழ் தனியாக வழங்கப்பட வேண்டும் என்று பல நல்ல படிப்பாளிகளும் விரும்புகிறார்கள். அந்த விருப் பத்தில் தவறில்லை. ஆனால் அந்த விருப் பத்தை அடைவது முடியாத காரியம் என்பதையும், அந்த அசாத்திய காரியம் முடியாதிருப்பதற்காக அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மேல் சுமத்துகின்ற பழிகளும் அநியாயம். இதனால் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்க ளுக்குள் வளர்ந்து வரும் அன்பின்மையும் அதிகம்.

தனித் தமிழ் என்ற ஒரு தமிழ் எப்போது இருந்ததோ, எங்கிருந்ததோ அறிய முடிய வில்லை.

திருவள்ளுவர் காலத்துக்கு முன் வடமொழி கலவாத தமிழ் இருந்ததை அறிகிறோம். ஆனால் அதைத் ‘தனித் தமிழ்’ என்று எப்படிச் சொல்லுவது? திருவள்ளுவர் காலத்துக்கு முன்னா லிருந்தே தமிழ் நாட்டிலிருந்த மக்கள் எகிப்து, கிரேக்க தேசம், ரோமாபுரி முதலிய ஆப்ரிக்க ஐரோப்பிய நாடுகளுடனும் சிங்களம், ஜாவா, சுமத்ரா, போர்னியோ, செலிபஸ் முதலிய கீழ் நாடுக ளுடனும் மிகவும் நெருக்கமான வியாபார சம்பந்தங்களும் கல்யாண சம்பந்தங்களும் உள்ளவர்களாக இருந்ததற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

தமிழ் நாட்டு மன்னர்களில் ஒருவனான கிள்ளி வளவன் என்பவன் சிங்கள மன்னன் மகளான நாக கன்னிகை பீலிவளை என்றவளையும், அதே மன்னன் பிறகு சித்தாத்தகை என்ற வட நாட்டுப் பெண்ணையும் மணந்து கொண்டதாக அறியக் கிடக்கிறது. தமிழ் நாட்டின் எல்லை தெற்கே குமரியாறும் (குமரி முனை) வடக்கே வேங்கடமும்தான் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இந்த மன்னன் குமரிமுனைக்குத் தெற்கே தமிழல்லாத சிங்கள மொழி வழங்கிய நாட்டில் ஒரு பெண்ணையும் வேங்கடத்துக்கு வடக்கே மகாபலி வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னன் ஆண்ட தமிழ் அல்லாத ஏதோ ஒரு மொழி வழங்கிய (மகாபலி வம்சம் என்பது தமிழல்ல) தேசத்துப் பெண்ணையும் மணந்தான். இந்த இரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் இருந்தன. வடநாட்டு மனைவி யின் மகன் உதய குமாரன். நாக மனைவியின் மகன் பெயர் தெரியவில்லை. ஆனால் அவன் சிங்களத்திலிருந்து ஒரு வாணிபக் கப்பலில் தந்தையிடம் வரும் போது மரக்கலம் புயலில் சிக்கிக் கொண்டதால் ஒரு தீவில் தங்கினதாக வும், மீண்டும் அந்தக் கப்பல் புறப்பட்ட பிறகு அந்த இளவரசனைக் காண முடியவில்லை என்றும் சொல்லப்பட்டி ருக்கிறது.

இப்படி அந்நிய மொழிப் பெண் களை மணந்துகொண்டு, இடைவிடாது கடலோடி தூரதேசங்களோடு நெடுங் காலமாக வியாபாரம் செய்து கொண்டி ருந்தவர்கள் நாட்டில் வழங்கிய மொழி எப்படித் தனித்தமிழாக இருந்திருக்க முடியும்? அக்காலத்துத் தமிழர்களுடைய கடல் வியாபாரத்தைப் பற்றியும் அவர்களுடைய துறைமுகங்களைப் பற்றியும் அயல் நாட்டுச் சரித்திர ஆசிரியர்களான ‘ப்ளைனி’ ‘தாலமி’ என்பவர்கள் எழுதியுள்ள சேர, சோழ,பாண்டிய நாட்டின் சரித்திரக் குறிப்புகளும் எகிப்து தேசத்து அறிஞர் ஒருவர் எழுதியுள்ள ‘பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரேய்’ என்ற நூலும் வெகு தெளிவாகச் சொல்லுகின்றன. அவற்றில் சொல்லப் படுகிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களுடைய பெயர்கள் அப்படியே சங்ககால இலக் கியங்களில் இருப்பதைக் காணலாம்.

ஆகையால், அவ்வளவு அயல் நாட்டு சம்பந்தங்கள் வைத்துக் கொண்டிருந்த தமிழர்களின் மொழி அக்காலத்திலும் கூட ஒரு தனி மொழியாக இருந்திருக்க முடியாது. தமிழ் மட்டும் அல்ல, பல மொழிகளைப் பேசுகின்ற பலநாட்டு மக்களுடன் பழகி வருகின்ற எவருடைய மொழியும் கலப்பில்லாத தனிமொழியாக இருக்க முடியாது. ஆகையால் வட மொழி கலக்காத காலத்திலும் தனித் தமிழ் என்ற ஒரு மொழி வழங்கின தில்லை. அனால் ‘செந்தமிழ்’ என்று இப்போதுள்ளவர்களுக்குக் ‘கடுந்தமிழ்’ ஆகியிருக்கிற ஒரு தமிழ் இருந்ததுண்டு. அது இன்னும் நம்மிடையே மொழிகளை விரும்பாத சிலரிடம் இருந்து வருகிறது. அதைத்தான் அ வர்கள் ‘தனித்தமிழ்’ என்று கருதுகிறார்கள் போலும். ஆனால் அந்தத் தமிழ் நெடு நாளைக்கு முன்னாலேயே வழக்கிழந்து பொதுமக்களுக்குப் புரியாததாகி விட் டது. சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தக் கடுந்தமிழ் செந் தமிழ் நடைக்குச் சிறப்பிடமாகிய யாழ்ப்பாணத்திலேயே பயனற்றுப் போன உண்மையைப் பார்ப்போம்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்றால் தமிழ் அறிஞர்கள் தலைவணங்க வேண்டிய தக்கார். தமிழ் இலக்கியங்களின் கரை கண்ட கல்வியாளர். ஆங்கிலப் படிப்பிலும் அப்படியே. கிறிஸ்துவ வேதமாகிய ‘பைபிள்’ என்ற நூலை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்த மேதை. அவர் செய்த மொழிபெயர்ப்பு அறிஞர்களால் மிகவும் மெச்சப்பட்டது. ஆறுமுக நாவலர் அவர்களை வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி என்ற தமிழ்ப் பேரறிஞர் ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று புகழ்ந்துள்ளார். தமிழில் மிக எளிய வசன நடையை முதலில் எழுதினவர் ஆறுமுக நாவலர். சமஸ்கிருதப் படிப்பிலும் ஒரு மகாமகோபாத்தியாயருக்குச் சமமானவர். சைவ சம் யத்துக்கு அரும் பெரும் சேவைகள் செய்த அண்ணல். அவர் கற்றோர் சபை யில் கடுந்தமிழும் மற்றாரிடத்தில் எளிய தமிழும்பேசுவார். அவருக்குப் புண்ணிய மூர்த்தி என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அந்தப் புண்ணியமூர்த்தி என்பவர் ஒரு கப்பல் வியாபாரி. அவருக்கு வியாபாரப் போட்டியில் சில பகைவர் உண்டு. அப்பகைவர்கள் சில ஆட்களை ஏவி, துறைமுகத்தில் சரக்குகளோடு இந்தியாவுக்கு புறப்படத் தயாராக இருந்த புண்ணிய மூர்த்தியின் மரக்கலம் ஒன்றிற்குத் தீ வைக்கச் செய்து விட்டார்கள்.அப்படித் தீ வைக்கத் தோணியில் சென்று தீ வைத்து விட்டுத் திரும்பி வந்த ஒருவன் விடியற் காலையில் கடற்கரை ஓரமாக இரைக்க இரைக்க ஓடி வந்து கொண்டிருந்தான். (நடு ராத்திரி யில் தீ வைக்கத் திட்டம் போட்டிருந்த அவன் தூங்கிப்போய் பின்னிரவில் சென்ற படியால் விடியற்காலம் நேர்ந்து விட்டது.) ஆறுமுக நாவலரவர்கள் தினந்தினம் விடியுமுன் எழுந்து இருட்டாக இருக்கும்போதே கடற்கரையில் உலாவுவது வழக்கம். அன்றையதினம் அப்படி உலாவிக் கொண்டிருந்தபோது இந்தத் தீ வைத்த மனிதன் இளைப் பெடுக்க ஓடி வருவதைப் பார்த்தார்.

யாரோ எதற்காகவோ ஓடுகிறான் என்று இருந்து விட்டார். இருட்டில் அந்த மனிதனுடைய அடையாளம் அறிய முடியாமற் போனாலுல் உயரம் பருமன் நடை முதலியவற்றைக் கவனிக்க முடிந்தது. சில நாளைக்குப் பிறகு தமது நண்பர் புண்ணியமூர்த்தியின் மரக்கலத்துக்கு இன்ன நாளில் விடியற் காலத்தில் யாரோ நெருப்பு வைத்து விட்டு வந்த ஆள் இந்த திசையில் கட்டு மரத்தைச் செலுத்திக் கரையில் இறங்கி ஓடிவிட்டான் என்பதை நாவலர் கேள்விப்பட்டார். குறிப்பிட்ட அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த திசையில் ஒரு மனிதன் ஓடி வந்தது நாவலருடைய ஞாபகத்துக்கு வந்தது. அதைத் தன் அன்பர் புண்ணிய மூர்த்திக்கு அறியப்படுத்தினார். அவர் சொன்ன அடையாளங்களிலிருந்து, அதுவரையிலும் அந்தக் குற்றத்துக்காகச் சந்தேகிக்கப்பட்டவர்களை யெல்லாம் விட்டுவிட்டு புது ஆசாமி ஒருவனைப் பிடித்தார்கள். அவன்தான் அந்தக் குற்றவாளி. அந்தக் கேஸ் விசாரணைக்கு வந்தது.

அதில் ஆறுமுக நாவலர் ஒரு சாட்சி. சாட்சியம் சொல்லக் கூண்டில் வந்து நின்றார். நாவலர் ஒரு கருத்த மனிதர். வழுக்கைத் தலை. நெற்றி நிறைய விபூதி. கழுத்தில் தங்கச் சரட்டில் கோத்த ஓர் உத்ராக்ஷம். இடை யில் ஒரு சாதாரண வேஷ்டி. மேலே ஒரு துண்டு. இரண்டும் தோய்த்து தோய்த்துக் காவி ஏறியிருக்கும். ஆடம்பரமே இல்லாமல், பார்ப்பதற்குப் படிப்பு வாசனையே துளிக்கூட இல்லாத ஒரு பட்டிக் காட்டானைப் போல காட்சி அளிப்பார்.

சாட்சியம் சொல்ல நீதிபதியின் முன் நின்றார். நீதிபதி ஒரு பரங்கிக் காரர். (ஆங்கிலோ இந்தியர்) முதல் இரண்டொரு கேள்விகளுக்கு நாவலர் இங்கிலீஷில் பதில் சொன்னார். உடனே அந்த நீதிபதி நாவலரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “போதும் உங்கள் இங்கிலீஷ் என்று சொல்லி, கச்சேரி மொழி பெயர்ப்பாளரைப் (இன்டர்ப்ரட்டர்) பார்த்து அவரை அவருடைய தாய் மொழியிலேயே பதில் சொல்லச் சொல்லு” என்றார். அதைக் கேட்ட ஆறுமுக நாவலர் அவமானமடைந்து விட்டார். பிறகு தமிழிலேயே கேள்விகள் கேட்கப்பட்டன. “உமக்கு இந்தக் கேசைப் பற்றி என்ன தெரியும்?” என்பதைப்போன்ற கேள்விக்கு விடையாக நாவலரவர்கள்,

“அஞ்ஞான்று எல்லியெழ நானாளிப் போதின்வாய் ஆழிவரம்பணித்தே காலேற்றுக்
காலோட்டப் புக்குழி.”

என்று நிறுத்தி அதை துரையவர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லச் சொன்னார்.

அதை குமாஸ்தா மொழிபெயர்க்க முடியாமல் முழி பெயர்க்க விழித்தார்.

“என்ன சொல்லுகிறார்?” என்று துரை கேட்டார்.

“அது எனக்குப் புரியவில்லை” என்றார் மொழி பெயர்ப்பாளர்.

“அவர் பேசுவது தமிழ்தானே ?” என்று கேட்டார் துரை.

“ஆம்” என்றார் யாழ்ப்பாணத்திலேயே பிறந்தவரான அந்த குமாஸ்தா.

“நீரும் தமிழர்தானே, உமக்கு ஏன் புரியவில்லை ?” என்றார் நீதிபதி.

“அவர் பேசுவது கடினமான தமிழாக இருக்கிறது. எனக்கு அது வழக்கமில்லை” என்றார் இன்டர்ப்ரட்டர்.

இந்தச் சமயத்தில் அங்கே உதவி பப்ளிக் பிராசிகியூட்டராக இருந்த ஒருவர் வந்தார். அவர் நாவலரிடத்தில் தமிழ்ப் பாடம் கேண்டுக் கொண்டவர். அவரைக் கண்டவுடன் நாவலர் அடே மயில் வாகனம்! இங்கே வா;

நான் சொல்லுவதை நீ மொழி பெயர்த்துச் சொல்லு என்றார்.

மயில்வாகனம் என்பவர் நாவலருக்குக் காட்டிய வணக்க ஒடுக்கத்தைக் கண்ட நீதிபதி வியந்தார். அதற்குப் பிறகுதான் ஆறுமுக நாவலரைப் பற்றிக் கேட்டறிந்து அவர் பைபிளை மொழி பெயர்த்தவர் என்பதைத் தெரிந்து அவர் ஆங்கிலத்திலேயே சாட்சியம் சொல்லலாம் என்று உத்தர விட்டாராம். ஆனால் நாவலர் ஆங்கிலத்தில் பேச மறுத்துவிடவே பிறகு மயில் வாகனம் என்பவரே மொழி பெயர்த்தாராம். அவருக்குச் சாதாரணத் தமிழில் நாவலர் சாட்சியம் சொன்னாராம்.

அதே யாழ்ப்பாணத்தில் இன்னொரு நிகழ்ச்சி:

சபாபதி நாவலர் என்பவரும் யாழ்ப்பாண வாசி. ஆறுமுக நாவலருக்குச் சமகாலத்தவர். வடமொழியிலும் தமிழிலும் மிகவும் வல்லவர். வட மொழியிலிருந்து அநேக நூல்களைத் தமிழாக்கியவர். திராவிடப் பிரகாசிகை என்ற ஒரு தர்க்க நூலை எழுதியவர். வியக்கத்தக்க சாமர்த்தியத்தோடு அதை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் என்ற பதம்தான் ‘திராவிடம்’ என்று மாறியது என்று வாதிக்கிறார். வாதிக்கும் சாமர்த்தியம் மெச்சத் தகுந்தது. ஆனால் அவருடைய தீர்ப்பு வாதத்துக்கு இடமுள்ளது. அவர் எப்போதும் எவ்விடத்தும் ‘கடுந்தமிழ் தான் பேசுவார்.

யாழ்ப்பாணத்தில் ‘முத்திரைச் சந்தை’ என்ற ஒரு சந்தையில் அவரும் அவருடைய மாணக்கரில் சிலரும் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு தேங்காய்க் கடையில் நின்று, அங்கிருந்த பெண்மகளைப் பார்த்து சபாபதி நாவலர், “அம்மையே! நீவிர் தேங்காய்களை மாறல் எங்ஙனமோ ?!’ என்றார். அந்த அம்மாளுக்கு அது புரியவில்லை.

“என்னாய்யா, என்னமோ உளறுரீங்கோ?’ என்று கேட்டாள்.

அருகிலிருந்த மாணாக்கர்கள் அந்த அம்மாள் நாவலரை உளறுவதாகச் சொன்னதைக் கேட்டு வருந்தி, அந்தப் பெண்ணுக்கு அவர் பெருமையைச் சொல்லி நாவலர் தேங்காயின் விலை கேட்பதாகச் சொன்னார்கள். அது கேட்டு அந்த அம்மாள் விலையைச் சொன்னாள். அந்த விலை மிகவும் அதிகம் என்பதற்கு நாவலர்,

“சாலவும் மிகை; மூவிரு செப்புக் காசுகள் கோடி” என்றார்.

“கோடியாவது, கரையாவது, உங்க எலக்கண மெல்லாம் எனக்கென்ன தெரியும்? நல்லாச் சொல்லுங்களேன் என்றாளாம்” அந்த அம்மாள்.

இதற்குள் நாவலர் வேறொரு கடைக்குப் போய் விட்டாராம்.

இந்த இரண்டு நிகழச்சிகளையும் சொன்னவர் ஸ்ரீ பவானி ஆச்சியார் என்ற எண்பது வயதான அம்மையார். அவர் ஆறுமுகநாவலர் அவர்களுடைய மாணாக்கருள் ஒருவர். சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் ஸ்தாபித்து நடந்து வருகிற சேக்கிழார் மடத்தில் இன்றைக்கும் ஜீவந்தராக இருந்து வருகிறார்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் கடுந் தமிழ்ப் பதங்கள் உலவி வந்த, இப்போதும் உலவி வருகிற யாழ்ப்பா ணத்திலேயே இந்த நடை புரியவில்லை யென்றால், இப்போது இங்குள்ள நமக்கு அது எப்படிப் பயன்படும்? இப்படிப்பட்ட நடையைத் தனித் தமிழ் என்று எண்ணிக்கொண்டு எடுத்தாள்வது படித்தவர்களுடைய ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் இன்பமளிக்கலாம் என்றாலும் உலகத்துக்கு உபயோகப் படாது. மொழிகளை உண்டாக்குவது பண்டிதரும் லக்கண வித்வான்களும்தான். ஆனாலும் அதை வளர்த்து வாழ வைக்கிறவர்கள் பாமர மக்களே. பாமரருக்குப் பழக்கமில்லாத எந்த நடையும் விரைந்து மறைந்து விடும்.

இதனால் நான் பிற மொழிப் பதங்களையே பெரிதும் உபயோகப்படுத்த வேண்டுமென்று சொல்லுவதாக எண்ணிவிடக் கூடாது. ஆனால் எல்லோருக்கும் எளிதில் புரியக் கூடிய எந்தப் பதத்தையும் அதைப் பிறமொழிப் பதம் என்பதற்காக விலக்க முயல்வது விரும் பத்தக்கதல்ல. மற்றவர்கள் இதைப் பற்றி எப்படி எண்ணினாலும் எழுத்தாளர்கள் கடின நடையை நீக்க வேண்டும். தமிழோடு தமிழாகக் கலந்துவிட்ட பிற மொழிப் பதங்களைப் பொறுக்கி நீக்குவது பிழை. உதாரணமாக தமிழுக்கு இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் அங்கமாகச் சொல்லிக்கொண்டு வருகிறோம். இவற்றுள் இயல், இசை என்ற இரண்டு பதங்களும் தமிழ்ப் பதங்கள். நாடகம் என்பது வடமொழிப் பதம். அது வடமொழிப் பதம் என்று சொன்ன பிறகுதான் அது வடமொழியா என்ற கேள்வி பல பேருக்குள் எழும். ஆம்; அது வடமொழிதான். இதைத் தமிழாக் கினால் ‘கூத்து’ என்றுதான் சொல்ல வேண்டும். கூத்து என்றால் மேடை இல்லாமல், படுதா இல்லாமல், சீன்கள் இல்லாமல், தெருக்களில் நடக்கும் கூத்துதான் நினைவுக்கு வருமேயல்லாமல் நாடக மேடை நமக்குத் தோன்றாது.

கலை என்ற சொல்லும் அப்படித்தான். கலா என்ற வடமொழிப் பதத்தின் தமிழ் வடிவம்தான் கலை: என்பது. ‘கலை’ என்பது வடமொழி சம்பந்தமுள்ளதாயிற்றே என்று எண்ணினால் அதற்கு மாற்றாக நல்ல தமிழ்ப் பதம் இப்போது வழக்கில் இல்லை.

கூடுமான வரையிலும் தமிழ்ப் பதங்களுக்கே இடந் தரவேண்டும் என்பது மிகவும் போற்றத் தகுந்த முயற்சி. அதை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும். கலைச் சொற்கள் என்று எவருக்கும் புரியாத வடமொழிப் பதங்களைக் கொண்டு வந்து தமிழில் திணிக்க விடுவதைக் காட்டிலும் ‘வானொலி ‘ என்பதைப்போன்ற நல்ல தமிழ்ப் பதங்களை உண்டாக்க வேண்டும் என்பது சிறந்த முயற்சி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *